பேராசிரியர்களில் ஒருவர் 83 கலவரங்களின் போது தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரித்து சூறையாடியர் – ருகுணு பல்கலைக்கழக துணைவேந்தர் குற்றச்சாட்டு

1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். வீடற்ற தமிழ்க் குடும்பம் ஒன்றுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு அரசியல் செய்யட்டும் என்று ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன தெரிவித்துள்ளார்.

ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தரை ஏழு நாட்களுக்குள் பதவி நீக்க வேண்டும் எனக் கோரி நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பில் பகிரங்க அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேனவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அதேநேரம் ருகுண பல்கலைக்கழக வெலமடம வளாகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், ஏழு நாட்களுக்குள் துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்புவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறி கடந்த 5 ஆம் திகதி தனது அலுவலகத்துக்குச் சென்ற சமயம், அவரது அறையிலிருந்து வழக்கத்துக்கு மாறான மணம் வந்ததாகவும், அது அவரைக் கொலை செய்யும் வகையில் பரவ விடப்பட்ட நச்சு வாயுக் கசிவு என்றும் துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவையனைத்தும் தன்னைப் பதவி நீக்கம் செய்வதற்காக வேண்டுமென்றே சோடிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ள துணைவேந்தர், தனக்கெதிரான சதியில் முன்னிற்போருக்கு எதிராகப் பல குற்றச் சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

இதேநேரம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தான் மறுப்பதாகத் தெரிவித்துள்ள துணைவேந்தர், மேலும் குறிப்பிடுகையில் றொகான் லக்சிறி, பேராசிரியர் நிரமல் ரஞ்சித் தேவசிறி மற்றும் பேராசிரியர் உப்புல் அபேரத்ன ஆகியோர் அரசியல் காரணங்களுக்காகவே என்னைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு பாடுபடுகிறார்கள்.

நான் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இரண்டாவது தடவையாகத் திறமை அடிப்படையில் கூடிய புள்ளிகளைப் பெற்றுத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டவன். அரசியல் செல்வாக்கினால் பதவியைப் பெற்றவன் நானல்ல. இங்கு கலாநிதிப் பட்டத்துக்காக நிதியைப் பெற்று விட்டு 13 வருடங்களுக்கு மேல் பணத்தை மீளளிக்காமல் இருப்பவர்களும், ஆராய்சி ஒதுக்கீடுகள் மற்றும் பரீட்சைகளில் மோசடி செய்வோருமே எனக்கு எதிராக என்னைப் பதவி நீக்கம் செய்யத் துடிக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். வீடற்ற தமிழ்க் குடும்பம் ஒன்றுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு அரசியல் செய்யட்டும் என்று பகிரங்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று 27 ஆண்டுள்

1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுகளாகின்றன.

வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இத்தனைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அடையாளம் காட்டியிருந்த போதும் அவர்களுக்கு நீதிகிடைக்கவில்லை.

தற்போது நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்திலேயே இப்படுகொலை அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மனித உரிமைகள் குறித்து 4 ஆவது முறை ஆராயவுள்ளது ஐ.நா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழு, நான்காவது முறையாக இலங் கையின் மனித உரிமைப் பதிவுகள் தொடர்பான விடயங்களை ஆராயவுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான இந்த அமர்வு, பெப்ரவரி 3 வரை இடம்பெறுகின்றது. இதில் இலங்கை மனித உரிமை நிலை தொடர்பாக ஆராயும் கூட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நடைபெறுகின் றது. ஏற்கனவே இந்த செயற்குழுவில் இலங்கையின் மனித உரிமை மதிப்பாய் வுகள், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையின் கீழ் 2008 மே, 2012 ஒக்ரோபர், மற்றும் 2017 நவம் பர் ஆகிய வருடங்களில் இடம்பெற்றன.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் பரிந் துரைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர் பில் இலங்கை அரசாங்கத்தினால் வழங் கப்பட்ட முன்னேற்ற அறிக்கை, சிறப்பு நடைமுறைகள், மனித உரிமைகள் உடன் படிக்கை அமைப்புகள் மற்றும் பிற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் என அறியப்படும் சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் மற்றும் குழுக்களின் அறிக் கைகளில் உள்ள தகவல்கள்,தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள், பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் உட்பட பிற பங்குதாரர்களால் வழங்கப்படும் தகவல்கள் என்பன இந்த கலந்துரையாடலின்போது மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.

பெப்ரவரி முதலாம் திகதி ஜெனிவா வில் முற்பகல் 9மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கையின் பிரதிநிதி கள் குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.

அல்ஜீரியா, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மீளாய்வுக்கான அறிக்கை யாளர்களாக பணியாற்றவுள்ளனர்.

இந்தநிலையில் மதிப்பாய்வுக்கான இறுதி நாளான பெப்ரவரி 3ஆம் திகதி இலங்கைக்கு அளிக்கப்பட்ட பரிந்துரை களை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழு இறுதிப்படுத்தவுள்ளது. அத் துடன் தமது கருத்துக்களையும் அது வெளியிடவுள்ளது.

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் அனுட்டிப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.

இவர்களில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவுர்களும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் ; பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இலங்கையில் இன்னமும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் ஏற்பாடு செயப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் வாழும் தமிழர்கள் அந்நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பை நினைவுகூர்ந்திருக்கும்  பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் எட் டெவி, தமிழர்களுக்கு எதிரான தொடர் அடக்குமுறைகள் மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்வதில் நிலவும் பின்னடைவு என்பவற்றை மனதிலிருத்திச்செயற்படவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனேடிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அவர்கள் இருவருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸ், இருப்பினும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான லூயிஸ் பிரென்ச், டோன் பட்லர், சாரா ஜோன்ஸ் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகியோர் தமிழ் மக்களுடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதுடன் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு தாம் அரசியல் ரீதியில் மேற்கொள்ளவேண்டிய மேலும் பல விடயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு முழுமையான ஆதரவு வழங்குங்கள்; 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெ. காங்கிரஸிடம் கோரிக்கை

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும் தமிழ் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியில் நிர்ணயித்துக்கொள்வதை முன்னிறுத்தி சுதந்திரமான சர்வஜன வாக்கெடுப்புக்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்விற்காக இதனை முன்னெடுக்குமாறு 6 அமைப்புகளும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

1. உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு
2. வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு
3. நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம்
4. இலங்கையின் சமத்துவம் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு
5. ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் நடவடிக்கை குழு
6. உலகத்தமிழர் அமைப்பு

ஆகிய 6 அமைப்புகளே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கூட்டாக கடிதமொன்றை அனுப்பியுள்ளன. புத்தாண்டு புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வருவதைப் போன்று, இலங்கையில் 7 தசாப்த காலத்துக்கும் மேலாக தொடரும் இனப்பிரச்னைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதி செய்வற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காங்கிரஸை வலியுறுத் துவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தம், தமிழ் மக்கள் மீது மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 3 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், இறுதிக்கட்ட போரின் போது, சுமார் 1,46,679 தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கருத்து தெரிவித்திருந்ததுடன், ‘இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியிருப்பதாக’ அவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் மக்களின் அரசியல் அடையாளத்தை சுதந்திரமாக நிர்ணயித்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் விவகாரத்தில், சர்வதேச சட்டங்கள் அனுசரிக்கப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறித்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இவ்வாறான பின்னணியில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதை முன்னிறுத்திய அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் பயன்படுத்துமாறும், இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாக 6 புலம் பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸிடம் கோரியுள்ளன.