பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதிகோரி போராட்டம்

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணி சந்தியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்றது

குறித்த இளைஞனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் காட்டுவதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வவுனியாவில் தனி பிரதேச செயலகம் கோரி சிங்களவர் நேற்று போராட்டம்

வவுனியா, போகஸ்வெவ பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள மக்கள் நேறறு வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் நடந்தபோது, இந்த போராட்டம் இடம்பெற்றது. வடக்கு சிங்கள மக்கள் ஒன்றியம் என குறிப்பிட்ட பதாதைகளை தாங்கியவாறு மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு தனியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும், கமநலசேவைகள் நிலையம் அமைக்கப்பட வேண்டும், விவசாய நிலம் வழங்க வேண்டும், கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் 6 பேர் அழைக்கப்பட்டு, பிரதமருடன் கலந்துரையாட அனுமதிக்கப்பட்டனர்.

தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த வழக்குகளில் தொடர்புபட்டவர்கள் உள்ளிட்டவர்கள் போகஸ்வெவவில் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேட்டு நிலம், வயல் நிலங்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதும், இதுவரை வயல் நிலங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், அந்த குடியேற்ற திட்டத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, தமிழ் மக்களின் இனப் பரம்பலை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த விதமான குடியேற்றங்கள் இடம் பெறுவதாக தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மேய்ச்சல் தரையை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்

நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (26) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்று போனதன் காரணத்தால் குறித்த போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் முன் னெடுக்கப்பட்டிருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பி, நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மத தலைவர்கள் என பலரும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு, இலுப்பை கடவை பகுதிக்கு தமது கால்நடைகளை கொண்டு சென்று பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மனித இழப்புக்களையும் சந்திக்க நேருவதுடன் பாரிய பொருளாதார இழப்புக்களையும் சந்திப்பதாகவும், அப்பகுதியில் உள்ளவர்களுடன் எமக்கு முரண்பாடுகளும் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

ஆகவே எமது கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேய்ச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பலவருடமாக கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் பலமுறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் நடை முறைச் சாத்தியமாக்கவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 12-10-2023 அன்று வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடை முறைப்படுத்தவில்லை என்பதே வேதனைக்குரிய விடயம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகவே புலனாகின்றது.

எனவே உடனடியாக எமக்குரிய மேச்சல் நிலத்தை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்ததோடு,மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மகஜர் வாசித்து கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் வாழ்வுரிமை காக்க போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழர்களின் வாழ்வுரிமை காக்க போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக அதன் பேச்சாளர். சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கைகளுக்கிணங்க பல்வேறு அச்சுறுத்தல்கள், எதிர்ப்பிரச்சாரங்கள், கிண்டல்கள், கேலிகளுக்கு மத்தியில் ஜனநாயக விழுமியங்களை மதித்து, நாம் விடுத்த அழைப்பினை ஏற்று முழு முடக்க ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபட்டு எமது உரிமைக் குரலினை அனைவரது காதுகளிலும் எட்டும்படிச் செய்த வர்த்தக சங்கத்தினருக்கும், ஊழியர் சங்கத்தினருக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் சங்கத்தினருக்கும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருக்கும் ஏனைய தொழிற்சங்கத்தினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

புலனாய்வுத் துறையினர் எமது போராட்டத்தை முடக்குவதற்கு மேற்கொண்ட பல முயற்சிகளும் உங்களது துணிவினால் முறியடிக்கப்பட்டுள்ளதையும் நாம் நினைவுகூர்கிறோம். தியாகங்களினூடாகவே வளர்ந்த தமிழ்த் தேசிய இனத்திற்கு உங்களின் தியாகம் மேலும் ஒரு வைரக்கல்லாக அமைந்துள்ளது.

தமிழ் மக்களுக்கான நீதி என்பது முற்றாக மறுதலிக்கப்பட்டு, புத்தகோயில்கள், சிங்களக் குடியேற்றங்கள் என்று அவர்களது இருப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டு, தமிழ் மக்கள் நிர்க்கதியாக நிறகக்கூடிய ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான கவலைகளையும் கண்டனங்களையும் தெரிவிக்கும் முகமாகவும் இராஜதந்திரிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் முகமாகவும் இந்த ஹர்த்தால் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஒருசில ஊடகங்கள் தங்களது சொந்த நிகழ்ச்சிநிரல் காரணமாக ஆரம்பத்திலிருந்தே இந்தப் போராட்டத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த பொழுதிலும் மக்கள் ஒருமுகமாக நின்று இதனை ஒரு வெற்றிகரமான போராட்டமாக மாற்றியுள்ளனர்.

மக்கள் மத்தியில் கடந்த பத்து நாட்களாக நாம் மேற்கொண்ட பிரச்சாரங்களும் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்களும் இந்தப் போராட்டம் வெற்றியடையக் காரணமாக அமைந்தது.

பரீட்சை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றார்கள் என்பதும் அரச உத்தியோகத்தர்கள் எப்பொழுதும் இத்தகைய போராட்டங்களில் கலந்துகொள்வதில்லை என்பதும் வெளிப்படையானது. ஆகவே, அவற்றைத் தவிர்த்துப் பார்க்கின்றபொழுது, இந்த ஹர்த்தால் ஊடாக மக்கள் தெரிவித்த கண்டனங்கள் என்பது உரியவர்களின் காதுகளுக்கு எட்டியிருக்கும் என்று நம்புகின்றோம்.

போராட்டத்தில் கலந்துகொண்டு அதனை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் இதனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று அரும்பாடுபட்டு தமது கருத்துகளை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவுசெய்த அனைவருக்கும் எமது நன்றிகள் என்றுள்ளது

யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையம், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி,ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி வீதி, முனிஸ்வரா வீதி, கே.கே.எஸ் வீதி ஆகிய வியாபார, நகை கடைத்தொகுதிகள் அனைத்தும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டிருந்தன.

 

வெறிச்சோடிய நிலையில் யாழ்ப்பாணம் மத்திய நகரப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டதை அவதானிக்க முடிந்துள்ளது.

மன்னாரில் ஹர்த்தால்-சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

வடக்கு – கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை (20)பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா  அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்ட மைக்கு எதிர்ப்பு வெளியிட்டு   வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப் படுத்திருந்த நிலையில்  மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது. மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்றதோடு பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும் அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் வழமை போல் இடம் பெற்றது. மன்னார் நீதிமன்ற செயல்பாடுகள் வழமை போல் இடம் பெற்ற போதும் சட்டத்தரணிகள் மன்றுக்கு  செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில உணவகங்கள்,  வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு முஸ்லிம் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்குமாறு திருகோணமலையில் கோரிக்கை

மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்தும், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வட- கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்.

கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு  ஆதரவு தர முன்வந்துள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நிகழவுள்ள இந்த பொது முடக்கத்திற்கு, வட- கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம்.

மேலும், எம் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் உட்பட மாணவர் அமைப்புக்கள், மகளிர் உரிமை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் கழகங்கள், சிவில் சமூக சங்கங்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் உட்பட, பல்துறை சார்ந்த செயற்பாட்டு அமைப்புக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த மக்கள் போராட்டத்தில் நாம் நாடி நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கைத் தமிழரசுக் கட்சி , தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,  தமிழ்த் தேசியக் கட்சி,  ஜனநாயகப் போராளிகள் கட்சி , ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு நீதிப் பொறிமுறை தீர்வாகாது என‌ வெளிப்டுத்தப்படும்‌ என்பதால் ஹர்த்தாலை குழப்ப அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் – ரெலோ நிரோஷ்

ஹர்த்தாலின் வாயிலாக தமிழ் மக்களுக்கு எதிரான இன ரீதியிலான ஒடுக்கு முறைகளுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை தீர்வாகாது என்ற யதார்த்தம் வெளிப்படுத்தப்படும் என்பதனால் அதனை சோபையிழக்கச் செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை அரசாங்கம் எடுக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்‌(ரெலோ) யாழ். மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நேற்று (18) அச்சுவேலி ஹர்தாலுக்கான தெருவோர மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இன்று அச்சுவேலியில் கர்த்தாலை எதிர்த்து தனிநபர் போராட்டத்தை ஒருவர் நடத்துகின்றார். அவரை இன்று தான் அச்சுவேலியில் நாம் முதன்முதலில் காண்கின்றோம். அரசு உள்நாட்டு நீதி பரிபாலனத்தின் வாயிலாக தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு தீர்வை வழங்க முடியும் என்று கூறி சர்வதேசத்திடமிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றது. இந் நிலையில் நாட்டில் நீதித்துறை சுதந்திரமற்றுள்ளது என்ற உண்மைச் செய்தியைச் சொல்வதற்கு குருந்தூர் மலை விவகாரத்தில் பணியாற்றி அச்சுறுத்தல் காரணமாக பதவியையே விட்டு வெளியேறியுள்ள நீதிபதியின் நிலைமை சிறந்த உதாரணமாகும். எமது இனத்திற்கு உள்நாட்டு பொறிமுறைகள் எதுவும் தீர்வைத்தராது என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கு இச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

அவ் வகையில் ஏனைய ஹர்த்தால்களைக் காட்டிலும் நீதித்துறையின் சுதந்திரத்தினை மையப்படுத்திய இக் ஹர்த்தால் முக்கியத்துவமுடையது. வெளிநாட்டு ஜனநாயக சக்திகளை திரும்பிப் பார்க்க வைப்பதற்கானது.

இதனால் எப்படியாவது இந்த ஹர்த்தாலை சோபையிழக்க வைக்கவேண்டும் என அரசதரப்பு செயற்படுகின்றது. அரச இயந்திரம் ஹர்த்தாலை சோபையிழக்க வைக்க கடுமையான முயற்சிகளை எடுக்கும். இந் நிலையில் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட்டு ஹர்த்தாலினை வெற்றியடையச் செய்ய வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் டெலோவின் யாழ் மாவட்டப் பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கேட்டு இடம்பெறவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை (18) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆம் திகதி ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு கோருகின்றோம். எங்களுடைய மக்கள்  போராட்டத்தின் ஊடாக முன்னுக்கு வந்தவர்கள். போராட்டத்தின் குணாதிசயங்களை கொண்டவர்கள். இருந்தாலும் நீதித்துறை, நில அபகரிப்பு, புத்த கோவில்களுடைய ஆக்கிரமிப்பு  என்பன வடக்கு – கிழக்கில் மிக மோசமாக நடந்து வருகின்றது. எங்களது மக்களின் பூர்வீகம் மற்றும் அவர்களின் நிலங்களை அபகரிப்பதன் ஊடாக எங்களுடைய மக்களின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த கர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

எமது மக்கள் போராட்டத்தின் ஊடாக வந்தவர்கள் ஆகையால் இதற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகின்றோம். இருந்தாலும் சில சங்கடங்கள் இருக்கின்றது. அன்றாடம் உழைக்கின்ற மக்கள் தமது அன்றைய தேவைக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தற்போது புதிதாக அடாவடித் தனமான, ஜனநாயக விரோதமான செயற்பாடு நடக்கிறது. இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வலர்த்தக நிலையங்களை நடத்துவோர், சிறுதொழில் செய்வோர், மரக்கறி வியாபாரம் செய்வோர் என அவர்களை மிரட்டி அவர்களை கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனக் கூறி வருகிறார்கள். அதற்கு எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

அனைத்து தமிழ் பேசும் மக்களும் இதற்கு ஆதரவு தருவார்கள். அரசாங்கம் கூடுதலான திணைக்களங்கள் மற்றும் பிக்குகளை வைத்து எமது மக்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. அதனால் அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

எதிர்வரும் 20ஆம் தேதி ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

வடகிழக்கு முழுவதும் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ள ஹர்த்தாளுக்கு ஆதரவு கோரி யாழில் இன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள இக் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கக் கோரி வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுர விநியோகம் ஆரம்பிக்கப்கட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் சந்தைகளில் முதற்கட்டமாக இன்று காலை துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்கட்டது.

இதன் போது புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்டத் தலைவர் தி.நிரோஷ், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் தமிழ்க் கட்சிகளினால் இத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized