சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைளில் 35 வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் 35 வீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பகுப்பாய்வு செய்வதற்காக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் 57 வீதமான நிபந்தனைகள் இந்த வருடம் ஜுலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் 35 வீதமான நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தைகளுக்கு அமைய இலங்கை தமது நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள முதல் மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 வீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இருப்பினும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 18 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வெரிட்டி ரிசேர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், அடுத்த மாதம் 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிலையில், குறித்த குழுவினர், செப்டெம்பர் 27ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காகவே இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் நிதி நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண சீனா தயார்

இலங்கையின் நிதி நெருக்கடி சவால்களுக்கு தீர்வினை காண்பதற்கு உதவுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வங் யி இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா எப்போதும் இலங்கையின் நம்பகதன்மை மிக்க மூலோபாய சகா என தெரிவித்துள்ள அவர் இலங்கை எப்போதும் சீனாவிற்கு நட்பாகயிருந்துள்ளது முக்கிய நலன்கள் குறித்த விடயங்களில் சீனாவிற்கு ஆதரவாக விளங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இறைமை சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவம் ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா எப்போதும் ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனவாதம் மதவாதத்தை தூண்டுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் – வஜிர அபேவர்தன

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டி கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்கமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம்.

ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. ஆனால் இவர்கள் இனவாதம். மாதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம் மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாடு தற்போது படிப்படியாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. சரவதேச நாணய நிதியம் நேற்று விடுத்திருந்த குறிப்பொன்றில், செப்டேம்பர் 15ஆம் திகதிக்கும் 27ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மீண்டும் இலங்கைக்கு வந்து, வங்குரோத்து நிலைமையில் இருந்து மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

அதனால் ஊடகங்கள் நாட்டின் நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மை தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஏதாவது வழி இருந்தால்.

கடந்த மே மாதம் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள கிடைப்பதும் இல்லை. ஜூலை மாதத்தில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ள கிடைக்கப்பதில்லை.

அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த வழியும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. என்றாலும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க ரணில் விக்ரமசிங்கவிடம் தெளிவானதொரு வழி இருந்தமையாலே அவர் முன்வந்து நாட்டை பொறுப்பேற்றார்.

அத்துடன் நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்து இன மக்களும் ஒன்றாக இருந்து செயற்பட்டதுபோல் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும் நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்துக்காக ஒன்றிணைந்து செயற்பட்டாலும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் காலத்துக்கு காலம் தேர்தல்களின் போது பொய் வாக்குறுதிகளை வழங்கி அதனை செயற்படுத்த முற்பட்டதன் பிரதிபலனாகவே இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட காரணமாகும்.

மேலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்துக்கு வந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார்.

பொருளாதாரம் ஸ்திரமடையும் நிலை ஏற்படும் போது இனவாதத்தை தூண்டி, ஆட்சியை வீழ்த்தும் நடவடிக்கை 2000ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்று வந்திருக்கிறது. அதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் அதனை எவ்வாறு மீட்கமுடியும் என்பதையும் அரசியல் அனுவத்தால் ரணில் விக்ரமசிங்க தெரிந்து தெரிந்து வைத்திருக்கிறார்.

அதனால் தான் 2000ஆம் ஆண்டில் நாடு வீழ்ச்சியடையும்போது 2001 டிசம்பர் மாதம் நாட்டை பொறுபேற்று, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னுக்கு கொண்டு சென்றார்.

ஆனால் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில் 2014 ஆகும்போது நாடு பொருளாதார ரீதியில் மீண்டும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

அதனால் 2017இல் நடத்த இருந்த ஜனாதிபதி தேர்தலை 2015இல் நடத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தார்கள். என்றாலும் 2015 ஜனவரி 8ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டை பொறுப்பேற்று, நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துவந்தார். இந்நிலையில்தான், உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்து 2019இல் 52 நாள் கலவரம் மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வரை இடம்பெற்றது.

எனவே நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டி கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்கமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.

ஆனால் இவர்கள் இனவாதம். மாதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம் மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.

அதனால் அனைவரும் இலங்கையர்களாக எமது பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேசிய ஐக்கியம் முக்கியமாகும் என்றார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தினால் மேலும் சில நெருக்கடிகள் தோன்றக் கூடும் – ஃபிட்ச் ரேட்டிங்ஸ்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள கடன்மறுசீரமைப்பு செயற்திட்டமானது இதுவரைகாலமும் உள்நாட்டு வங்கிக்கட்டமைப்பு தொடர்பில் நிலவிய நிலையற்ற தன்மைக்குத் தீர்வுகாண்பதற்கான மிகமுக்கிய முதற்படியாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், இருப்பினும் வேறுசில விடயங்களில் சிக்கல்கள் தோற்றம்பெறக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

‘இலங்கையின் அபிவிருத்தி பிணையங்கள் தொடர்பில் அரசாங்கம் 3 விதமான மறுசீரமைப்புக்களை முன்மொழிந்திருக்கின்றது. இருப்பினும் பிணையங்கள் வடிவிலான அக்கடன்களை உள்நாட்டு நாணயமாக மாற்றுகின்ற தெரிவையே வங்கிகள் பெரும்பாலும் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றோம்’ என சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இவ்வாறு நிர்ணயிக்கப்படும் பங்களிப்பானது கடன்மறுசீரமைப்பின் விளைவாக வங்கி நிதிக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்கும் வகையில் அமையவேண்டியது அவசியம் என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘தற்போது முன்மொழியப்பட்டுள்ள செயற்திட்டத்தின் பிரகாரம் மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது, அது வங்கிக்கட்டமைப்பின்மீது வைப்பாளர் நம்பிக்கை இழப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தாது என்றே நாம் நம்புகின்றோம்.

