இலங்கையிலும் இந்தியாவிலும் இந்து சமய வழிபாடுகள் தொடர்பில் ஆய்வுக்குட்படுத்தவேண்டும் – ஜனாதிபதி

இலங்கையில் இந்து சமய வழிபாடுகள் மற்றும் இந்தியாவில் இந்து சமய வழிபாடுகள் ஆகியவற்றுக்கிடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையின் இந்து சமய வழிபாடுகள், இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் இந்து சமய வழிபாடுகளை விட வித்தியாசமானதா என்பதை ஆராய வேண்டும்.

இலங்கையில் பௌத்த விகாரைகளிலும் இந்து சமயம் சம்பந்தமான தெய்வங்களின் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தெற்கில் உள்ள பௌத்த மக்கள் இந்து மத தெய்வங்களையும் வழிபடுகின்றனர்.

பௌத்த விகாரைகளில் சிவன், விஷ்ணு என அந்த இந்து மத தெய்வங்களின் வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இந்த வரலாறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி இருக்கின்றன.

அத்துடன், இலங்கையின் வரலாறு தொடர்பாக நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும். நாங்கள் எமது வரலாறை மறந்து இருக்கின்றோம்.

அந்த வகையில் எமது வரலாறுகளை ஆய்வு செய்வதற்கும் அது தொடர்பான தெளிவை ஏற்படுத்தவும் நிறுவனம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், நாங்கள் அறிந்த மகாவம்சத்தைவிட தற்போதைய வரலாறு வித்தியாசமானது. அதனால் இலங்கை தொடர்பான வரலாறை தொடர்ந்து மேற்கொள்ள இந்த நிறுவனம் ஊடாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுவதை நம்ப முடியுமா ? – பீரிஸ் சபையில் கேள்வி

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த அனைத்து அரசாங்கங்களும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இவ்வாறான நிலையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுவதை எவராலும் நம்ப முடியுமா என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று (28) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வை வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கூட்டிணைந்த அடிப்படையில் அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்துள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்ட அரசாங்கம் இருந்திருக்கிறது. இந்த அரசாங்கங்கள் எல்லாம் இனப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் இந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன.

இவ்வாறான நிலையில் அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியும் என எவராலும் நம்ப முடியுமா? உலகில் உள்ள எவரும் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை கருத்தில் கொள்வார்களா,சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடுகளே தொடர்ந்த வண்ணம் உள்ளன.

பொருளாதார மீட்சிக்கான நீண்ட கால திட்டமாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. தென்னாபிரிக்காவில் உள்ளது போல உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையா அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு ஆழமான விசாரணைகளை மேற்கொண்டது. கொலை, கொடூரமான குற்றச்செயல்களை செய்தவர்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு விசாரணைகளை செய்தது. இதில் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த அடிப்படையிலா உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் கிடைக்கப்பெறும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது, ஆனால் நாணய நிதியம் மக்கள் ஆணை தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் ஆணை எனும்போது தேர்தல் பிரதானமானது. இவ்வாறான நிலையில் தேர்தலை நடத்தாது விட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகள் மற்றும் ஜி.எஸ்.பிளஸ் வரிச்சலுகை உட்பட சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கூட இழக்க நேரிடும்.

மாகாணசபைகளுக்கான தேர்தல் கடந்த மூன்று வருடங்களாக நடத்தப்படவில்லை. எந்தவொரு மாகாணசபைகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இல்லை.

இதே நிலைமை உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்டால் பிரச்சனை ஏற்படும்.ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படும் போது சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையின் பொருளாதார பாதிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்’ செலுத்தியுள்ளது. பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் நாட்டில் தற்போது மனித உரிமைகள் சிதைவடைந்துள்ளன.

ஊழல் மோசடி, அரச நிதி வீண் விரயம் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இதுவரை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை, ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. இவ்வாறான நிலையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்றார்.

இன்றைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தின் முடிவுகள்

இன்றைய தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதியின் பேச்சுக்கான அழைப்பிற்கு தமிழ்த் தரப்பு பின்வரும் வகையில் பதில் வழங்குவதாகவும் இதன் அடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுக்க முடியும் எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

1. நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

2. அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும்

3. உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒழுங்குமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை நாம் வரவேற்கிறோம்.

