அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளரைச் சந்தித்த மைத்திரிபால!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்குமிடையிலான சந்திப்பு நேற்று (14) அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் அரசியல் நிலவரங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணி மற்றும் இருதரப்பு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கும் தனது பாராட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்தியாவின் அழைப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லி செல்கிறார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர், சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகர்- மைத்திரி கொழும்பில் சந்திப்பு

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்றையதினம்(23) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இச் சந்திப்பானது, முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், புதிய உயர்ஸ்தானிகருக்கு மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கை இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் இந்தியாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கைக்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

பிள்ளையான் கட்சிக்கு மில்லியன் கணக்கில் பணம் வழங்கிய மைத்திரி மற்றும் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது.

எனினும் அதனை பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் குறைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டது. பின்னர் கோட்டபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அது மேலும் குறைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ஆறு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை வழங்கினார்கள் பின்னர் அதனை பெருமளவிற்கு குறைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டதாகவும் மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் தான் பணத்தை எடுத்து பிள்ளையானிடம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் போலி பட்டியலும் வழங்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பிலும் ஜெனீவாவிலும் உள்ள இராஜதந்திர அலுவலகங்களிற்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச்சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

சர்வகட்சி மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அரசாங்கத்தின் யோசனை என்ன என்பதை முதலில் எமக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அந்த யோசனைகள் வெளிவந்தவுடன், நாம் இதுதொடர்பாக ஆராய முடியும்.

இதுதொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு, எமது யோசனைகளையும் இதில் முன்வைத்து அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரோயல் பார்க் கொலையாளிக்கு அரசியலமைப்பை மீறி பொதுமன்னிப்பு வழங்கவில்லை – மைத்திரி

ரோயல்பார்க் கொலையாளி ஜூட் ஜயமஹவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியல் அமைப்பை  மீறி தான் செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜூட் ஜெயமகவிற்கான பொதுமன்னிப்பு அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

2005 இல் அத்துருகிரியவில் உள்ள ரோயல் பார்க் தொடர் மாடியில் பெண்ணொருவரை கொலை செய்தமைக்காக கொழும்பை சேர்ந்த செல்வந்தரின்  மகனிற்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது.

2019 நவம்பர் 9 ம் திகதி ஜூட்ஜெயமகவிற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பை வழங்கினார். தனது பதவிக்காலத்தின் இறுதியில் சிறிசேன பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.அ

அதன் பின்னர் ஜெயமஹ நாட்டிலிருந்து வெளியேறினார் அவர் தற்போது எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை.

இந்நிலையிலேயே தான் பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியலமைப்பை மீறவில்லை என சிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஊடகங்களைக் கட்டுபடுத்தும் சட்டத்துக்கு ஆதரவு வழங்க முடியாது – மைத்திரிபால சிறிசேன

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் நாம் ஆதரவு வழங்கமாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும். ஊடக சுதந்திரத்தைப் புதிய சட்டம் மூலம் அரசு தட்டிப் பறிக்க முடியாது.

ஊடகங்களின் விமர்சனங்களுக்கு இந்த அரசு ஏன் அஞ்சுகின்றது? எமது நல்லாட்சி அரசையும் சில ஊடகங்கள் சகட்டுமேனிக்கு விமர்சித்தன. அதை நாம் எதிர்கொண்டோம்.

விமர்சனங்களை எதிர்கொள்ள – அவற்றுக்குத் தகுந்த பதில் வழங்க அரசுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். – என்றார்.

மைத்திரி மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்தது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் தாக்குதல் ஒரு துயரச் சம்பவம் எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி; ஈஸ்டர் தாக்குதலுக்கும் மன்னிப்பு கோரினார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் துயரச் சம்பவம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதி பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்குவர் என அக்கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

10கோடி நட்டஈடு செலுத்தும் அளவிற்கான பணம் இல்லை – மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெயாங்கொடை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, தாம் சிங்கப்பூரில் இருந்ததாக தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போதியளவு புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும், அதனை தம்மிடம் எவரும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதனையே நான் சாட்சியமாகவும் வழங்கியிருக்கின்றேன்.

88 பக்கங்களை கொண்ட தீர்ப்பு அறிக்கையின் எந்தவொரு இடத்திலும், அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஜனாதிபதி தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.
அவ்வாறெனில் தமக்கு ஏன், உயர் நீதிமன்றில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் நினைக்கலாம்.

குறித்த தீர்ப்பில், ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் தவறிழைக்கு சந்தர்ப்பத்தில், அதற்கு ஜனாதிபதியே பொறுப்பானவராவார்.

அதனடிப்படையில் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்குரியதாகும்.

அவர்கள் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றாமை காரணமாகவே தமக்கு குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதற்காக விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா அபராதத்தை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை.அதனை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்.

தமக்கு எவ்வாறான தடங்கல் ஏற்படினும் எனது சேவையை முன்னெடுப்பதற்கு தயராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.