வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் கேள்விக்குறி – சபா குகதாஸ்

வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் சுயாதீனம் அரச தலையீடு காரணமாக கேள்விக்குள்ளான நிலையில் காணப்படுகின்றது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்கள் முழுமையாக வாழும் இடத்தில் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் அமைக்கப்படும் விகாரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன விரோத செயற்பாட்டின் தொடர்ச்சியாக அரச இயந்திரத்தால் முன்னெடுக்கப்படுகின்றது .

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் உள்ளதாவது,

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பத்தில் இந்த விகாரை அமைப்பு இனமுரண்பாடுகளை உருவாக்க கூடும் என்பதால் அதனை தடுத்தார். ஆனால் பின்னர் அவரை மீறி சட்டவிரோதமாக இரவோடு இரவாக விகாரையின் பெயர்ப்பலகை நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதற்கு நியாயம் கேட்டு அகிம்சை வழியில் போராடிய மக்களை நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று விரட்டியுள்ளனர். காவல்துறையினர் அத்துடன் ஊடகவியலாளர்களை அனுமதிக்காது தடுத்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு சென்று இன நல்லிணக்கம் பற்றி பேசும் ரணில் அரசாங்கம் உள் நாட்டில் அதற்கு எதிரான இன முரண்பாடுகளை அரச இயந்திரத்தின் உதவியுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தீவிரப்படுத்தி வருகின்றனர் மட்டக்களப்பு மாவட்ட மேச்சல் தரை நிலங்களை அபகரித்தல் குருந்தூர் மலை விவகாரம் திருமலை இலுப்பைக்குள விகாரை அமைப்பு என நீண்ட பட்டியல் தமிழர்களின் இருப்பை கபளீகரம் செய்ய அரச இயந்திரத்தினால் திட்டமிட்டு மேற் கொள்ளப்படுகின்றன.

வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் சுயாதீனம் அரச தலையீடு காரணமாக கேள்விக்குள்ளான நிலையில் நல்லிணக்கம் என்ற வெற்று வார்த்தை அத்துமீறிய விகாரைகளை அமைப்பதன் மூலம் இனவாத கோர முகம் தமிழ் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் பெயரளவில் இயங்க தென்னிலங்கை அரச நிர்வாகமும் பௌத்த பிக்குகளும் தாம் நினைத்ததை சட்ட எல்லையை தாண்டி அரங்கேற்றுகின்ற நிலை உருவாகியுள்ளது இது தமிழர் பிரதேசங்களில் அரச சர்வாதிகாரமாக மாறியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்தை காக்க தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் – நிரோஷ்

தமிழ் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் எவற்றுக்கும் நீதியை வழங்கத்தக்க சுயாதீன பொறிமுறைகள் உள்நாட்டில் இல்லை என்ற யதார்த்தத்தினை வெளியுலகிற்கு உணர்த்துவதற்கும் நீதித்துறையின் சுதந்திரத்தினைக் காப்பதற்கும் நாம் ஒன்றுதிரண்டு போராட வேண்டியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

புதன்கிழமை (04) இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக கோப்பாயில் இடம்பெற்ற துண்டுப்பிரசார நிகழ்வில் பங்கேற்று கருத்துரைக்கும்; போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், நீதித்துறைச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. அச்சுதந்திரம் அண்மைய நாட்களில் வலுவாக மீறப்பட்டு வந்துளளது. குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று இடத்தினை பௌத்த சிங்கள மயமாக்குவதற்கு அரச திணைக்கமான தொல்லில் திணைக்களம் மற்றும் இராணுவம் பொலிஸ் போன்றவற்றின் அரச ஒத்துழைப்புடன் இனவாத நிகழ்ச்சித்திட்டம் நடைபெறுகின்றது. இதன்போது மக்களின் நீதியை உறுதிப்படுத்திய நீதிபதியை மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்;புக்களே உதாசீனம் செய்யப்பட்டதுடன் அரசியல் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கௌரவ நீதிபதி ரி.கணேசராஜா அவர்கள் அடிப்படையில் இனம் மதம் மொழி கடந்து நீதியை நிலைநட்டுவதற்காக உழைத்தபோது அவர் நாட்டில் வாழமுடியாமல் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் சட்டவாக்கத்திற்குப் பொறுப்பான பாரளுமன்றில் உறுப்பினர்களுக்குக் காணப்படும் சிறப்புரிமையினை பயனபடுத்தி சரத் வீரசேகர போன்றோர் தமிழ் நீதிபதி என அவரையும் நிதித்துறையினையும் அச்சுறுத்தினர். மீயுயர் சபையில் நீதிபதிகளை பகிரங்கமாக இனவாதிகள் எச்சரித்தனர். உண்மையில் பாராளுமன்ற சிறப்புரிமை ஊழல்களை அல்லது மக்கள் சார்பாக கருத்துச் சுதந்திரத்தினை வலுப்படுத்தும் நோக்கம் உடையது. அதனை வெறுமனே நீதித்துறையினை அச்சுறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை வியப்புடையதாகும்.

இந்நிலையில் நாளை நடைபெவுள்ள போராட்டத்தில் கைகோர்ப்பது காலத்தின் தேவை என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பில் விசாரணை செய்ய அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ அதிகாரம் இல்லை

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம்.

நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை.

அது தொடர்பான விசாரணை நடத்தும் அதிகாரம் இருப்பது நீதிச் சேவை ஆணைக்குழுவுக்காகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் பாரியவிடயம். அதேபோன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பான பயங்கரவிடயமாகும்.

நீதிபதி வழங்கிய உத்தரவுகள் காரணமாக அவருக்கு மரண அச்சுறுத்தல் உட்பட பல்வேறு அழுத்தங்கள் தொடர்பாக மிகவும் பயங்கரமான அறிவிப்போன்றை அவர் விடுத்திருக்கிறார்.

அதனால் அவரின் அறிவிப்பு தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொண்டு இதன் பின்னணியில் இருக்கும் மறைமுக சக்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் தாெடர்ந்து பதிலளிக்கையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி வெளிநாடொன்றுக்கு சென்ற பின்னரே அவரிடமிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று கிடைக்கிறது.

அதில் அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தான் பதவி விலகுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மன அழுத்தம், அச்சுறுத்தல் இருக்குமானால் அவர் வெளிநாடொன்றுக்கு சென்று கடிதம் அனுப்பவேண்டியதில்லை.

அத்துடன் நீதிபதி ஒருவருக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர் யாராக இருந்தாலும் அவரை நீதிமன்றத்துக்கு அழைப்பு விடுக்கலாம், பிடியாணை கட்டளை விடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது.

அதேபோன்று குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்தாவிட்டால் அதன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். ஏனெனில் நீதிவான் நீதிபதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரம், நியமன அதிகாரம் என அனைத்தும் நிர்வகிக்கப்படுவது நீதிச்சேவை ஆணைக்குழுவினாலாகும். நீதிச்சேவை ஆணைக்குழு அரசியலமைப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவாகும்.

அதனால் முல்லைத்தீவு நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அந்த அதிகாரம் இருப்பது நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மாத்திரமாகும்.

எனவே யாருக்காவது இது தொடர்பில் பிரச்சினை இருக்குமானால் அவர்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்து, அது தொடர்பில் பதில் ஒள்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதம நீதியரசர் தலைமையிலான அந்த ஆணைக்குழுவுக்கு உத்தரவிடவோ அதில் தலையிடவோ அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆணைக்குழு தேவையெனில் அது தொடர்பில் விசாரணை நடத்தி பதில் ஒன்றை வழங்கும் என்றார்.

Posted in Uncategorized

யாழில் நாளை மனிதச்சங்கிலி போராட்டம்: துண்டுப்பிரசுர விநியோகம் தீவிரம்!

நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டதை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் நாளை (4) பிரமாண்ட மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

நாளை மருதனார்மடம் சந்தியில் இருந்து யாழ் நகரம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் இன்று யாழ் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சே.கலையமுதன் உள்ளடங்கலானவர்கள் இன்று சுன்னாகம், மருதனார்மடம் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர்.

தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தி.நிரோஸ் உள்ளடங்கிய குழுவினர் கோப்பாய் பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர்.

யாழ்ப்பாண நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக முடங்கின

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு திங்கட்கிழமை (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.

நாளையும் (04) யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) இரண்டாவது நாளாக தொடர்கிறது.

நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதற்கமைய நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) இரண்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
“ அத்துடன் நான் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சார்பாக மின்சார சபைக்கு மொத்த மின்சார கட்டணமான 2,682,246.57 ரூபாவை செலுத்தினேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

நீதிபதி சரவணராஜா பதவி விலகல் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா, மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கோ நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கோ நீதிபதி ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்றதாக கூறப்படும் நீதிபதி ரீ.சரவணராஜா, தமது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சட்டமா அதிபருக்கு எதிராக நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில், சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகியுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான விடயங்களில் கடுமையான அழுத்தங்கள் இருப்பதால், சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுடன் இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய விசாரணையின் முடிவுகளை தாமதமின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்சி அர்சகுலரத்ன, உபுல் ஜயசூரிய, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜெப்ரி அழகரத்தினம், டினல் பிலிப்ஸ், துலிந்திர வீரசூரிய, அனுர மெத்தேகொட, சாலிய பீரிஸ் உள்ளிட்ட பலர் கையொப்பமிட்டுள்ளனர்.

நீதி அமைச்சர், சட்டமா அதிபர் உடன் பதவி விலக வேண்டும் செல்வம் எம்.பி. வலியுறுத்து

‘‘தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பைச் சொல்லுகின்ற நிலையில் இருக்கக்கூடாது, அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்போது வெளிப்படையாகக் தெரிகின்றது.” – இவ்வாறு ரெலோவின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘‘உண்மையிலேயே இந்த நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தன்னுடைய பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அவரின் கருத்துக்களைப் பார்க்கின்றபோது சட்டமா அதிபர் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்ற செய்தி அறியக்கூடியதாக உள்ளது. நீதித்துறை எங்கே செல்கின்றது?

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தமிழ்ப் பிரதேசத்தில் இருந்தவர். நியாயமான தீர்ப்பை அவர் வழங்கியதால் தென்னிலங்கையிலே அவர் ஓர் இனவாதியாகவும், ஒரு தமிழராகவும் பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் நீதித்துறையை நம்பித் தான் இன்றைக்கு நீதிமன்றத்துக்குச் செல்கின்றார்கள்.

ஆனால், இப்போது இருக்கின்ற நிலையைப் பார்க்கும்போது தமிழ் நீதிபதிகள் நியாயமாகச் செயற்படுகின்ற வாய்ப்பைத் தடுக்கின்ற – அவர்களை அச்சுறுத்துகின்ற செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. முல்லைத்தீவு நீதிபதியின் இராஜிநாமா செய்தி இதனை உணர்த்துகின்றது.

ஆகவே, தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பைச் சொல்கின்ற நிலையில் இருக்கக் கூடாது, அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்போது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆகவே, நீதித் துறைக்கு விட்ட சவாலாக இது அமைந்துள்ளது.

நீதி அமைச்சர் இந்த விடயத்தை ஆராய வேண்டும். முல்லைத்தீவு நீதிபதியின் இராஜிநாமாவில் அழுத்தம், உயிர் அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் நீதி அமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர் அமைச்சராக இருக்கும்போது நீதிக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்தச் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதை நாடாளுமன்றத்தில் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ள இருக்கின்றோம்.

எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இதில் உள்ளடக்கி என்ன செய்யலாம் என்று நாங்கள் ஆராய்ந்து நிச்சயமாக நீதித்துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும்.

ஏனென்றால் நீதி நடுநிலையானது. அது யாருக்கும் தலைசாய்வதில்லை. அந்தவகையில் எங்களுடைய நீதிபதி சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார். அவரின் குருந்தூர்மலை தீர்ப்பு அவருக்குப் பல அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்துள்ளது. இதில் புத்த பிக்குகளின் கூட்டமும் அடங்குகின்றது என எண்ணுகின்றேன். இந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் புத்த பிக்குகளா? என்ற சந்தேகம் எழுகின்றது.

எனவே, இந்த விடயத்தில் அனைத்து நீதிபதிகளையும் காப்பாற்றுகின்ற பொறுப்பு எங்களுக்கும், எங்களுடைய மக்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, தீர்ப்பு நியாயமாக வழங்கப்பட வேண்டுமென்றால் நீதித்துறைக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளவர்கள் தமது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும்.

சட்டமா அதிபரின் அழுத்தம் உள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரும் இராஜிநாமா செய்வது சிறந்தது எனக் கருதுகின்றேன். நாங்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதன் ஊடாகவே நீதித்துறையை நடுநிலைமைக்குக் கொண்டு வர முடியும். முல்லைத்தீவு நீதிபதி தனது பதவியை இராஜிநாமா செய்கின்ற அளவுக்கு மிக மோசமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நீதி அமைச்சரும், சட்டமா அதிபரும் இராஜிநாமா செய்ய வேண்டும்.” – என்றார்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: தமிழ்க் கட்சிகள் மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அழைப்பு

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இன்று (29) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், கலையமுதன், ரெலோ சார்பில் தி.நிரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், தமிழ் தேசிய கட்சியின் சார்பில் என்.சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெருமெடுப்பில் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடத்திலிருந்து யாழ் நகர் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பின்னர் 7ஆம் திகதி முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அனைத்து தமிழ் கட்சிகளும் கையெழுத்திட்டு தூதராலயங்களுக்கும் கடிதம் அனுப்பப்படவுள்ளது.

புதிய சட்டங்களை உருவாக்கும் போது சகல தரப்பினருடம் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அவசியம் – ஜூலி சங்

வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய வகையிலும், நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளை பிரதிபலிக்கக்கூடிய வகையிலும் சட்டங்களை வடிவமைப்பதற்கு சகல தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அவசியம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (27) நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் உள்ளடங்கலாக புதிய சட்டமூல வரைபுகளின் தயாரிப்பின்போது சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து பொறுப்பான ஆட்சியியலை வலியுறுத்துவதில் சட்டத்தரணிகள் கூட்டிணைவு கொண்டிருக்கும் வகிபாகம் குறித்து விரிவாக ஆராய்ந்ததாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய வகையிலும், நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளைப் பிரதிபலிக்கத்தக்க வகையிலும் சட்டங்களைத் தயாரிப்பதற்கு சகல தரப்பினரதும் பரந்துபட்ட ஆலோசனைகள் மற்றும் நிலைப்பாடுகளைக் கவனத்திற்கொள்வது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.