ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

இருதரப்பு உறவுகளை வலுவாக்க இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்களன்று கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படை தளபதி நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது , பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியினை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தினை வழிநடத்திச்செல்வதில் இலங்கையின் வகிபாகமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இந்திய கடற்படைத் தளபதி பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்ததோடு , அவருடனான சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இரு நாடுகளினதும் பாதுகாப்பு படையினரிடையில் தற்போதுள்ள உறவினை மேலும் வலுவாக்குவதற்கான மார்க்கங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

தலைமன்னார் துறைமுகத்தை தொழில் துறைமுகமாக மாற்ற தேவையான ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பான கூட்டம் இன்று (15) ஜனாதிபதி தலைமையில்  பதுளையில் மாவட்டத்தில் இடம்பெற்றது.

இதன் போது பதுளை மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தின் பின் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் ஜனாதிபதி  தலைமன்னார் துறைமுகத்தை தொழில் துறைமுகமாக மாற்ற இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினரும் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான் உள்ளது – ரணில்

ஜப்பானுக்கு அடுத்ததாக வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க திட்டமிடப்பட்ட எமது நாடு இன்று ஆப்கானிஸ்தானை விட ஒரு படி மேலுள்ளது.

எமக்கு அடுத்த படியாக ஆப்கானிஸ்தான் மாத்திரமேயுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக காலநிலை செழுமைத் திட்டத்தை தயாரிக்குமாறு நான் ஆலோசனை வழங்கியிருக்கின்றேன். நாம் இந்நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்தவொரு எதிர்காலத்தை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் என்ன செய்யவுள்ளோம் என்பதை தெரிவிப்பதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

நாட்டில் அரசியல் கலாசாரம் மாற்றமடைய வேண்டும். ஜப்பானுக்கு அடுத்ததாக வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க திட்டமிடப்பட்ட எமது நாடு இன்று ஆப்கானிஸ்தானிக்கு மாத்திரம் ஒரு படி மேலுள்ளது. வாக்களித்த பெரும்பாலான இளைஞர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். எவ்வாறிருப்பினும் இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் கருதுருகின்றேன்.

அடுத்த வரும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக காலநிலை செழுமைத் திட்டத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான அலுவலகம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களை தடுப்பதற்காக கருத்துள்ள நிலைப்பாடுகளை வெளிப்படையாக பேசுவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது என்றார்.

பொதுச்சுகாதார பாதுகாப்பு: ஜனாதிபதி விடுத்த விஷேட உத்தரவு

பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைய நாட்களில் விலங்குகள் திடீரென உயிரிழந்ததையடுத்து ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள் பாதுகாப்பு சட்ட மூலம் தயாரிக்கப்படும் – ரணில்

இந்து சமுத்திரத்தில் கடலுக்கடியிலான இணைய கேபிள் பாதுகாப்பு திட்டத்திற்காக ஆசியாவில் முதலாவது சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எம்மிடம் பாரிய கடற்படையும் , விமானப்படையும் இல்லாமலிருக்கலாம். எனினும் எம்மிடம் தற்போதும் சிறியளவிலான கடற்படை கப்பல்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் சில நவீனமானவையாகும். இந்து சமுத்திர பிராந்தியத்திற்குள் எமக்குள் பலம் உள்ளது என்பதைக் காண்பிப்பதற்கு இவை போதுமானவையாகும். இதனை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் எந்தவொரு தரப்பினரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக எவருடைய இராணுவ முன்னணிகளிலும் நாம் தொடர்புபட வேண்டிய அவசியமில்லை. எவ்வாறிருப்பினும் நாம் ஏனைய தரப்பினருடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.

இந்து சமுத்திரத்தின் கடற்படை சுதந்திரத்திற்காக நாம் செயற்பட வேண்டும். இதன் போது ஏனைய நாடுகளை விட அதிகமான செயற்பாடுகளை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இலங்கை விசேடமான நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது.

ஆசியாவில் முதன் முறையாக கடலுக்கடியிலான இணைய கேபள் பாதுகாப்பு திட்டத்திற்காக சட்ட மூலமொன்றை தயாரிப்பதே அந்நடவடிக்கையாகும். 2022 ஆம் ஆண்டைப் பற்றி மாத்திரம் சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. 2050 ஆம் ஆண்டாகும் போது எவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எனவே தற்போது நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை மீட்டுப்பார்க்க வேண்டும். நாம் பலவீனமான அரசாக முடியாது என்பதை இலங்கை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோன்று பலவீனமான படைகளாகவும், பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் இருக்க முடியாது. அதன் காரணமாகவே 2050 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு தற்போது பல்வேறு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எம்மிடம் பொருளாதார பலம் இல்லாவிட்டால் , அரசியல் பலத்தைப் போன்றே பாதுகாப்பு படை பலத்தையும் ஸ்திரப்படுத்த முடியாது என்றார்.

