விசாக பௌர்ணமியன்று தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் குறைவானவர்களே பங்குபற்றியிருக்கிறார்கள்.
அவர்களிலும் நான்கு பேர் காணி உரிமையாளர்கள். ஏனையவர்கள் அரசியல்வாதிகளும் கட்சித் தொண்டர்களும்.
அதே நாளில் இரவு யாழ்ப்பாணம் அரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாக விகாரையில் இடம்பெற்ற வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு தொகையாக வந்த தமிழ் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதே இரவு குடாநாட்டின் மற்றொரு தொங்கலில் வல்வெட்டித் துறையில் நடந்த இந்திர விழாவில் பங்குபற்ற ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். அங்கே இசை நிகழ்ச்சிகளும் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
வெசாக் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது என்ன தெரியவருகிறது? சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் திரண்ட மக்களை விட சிங்கள பௌத்த விழா ஒன்றில் பெருந்திரளான தமிழ்மக்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள்.
அதைவிடப் பெருந்தொகையானவர்கள் ஒரு ஊரின் இந்திர விழாவில் பங்கு பற்றியிருக்கிறார்கள். அந்த ஊர் எதுவென்று பார்த்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிறந்த ஊரும், ஆயுதப் போராட்டத்தில் அதிக தொகை தியாகிகளைக் கொடுத்த ஊரும் ஆகும். இதுதான் யாழ்ப்பாணத்தின் ஆகப்பிந்திய மூன்று காட்சிகள்.
தையிட்டி விகாரைக்கு எதிராக குறைந்தளவு மக்களே திரண்டமைக்கு என்ன காரணம்? அந்த போராட்டத்திற்கான அழைப்பை தமிழ்த் தேசிய பேரவை என்ற ஒரு அமைப்பு விடுத்திருந்தது.
அதை ஒரு பொதுக் கட்டமைப்பு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைக்கின்றது. அந்தப் பெயரை முன்னணி ஏற்கனவே பயன்படுத்தியுமிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையிடமிருந்து அந்த அமைப்பை வித்தியாசப்படுத்துவதற்காக பெயரில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்தக் கட்டமைப்பின் அழைப்பை ஏற்று பொதுமக்கள் அங்கே திரண்டு வரவில்லை. அதற்கு யார் பொறுப்பு? அழைத்த கட்சி பொறுப்பா? அல்லது வராத மக்கள் பொறுப்பா?
கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் இடம் பெற்ற மக்கள் எழுச்சிகளை தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். ஒரு கட்சி அழைத்த ஆர்ப்பாட்டங்களை விடவும், சிவில் சமூகங்களின் தலைமையில் பல கட்சிகள் அழைக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகளவு சனம் திரள்கிறது.
பொங்கு தமிழ், எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி என்று உதாரணங்களைக் கூறலாம்.
ஒரு கட்சி அழைக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு தொகையான மக்கள் வருவது என்றால், அந்தக் கட்சிக்கு கிராம மட்டத்தில் பரவலான கட்டமைப்புகள் இருக்க வேண்டும். முன்னணியிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லை.
மிகக் குறுகிய கால அழைப்புக்குள் அவ்வளவு தொகை மக்களைத் திரட்ட முடியாது. அப்படித் திரட்டுவதென்றால் அந்தப் போராட்டத்திற்கான காரணம் மக்கள் மத்தியில் அதிகம் நொதிக்க வேண்டும். முன்னணி விவகாரத்தை பொலிஸாரோடு ஒரு மோதலாக மாற்றியது.
எனினும் மக்கள் மத்தியில் நொதிப்பு எதுவும் நிகழவில்லை. அதனால் மக்களும் அங்கே பெரியளவில் போகவில்லை. போராட்டத்தைத் தொடங்கிய அன்றிரவு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் மற்றொருவருமாக குறைந்த தொகையினர்தான் அங்கே காணப்பட்டார்கள். அடுத்த நாளும் வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே அங்கே காணப்பட்டார்கள்.
அண்மை வாரங்களில் தமிழ்ப் பகுதிகளில் நடந்து வரும் சிங்கள பௌத்த மயமாக்களுக்கு எதிரான பெரும்பாலான போராட்டங்களில் குறைந்தளவு மக்கள்தான் கலந்து கொள்கிறார்கள்.
இதில் வவுனியாவில் நடந்த ஊர்வலத்தில் ஒப்பீட்டளவில் கூடுதலான தொகையினர் காணப்பட்டார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குபடுத்திய வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியிலும் பெரிய அளவில் மக்கள் பங்களிக்கவில்லை.
அந்தப் பேரணியின் பின்னணியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான அமைப்பே காணப்பட்டது. அண்மை வாரங்களாக நடந்து வரும் பெரும்பாலான போராட்டங்கள் குறியீட்டு வகைப்பட்ட சிறு திரள் போராட்டங்கள்தான். அல்லது ஒரு நாள் கடையடைப்புகள்தான்.
அரசாங்கத்துக்கு நோகக்கூடிய போராட்டங்கள் அவையல்ல. உலக சமூகத்தை தம்மை நோக்கி ஈர்க்கத்தக்க சக்தி அவற்றுக்கு குறைவு. தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு விடயத்தை வெளிக் கொண்டு வந்தது மட்டும்தான் அவற்றுக்குள்ள முக்கியத்துவம்.
தையிட்டியிலும் அதே நிலைமைதான். தையிட்டி விகாரை விவகாரமானது முன்னணி தலையிட்ட பின் சூடு பிடித்தது. ஆனாலும் அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்ல முன்னணியால் முடியவில்லை. அது ஏறக்குறைய ஒரு கட்சிப் போராட்டம்தான்.
