இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு – சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடனிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான தனது சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜோர்ஜீவா உறுதியளித்துள்ளார்.

‘தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான முன்னெடுப்புக்கள் வரவேற்கத்தக்கன. இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உலகத் தலைவர் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில்  புதன்கிழமை (21) பரிஸ் சென்றடைந்தார்.

நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இலங்கையின் அனுபவம் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் சர்வதேச நிதி நிறுவனங்களை கையாள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த மாநாட்டின் பக்க அம்சமாக ,  பல அரச தலைவர்கள் மற்றும் பலதரப்பு இராஜதந்திர தலைவர்களை சந்தித்து பொருத்தமான விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

ஐ.எம்.எவ் இன் 62 நிபந்தனைகளில் இதுவரையில் இருபத்தைந்து மட்டுமே பூர்த்தி

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படவிருந்த புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் உள்ளது.

மேலும் பந்தயம் மற்றும் கலால் வரிகளை அதிகரிப்பது ஆகிய இரண்டு உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு நிதி வெளிப்படைத்தன்மைக்கான இணைய முறையை உருவாக்குவது என்ற உறுதிப்பாடும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 30 ஆம் திகதிக்குள், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் 37 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இலங்கையுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், ஆசியாவிற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்துக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் பலனளித்ததாகவும், இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டை படிப்படியாக தளர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்புச் செயற்பாட்டிற்கான தொடர்ச்சியான ஆதரவிற்காக அமெரிக்க அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவிற்கும் இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டு தெரிவித்தார்.

நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.

இதன்போது இதுவரையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாட உள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

இந்த சந்திப்பில் அவர் ஜனாதிபதி, மத்திய வங்கி அதிகாரிகள், சபாநாயகர் உள்ளிட்ட மேலும் சில தரப்பினரையும் சந்திக்க உள்ளார்.

அத்துடன் ஒக்டோபரில், இலங்கை தொடர்பான முதலாவது மீளாய்வு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களையும் , சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் வழங்குவார் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது

சர்வதேச நாணயநிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது என இந்தியவெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்துள்ளது என வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் வளைகுடாநாடுகள் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைகழகமொன்றில் மோடியின் இந்தியா எழுச்சிபெறும் சக்தி என்ற கருப்பொருளில் உரையாற்றுகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புகளும் அண்டை நாடுகளில் இந்தியா பற்றிய பார்வையும் மாற்றமடைந்துள்ளன இலங்கையில் கடந்த வருடத்தில் என்ன இடம்பெற்ற விடயங்களை விட வேறு எதுவும் வியத்தகு விதத்தில் இதனை வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடந்த வருடம் பெரும்பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நாங்கள் உதவினோம் எனவும் தெரிவித்துள்ள ஜெய்சங்கர் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு உதவியதை விட நாங்கள் அதிகளவு உதவியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்களில் எவரேனும் இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டிருந்தால் இந்த உதவியால் இந்தியா குறித்து மாற்றமடைந்துள்ள கருத்தினை அவதானிக்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்று பெரிய இலட்சியம் மிக்க செல்வாக்கு மிக்க இந்தியாவிற்காக முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் அயல்களை விஸ்தரிக்க முயல்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த விஸ்தரிக்கப்பட்ட அயல் எவ்வாறானதாகயிருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆராய்கின்றோம்,அது இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளாக இருக்கலாம்,தென்கிழக்காசியா வளைகுடாவில் உள்ள நாடுகளாகயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியஅரபு இராச்சியம் சவுதிஅரேபியா ஆகிய நாடுகளுடான உறவுகள் பெருமளவு மாறியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அயலை பற்றிய மிகவும் சுருக்கப்பட்ட பார்வையிலிருந்து நாங்கள் இலட்சியம் மிக்க பார்வையை நோக்கிமாறியுள்ளோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் இலங்கைக்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்.

மகிந்த குடும்பத்தின் ஊழல்களை உடனடியாக விசாரிக்கவேண்டும்! செல்வம் எம்.பி. வலியுறுத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாணய நிதியம் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம். அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியும். ஜனாதிபதி இனப்பிரச்னைக்கு இவ் வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை ஜனாதிபதியிடமே நாங்கள் கேட்கின்றோம்.

வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்கள மாக இருக்கலாம். இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்து விட்டு இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும்? – என்றார்.

இலங்கையை செழிப்பான பாதையில் கொண்டு செல்ல முடியும் என நாணய நிதியம் நம்பிக்கை

இலங்கையை செழிப்பான பாதையில் மீண்டும் கொண்டுசெல்ல முடியும் என சர்வதேச நாணயநிதியம் நம்பிக்கைவெளியிட்டுள்ளது.

ஆசியா பசுபிக்கின் பொருளாதார நிலை குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் சர்வதேச நாணயநிதியத்தின் ஆசியபசுபிக்கிற்கான இயக்குநர் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு முக்கிய பிரச்சினை உள்ள நாடு என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை அடிப்படையாக கொண்ட திட்டம் நுண்பொருளாதார ஸ்திரப்படுத்தல் பணவீக்கத்தை குறைத்தல் போன்றவற்றை வலியுறுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதிஒருங்கிணைப்பு வருவாய் ஒருங்கிணைப்பினை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் வருவாய் திரட்டல் வரிவசூலிப்பு போன்றவற்றில் இலங்கை மிகவும் பின்னிலையில் உள்ளமைக்கும் இதுவும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு கொவிட்டிற்கு முன்னர்அவர்கள் முன்னெடுத்த கொள்கைளில் உள்ள தவறுகளே இதற்கு காரணம் அவர்கள் வரிச்சலுகையை வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஆதரவு திட்டம் என்பது வருவாய் அடிப்படையிலான ஒருங்கிணைப்பு ஆகும் இது பொருளாதாரத்திற்கு ஸ்திரதன்மையை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மிகவும் உயர்நிலைக்கு சென்ற பணவீக்கத்தை கட்டுப்படுத்த சர்வதேச நாணயநிதியம் விரும்புகின்றது என தெரிவித்துள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் ஆட்சி மற்றும் ஊழல் விவகாரங்களிற்கும் தீர்வை காணமுயல்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மற்றும் ஊழல் விவகாரம் குறித்து ஆழமான கண்டறிதலை மேற்கொண்ட முதல் நாடு இலங்கை எனவும் தெரிவித்துள்ள அவர் மேலும் இது இலங்கை வறியவர்கள் மற்றும் நலிந்தவர்களிற்கு எவ்வாறு உதவவேண்டும் என்பதை மையப்படுத்திய திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் கடன்வழங்குநர்கள் உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்களை உள்ளடக்கிய கடன் வழங்குநர்களுடன் கடன் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான நல்லெண்ண முயற்சிகளை இலங்கை அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை 2022 இல் 8.7 வீத வீழ்ச்சி காணப்பட்டது 2023 இல் இது 3வீதமாக காணப்படும சிறிய மீட்சி காணப்படும் எனவும் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தவேண்டும் இதன் காரணமாக கடன்களை பேண்தகு தன்மை கொண்டமையாக மாற்றலாம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தை இலங்கை குறைக்கவேண்டும் என் என்றால் அது வறியவர்கள் மீது சுமையை செலுத்துகின்றது வறியவர்கள் நலிந்தவர்களை காயப்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு – IMF மீண்டும் உறுதி

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கி இணைந்து நடத்தும் ஸ்பிரிங் மாநாட்டிற்கு இணையாக இலங்கை தூதுக்குழுவுடன் நேற்று(11) நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் IMF முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோருடனான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவது அவசியமானது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்களை முழுமைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை முகாமைத்துவ பணிப்பாளரிடம் இதன்போது மீள உறுதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை பூர்த்தி செய்ய இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதாக இதன்போது இலங்கையின் தூதுக்குழு மீள உறுதி செய்துள்ளது.

ஐ.எம்.எவ் கடனுதவி வேலைத்திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை தெளிவுபடுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் கட்சிகளுக்கு நாட்டிற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என சாகல ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.