13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் முன்மொழிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இன்றையதினம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்கவை நேரில் சந்தித்து முன்மொழிவுகளை கையளித்தனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாங்கள் ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக மேற்கூறியவை தொடர்பாக உங்கள் Ref PS/PCA/03-iii 2023 ஆகஸ்ட் 2 தேதியிட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி, எங்கள் கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்க விரும்புகிறோம்.

1. ஏற்கனவே 1988 இல் பாராளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையுடன் 13A அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.
2. அன்றிலிருந்து நாடு முழுவதிலும் மாகாண சபைகள் நிறுவப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்தலை நடத்துவதற்காகக் கலைக்கப் படும் வரை செயல்பட்டன.
3. எனவே ஏற்கனவே இருக்கின்றதானதும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதையும் நடைமுறைப்படுத்துவதற்கு கருத்துக்களை கோர வேண்டிய அவசியமில்லை.
எவ்வாறாயினும், 13A இன் கீழ் வழங்கப்பட்ட சில மாகாண சபை அதிகாரங்கள் திட்டமிட்ட வகையில் காலத்திற்கு காலம் அவ்வப்போது திரும்பப் பெறப்பட்டன.

மாகாண சபைகளில் இருந்து மீளப் பெறப்பட்ட அவ் அதிகாரங்களை மீண்டும் வழங்கி, காணி, பொலிஸ், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் 13A ஐ அதன் அசல் வடிவில் நடைமுறைப் படுத்த நாங்கள் முன்மொழிகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

13ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனேடிய தெற்காசிய விவகார பணிப்பாளரிடம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

“13 ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்குத் தெரியும். ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இன்று இருக்கும் 13 ஆவது திருத்த அதிகாரப் பகிர்வு சட்டதையும், 16 ஆவது திருத்த மொழியுரிமை சட்டதையும் அமுல் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டட்டும். அதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இன்று நாம் இலங்கை அரசுடன் பேசி சலித்துப் போய் விட்டோம். அதேபோல் சர்வதேச சமூகத்திடமும் மீண்டும் இவற்றையே பேசி சலித்துப் போய் கொண்டிருக்கின்றோம்” – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள ருவீட்டர் பதிவில்,

“பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகாரப் பகிர்வு, 13ம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி பிரதிநிதிகள், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர் நாயகத்திடமும், இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடமும், இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கொழும்பு அரசையும் தாம் எதிர்த்துப் போராடுவோம் எனவும் கூறினர்.

தமது அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் பேச்சு நடத்துவதைப் போன்று, சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறுவதிலும் சலிப்படைந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தலைவர்கள் இன்று கூறியதைத் தாம் புரிந்துகொள்வதாகவும், அது தமக்கு ஒரு செய்தி என்றும் கனேடியத் தரப்பினர் தம்மைச் சந்தித்த கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தனர்.

பணத்திற்காக காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாம் – த.சித்தார்த்தன்

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன.

விகாரைகளை கட்டி, அதை பராமரிக்க மெதுமெதுவாக ஆட்களை கொண்டு வந்து, சிங்கள பிரதேசங்களாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

இந்த ஆட்சியில் பல விடயங்கள் நிறுத்தப்படலாமென பலர் நினைத்தனர். ஆனால் நிறுத்தப்படவில்லை. ஜனாதிபதிக்கு பலமுறை முறையிடப்பட்டும், அது கவனிக்கப்படவில்லை.

இவற்றை நிறுத்த நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை, சாத்வீக வழி, பாராளுமன்றத்தின் ஊடாக முயற்சிக்க வேண்டும். அவற்றை செய்து கொண்டிருந்தாலும், அவற்றின் வேகம் போதாது என நினைக்கிறேன்.

நான் கந்தரோடையில் இருக்கிறேன். இந்த கிராமத்திலுள்ள பெரும்பாலான மக்களிற்கு இந்த பிரச்சினை சரியாக புரியவில்லை. எப்படி சிங்கள பௌத்த மத அடையாள மாற்ற முயற்சிகள் நடக்கிறது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை.

அது மாத்திரமல்ல, சற்று அதிக பணம் கிடைக்கிறது என்றால் காணிகளை விற்கிறார்கள். முக்கியமாக வெளிநாட்டில் உள்ளவர்கள். வெளிநாட்டில் உள்ள ஒருவர்தான் கந்தரோடையில் விகாரை கட்டப்படவுள்ள காணியையும் விற்றவர்.

வெளிநாட்டிலுள்ள பலர், இங்குள்ள காணிகளை பிற சமூகத்தவர்களுக்கு விற்பதால் ஏற்படும் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து விற்று வருகிறார்கள். சில இடங்களில் காணிகள் விற்கப்பட்டுள்ளதை அறிகிறோம். நல்லூரிலும் விற்கப்படுகிறது.

இங்குள்ள இராணுவத்தினர் வெறும் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவற்றை வாங்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே, சிறியளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக மாற்று சமூகத்தினருக்கு விற்பதை நிறுத்துங்கள்.

இங்கு பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இப்போது நடக்கும் போராட்டங்கள் மிகச்சிறியவை. 3,5,10 பேருடன் நடக்கும் போராட்டங்களினால் அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படாது. பெருமெடுப்பிலான போராட்டங்களை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்

பௌத்த விகாரைகள் கட்டப்படுவது என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் தமிழர்கள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்படுகின்றது என்பதே குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதற்கமைய பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை ஒன்றை அமைத்து அந்த விகாரையை பேணி பாதுக்காக்கும் வகையில் பௌத்த பிக்குகளை கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இதற்கமைய இந்த அரசாங்கத்திலாவது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்ரக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்தவித நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவில்லை – என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டார்.

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் – சித்தார்த்தன்

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

தமிழ் தரப்பினர்  அரசியல் கட்சி பேதங்களை விடுத்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒன்றுபட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்ளைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னணியில் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்ட போது, பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு எட்டப்பட்டு, வரிசை யுகம் கட்டம் கட்டமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.

நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் உட்பட அமைச்சரவை ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

நிலையான பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படவில்லை. நாட்டில் பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ளது, இருப்பினும் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

பூகோள ரீதியான காரணிகள் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு ஒரு காரணம் என்று குறிப்பிடுவதை மறுக்க முடியாது.

தேசிய கொள்கை வகுத்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பு கிடையாது. தேசிய கொள்கை வகுப்பில் தெற்கு அரசியல் கட்சிகள் முன்னிலையில் இருந்து செயற்படுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை.

வடக்கு மாகாணத்தில் ஒருகாலத்தில் மீன்பிடி மற்றும் உற்பத்தி கைத்தொழில் முன்னேற்றமடைந்திருந்தது. மொத்த மீன்பிடியில் மூன்றில் இரண்டு பங்கு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்த முன்னேற்றம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது. இருப்பினும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் இந்த துறைகள் மீள கட்டியெழுப்பப்படவில்லை. நாட்டின் உற்பத்தி துறைகள் முறையாக மறுசீரமைத்தால் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும்.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றார்.

தமிழர்களின் காணிகளை அரசாங்கம் அபகரிக்கவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி – சித்தார்த்தன் எம்.பி

வரவு செலவு திட்டத்தில் கூடுதல் நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படுவதன் காரணம் தமிழர் பகுதிகளில் உள்ள காணிகளை கையகப்படுத்தவே என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதார நெருக்கடி நிலையில் நாடு வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளது. இந்த நிலையிலும் கூட இந்த வரவு செலவு திட்டத்திலே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து விட்டது இந்தநிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுக்கின்றது. எம்மை பொறுத்தவரை இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதற்கான காரணம் எங்கள் பகுதிகளிலே உள்ள காணிகளை அபகரிப்பதற்கு, காணிகளை கையகப்படுத்தி அவற்றை வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு என அந்த நிதிகள் பயன்படுத்தப்படுகின்றது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

”யுத்த காலங்களில் நீங்கள் யுத்தம் புரிவதற்காக நீங்கள் வாங்கிய ஆயுதங்கள், தளவாடங்கள் சம்மந்தமாக செலவுகளை பார்க்கலாம். அவைகள் கூட இன்று இல்லாத நேரத்தில் கூட இந்த நிதிகள் எதற்காக? ஒதுக்கப்படுகின்றது. இன்றும் இந்த நாடு யுத்த மனப்பான்மையில் தான் இருக்கின்றதா? இதனை நாங்கள் மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்த பாதுகாப்புக்கு அமைச்சுக்கு ஒதுக்கபப்டுகின்ற நிதி நிச்சயமாக குறைத்துக்கொள்ள வேண்டும்.அரைவாசியாக கூட வெட்டிக்கொள்ள முடியும். அதேபோல் இன்றைய நாளாந்த வருமானத்தினை எதிர்பார்த்து வாழுகின்ற மக்கள் அந்த குடும்பங்கள் பட்டினியாக இருக்கின்ற நிலைமையை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அவர்களுக்கான நிவாரணங்களை சரியான முறையில் கொடுக்கப்பட வேண்டும். அது சரியாக கவனிக்க வேண்டும். இந்த முறை அதுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை. இதெல்லாம் இன்று இருக்கக்கூடிய பொருளாதார நிலையிலே மக்களுடைய வறுமையை போக்குவதற்கு முயற்சி எடுப்பது மிக முக்கியமான இருந்தாலும் அவர்கள் அதை செய்வதற்கு கால தாமதம் அல்லது செய்யாது விடுகின்ற நிலைமையை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டினை பொறுத்த மட்டில் பேராதனை பல்கலைக்கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஏறக்குறைய 40 வீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் மிக பாதிப்பான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த முடிவற்ற பொருளாதார நெருக்கடியால் வறுமை நிலைக்கு கீழ் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது . அதேவேளையில் உலக வங்கியின் 2020இ2021 அறிக்கையில் வறுமை நிலையில் ஏறக்குறைய 13.1 வீதமான மக்கள் இந்த நாட்டில் வறுமை நிலையில் இருந்திருக்கிறார்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அது 25.6 ஆக உயர்ந்து நிற்கிறது. இவ்வாறு படிப்படியாக மக்கள் வறுமை நிலைக்கு சென்றிருக்கிறார்கள் அவர்களை மீடடெடுப்பதற்கான முக்கியமாக வரவு செலவுத்திட்டத்தினை பொறுத்த மட்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆனால் இவைகள் செயற்படுத்தப்பட வேண்டும். இதற்கு நிதி எங்கிருந்து வரும்? ஏனென்றால் இந்த நாட்டின் மொத்த கடன் 51 பில்லியனுக்கு கூடுதலாகும். இதில் இறையாண்மை வரி 35 பில்லியன் இருக்கிறது. ஆனால் இந்த வரவு செலவுத்திட்டம் முழுமையாக ஐ.எம்.எவ் ஊடாக வரக்கூடிய அந்த நிதியினை எதிர்பார்த்து போடப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே பார்க்கபப்டுகின்றது. எதிர்பார்க்கின்ற நிதியை 2.9 பில்லியன். இதை பார்க்கின்ற போது எவ்வாறு சாத்தியமாகப்போகிறது நாட்டினை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்ற பல கேள்விகள் இருக்கின்றது. ஒரு விடயத்தினை மறந்து விட கூடாது ஜனாதிபதி அவர்கள் மீண்டும் மீண்டும் பல தடவைகள் சொல்லியிருக்கிறார் கடந்த காலங்களிலே மக்களுக்கு பிரபல்யமான தீர்மானங்களை எடுத்தார்கள்.

சில கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் விட்டதால் தான் இந்த நாடு இப்படி போய் இருக்கின்றது. ஜனாதிபதி கூறிய கூற்று 100 வீதம் சரிஇ அவர் ஒரு இடத்தில் ஒரு உதாரணம் கூறுகின்றார் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் அவர்கள் கூறியிருக்கிறார் நான் கடுமையான தீர்மானங்களை எடுத்தேன். பண்டார நாயக்க அவர்கள் பிரபல்யமான திருப்திப்படுத்துகின்ற தீர்மானகளை எடுத்தார். அதனால் தான் இலங்கை பின்னடைவுக்கு போய் இருக்கின்றது என்று கூறியிருக்கிறார். இவர் கூறிய விடயம் நிச்சயிக்க இனப்பிரச்சனைக்குரிய விடயம் தான். ஏனெனில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் இந்த 56 சிங்களம் மாத்திர சட்டம் அதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது

தான் இந்த இனப்பிரச்சினை என்பது. அதன் சரித்திரத்துக்கு போக வேண்டாம் அதனால் ஏற்படட் அழிவுகள் தான் பெரிது. அதனால் தான் படிப்படியாக ஒரு யுத்தம் உருவாகி யுத்தத்திற்க்காக அரசாங்கம் கோடிக்கணக்கான மில்லியன் பணத்தினை செலவழித்து இந்த யுத்தத்தினை நடாத்தி அதற்காக கடனை பெற்று அந்த கடனை அடைக்க மீண்டும் கடனைப் பெற்று இந்த நாடும் அழிந்து பின்னடைவுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்தது.

இதனை கூறிய ஜனாதிபதி ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும். அவரும் பிரசித்தமான அல்லது மக்களுக்கு பிரபல்யமான தீர்வை எடுக்க கூடாது .இன்று இருக்கின்ற நிலையில் நியாயமான அரசியல் தீர்வை தான் முழுமையான ஒரு பிரச்சினைக்கு யாருமே தீர்வாக சொல்லுவார்கள். ஏனென்றால் ஒரு இனப்பிரச்சினை இருக்கும் வரை நல்லிணக்கத்தை அடைய முடியாது.” என்றார்.