கூட்டமைப்பு அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட இக் கலந்துரையாடல் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அவர்கள் இல்லத்தில் இன்று 25- 11- 2022 மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இம்முடிவுகளை ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

ரணிலின் கதைகள் எவ்ளவு தூரம் உண்மையானது? – சுரேஷ்

தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். மீண்டும் ஒரு முறை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் காரணகர்த்தாவாக இருந்து விட கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,நேற்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் ஒரு செய்தி முன்வைக்கப்பட்டிருந்தது. சுமந்திரன், இந்த அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை, இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை, குறிக்கப்பட்ட சில நாட்களுக்குள் பேச வேண்டிய விடயங்கள் சில இருக்கின்றன அதனை பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனக்கூறிய போது, அதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும் தமிழ் தரப்பினர் ஒருமித்து வந்தால் பேசலாம் என்று கூறியிருந்தார். இந்த விடயத்தில் அவர்கள் உறுதியாக இருப்பார்களா என்பது எதிர்காலத்தில்தான் தெரியவரும்.

மைத்திரி, ரணில் இருந்த கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் 4 வருடங்களாக பேசப்பட்டது. அது எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸ காலத்தில் சர்வகட்சி உருவாக்கப்பட்டு பேசியும் அரசாங்கத்திற்கு தீர்வு திட்டத்தினை கொடுத்து இருந்தார்கள். அதனை மகிந்த ராஜபக்ஷ் கண்டுகொள்ளவில்லை.
பின்பு மஹிந்த ராஜபக்ஷ்வுக்கும் தமிழ் தரப்பினருக்கும் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதிலும் எதுவும் நடக்கவில்லை. தற்போது இவர்களே இந்த விடயங்களை பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என்று கூறுகிறார்கள்.

நேற்றைய தினம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்திற்கான ஒரு சமஸ்டி அரசியலமைப்பு தொடர்பாக பேச வேண்டும் என்று தாங்கள் எடுத்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இதனை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழர் தரப்பு நிலைப்பாடு என்பது சமஸ்டி சம்மந்தமாக உள்ளது. அரசாங்கத்தை பொறுத்த வரையில் 13 க்கு மேலே போக தயாராக இருப்பார்களா அல்லது பேசுவதற்ககு முன்வருவார்களா என்ற கேள்வியும் இருக்கிறது.

மாகாண தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது மாத்திரம் அல்ல அரசாங்கம் தான் விரும்பியவாறு நியமனங்களை செய்கின்றது. வடக்கு மாகாணத்திற்கு சிங்கள உத்தியோகத்தர்களை நியமிப்பதனை தவிர்த்துக்கொண்டு தமிழ் உத்தியோகத்தர்களை நியமிக்கலாம். இவ்வாறு செய்தால் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும்.

தமிழர்களோடு உறவாடுவது போல் இவர்கள் காட்டிக்கொண்டாலும் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா ஆகியவற்றில் யுத்தத்திற்கு பிற்பாடு எத்தனை பௌத்த கோயில்கள் வந்திருக்கின்றன, எத்தனை இந்து கோயில்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த இடங்களில் எத்தனை சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களது இந்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இது நிறுத்தப்படவில்லை என்பது முக்கிய விடயமாகும்.

எனவே நல்லிணக்கத்தை உருவாக்க விரும்பினால் காணிகள் அபகரிப்பதனை ஜனாதிபதி நிறுத்த முடியும். இதற்கு குழுக்களை அமைப்பதாக கூறுகிறாரே தவிர நிறுத்துவதாக கூறவில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில், இனி இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படாத வகையிலான தீர்வுக்கு இவர்கள் ஒத்துக்கொள்வார்களா? என்பது தான் தற்போது இருக்கக்கூடிய விடயம்.

ஜனாதிபதி தேர்தல்களை நடத்த மாட்டேன் நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என்று கூறுகிறார். அடுத்த 1, 2 வருடங்கள் தேர்தல்களை நடத்தாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போகிறோம் என்று மக்களை ஏமாற்றக்கூடிய விடயம் தான் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா என்பது பெரியதொரு கேள்வியாக இருக்கிறது.

ஏற்கனவே தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். மீண்டும் ஒரு முறை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் காரணகர்த்தாவாக இருந்து விட கூடாது.- என்றார்.

மனித உரிமை என்ற போர்வையில் வன்முறைக்கும் அராஜகத்திற்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எந்த விதத்திலும் இடமளிக்க முடியாது.

அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன், வீதியில் நின்று போராட்டம் நடத்துவதால் பாராளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 24) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் வன்முறைக்கு ஒருபோதும் இடம் கிடையாது. வீதியில் இறங்கி எவரும் நாடகமாடவும் முடியாது. அதேபோன்று அரசாங்கத்தை வீழ்த்த முற்படும் செயற்பாடுகளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கவும் முடியாது.

அரசியலமைப்பின் 9 ஆவது சரத்திற்கு இனங்க படையினர் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களுக்கான போராட்டம் என்ற போர்வையிலேயே இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அராஜகம், வன்முறை ஆகியவை மனித உரிமைக்குள் உள்ளடங்காது. அது மனித உரிமைக்கு முற்றிலும் எதிரானது. அந்த வகையில் மனித உரிமை என்ற போர்வையில் அராஜகத்திற்கும் வன்முறைக்கும் இடமளிக்க முடியாது.

அவ்வாறு வன்முறையில் ஈடுபடுபவர்களை மனித உரிமை என தெரிவித்து பாதுகாக்கவும் முடியாது. அதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பில் எமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மீறி எவரும் செயற்பட முடியாது.

அத்துடன், மனித உரிமை பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொண்டு வெளிநாடுகளில் டொலர்களைப் பெற்று நாட்டில் நெருக்கடி நிலையை உருவாக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது.

வீதியில் நின்று போராட்டம் நடத்துவதால் நான் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை. ஒரு சில குழுக்களே இவ்வாறு செயல்படுகின்றன. பெரும்பாலானோர் அமைதியாகவே உள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் எவரையும் நாம் கைது செய்து சிறையிலடைக்க வில்லை. வசந்த முதலிகே  இத்தனை வருடங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கின்றார்? அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரா? என்ற கேள்வியே எழுகிறது.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முற்படும் பொலிசாரை மனித உரிமை என்ற போர்வையில் சிறையில் அடைக்கப் பார்க்கின்றனர்.

அன்றாட செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வீதிகளில் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

அவ்வாறு தடுக்கும் போது அவர்கள் மீது குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர். அது தொடர்பில் நான் கவனம் செலுத்தியுள்ளதுடன் அரசியலமைப்பின் 15 ஆவது சரத்தின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் சட்டமா அதிபரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

எனது வீட்டுக்குத் தீ வைத்தனர். எனது பிரதான பாதுகாப்பு அதிகாரியை வேலை நீக்கம் செய்ய முயற்சித்தனர்.

மனித உரிமை என்ற போர்வையில் அநாவசியமான தலையீடுகளை  மேற்கொள்ள முடியாது. அரசாங்கத்திற்கு ஆளும் கட்சி மட்டுமன்றி எதிர்க்கட்சியும் அவசியம்.

அதேபோன்று நாட்டுக்காக சேவை செய்ய அனைத்து அதிகாரிகளும் வேண்டும். அத்துடன், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டைப் பாதுகாப்பதில் சிறு பதவிகளில் உள்ளவர்கள் முதல் பீல்ட் மார்சல் பதவியில் உள்ளோர் வரை அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

25,000 பேரை வீதியில் விட முடியாது படையினரின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும் பதவி உயர்வுகள் அதிகரித்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்புக்கான செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அதேபோன்று நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இன்று பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இல்லை என்பதற்காக எதிர்காலத்தைப் பற்றியும் அவ்வாறு நாம் சிந்திக்க முடியாது. நிலைமை மாறிவிடும். உலக அரசியல் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்து சமுத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் . எமது கடல் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 2040 ஆம் ஆண்டிற்குள் கடற் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எமது பொருளாதாரம் நூற்றுக்கு எட்டு வீதமாக அதிகரிக்குமானால் பாதுகாப்புக்கான செலவுகளையும் அதிகரிக்க முடியும்.

யுத்தக் கப்பல்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். அதற்கான செயற்பாடுகளில் எமது கடற்படையை ஈடுபடுத்தலாம்.

தேசிய பாதுகாப்பு செயலகம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நாம் மேலும் சிறந்த இராணுவ வீரர்களை உருவாக்குவது அவசியம்.

பொலிஸ் துறை தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் அதற்காக பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் புதிய விடயங்களை உள்ளடக்க வேண்டும். அதனை புதிதாக தயாரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

குறிப்பாக பாராளுமன்றத்தை பாதுகாக்க முன்வந்த இராணுவ படையினருக்கு நான் விசேட நன்றியை தெரிவிக்கின்றேன். அவர்கள் செயற்பட்டிருக்காவிட்டால் இன்று இந்த நாட்டில் பாராளுமன்றம் ஒன்று இருக்காது.

