மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம்; சர்வ கட்சி கூட்டத்தில் ஆளும் தரப்புகள் கடும் எதிர்ப்பு

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு ஆளும் தரப்பினர் சிலரே நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் நேற்றைய தினம் சர்வகட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சு எழுந்தது. இதன் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும்”, என்று உறுதியளித்தார்.

இதன்போது, ஆளும் தரப்பை சேர்ந்த கட்சிகளின் தலைவர்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமது ஆதரவு இன்றி 13ஆம் திருத்தத்தை முழுமை யாக செயல்படுத்த முடியாது என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறினார்கள். இதற்கு, பதிலளித்த ஜனாதிபதி ஏற்கனவே சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த நிறைவேற்று அதிகாரம் போதுமானது. பாராளுமன்றின் அனுமதி தேவையில்லை என்று கூறினார்.

இந்த சமயத்தில், தமிழ் மக்கள் கூட் டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட சுற்று நிரூபங்கள் மற்றும் அறிவித்தல்கள் தொடர்பில் எடுத்துக் கூறினார். அவ்வாறு வெளியிடப்பட்ட கட்டளைகளை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன், அது தொடர்பாக தாம் தயாரித்த ஆவணம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன் பின்னர், இனப்பிரச்னைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இந்த சமயத்தில், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, “கடந்த காலத்தில் இனப்பிரச்னை தீர்வுக்காக எனது தலைமையில் 127 கூட்டங்களை நடத்தி பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.”, என்று சுட்டிக் காட்டினார்.

அவருக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழு அந்த அறிக்கையை பரிசீலிக்கின்றது. அதிலிருக்கும் பரிந் துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத் தப்படும். இது தொடர்பான விடயங்களும் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்றார். மேலும், இன்னும் இரண்டு கூட்டங்களில் இனப் பிரச்னைக்கான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேசமயம், கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தரப்பினர் உறுதியளிக்கப்பட்டபடி காணிகள் விடுவிக்கப்படாதமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளி யிட்டனர்.

இதற்கு உறுதியளித்தபடி இனங் காணப்பட்ட 100 ஏக்கர்கள் காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும். சில தடங்கல்கள் காரணமாக காணிகள் விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் 15 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் மீண்டும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

சர்வகட்சி கூட்டத்தில் தமிழ்த் தேசியத் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளொட்டின் த. சித்தார்த்தன், ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரா. சம்பந்தன், சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் க. வி. விக்னேஸ்வரன் ஆகியோரே பங்கேற்றனர். இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை – ஜனாதிபதி

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தங்களது கட்சி சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டணியாகவும் போட்டியிடுவது தொடர்பில் விமர்சனங்கள் வெளிவருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளித்து நேரத்தை வீணாக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றி தொடர்பிலேயே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் பிரசாரங்களை உரிய வகையில் முன்னெடுக்குமாறும், வன்முறைகள் தலைதூக்கும் செயல்களுக்கு ஆதரவு வழங்காதீர்கள் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வன்முறையாளர்களைச் சமூகத்தில் இருந்து நாம் ஒதுக்கிவைக்க வேண்டும் எனவும், ஜனநாயகவாதிகளுக்கு இந்த நாட்டில் என்றும் மதிப்பு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணையாக தேசிய இளைஞர் தளத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2048 ஆம் ஆண்டாகும்போது சுபீட்சமானதும் பலம் மிக்கதுமான இலங்கையை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் பங்குதார்களாவதற்கு இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளித்தல் மற்றும் 25 வருட கால அபிவிருத்தி வேலைதிட்டத்துக்கு இளைஞர் சமூகத்தை பொறுப்பு மிக்க பங்காளர்களாக இணைத்துக் கொள்ளுதல் என்பன தேசிய இளைஞர் தளத்தின் நோக்கங்களாகும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களை சுற்றுலா நகரங்களாக மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் இதன் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான முன்மொழிவுகளும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

அதற்கமைய, யாழ்.மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களும் அநுராதபுரம் மாவட்டம் தொடர்பான சுற்றுலா திட்டங்களை களனி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களும் கையளித்தன.