இருப்பினும், நிதியீட்டல் மீதான அழுத்தங்கள் வங்கி தொடர்பான தரப்படுத்தல்களில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். எனவே, இந்தத் தாக்கத்தை சீர்செய்வதற்கு, கடன்மறுசீரமைப்பு நடைமுறைகள் குறித்த இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அதன்விளைவாக வங்கி நிதியில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் மதிப்பீடு செய்யவேண்டும்’ என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வலியுறுத்தியுள்ளது.

மேலும், உள்ளகக் கடன்மறுசீரமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பானது இலங்கையின் வங்கிக்கட்டமைப்பை சூழ்ந்து காணப்பட்ட நிலையற்றதன்மைக்குத் தீர்வுகாண்பதற்கு வழிகோலியிருந்தாலும், சில அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்வதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – சஜித்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும்.

கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதா? அப்படி செய்வதால் நாட்டுக்கு என்ன நடக்கும்?பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் இரத்து செய்யப்படுமா? வட்டி வீதம் இரத்து செய்யப்படுமா?

இதனால், நாட்டின் தேசிய வருமானத்திற்கு ஏற்படும் தாக்கம் என்ன? என்பதை ஜனாதிபதி தெளிவுப்படுத்த வேண்டும்.

உண்மையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன? இதன்ஊடாக வங்கிக் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுகிறது.

ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட பொது நிதிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும்.
இவை தொடர்பாக நாட்டு மக்களுக்கு யாரும் தெரியப்படுத்தாத காரணத்தினால், சிலர் தவறான கருத்துக்களையும் அவர்களிடத்தில் கூறிவருகிறார்கள்.

எனவே, ஜனாதிபதி இதுதொடர்பான உண்மை நிலைமையை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழும்; பொருளாதாரப் பேரவையின் தலைவர் நம்பிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இலங்கையின் இயலுமை தொடர்பில் உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை சீனா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றார்.

அச்சந்திப்புக்களின் ஓரங்கமாக சர்வதேச பொருளாதாரக் கட்டமைப்புக்களில் ஒன்றான உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டியை சந்தித்துள்ள அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் மற்றும் பொருளாதார மீட்சி செயன்முறை என்பன தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது இந்நெருக்கடியிலிருந்த மீண்டெழக்கூடிய இலங்கையின் இயலுமை தொடர்பில் உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டி நம்பிக்கை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று பெய்ஜிங்கில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள அமைச்சர் அலி சப்ரி, அவர்களை வர்த்தகத்துறைசார் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், இலங்கையின் நல்லெண்ணத்தூதுவர்களாக செயற்படுமாறும் ஊக்குவித்துள்ளார்.

Posted in Uncategorized

இந்திய ஆதரவினால் மாத்திரமே நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது – மிலிந்த மொரகொட

இந்தியாவின் ஒத்துழைப்பினால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தியா உதவியளித்திருக்காவிட்டால் மிக மோசமான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது , இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர் கடனுதவியையும் , மேலும் பல நிவாரணங்களையும் வழங்கியுள்ளது.

உண்மையில் அந்த சந்தர்ப்பத்தில் இந்தியா ஆதரவளித்திருக்காவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றிருக்க முடியாது.

1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை கடந்த ஆண்டு பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இதன் காரணமாக முதன் முறையாக கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவிக்க வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் பணவீக்கம் உயர்வடைந்தமை , மின்சாரத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டமை , மருந்து, எரிபொருள் உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருட்கள் என்பவற்றின் இறக்குமதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

எவ்வாறிருப்பினும் அந்த நிலைமைகளிலிருந்து இலங்கை படிப்படியாக மீட்சிக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் குறித்து அவர் தெரிவித்துள்ள போதிலும் , அது தொடர்பில் விரிவான விபரங்களை வெளியிடவில்லை

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஐ.நா முழு ஒத்துழைப்பு வழங்கும் – ஐ.நா. பொதுச் செயலாளர் உறுதி

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸின் பரிஸ் நகரில் நடைபெறுகின்ற ‘புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்’ தொடர்பிலான மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதிளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் தெளிவுபடுத்தினார்.

நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

நிலையான அபிவிருத்து இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம் காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட உபாய மார்க்க திட்டங்களை எடுத்துக்காட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய முன்னெடுக்கப்படும் ‘காலநிலை சுபீட்சத்துக்கான திட்டமிடல்’ தொடர்பிலும் செயலாளர் நாயகத்துக்கு விளக்கமளித்தார்.

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் , கடன் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களின் போது இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.

இதன்போது இதுவரையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாட உள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

இந்த சந்திப்பில் அவர் ஜனாதிபதி, மத்திய வங்கி அதிகாரிகள், சபாநாயகர் உள்ளிட்ட மேலும் சில தரப்பினரையும் சந்திக்க உள்ளார்.

அத்துடன் ஒக்டோபரில், இலங்கை தொடர்பான முதலாவது மீளாய்வு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களையும் , சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் வழங்குவார் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு மேலும் கடன் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கை அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கிலும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும்  வகையில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவலையடைவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.