அதனால் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு வீதிக்கி இறங்கி வருபவர்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரினருக்கு பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவது பாதுகாப்பு பிரிவினரின் கடமை என்றார்.

தமிழ்க் கட்சிகளை நோக்கி ரணில் அடித்த பந்து

புருஜோத்தமன் தங்கமயிலால் எழுதப்பட்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில், அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்து வந்தால், பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். இதன்மூலம், தமிழ்க் கட்சிகளை நோக்கி, பேச்சுவார்த்தை என்கிற பந்தை, ரணில் உதைத்திருக்கின்றார்.

இந்தப் பந்தை தமிழ்க் கட்சிகள் தங்களுக்கிடையில் எப்படி வெற்றிகரமாக கையாண்டு, ரணிலுக்கு எதிராக க ோலாக மாற்றப் போகின்றன என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதை, தென்இலங்கையின் ஆட்சித் தரப்புகள் எப்போதும் விரும்புவதில்லை. ‘ஒரே இலங்கை; ஒரே ஆட்சி; பௌத்தத்துக்கு முதலிடம்’ என்பனதான், தென்இலங்கையின் ஒற்றை நிலைப்பாடு. இதைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த முன்முயற்சிகளையும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நினைப்பார்கள்.

சர்வதேச ரீதியில் இலங்கை மீது பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டாலன்றி, உள்ளக இன முரண்பாடுகள் குறித்தோ, தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்தோ, தென் இலங்கை ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தலைப்பட்டதில்லை.

சர்வதேச அழுத்தம் அல்லது போர் முனையில் பின்னடைவு ஏற்பட்ட தருணங்களில், சமாதானப் பேச்சு என்கிற உத்தியைப் பயன்படுத்தி, நெருக்கடிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தப்பித்திருக்கிறார்கள். மற்றப்படி, தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய பேச்சுகள் எழுவதைக்கூட, அவர்கள் விரும்புவதில்லை.

இதற்கு தென்இலங்கையை ஆண்ட எந்தவோர் அரசியல் தலைவரும் விதிவிலக்கில்லை. டீ.எஸ் சேனநாயக்கா தொடங்கி இன்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க வரையில் இதுதான் நிலைமை.

இப்படியான நிலைமையில், தமிழ்க் கட்சிகள் எல்லாமும் இணைந்து ஒன்றாக வந்தால், அரசாங்கம் பேச்சுக்கு தயார் என்பது, இலகுவாகத் தப்பிக்கும் ரணிலின் உத்தியாகும். இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடித்திருக்கின்ற பந்தானது, தமிழ்ககட்சிகள் என்கிற பொதுப் பரப்பை நோக்கி அடிக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்பட்டாலும், அது உண்மையில், தமிழ்த் தேசிய கட்சிகளை நோக்கி அடிக்கப்பட்ட பந்தாகும்.

ஆட்சியில் பங்கெடுத்திருக்கின்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியோ, சிவநேசதுரை சந்திரகாந்தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளோ அரசாங்கத் தரப்பில் இருக்கக் கூடியவை. இவை, அரசியல் தீர்வு தொடர்பில் அக்கறை கொண்ட தரப்புகள் அல்ல. இந்தக் கட்சிகளின் அதிகபட்ச இலக்கு, பிரதேச அபிவிருத்தி என்பதுதான். அதற்கு ஆட்சியில் பங்காளியாக இருக்க வேண்டுமென்பது, இவர்களின் அரசியல் சித்தாந்தம்.

ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் என்பது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்கிற ஒற்றைப் புள்ளியைச் சார்ந்திருப்பது. அதுதான் அடிப்படை. அந்த அடிப்படைக்கு அப்பால் நின்று சிந்திக்க முடியாது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியோ எதுவாக இருந்தாலும், அரசியல் தீர்வு பற்றி சிந்தித்து செயலாற்றியாக வேண்டும். ஆனால், இந்தக் கட்சிகள் எல்லாமும் ஒன்றுக்கொன்று, நேரெதிரான செயற்பாட்டு நிலைகளைப் பேணுபவையாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக, கூட்டமைப்பு மக்களை காட்டிக் கொடுப்பதாக கூறிக் கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களம் கண்டது. அதுபோல, கூட்டமைப்பை எதிர்த்து விக்னேஸ்வரன் களம் கண்ட போது, ஒரு கட்டத்தில் அவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரித்தது. அடுத்த சில மாதங்களில், முன்னணியும் விக்னேஸ்வரனும் முட்டிக்கொண்டு, தனித்தனியாகக் களம் கண்டன.