போராட்டம் தொடங்கிய மறு நாள் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கே காணப்பட்டார்கள். ஆனால் அது “பிரசன்ற் மார்க்” பண்ணும் வேலை தான். அது ஒரு முழுமையான பங்களிப்பு அல்ல. அதன் பின் நடந்த போராட்டங்களில் ஏனைய கட்சிகள் முழுமனதோடு ஒத்துழைக்கவில்லை.
அவ்வாறு ஒத்துழைப்பு நல்கத்தக்க நல்லுறவை முன்னணி ஏனைய கட்சிகளோடு பேணவும் இல்லை. தன்னை ஒரு தூய தேசியவாத கட்சியாகக் காட்டிக் கொள்ளும் முன்னணி, ஏனைய கட்சிகளை ஒட்டுக்குழுக்கள், துரோகிகள், வெளிநாடுகளின் கைக்கூலிகள், ஏஜென்ட்கள் போன்ற வார்த்தைகளின் மூலம் விமர்சித்து வருகிறது.
அதனால் ஏனைய கட்சிகளோடு இணைந்து ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதில் அக்கட்சிக்கு நடைமுறையில் வரையறைகள் உண்டு.
அதற்காக ஏனைய கட்சிகள் பரிசுத்தம் என்றில்லை. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்த கடையடைப்பில் ஏனைய ஏழு கட்சிகள் ஒன்றாகத் திரண்டன.
ஆனால் அந்தத் திரட்சி விசுவாசமானது அல்ல. ஏனென்றால் தமிழரசுக் கட்சி தனது முன்னாள் பங்காளிக் கட்சிகளை ஒட்டுக்குழுக்கள் என்றும், போதைப்பொருள் வித்தவர்கள் என்றும், ராணுவச் சோதனைச் சாவடிகளில் முகமூடி அணிந்து தலையாட்டியவர்கள் என்றும்,கா ட்டிக் கொடுத்தவர்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தது. எனினும் தேவை என்று வந்த பொழுது அந்தக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் ஒன்றாக திரண்டு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தன.
ஆனால் முன்னணி அவ்வாறான உறவுகளுக்குத் தயாரில்லை. எனவே ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அல்லது எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது என்றால் ஏனைய கட்சிகளை நம்பி முன்னணி அதில் களமிறங்க முடியாது.
தமிழ் சிவில் சமூக மையத்தைத் தவிர ஏனைய, குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் முன்னணிக்கு பெரிய வரவேற்பு இல்லை. குறிப்பாக பொதுக் கட்டமைப்புகளைக் குறித்து அண்மையில் ஓர் ஊடகத்துக்கு கஜேந்திரகுமார் வழங்கிய பேட்டியில் அவர் பெரும்பாலான பொதுக் கட்டமைப்புகளை நிராகரித்திருந்தார்.
அவற்றை புலம்பெயர்ந்த தமிழர்கள் இயக்குகிறார்கள், வெளிநாட்டு உளவு அமைப்புகள் இயக்குகின்றன என்ற பொருள் தரும் விதத்தில் அவருடைய பேட்டி அமைந்திருந்தது.
அதன்படி பொதுக்கட்டமைப்புகளையும் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னரும், அன்னை பூபதியின் நினைவிடத்திலும் பொதுக்கட்டமைப்போடு முன்னணி முரண்பட்டது. இந்த மோதல்கள் வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலும் இடம்பெற வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் ஏற்கனவே ஒரு பொதுக் கட்டமைப்பு அந்த நினைவு கூர்தல் தொடர்பாக அறிக்கை விட்டிருக்கிறது.
இவ்வாறு நடைமுறையில் உள்ள பொதுக் கட்டமைப்புகளோடு முரண்படும் முன்னணியானது, எதிர்காலத்தில் பொதுக் கட்டமைப்புகளோடு இணைந்து மக்களை அணி திரட்டும் வாய்ப்புகளும் மங்கலாகவே தெரிகின்றன.
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் மக்களைத் திரட்ட முடியாமல் போனமை என்பது தனிய முன்னணியின் தோல்வி மட்டுமல்ல. அந்த விகாரை விடயத்தில் தொடக்கத்தில் இருந்தே மெத்தனமாக இருந்த, அல்லது வேறு உள்நோக்கங்களோடு அதை கண்டும்காணாமலும் விட்ட பிரதேச சபைத் தவிசாளர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்.
அப்பொழுது கூட்டமைப்பு இப்பொழுது தமிழரசுக் கட்சி. இதில் தமிழரசு கட்சிக்கும் குற்றப் பொறுப்பு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக விகாரை கட்டப்பட்டு வருவது எல்லாருக்குமே தெரியும். இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய பிரதேச சபை தவிசாளர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர் என்பது மேலதிக தகவல்.
விகாரை படிப்படியாக கட்டப்பட்டு 100 அடிவரை உயர்ந்த பின்தான் எல்லாருடைய கண்களுக்கும் தெரிந்தது என்பதே தமிழரசிகளின் கையலாகாத்தனம் தான்.
முன்னணி அதைத் தன் கையில் எடுத்து போராட்டத்தை மக்கள் மயப்படுத்த முடியாமல் போனதும் அக்கட்சியின் பலவீனம்தான். தையிட்டி விகாரை தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளின் கையாலாகத்தனத்தின் மீதுந்தான் கட்டப்பட்டிருக்கிறது.