Posted in Uncategorized

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை – ரணில்

மின்சார சபையின் நட்டத்தை போக்க மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை. நாடு என்ற ரீதியில் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நாங்கள் எப்போதும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க தவறியதாலே இந்த நிலையில் இருக்கின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் அதிகரித்தது. என்றாலும் அது போதாது.  மேலும் 152 பில்லியன் நட்டம் ஒன்று ஏற்பட இருக்கின்றது. 2013 இல் இருந்து மின்சார சபையின் மொத்த நட்டம் 300 பில்லியனாகும்.

இந்த தொகையை இந்த காலப்பகுதியில் தேடிக்கொள்ளவேண்டி இருக்கின்றது. குறிப்பாக அடுத்த வருடம் நடுப்பகுதியில் வரட்சி ஏற்படலாம் அவ்வாறு ஏற்பட்டால் எமக்கு மேலதிகமாக 420 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றுது.

சாதாரண மழைவீழ்ச்சி கிடைத்தால் எமக்கு 352 பில்லியன் ரூபாவரை தேவைப்படும்.  அவ்வாறு இல்லாமல் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றால் 295 பில்லியன் ரூபா வரை தேவைப்படுகின்றது. இந்த தொகையை நாங்கள் எவ்வாறு தேடிக்கொள்வது?. இது தான் பிரச்சினை.

அத்துடன் அரசாங்கத்துக்கும் வருமானம் இல்லை. பணம் அச்சிட்டால் ரூபா வீழ்ச்சியடையும். வரி அதிகரித்தால் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும். அப்போதும் பிரச்சினைதான். அப்படியானால் கட்டணம் அதிகரிக்கப்படவேண்டும்.

இது பிரச்சினைக்குரிய விடயம் என்பதை நான் அறிவேன். மின் துண்டிப்புக்கு செல்ல முடியும். ஆனால் அடுத்து மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருப்பதால் மின் துண்டிப்பை நிறுத்தவேண்டி இருக்கின்றது. மின் கட்டணம் அதிகரிக்க யாரும் விரும்பப்போவதில்லை.

இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் சுமையும் எமக்கு தெரியும். இதனைத்தவிர எமக்கு இருக்கும் மாற்று வழி என்ன? நாங்கள் பொருளாதாரத்தை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தாக்கிப்பிடித்துக்கொண்டு, தற்போது சீனாவுடன் கலந்துரையாடி முடிவுக்கு வரும்போது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லாம்.

நாங்கள் நட்டத்தை காட்டி வருமானத்தை காட்டாவிட்டால் வெளிநாட்டுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப்போவதில்லை. அதனால் விருப்பம் இல்லாவிட்டாலும் இதனை செய்யவேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம்.

சில சந்தர்ப்பங்களில் நாங்கள் நாடு என்ற ரீதியில் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நாங்கள் எப்போதும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க தவறியதாலே நாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம். 2013க்கு பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படவி்ல்லை. அதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பக்கூற வேண்டும். வேறு நாடுகள் கடினமான தீர்மானங்களை எடுத்தன. ஆனால் நாங்கள் அதில் இருந்து தப்பிச்சென்றோம். இப்போது என்ன செய்வது என எங்களிடம் கேட்கின்றனர்.

அத்துடன் 2001இல் நான் பிரதமராகியதுடன் ஜப்பானுடன் இருந்த நுரைச்சோலை நிலக்கறி திட்டத்தை நிறுத்தினேன். அதற்கு நிதி பிரச்சினை ஏற்படுவதால் 6மாதத்துக்கு நிறுத்தினேன். ஆனால் எமது அரசாங்கம் தோல்வியடைந்தவுடன் மீண்டும் இந்த இடத்தில்தான் அதனை போடவேண்டும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுச்சென்றுள்ளனர். அதேபோன்று 2002இல் நாங்கள் உலக வங்கியின் உதவியை பெற்றுக்கொண்டு, மின்சக்தி தொடர்பில் எமக்கு அறிக்கை ஒன்றை தந்தார்கள். அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டு, தற்போது இருக்கும் மின்சாரம் தொடர்பான சட்டமூலத்தை கருஜயசூரிய கொண்டுவந்தார்.

ஆனால் நாங்கள் தேர்தலில் தோலியடைந்ததுடன் அந்த சட்டமூலத்தை செயற்படுத்தவில்லை. 2007 சட்டமூலத்தை கொண்டுவருமாறு தெரிவித்தனர். அப்போது நாங்கள எந்த மின்சார உற்பத்தி நிலையத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனால் அதன் பிரகாரம் செயற்பட முடியாமல் போனது.

பின்னர் 2017, 2018,2019 காலத்தில் நாங்கள் இந்தியா, ஜப்பானுடன் கலந்துரையாடி எல்..என்.ஜி. மின் உற்பத்திய நிலையங்கள் 2 பெற்றுக்கொண்டோம்.

தேர்தல் முடிந்து எமது அரசாங்கம் சென்ற பின்னர், இவர்கள் என்ன செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தை இரத்துச்செய்யாமல், அமெரிக்காவின் நியுபோட்ரஸுக்கு வழங்கினார்கள். அதன் பின்னர் நியுபாேட்ரஸுக்கு விருப்பம் இல்லாமல் அதனை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வழங்கினார்கள். தற்போது ஒரே பூமியில் இந்தியா, ஜப்பான், சீனா, பாக்கிஸ்தான், அமெரிக்கா அனைத்து நாடுகளும் இருக்கின்றன.

ரஷ்யா மாத்திரமே இல்லை. உலக யுத்தம் ஒன்று ஏற்படாததுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரே இடத்தை அனைத்து நாடுகளுக்கும் கொடுத்துவிட்டு தற்போது பிரச்சினையை தீர்க்குமாறு என்னிடம் தெரிவிக்கின்றனர். இறுதியில் எல்.என்.ஜியும் இல்லை எதுவும் இல்லை.

ஐந்து நாடுகளின் இராஜ தந்திரிகளுடன் பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை கொழும்பில் சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.

கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைத்தால் மாத்திரமே இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் – ரணில்

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும். அத்தோடு மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் முதன்மையானதும் மிகவும் எதிர்பார்ப்புடையதுமான வருடாந்த பொருளாதார நிகழ்வான, 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு திங்கட்கிழமை (டிச. 05) ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. ‘ கொந்தளிப்பில் இருந்து வாய்ப்புக்கு மீள்வது’ என்ற தொனிப்பொருளின் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

2050ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார மறுசீரமைப்புக்கு மேலதிகமான பணியாகும்.

பழைமையான பொருளாதார முறைமையை கையாள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது. இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் தேவைப்படுவது அந்நியச்செலாவணியே ஆகும்.

மேலும், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் என்பதுடன், மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

இந்நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

அடுத்த வருடம் மின் சக்தித் துறைக்கு மாத்திரம் 300 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்படவுள்ளது. இதனால் இச்செலவை மீளப் பெற்றக்கொள்வதற்கான மாற்றுவழிகளைத் தேட வேண்டியுள்ளது. வலுச்சக்தி துறையில் புதிய மாற்று சக்திகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்திக்கு பதிலாக பசுமை ஹைட்ரஜன் சக்தியில் கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என்றார்.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் , இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் விஷ் கோவிந்தசாமி, இந்திய என்.ஐ.டி.ஐ யின் பிரதம நிறைவேற்ற அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர். பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரட்ன, ஹர்ஷ டி சில்வா மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆணவத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதியால் மக்களே நெருக்கடியில் – ஹர்ஷன ராஜகருணா

பொருளாதார ரீதியில் நாடு அடுத்த ஆண்டு தற்போதுள்ளதை விட பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும். இது தொடர்பில் எம்மால் விடுக்கப்படும் எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆணவத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவரது இந்த செயற்பாடுகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (டிச.05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தமைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆரம்பத்தில் நாமும் எண்ணினோம்.

எனினும் அவரது இலக்கு நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதல்ல. மாறாக இலாபமீட்டும் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் காப்புறுதி நிறுவனம் என்பவற்றை தனியார் மயப்படுத்துவதாகும். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

மத்தள விமான நிலையம் வருமானத்தை விட 21 மடங்கு செலவினைக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறானவற்றையே மறுசீரமைப்பதற்கு ஜனாதிபதியால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது இழக்கப்பட்டுள்ளது. காரணம் அவரது வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்கள் மீது வரி சுமையை சுமத்துபவையாகவே உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நாடு பொருளாதார ரீதியில் வீழச்சியடையும் என்பதை அறிந்திருந்தும் அது தொடர்பில் மத்திய வங்கியால் எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி எச்சரிக்கை விடுக்காவிட்டாலும் பொறுள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் அதனை செய்திருந்தோம். அடுத்த ஆண்டு இதனை விட பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று இப்போதும் எச்சரித்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆணவத்தினால் நாம் கூறும் விடயங்களை உதாசீனப்படுத்துகின்றார். இதற்கு பதிலாக தன்னை ஹிட்லர் எனக் கூறிக் கொண்டும் , இராணுவத்தினரைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை அடக்குவேன் என்று கூறுகின்றார்.

மக்கள் இவ்வாறான அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல. மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலும் கூட, மீண்டும் 75 சதவீதம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்

எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தவில்லை என ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஹர்ஷ

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் அவதானம் செலுத்தவில்லை என குறிப்பிடுவது பாராளுமன்றத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என அரசாங்க நிதி தொடர்பான  குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்ற அவதானம் செலுத்தவில்லை, ஆளும் தரப்பினரும் எதிர்தரப்பினரும் முன்கூட்டிய நடவடிக்கை தொடர்பில் பேசவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டதாக செய்தி  வெளியாகியுள்ளன. இந்த செய்தியின் பிரதியை நான் சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை கவலைக்குரியது.நாட்டின் பொருளாதார முகாமைத்துவம், அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்க்கட்சிகள் தான் முதலில் பாராளுமன்றத்திற்கு எடுத்துரைத்தது.

2020.08.21 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான விவாதத்தின் போது பொருளாதார பாதிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்தோம்.

ஆகவே ஜனாதிபதியின் கருத்துக்கள் பாராளுமன்றத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் காணப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு செல்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் காலப்பகுதியில் குறிப்பிட்டேன்.ஆகவே பொருளாதார பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தவில்லை என ஜனாதிபதி  குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.