அது மாத்திரமன்றி, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளேயே, மூன்று பங்காளிக் கட்சிகளும் முரண்பாடுகளின் உச்சத்தின் நின்று மோதிக் கொள்கின்றன. இப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், அதன் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஒவ்வொரு தரப்பும், நவக்கிரகங்கள் போன்று முகங்களை எதிர்த்திசையில் திருப்பிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் தீர்வு குறித்து பேச்சு நடத்த, கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்தாலே, டெலோவும் புளொட்டும் வருவதில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவரே, “சம்பந்தனின் அழைப்பை கருத்தில் எடுக்கத் தேவையில்லை; யாரும் பேச்சுக்கு வர வேண்டாம்” என்று பங்காளிக கட்சிகளிடம் அறிவிக்கின்றார்.

அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கூட்டமைப்புடன் இணைந்து, பேச்சு மேசைக்கு கொண்டுவந்து சேர்ப்பது என்பது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம்.

அடிப்படையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களாக இருக்கின்றவர்கள், தங்களை முன்னிறுத்துவதைத் தாண்டி, எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பதில்லை. இவர்களைத் தாண்டி, கட்சிகளைத் தாண்டி, தமிழ் மக்களுக்கான தீர்வு, அவசியமும் அவசரமுமானது என்பதுதான் நிலைமை.

ஆனால், தன்னால் முடியாது என்றால், மற்றவர்களாலும் எந்த அதிசயமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற மனநிலை, தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களாக இருக்கின்றவர்கள் அனைவரிடத்திலும் வந்துவிட்டது.

ஒன்றாகக் கூடி, ஒன்றாக முடிவெடுத்து, மக்களிடம் அறிவித்துவிட்டு, அந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி இயங்கும் அரசியல்வாதிகளை, எந்தவொரு தரப்பினாலும் திருத்திவிட முடியாது. அவர்களைத் தேர்தல் என்கிற புள்ளியில் வைத்து, மக்கள் தோற்கடித்து வெளியேற்றினால் அன்றி, இவர்களை நேர்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

அரசியல் ஆர்வலர்கள், கட்சி அபிமானிகள், புத்திஜீவிகள் தொடங்கி யார் யாரோவெல்லாம், “தமிழர் நலனை முன்னிறுத்திய நிலைப்பாடுகளுக்கு ஒன்றிணைந்து வாருங்கள்” என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி விட்டார்கள்.

ஆனால், அவற்றையெல்லாம் இந்த அரசியல் தலைவர்கள் ஒருபோதும் கேட்டுக் கொண்டதில்லை. விமர்சனங்களை அவர்கள் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக்கொள்வதோடு, விடயத்தை கடந்துவிடுகிறார்கள்.

எம்.ஏ சுமந்திரனோ, சி.வி விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ பாராளுமன்றத்துக்குள் இனி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுகளை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று அழைக்க முடியாது. ஏனெனில், அதற்கான பதிலை ஏற்கெனவே ரணில் வழங்கிவிட்டார்.

பாராளுமன்றத்துக்குள், ஹன்சாட்டில் பதியப்படும் உரைகளை மாத்திரம் நிகழ்த்துவதோடு பணி முடிந்துவிட்டதாக, தமிழ்க் கட்சிகளின் தலைவர்களோ முக்கியஸ்தர்களோ விலக முடியாது. ரணில் இப்போது அடித்திருக்கின்ற பந்து கூட்டமைப்பையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையோ அல்லது இன்னொரு தமிழ்த் தேசிய கட்சியையோ நோக்கித் தனித்து அடிக்கப்பட்டதில்லை. மாறாக, அனைவரையும் நோக்கி அடிக்கப்பட்டு இருக்கின்றது.

இதனை, யாரும் தனித்துக் கையாளவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. அப்படி நடந்து கொண்டுவிட்டு, மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நின்று, அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட உணர்ச்சிபூர்வ உரைகளை நிகழ்த்த முடியாது. அதனால், பலனும் இல்லை.

