கடலட்டை பண்ணைகளுக்காக யாழில் பேரணி

கடற் தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அட்டைப் பண்ணைகள் வேண்டுமென இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டைப் பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது.

தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப் பண்ணை காணப்படுகின்றது.

சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடற் தொழில் மேற்கொள்ளாத சிலரும் அட்டப்பண்ணையை விரும்பாத சிலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அட்டை பண்ணைகளை அமைப்பதற்கு சங்கங்களின் விருப்பமும் பெறப்பட்டே உரிய திணைக்களங்கள் ஊடாக அளவீடு செய்யப்பட்டு அனுமதியுடன் பண்ணைகளை அமைத்துள்ளோம்.

அட்டைப் பண்ணைகளை வேண்டாம் என கூறுவோர் ஏன் வேண்டாம் என முதலில் மீனவ சங்கங்களுடன் பேச வரட்டும் அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கட்டும்.

யாழில் அட்டப் பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் துறைசார்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே ஒரு சிலரின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மீனவ சமூகம் நன்மை அடைகின்ற அட்டைப் பண்ணைகளை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர தடுக்கக் கூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சீனாவினால் யாழ் மக்களுக்கு நிவாரண பொதிகள் கையளிப்பு

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில், யாழ்ப்பாண மக்களுக்கான நிவாரண பொதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

யாழ் மாவட்டத்தில் 1320 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக இன்றையதினம் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் கே.பாலகிருஸ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் கிழக்கு பிரதேச நூலக விழா சிறப்புற நடைபெற்றது

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியில் நுலகர் திருமதி  கர்சனமாலா உதயகுமாரன் தலைமயில் நேற்று புதன் கிழமை (21) சிறப்புற நடைபெற்றன.

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக    நுலகர் சிவபாக்கியநாதன் கேதீஸ்வரன், சபையின் செயலாளர் இராமலிங்கம் பகீரதன், சோமாஸ்கந்தா கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் புத்தூர் நுலகத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் புதுவை நாதம் நூலை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வெளியிட்டு வைக்க நூலின் முதற் பிரதியினை சித்த சுதேச வைத்தியர் இளையவன் செல்லத்துரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலுக்கான நயவுரையினை ஆசிரியர் திருமதி கேதீஸ்வரி ஆனந்தரட்ணம் ஆற்றியிருந்தார்.

இத் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதீதிகளின் உரைகள், அரிச்சுவடி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் என பலதரப்பட்ட தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் உள்ளுராட்சி நூலக வாரத்தினை முன்னிட்டு பிரதேச சபையின் நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

பிரதேசத்தில் சிறந்த வீட்டு நூலகத்தினை முகாமை செய்வதற்கான கௌரவம் ப. கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டதுடன்  சிறந்த வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
மேலும், நூலகங்களுக்கு இடையில் தேசிய நூலக மற்றும் சுவடிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுப் போட்டியில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகம் நாடாளாவிய ரீதியில் 3 ஆம் இடத்தைப் பெற்றது.

இவ் விருதினை கடந்த வாரம் ஜயவர்த்தன பல்கலைக்கழக துணைவேந்தாரிடம் நூலகர் திருமதி கர்ஞனமாலா உதயகுமாரன் பெற்றுக்கொண்டார். அவ் விருதினை இந் நிகழ்வில் வைத்து பிரதேச மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் சபையில் காட்சிப்படுத்துவதற்காக நூலகரினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக யாழில் பதிவு

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓ.எம்.பி. அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனொரு கட்டமாக யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒருசிலர் அதிகாரிகளிடம் காணாமல் போன தமது உறவுகள் குறித்து பதிவுகளை மேற்கொண்டனர்.

அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

புத்தூரில் பொருளாதார நலிவுற்ற 32 குடும்பங்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

யாழ்.புத்தூர் ஊறணியில் ஜே/278 கிராம சேவையாளர் பிரிவில் வாழும் 32 பொருளாதார நலிவுற்ற குடும்பங்களுக்குப் பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு புத்தூர் ஊறணி கண்ணகை அம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(17.12.2022) நண்பகல்-12 மணியளவில் சனசமூக நிலையத் தலைவர் ந.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) சேர்ந்தவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை நேரடியாக வழங்கி வைத்தனர்.

இதேவேளை, குடும்பம் ஒன்றிற்குத் தலாஇரண்டாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 64 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திருத்தப்பணிகளுக்காக ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்கும்.

இந்த நாட்களில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக பேருந்து சேவை வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து முறுக்கண்டி வரை பயணிக்கும் புகையிரதம் இதே ஐந்து மாத காலப்பகுதிக்குள் வவுனியா வரை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்-சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகியது. இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.
வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியது.

யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம்

வடக்கு தெற்கு இடையே உள்ள உறவுப் பாலத்தை மேம்படுத்தும் முகமாக கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை (09) காலை கொழும்பிலுள்ள துறைமுக நகரம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குழு, மாலை கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த விஜயத்தில் யாழ் மாநகர சபை, வலி தென்மேற்கு பிரதேச சபை, வலி தெற்கு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்

FAIR MED நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (டிச 1) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அங்கவீனமுற்ற நபர்களுக்கான அமைப்பினை மாவட்ட மட்டத்தில் நிறுவும் வகையில் பிரதேச செயலக மட்டத்தில் இயங்கி வருகின்ற மாற்றுவலுவுள்ளோா் அமைப்பின் அங்கத்தவர்களை உள்ளடக்கி யாப்பின் விளக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அமைப்பின் பெயரைத்தெரிவு செய்தல், உள்வாங்கப்படும் அங்கத்தவர்கள், பணிகள்,நோக்கம் ,எதிர்பார்ப்புக்கள், செயன்முறைகள்,அமைப்பின் நிர்வாகத் அங்கத்தவர்களை தெரிவு செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், Fairmed நிறுவன உத்தியோகத்தர், மாவட்ட செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி கருகல்

யாழ். மாவட்டத்தில் காலபோக நெற் பயிர் செய்கையில் பயிர்களில் பொட்டாசியம் பற்றாக்குறையால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார்.

யாழ். மாவட்டதில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணத்தில் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நெற்பயிர்கள் பொட்டாசிய குறைவால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, தைகடி, நவாலி, கோப்பாய், கரவெட்டி, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் போன்ற பல பிரதேசங்களிலும் நெற் பயிர்களில் பொட்டாசியக் குறைபாடு அவதானிக்கப்பட்டுள்ளது.

இக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாக முதிர்ச்சி அடைந்த இலைகள் கடும் மஞ்சள் நிறமாவதோடு பொட்டாசிய பற்றாக்குறை அதிகமாகும் போது இலைகள் நுனியில் இருந்து அடிவரை செம் மஞ்சள் நிறத்திலிருந்து மஞ்சள், கபில நிறமாக மாறும்.

அதாவது இலையின் நுனிப்பகுதியில் தலை கீழ் “வி” (V) வடிவில் எரிவுகள் ஆரம்பிக்கும். இலை நுனியில் இருந்து இறக்கத் தொடங்கும்.

இதன் காரணமாக மட்டம் பெயர்தல் பாதிக்கப்படுவதுடன் தாவர வளர்ச்சி குன்றி பயிர்கள் கட்டையாக காணப்படும் நிலையில் நெல் மணிகள் பதர் ஆகும். இதனால் பாரியளவு உற்பத்தியிழப்பு ஏற்படும்.

விவசாயிகள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நெற் செய்கையில் போசணை முகாமைத்துவத்தை அதிகரிக்க முடியும்.

பொட்டாசியம் அடங்கிய இரசாயனப் பசளைகளை சிபாரிசுக்கு அமைய இடல் , பொட்டாசியம் அடங்கிய திரவ பசளையினை சிபாரிசுக்கமைய விசிறல், மேலும் வைக்கோலில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுவதனால் அடுத்த போகத்தில் வைக்கோலினை இட்டு உழவு செய்தல், நெல் அடிக்கட்டைகளை (ஒட்டுக்கள்) அறுவடையின் பின்னர் உழுதுவிடல் கிளிசிரியா இலைகளை வயலில் தூவிவிடல் வேண்டும் இதன் மூலம் நைதரசன் மற்றும் பொட்டாசியம் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.