முதலில் எந்தந் தேர்தல் என ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் – பசில் ராஜபக்ச

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் அதற்கு பொதுஜனபெரமுன இடமளிக்கும் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் அத்துடன் அது முடிவடைந்துவிட்டது இனி அவரே தீர்மானிக்கலாம் என பசில் ராஜபக்ச சண்டே டைம்ஸிற்கு தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சி எந்த வகையிலும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்காது என பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே பசில்ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற தனது தனிப்பட்ட கோரிக்கைக்கு அப்பால் எந்த தேர்தலை முதலில்நடத்தவேண்டும் என்பது குறித்து வேறு எந்த பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவில்லை முடிவு என்பது முற்றிலும் ஜனாதிபதியின் கரங்களிலேயே உள்ளது எனவும் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தேசிய தேர்தல்களையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தயாராகிவருகின்றது 9ம் திகதி கட்சியின் மத்திய நிறைவேற்றுகுழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளது எனினும் இந்த கூட்டத்தில் தேர்தல்கள் குறித்து ஆராயப்படாது எனவும் அவர் தெரிவித்;துள்ளார்.

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழுவே தீர்மானிக்க வேண்டும் – பசில் ராஜபக்ச

எந்த தேர்தல் முதலில் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில்ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள் என என்னுடைய தனிப்பட்ட கருத்தினையே நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சி இது குறித்து கலந்தாராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில் பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெறவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என பசில் ராஜபக்ச தெரிவித்தார் என கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து அவர் அது தனது தனிப்பட்ட கருத்து கட்சியின் கருத்து என்பதை ஜனாதிபதியிடமும் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சாகரகாரியவசம் கட்சி இது குறித்து மேலும் ஆராய்ந்து தீர்மானிக்கலாம் எனவும் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மார்ச் முதல் வாரத்தில் ரணில் – பசில் சந்திப்பு; ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இறுதித் தீர்மானம்

உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறனதொரு நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் (2023) அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். ஜனவரி மாதம் இறுதியில் நாடு திரும்புவதாக இருந்த போதிலும் இதுவரையில் பஷில் ராஜபக்ஷ நாட்டுக்கு வரவில்லை. இவ்வாறானதொரு நிலையில் இவ்வாரம் இறுதியில் அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல் வழங்கியது.

ஜனாதிபதி வேட்பாளரை மையப்படுத்தி ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமநிலைப்படுத்தவே பஷில் ராஜபக்ஷ அவசரமாக நாடு திரும்புவதாக அந்த தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஒருதரப்பு முன்வைத்துள்ள நிலையில், மற்றுமொரு தரப்பு அதனை எதிர்த்து வருகிறது. இதனால் கட்சிக்குள் நாளுக்கு நாள் முரண்பாடுகளும் பிளவுகளும் தீவிரமடைந்து வருகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோரை தொடர்ந்தும் தொலைப்பேசி ஊடாக தொடர்புகொண்டு நாட்டின் அரசியல் நிலைமைகளையும் கட்சியின் செயல்பாடுகளையும் பஷில் ராஜபக்ஷ கருத்தில் கொண்டிருந்தார்.

அதே போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிராமிய மட்டத்தில் உள்ள மக்கள் ஆதரவுகள் குறித்தும் பல்வேறு வகையில் கணிப்புகளை அவர் முன்னெடுத்திருந்தார். இதன் பிரகாரம், 20 வீதம் தொடக்கம் 25 வீதம் வரையிலான மக்கள் ஆதரவு கிராமிய மட்டத்தில் இன்னும் உள்ளதாக பஷில் ராஜபக்ஷவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் ஆதரவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் அரசியல் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதே பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனையாக உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இதன்போது பொதுஜன பெரமுன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்று அரசியல் கட்சியுடன் இணைந்து கட்சியின் சின்னத்தை புதுப்பித்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே பஷில் ராஜபக்ஷ இவ்வாரம் இறுதியில் நாடு திரும்புகிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் மார்ச் 3ஆம் திகதி கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்கள் வேறுபட்டாலும் இந்த சந்திப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பும் பஸில் – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரைவில் இறுதி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என அக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்னும் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவார். அதன்பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று பொதுஜன பெரமுனக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் இறுதித் தறுவாயிலேயே ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டோம். வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் எமது கட்சியிடம் இன்னும் உள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பலர் போட்டியிடவுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ளன.

எனினும்,அதுவரை காத்திருக்கமாட்டோம் எனவும் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.a

Posted in Uncategorized

ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது – சஜித் பிரேமதாச

யுத்த வெற்றியை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டுவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரவ்பதானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யுத்த வெற்றியை காரணம் காட்டியே சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டு நாட்டை அழித்தனர். ஆனால் இன்று பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் ஒழுந்து கொண்டு ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அனுபவித்து வருருகின்றனர். மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்ததோடு அதிக விலைக்கு நனோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்தனர்.

எனவே இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு நாம் கொண்டு வருவோம். தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களை மீட்டு, அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எங்கள் மீது கல் வீசும் அனைவரையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் – பசிலின் எச்சரிக்கை!

கற்களை எறிபவர்கள் அனைவரும் கவனிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நீங்கள் எப்படி வந்தாலும் , அதற்கு நாங்களும் தயார். வீதியில் ஓடும் நாயின் மீது கல் அடித்தால், அது குரைத்துக் கொண்டு வேகமாக ஓடிவிடும். ஆனால், சிங்கத்தை கல்லால் அடித்தால், சிங்கம் திரும்பி, யார் கல்லை அடித்தது என்று பார்க்கும். நாம் அப்படித்தான். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட. ”

“எங்களை வந்து கல்லால் அடிக்காதீர்கள். நாங்களும் பார்த்துக்கொள்கிறோம். ”

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த மாநாட்டுக்கு பாரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொது மாநாட்டில் அவ்வாறான உத்வேகம் இல்லாத காரணத்தினால் சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு மிகவும் பிரயத்தனப்பட்டு குழுவினர் அழைத்து வரப்பட்டதாகத் தோன்றியது.

மேலும், இந்த மாநாட்டில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, மீள உருவாக்கப்படும் பொதுஜன பெரமுன அரசாங்கம் இப்படி ஒரு தொய்வாக இருக்காது, துடிப்பான அரசாங்கமாக இருக்கும் என்றார்.

ஒவ்வோரு கிராமம் , நகரம் என எங்கு சென்று மேலே பார்த்தாலும், கீழே பார்த்தாலும், பூமிக்கு அடியில் பார்த்தாலும், மஹிந்த ராஜபக்ஷ செய்ததைத்தான் பார்ப்பார்கள் என்றும், வேறு யாருக்கும் உரிமை வழங்க வேண்டாம் என்றும் பசில் ராஜபக்ச கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச ஒழுக்கமான கட்சியை கட்டியெழுப்பியதுடன், கட்சி உறுப்பினர்களை முடிந்தவரை ஒழுக்கமாக நடந்து கொள்ளுமாறு கூறிய பசில், இதனை கோழைத்தனமாக கருத வேண்டாம் எனவும் ஏனைய கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்த கிராம மக்கள் குழுக்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்ப பாதுகாப்பு தரப்பினருடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிராமத்திற்குச் சென்ற தேசிய அமைப்பாளர் மஞ்சள் கோடு வழியாக தவிர , வேறு இடங்களால் வீதியைக் கூட கடக்க வேண்டாம் என்று கூறியதுடன், சமூக ஊடகங்கள் மொட்டு கட்சியினர் தவறு செய்யும்வரை காத்திருக்கின்றன என்றார் அவர்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை – பஸில் ராஜபக்‌ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

அவர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என்றும், தற்போது சுயேச்சையாகச் செயற்படும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது ஏற்புடையதல்ல என்றும் அக்கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இருபுறமும் கால்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் பஸில் ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்க குடியுரிமையை கைவிடப் போவதில்லை – பசில் ராஜபக்ச

அமெரிக்க குடியுரிமையை கைவிடப்போவதில்லை என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு, இலங்கையின் அரசியலில் நேரடியாக பங்குப்பற்றுவார் என பொதுஜன பெரமுன கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

குறிப்பாக, இலங்கையின் சட்ட முறைக்கு அமைவாக இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள பசில் ராஜபக்ச இலங்கையில் அரசியல் ரீதியான அதிகார பதவிகளையோ, அரச உயர் பதவிகளையோ வகிக்க முடியாது.

இந்த நிலையிலேயே அமெரிக்க குடியுரிமையை கைவிடப் போவதில்லை என பசில் ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதியாக பசில் ராஜபக்ச கிடைக்கவுள்ளமை நாட்டுக்கு கிடைத்த பேரதிஷ்டம் – காமினி லொக்குகே

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்கவுள்ளதாகவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் அழுத்தத்தால் விரைவில் மாகாண சபைத் தேர்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு மனதை தளரவிடாமல் தேர்தலுக்கு தயாராகுமாறு பொதுஜன பெரமுனவின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பது ஜனநாயத்திற்கு விரோதமானது என்றும் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே பொருளாதாரத்திற்கு பாதிப்பு என குறிப்பிட்டுக்கொண்டு தேர்தலை தாமதப்படுத்தும் நடவடிக்கைக்கு அவர்கள் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.