அப்படியான நிலையில், ரணிலின் பந்தை அனைத்து தமிழ்க் கட்சிகளும் தலைவர்களும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு, காழ்ப்பு மனப்பான்மைகளைக் கடந்து நின்று கையாள வேண்டும். அதன்மூலமே ரணிலின் தந்திரத்தை கடக்க முடியும்.

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றும் இப்போது தனி நாட்டுக்கோரிக்கையோடு இல்லை. தேர்தல் மேடைகளில் கூட, சமஷ்டி தீர்வு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் பேசுவதில்லை.

வேறு விடயங்களில் அதீத உணர்ச்சிவசப்பட்ட உரைகளை நிகழ்த்தினாலும், தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற புள்ளியை தாண்டுவதில்லை. அப்படியான நிலையில், தங்களுக்கு இடையில் சமஷ்டித் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, எழுத்து வடிவிலான இணக்கத்தை தமிழ்க் கட்சிகள் காணுவதற்கு முயல வேண்டும்.

அதன்போது, சந்தர்ப்பங்களைக் கையாளும் உத்தி, இராஜதந்திர நோக்கு பற்றியெல்லாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதன்மூலம், தேர்தல்களில் மோதிக் கொண்டாலும், தமிழ்த் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களின் வாக்குகளைக் பெற்ற கட்சிகளாக அவை நடத்து கொள்ள வேண்டும்.

அதுதான், ரணிலுக்கு எதிராக கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முதற்படி. அது நிகழவில்லை என்றால், தீர்வு குறித்த அதிசயம் நிகழ்வதற்கான வாய்ப்புகளை, முளையிலேயே கிள்ளுவது போன்றதாகும்.

இந்திய றோ அமைப்பின் தலைவர் ரணில் இடையே சந்திப்பு!

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு’ எனப்படும் ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் இரகசிய பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்து சென்றுள்ளார் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சுகளை நடத்தியிருக்கின்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘றோ’ இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதி செயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும்.

முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கின்றது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் ஆவார். இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ‘றோ’ அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும், பிரதமருக்கும் தனது அறிக்கைகளை நேரடியாக அனுப்புவார்.

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘றோ’ வின் தலைமை நிர்வாகி ரணிலுடன் பேச்சு நடத்தியிருப்பது அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

அதிகாரப் பகிர்வு வழங்க எதிர்க்கட்சியினரின் சம்மதம் கேட்ட ரணில்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் வைத்து பெற்றுக்கொண்டார்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வு வழங்க சம்மதிப்பார்களா என சபையில் வைத்து கட்சிகளிடம் நேரடியாக  கேட்ட  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,இது தொடர்பில்  டிசம்பர் 12 ஆம் திகதிக்குள் ஒரு சந்திப்பை நடத்தவும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம்,  பாராளுமன்றம் உள்ளிட்ட 16  விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குறித்து  புதன்கிழமை (23) இடம்பெற்ற  குழு நிலை விவாதத்தில்  ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

ஜனாதிபதி தனது உரையில் தனக்கு முதலில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதியின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அழைப்பு தொடர்பில் அதில் காணப்பட வேண்டிய  தீர்வு தொடர்பிலும் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பதில் வழங்கினார்.

இதன்போது அவர் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவைப் பார்த்தது  நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வு வழங்க சம்மதிப்பீர்களா என வினவினார்.

இதற்கு  பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல ,உங்கள் பாட்டனாரும் அதிகாரப்பகிர்வை வலியுறுத்தியவர். நானும் எப்போதும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துபவன். நாம் எப்போதும் அதற்கு தடையாக இருந்ததில்லை. சில கட்சிகள் தான் அதற்கு தடை செயற்பட்டன,தற்போதும் செயற்படுகின்றன.

இங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார். அவர் 13 பிளஸ் தீர்வு  என்றார். இந்த அதிகாரப்பகிர்வுக்கு அவர் சம்மதமா என அவரிடமே கேட்போம் எனக்கூறிவிட்டு மஹிந்த ராஜபக்சவை பார்த்து ”அதிகாரப்பகிர்வு வழங்க நீங்கள் சம்மதமா?”எனக்கேட்டார்.