ருஹுனு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து காலி மாவட்டத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு வேலைத் திட்டங்களையும் கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுண்கலை பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கொழும்பு மாவட்டத்திற்கான வேலைத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளன.

பேராதனை, வடமேற்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்கள் இணைந்து கண்டி மாவட்டம் தொடர்பான திட்டங்களையும், கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றலா மேம்பாட்டு திட்டங்களையும் முன்மொழிந்துள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள அனைத்து சுற்றுலாத் திட்டங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அபிவிருத்திக்குப் பல்கலைக்கழக சமூகம் பங்களிப்பது மிகவும் நல்லதொரு விடயம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இந்த தேசிய இளைஞர் தள வேலைத்திட்டத்திற்கு பல்கலைக்கழக கட்டமைப்பு வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் – ஜனாதிபதி

தற்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் கட்சிகளுடன் இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுகிறேன். ஆனால், அது மாத்திரம் போதாது.

நான் இப்படி கூறும்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ள மனோ கணேசன் என்னை உற்று நோக்குகிறார்.

வடக்கு கிழக்கு கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என நான் அவருக்கு உறுதி கூற விரும்புகிறேன்.

முஸ்லிம் கட்சிகளுடனும் நான் பேசுவேன். இலங்கையில் சிங்களவர், இலங்கை தமிழர், மலையக தமிழர், முஸ்லிம்கள் என இனக்குழுக்கள் வாழ்கிறார்கள்.

அனைவரையும் இணைத்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவதே என் நோக்கம்.

அனைவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆகவே எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே இடத்தில் பேச முடியாது. ஒன்றுடன் ஒன்று சிக்கி சிக்கலை ஏற்படுத்தும்.

ஆகவே வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன் வெவ்வேறாக பேச முடிவு செய்துள்ளேன். கடைசியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடு – ஜனாதிபதி

சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவு செலவு செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று சுதந்திரத்திற்குப் பின்னர் எமக்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. சுதந்திரம் அடைந்து 100 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் நாட்டின் மறுசீரமைப்புக்கு அவசியமான பல நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வரலாற்று தொடர்பிலான  நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றை மறந்து விட்டோம் என்பதே தங்கள் மீது  இப்போதுள்ள பாரிய குற்றச்சாட்டு என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அப்படியானால் அவ்வாறானதொரு நிறுவனத்தை ஆரம்பித்தே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனமொன்றை நிறுவவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஓரிரு வருட காலத்தில் “13′ கட்டம் கட்டமாக முழுமையாக அமுல் ; நல்லூரில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அதனை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம். காணமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும். இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன். உண்மையை கண்டறிவதை நாமும் விரும்புகிறோம், அதன் மூலம் தம் மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள். எனவே உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் நாட்டிற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப் படும். – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றுத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் துர்கா மணி மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கலாசார முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜனாதிபதிக்கு சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப் பட்டது. வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.

கட்சித் தலைவர்களின் கூட்டம் அடுத்த வாரத்தில்

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில் – சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி, பொருளாதார சுபீட்சத்தை அடைந்த நாடொன்றை உருவாக்கும் நோக்குடன் 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கை எனும் தனித்துவத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளோம். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் துரிதப்படுத்தப்படும். அனைவருக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். குறிப்பாக தைப்பொங்கல் என்பது தேசிய விழாவாகும். முற்காலத்தில் விவசாய நாடாக எமது நாடு இருந்தது. நெல் அறுவடை கிடைத்த போது அதனைக் கடவுளுக்குப் படைத்தோம்.

கலை நிகழ்வுகளுக்கு பாராட்டுகள்

இன்றைய தைப்பொங்கல் நிகழ்வில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய இராமநாதன் அழகியற் கலைப் பீட மாணவர்களை பாராட்டுகிறேன். உயர் தரத்திலான கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது. நாதஸ்வர கச்சேரியும் பாரம்பரிய அடிப்படையில் சிறப்பாக அமைந்தது. அனைவருக்கும் பாராட்டை தெரிவிக்கிறேன். இந்த குழுக்கள் உலக மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்க முடியும். அது தொடர்பில் இலங்கையர்களாக நாம் பெருமை அடைகிறோம். காலியில் நடத்தப்படுவதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் கலை விழாவொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம். நாமும் இந்தியாவை விட மாற்றமாக புதிய தமிழ் கலாச்சாரமொன்றை உருவாக்கியுள்ளோம். அதனை உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். நல்லிணக்கத்தை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நிறைவு செய்யப்பட்டன.

ஒன்றுபடுவோம்

எமது நாட்டுக்கு நல்லிணக்கம் அவசிய மானது. 30 – 40 வருடங்களுக்கு மேலாக யுத்தம், மோதல்கள்.குழப்பங்கள் மற்றும் பிரிவினைவாத, இனவாத வங்குரோத்து அரசியல்களினால் நாடு பிரிந்திருந்தது. நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்காக 75 வருடங்க ளுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும். தைப்பொங்கல் விழா மேடையில் பொங்கல் தயார் செய்வதை கண்டேன். நெருப்பின் மேல் பானையை வைத்து தண்ணீர் மற்றும் பால் என்பவற்றை ஊற்றி அரிசி,கருப்பட்டி என்பற்றை இட்டு பொங்கல் தயாரிக்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலையில் நாம் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பேகர் என அனைவரையும் இட்டு அதன் ஊடாக இலங்கையர் என்ற தனித்துவத்தை உருவாக்குவோம்.

பெப்ரவரியில் தீர்வு

வடக்கில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த விழாவின் பின்னர் ஆராய இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். நாம் மீண்டும் நாட்டை ஒன்றிணைக்கவும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் வேண்டும் என்று அவர்களிடம் கோரினேன். நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் கட்சி எம்.பிகளுடன் பேசினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறேன். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி பெப்ரவரி மாதம் வெளியிட வேண்டும். அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கிறேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறேன். இந்தப் பிரச்சினைகளை ஒதுக்கியோ காலங்கடத்தியோ தீர்க்க முடியாது. தீர்வு என்ன என்பதை நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் வெளியிட வேண்டும்.

காணமல் போனோர் விடயம்

உண்மையைக் கண்டறிய வேண்டும் பல பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே ஆராய்ந்துள்ளோம். காணமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் பேசியுள்ளோம். என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும்.

இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன். உண்மையை கண்டறிவதை நாமும் விரும்புகிறோம், அதன் மூலம் தம் மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள். எனவே உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதே போன்று பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை கொண்டு வர இருக்கிறோம். வடக்கிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வர தயாராவதாக சிலர் கூறுகின்றனர். நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே இதனை அறிமுகம் செய்ய இருக்கிறோம். கடந்த வருடம் இதனை தெற்கிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

காணி விடுவிப்பு

அடுத்து காணிப் பிரச்சினை காணப்படுகிறது. வன்னியில் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்புள்ள காணிப் பிரச்சினை குறித்து ஆராய இருக்கிறோம். அத்தோடு யாழ்ப்பாணத்தில் மீள காணிகளை கையளிப்பது குறித்தும் ஆராயப்படும். யுத்த காலத்தில் இந்தப் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக படையினர் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். தற்பொழுது 3000 ஏக்கர் தான் எஞ்சியுள்ளது. அதிலும் மற்றொரு பகுதியை மீள வழங்க இராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது. அது குறித்தும் ஆராயப்படும்.

யாழ் ஆயர் அவர்கள் கோரியது போன்று கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்களை மீள நிர்மாணிக்க இருக்கிறோம். 100 வருடங்களுக்கு மேலாக பூஜை வழிபாடுகள் நடைபெற்ற ஆலயங் கள் உள்ளன. புதிதாக ஆரம்பித்தவைக ளும் உள்ளன.

அடுத்து 13 ஆவது திருத்தத்தை முழு மையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்சினையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். இதனை கலந்துரையாடி செயற்படுத்த இருக்கிறோம். இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம். வறுமை, பட்டினி, தொழிலின்மை என் பன தமிழ், சிங்கள மக்களுக்கு மட்டுப்படவில்லை. அனைவரும் கஷ்டப்படுகின்றனர். அனைவரும் இணைந்து தான் கரைசேர வேண்டும்.

மலையக மக்களின் பிரச்சினை

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் ஆராய வேண்டி இருக்கின்றன. மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகளையும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களையும் அழைத்து இரண்டாம் கட்ட பேச்சு நடத்த இருக்கிறோம். மலையக தமிழ் மக்களை எமது சமூகத்துக்குள் உள்வாங்கி ஏனைய மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தரும் அவர்களை ஒதுக்க முடியாது.

அதன் பின்னர் முஸ்லிம் எம்.பிகள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து பேச இருக்கிறோம். முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவர்களையும் அழைத்து பேச வேண்டியுள்ளது.

தமிழ் ,முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஓரங்கட்டப்பட்ட கிராமங்கள் உள்ள்ன. அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. குலபேதம், வறுமை காரணமாக ஒதுக்கப்படும் நிலை உள்ளது. கிறிஸ்தவ மக்களுக்கு தமது பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் உள்ளது. அவை குறித்து ஆராய சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்க இருக் கிறோம். இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இலங்கையர் என்ற தனித்துவத்தை உறுதிப்படுத்துவோம். இவை அனைத்தையும் முன்னெடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம். – என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பாதூகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், குலசிங்கம் திலீபன், பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியு மான சாகல ரத்னாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பணிக்குழாம் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு பிரதானிகள், ஜனாதிபதியின் வட மாகாணத்திற்கான மேலதிகச் செயலாளர் இளங்கோவன் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடக்கில் மூன்று இடங்களில் நிலவிடுவிப்புக்கு ஜனாதிபதி பணிப்புரை

வலி. வடக்கில் 110 ஏக்கரும்,வடமராட்சி கிழக்கில் 4,360 ஏக்கரும், குறுந்தூர்மலையில் 354 ஏக்கரும் நிலத்தை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கலந் துரையாடலின்போதே இவற்றை தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலி. வடக்கில் பலாலி வீதிக்கு கிழக்கேயும், மயிலிட்டி நிலம் தொடர்பிலும், வலி.வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ள நிலத்தில் விடுவிக்க சாத்தியமானவை என இனங்கண்ட இடங்களை விடுவிக்க வேண்டும் என கோரியபோது, 5 இடங்களில் 110 ஏக்கரை இந்த மாத இறுதிக்குள் விடுவிப்பார்கள் என படையினர் உத்தரவாதம் தெரிவித்தனர்.

அதில் பலாலி வடக்கில் 13 ஏக்கர், மயிலிட்டி வடக்கில் 18 ஏக்கர், கே.கே.எஸ. பிரிவில் 28 ஏக்கர், கீரிமலையில் 30 ஏக்கர், காங்கேசன்துறையில் 21 ஏக்கர் என 5 இடங்களிலுமாக 110 ஏக்கரை இம் மாத இறுதியில் விடுவிக்க இணக்கம் தெரி விக்கப்பட்டது. இதேநேரம் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 641 ஏக்கரையும் விடுவித்தால் அங்கே கட்டடங்கள் எழுந்தால் விமானங் கள் தரை இறக்க முடியாத நிலை ஏற்படும் என மறுப்புத் தெரிவித்தபோது, அவ்வாறானால் அங்கே உள்ள தோட்ட நிலங்களை உடன் விடுவியுங்கள், மக்கள் பொருளாதார நெருக்கடியில் தோட்டச் செய்கையை மேற்கொள்வர் என கோரினார். இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாகப் பதிலளிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு

இதேநேரம் வடமராட்சி கிழக்கில், நாகர் கோவில் கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் பிடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட 19 ஆயிரத்து 368 ஏக்கரில், 4 ஆயிரத்து 360 ஏக்கருக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை வேண்டும், அது மக்களின் உறுதிக் காணிகள், யுத்த காலத்தில் அப் பகுதியில் படையினருக்கும் புலிகளிற்கும் இடையில் நீண்ட காலம் போர் இடம் பெற்றபோது மக்கள் அங்கே செல்லாத காரணத்தால் பற்றைகள் வளர, அதனைக் காடு எனக் கருதி, வன ஜீவராசிகள் திணைக்களம் தனக்குரியது என வர்த்தமானி அறிவித்தல் பிரசுரித்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் அவ்வாறானால் அதனைப் பரிசீலிக்கலாம் எனக் கூறிய போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு, அந்த இடம் எனக்குத் தெரியும், அப் பகுதியில் எந்தக் காடும் இருக்கவில்லை, அதனால் அப் பகுதியை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிப்புரை விடுத்தார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறூந்தூர்மலை பகுதியில் உள்ள 341 ஏக்கரில் 6 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வற்றை மக்களிடம் வழங்க (ஜனாதிபதி ) நீங்கள் கூறியும் அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த நிலங்களில் தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லைக் கல்லை அகற்றி விட்டுத்தரவில்லை என மாவட்ட அரச அதிபர் பதிலளித்தபோது, அந்த இடத்தை மாவட்ட அரச அதிபரே உடன் விடுவிக்க வேண்டும், தொல்லியல்த் திணைக்களத்திற்கு ஏதும் பிரச்சினை என்றால் என்னுடன் பேசுமாறு தொல்லியல் திணைக்களத்திற்குப் பதிலளியுங்கள் என ஜனாதிபதி உத்தரவிட்டார் என அறிய வந்தது.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்படடோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த பகுதியிலிருந்து போராட்டகாரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

பேரணி காரணமாக பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெறவுள்ள நல்லூர் பகுதியை சுற்றிலும் வீதிதடைகள் ஏற்படுத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் நடத்த சென்ற உறவுகளை பேருந்தில் தடுத்து நிறுத்திய இராணுவம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டுவாகலில் பேருந்தை நிறுத்தி, பேருந்தின் சாரதி மற்றும் அதில் சென்றவர்களின் விபரங்களை பொலிஸார் பதிவு செய்தனர்.

கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் தைப்பொங்கல் தினத்தில் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல் பண்டிகையின் போது, அதிக விளைச்சலைப் பெறுவதற்கு ஆசிர்வாதம் வேண்டி சூரிய பகவானுக்கு  வழிபாடு செய்கின்றோம்.

கிழக்கின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிசெய்து, தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக இவ்வருட தைப்பொங்கல் பண்டிகையை நாம் கருதுவோம்.

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ள அதேவேளை சர்வதேச சந்தையின் போட்டித் தன்மைக்கேற்ப தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வினைத்திறனுடனான இலாபகரமான விவசாயத்தை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளது.

அரசாங்கத்தின் இப்புதிய பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்புத் திட்டத்திற்கு பங்களிப்பதன் மூலம்  பொருளாதாரச் செழிப்புடைய நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் இந்த தைப்பொங்கல் தினத்தில் ஒன்றிணைய வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சூரிய பகவானை வணங்கி, உலக மக்களுக்கு உணவளித்து உயிர்க்காக்கும் உழவர்களைப் போற்றுவதுடன் விவசாயம் செழிப்படைந்து, வறுமை  நீங்கி, செழிப்பான நாட்டை உருவாக்கும் பயணத்திற்கு இத்தைப்பொங்கல் பண்டிகை ஆசிர்வாதமாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும்  அனைத்து தமிழர்களும் இத்தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகின்றேன் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.