இதற்கு மஹிந்த ராஜபக்ச ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு சிரித்துக்கொண்டு சம்மதம் என்பதற்கு  அறிகுறியாக தலையை அசைத்தார். ஆனால்   விடாத லக்ஷ்மன் கிரியெல்ல  தலையசைத்தால்  மட்டும் போதாது.பாராளுமன்றத்தில் எழுந்து நின்று கூற வேண்டும் என்றார். இதனையடுத்து உடனடியாக எழுந்த   மஹிந்த ராஜபக்ச எனக்கு  சம்மதம் என்றார்.

உடனடியாக பிரதமர் தினேஷ் குணவர்த பக்கம் தனது கவனத்தை திருப்பிய லக்ஷ்மன்  கிரியெல்ல  பிரதமர் இதற்கு சம்மதிக்கின்றாரா எனக்கேட்டார். ஆனால் எந்தப்பதிலும் கூறாது பிரதமர் தினேஷ் குணவர்த்தன சிரித்தவாறு அமர்ந்திருந்தார். பார்த்தீர்களா பிரதமர் எப்போதும் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்.அவர் சம்மதிக்க மாட்டார் என்றார்.

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர் மனோ கணேசனை நோக்கிய  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ”என்ன மனோ அதிகாரப்பகிர்வுக்கு நீங்கள் சம்மதமா எனக்கேட்டார். ஆம் நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோம் என மனோகணேசன் பதிலளித்தார்.

அப்படியானால் சுமந்திரன் நீங்களும் சம்மதம் தானே என ஜனாதிபதி ரணில் கேட்டபோது, இது தொடர்பில் வரவு செலவுத்திட்ட விவாதம் முடிந்த பின்னர் ஒரு திகதியை குறிப்பிட்டு கட்சித்தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினால் நல்லது என சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியினரைப்பார்த்தது அப்படியானால் நீங்கள் சம்மதம் தானே என மீண்டும் கேட்டபோது ஒரு உறுப்பினர். அதனை தலைவர்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.

சரி அப்படியானால் இன்று இந்த விவாதம் முடிவடைவதற்கு உங்கள் தலைவரின் முடிவை எனக்கு கேட்டு சொல்லுங்கள் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கூறியபோதுஇ எழுந்து கருத்துரைத்த  மனோகணேசன்  ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் என்பதனால்தான் நாம் அதில் அங்கம் வகிக்கின்றோம் எனக்கூறினார்.

நல்லது  அப்படியானால் வரவு செலவுத்திட்ட விவாதம் டிசம்பர் 8 ஆம் திகதி முடிவடைந்த பின்னர் 12 ஆம் திகதிக்குள் ஒரு சந்திப்பை  நடத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

அதிகாரப் பகிர்வு தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் – ஜனாதிபதி

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்றைய தினம் (நவ 23) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ் அழைப்பினை விடுத்துள்ளர்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமது இலக்கின்படி இனப்பிரச்சனைக்கான தீர்வு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின வருடத்தில் காணப்பட வேண்டும்.

இல்லையேல் தீர்வைக்காண 2048 ஆம் ஆண்டு வரை செல்ல வேண்டியிருக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவம் மற்றும் அவசர சட்டங்களை பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்கு வரும் வரையில் பொதுத் தேர்தல் எதையும் நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தலைமன்னார் இறங்குதுறையை பார்வையிட்டார் ரணில்

புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை குறைப்பதற்காக வடமாகாணத்தில் பாரிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், மேம்படுத்தப்பட்ட நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் மீள் காடுவளர்ப்புத் திட்டம் என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மன்னார்,தம்பபவனி காற்றாலை மின்உற்பத்தி நிலையத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, இந்நாட்டு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் இதற்குப் பொறுப்பான நிறுவனமான இலங்கை மின்சார சபை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அதிகார சபையுடனான கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் மற்றும் ஹைட்ரஜன் திட்டங்களுக்கு விரைவாக மாற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி, இங்கு வலியுறுத்தினார்.

கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் மீன்பிடி படகுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் வலுசக்தி முறையை உடனடியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திலும் வடக்கின் பொருளாதாரத்திலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடல்நீர் சுத்திகரிக்கும் திட்டம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. இதன் ஊடாக எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய வரட்சியான காலநிலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் வன வளம் மற்றும் நீர் மூலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

சிறிய நீர்மின் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிறிய நீர்மின் திட்டங்களாக மாற்றக்கூடிய நீர்ப்பாசனக் கால்வாய்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை இதன் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மொரட்டுவை மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் வலுசக்தி துறையில் எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை அடையாளம் காணுதல் மற்றும் ஆராய்ச்சி செய்வது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized