கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது.

இந்நிலையில், குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் காணியினை வழங்க முடியாது என கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கினர். இந்நிலையில் நில அளவை திணைக்களம் அங்கிருந்து திரும்பிச் சென்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 ஹெக்டயர் ( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அளவீட்டு பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நில அளவை திணைக்களம் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் போராட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில், திங்கட்கிழமை (11) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மகஜரொன்றையும் கையளித்தனர். குறித்த மகஜரில்,

இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு இன்மையே இங்கு வாழ்கின்ற மக்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக நாங்கள் எதிர் நோக்கி வருகின்றோம் குறிப்பாக நீரியல்வளங்கள்,நிலவளங்கள், சுற்றாடல் போன்ற வள பகிர்வுகளில் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலே உள்ள சமூக ஒப்பந்தம் மீறப்படுவதுடன் அதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றது.

அதிலும் வட பகுதியில் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் காணி அபகரிப்பு, இராணுவமயமாக்கல், இராணுவ சோதனை தடுப்பு அரண்கள்,மக்கள் மீள்குடியேற்றப்படாமை போன்றவற்றால் இங்கு வாழ்கின்ற மக்களாகிய நாம் பெரும் சவாலையே எதிர்நோக்கின்றோம்.

தற்காலத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு,எரிபொருட்களின் விலைஅதிகரிப்பு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை,இந்திய இழுவை மடி எமதுகடற்பரபில் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை,பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம், போதைப்பொருள் பாவனை,சமூர்த்தி கொடுப்பனவுகள் சரியான முறையில் கிடைக்கபெறாமை போன்ற சாவால்களையும் மக்களாகிய நாம் எதிர்நோக்குவதுடன் நாட்டின் பொருளாதார கொள்கை,நாட்டின் புதிய சட்ட மற்றும் சட்ட மூலங்கள் சர்தேச உடன்படிக்கைகள் மூலம் வட பகுதி மக்களாகிய நாம் பல இன்னல்களை எதிர் நோக்கின்றோம்.

அதிலும் நாட்டின் முதலீட்டை அதிகரித்தல் என்ற ரீதியில் மக்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் மக்களின் எதிர்ப்பையும் மீறி சில திட்டங்கள் நடைபெறுகின்றது நடைபெற உள்ளது மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி,விடத்தல்தீவு இறால் பண்ணை,கனிய மண் அகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் அட்டைப்பண்ணை, பொன்னாவெளி கிராம டோக்கியோ சீமேந்து தொழிற்ச்சாலை திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி அத்துடன் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றசெயற்பாடுகளும் நடைபெறுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட குருந்தூர் மலைவிவகாரம், திட்டமிட்ட மாகாவலி குடியேற்றங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரை போன்ற பல்வேறு பிரச்சனைகளை வட மாகாண பெண்கள் என்ற ரீதியில் எதிர்நோக்குகின்றோம் ஆகவே வட மாகாண பெண்கள் குரல் என்ற ரீதியில் மேற்கூறப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதனுடன் மனித உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள் என்றுள்ளது.

புனரமைப்பு பணிகளுக்காக மீண்டும் இடைநிறுத்தப்படும் வடக்கு ரயில் சேவை

வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

அதன்படி கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 07.01.2024 அன்று மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால், ஜனவரி 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு தற்காலிகமாக மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 07ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மாரக்கத்தின் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், காங்கேசன்துறையில் இருந்து அனுராதபுரம் வரையிலும் மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று காசாப் போரை நிறுத்துமாறு கோருவோர் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி

இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் இன்று கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம். ஏனெனில் அப்பாவிப் பொதுமக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின் பல தரப்பட்ட பிரிவினரும் அமைப்புக்களும் கண்டித்துள்ளனர்.

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைப் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர். அதனை நாமும் வரவேற்கின்றோம். ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு முன் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த இதே முஸ்லிம் தலைவர்கள் வடக்கில் வன்னி மாவட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவி சகோதர ஒரே மொழி பேசும் தமிழர்கள் கொல்லப்படும் போது கண்டும் காணாதவர்கள் போல இருந்தமை மாத்திரமல்ல, போரை நடாத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியமையை நினைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மனவேதனை அடைந்தனர்.

இன்று இஸ்ரேல் காசாவில் குண்டு போட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அப்பாவி மக்களை அழிப்பது போன்று தான் அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை இஸ்ரேல் விமானங்களும் விமானிகளும் ராஐபக்ஷாக்களின் ஏவலில் செஞ்சோலை மாணவிகள் வைத்தியசாலைகள், தற்காலிக மக்களின் முகாம்கள், சிறுவர் இல்லங்கள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போன்றோரை அழிக்கும் போது, அன்று இதே நாடாளுமன்றத்துக்குள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைச்சரவையில் ஆதரவு வழங்கியமையைப் பாதிக்கப்பட்ட சகோதர தமிழ் மக்கள் இலகுவில் மறக்கமுடியாது மனம் குமுறுகின்றனர்.

இன்று தொலைவில் உள்ள நாடுகளிடம் பலஸ்தீன் மக்களை காப்பாற்றுமாறு நீங்கள் கோருவதை எவ்வளவு தூரம் செவி சாய்ப்பார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், அன்று உங்கள் ஆதரவுடன் இருந்த ராஐபக்ஷ அரசாங்கத்தின் கபினட் அமைச்சர்களாக இருந்த உங்களால் மிக இலகுவாக கொல்லப்பட்ட அனைவரையும் காப்பாற்ற முடியா விட்டாலும், இன்று காசா மீது காட்டும் மனிதாபிமானத்தை அன்று ஈழத் தமிழர்களுக்கும் காட்டினீர்கள் என்று வரலாறு பதிவு செய்திருக்கும்.

இவ்வாறான பாரபட்சமான நிலைப்பாட்டை வரலாறு இலகுவில் மன்னிப்பதில்லை. – எனவும் தெரிவித்துள்ளார்.

”யாழில் மலையகத்தை உணர்வோம்” ஆவணக் கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாணம் சிவில் சமூகமாக அமைப்புக்கள், கண்டி சமூகமாக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் 1823 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 வரையான காலப்பகுதி வரை மலையகத்தின் 200 ஆண்டுகளை முன்னிட்டு யாழில் மலையகத்தை உணர்வோம், மலையகம் 200 என்னும் கருப்பொருளில், மலையகமக்களின் வாழ்வியலை ஆவணமாக்கும் கண்காட்சிகள் இன்று யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

இதில் இந்திய வாம்சாவளியில் இருந்து இலங்கையின் மலையகத்தில் மீள்குடியேறிய தமது ஜீபனோயத்திற்காக உழைக்கும் மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பான கண்காட்சிகள் காட்டூன் சித்திரங்களாவும், புள்ளிவிபரத் தரவுகளாகவும், விளக்க புகைப்படச் சித்திரங்களாவும், ஆரம்ப கால முத்திரை வெளியீடுகளாகவும், ஆரம்ப கால தொட்டு இன்று வரையான காலத்தில் அரசியல்வாதிகளின் புகைப்படங்களும், ஒடுக்குமுறையை மக்களின் இயல்புகள் பற்றி இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழில் மலையகத்தை உணர்வோம் மலையகம் 200 என்னும் கருப்பொருளிலான மலையக மக்கள் வாழ்வியலில் ஆவணமாக்கப்படும் கண்காட்சிகள் திறந்துவைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் கலந்து கொண்டார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவை தடுத்திருந்தால் பூகோள அரசியல் போட்டி கூர்மை அடைந்திருக்காது – சபா குகதாஸ்

முள்ளிவாய்க்கால் பேரழிவை தடுத்திருந்தால் பூகோள அரசியல் போட்டி கூர்மை அடைந்திருக்காது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பூகோள அரசியல் அதிகாரப் போட்டியினால் இலங்கை எதிர்காலத்தில் போர்க்களமாக மாறும் அபாயம் உள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமான First Post ற்கு செவ்வி வழங்கியுள்ளார்.

இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத ஆட்சியாளரின் அதிகார பதவி வெறியும் ஊழலும் நாட்டை வங்குறோத்து நிலைமைக்கு மாற்றியது மாத்திரமல்ல பூகோள நாடுகளின் அரசியல் சதுரங்கமாகவும் மாறியுள்ளது நாடு பற்றியதும் அதன் நிலையான அபிவிருத்தி பற்றியதும் நிலையான கொள்கைகளை வகுக்காமல் ஆட்சிக்கு வந்ததும் தமக்கான அதிகாரங்களை அளவுக்கு அதிகமாக பெற்று அதிகார துஸ்பிரையோகங்களை செய்து அவற்றில் இருந்து தப்பிக் கொள்ள தமக்கு விரும்பிய வெளிநாடுகளுக்கு நாட்டின் முதன்மையான பகுதிகளை விற்று மறைமுக காலணித்துவத்தை வலுப் பெறச் செய்து விட்டு பொறுப்பற்ற வகையில் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்து வேதாந்தம் ஓதுகின்றனர் இதற்கு தற்போதைய ஐனாதிபதியும் விதிவிலக்கல்ல.

2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பாக ராஐபக்சக்களும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தடுத்து நிறுத்தியிருந்தால் பூகோள நலன் சார்பு நாடுகளின் அரசியல் அதிகாரப் போட்டி இன்று இலங்கைத் தீவில் தீவிரம் பெற்றிருக்காது ஆனால் தற்போதைய தீவிரப் போக்கு கூர்மை அடையுமாக இருந்தால் ஐனாதிபதி கூறும் அபாயம் தென்னிலங்கையில் தான் மையங் கொள்ள இருக்கிறது.

2009 இற்கு முன்னர் இந்தியாவின் தென்கடல் பிராந்தியம் மிக பாதுகாப்பாக இருந்தது காரணம் இலங்கையின் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் பலமான கடற்படைக் கட்டுமானத்தை விடுதலைப் புலிகள் வைத்திருந்தமை அத்துடன் பூகோள நாடுகளின் அதிகாரப் போட்டியும் கூர்மையடையாது வரையறுக்கப்பட்டதாக இருந்திருக்கும் இவையாவும் தலைகீழாக மாறுவதற்கு முள்ளிவாய்க்கால் பேரவலமும் விடுதலைப் புலிகளின் மௌனிப்பும் காரணமானாது.

தற்போது பிராந்திய அரசியல் அதிகாரப் போட்டியும் பூகோள நாடுகளின் ஆதிக்கமும் அதிகரித்தமைக்கு மிகப் பிரதான காரணம் ஈழத் தமிழர்களின் அரசியல் அதிகாரப் பிரச்சனை தான் எனவே சிறிலங்கா ஆட்சியாளர் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் தென்னிலங்கைக்கான அபாயத்தை நிறுத்த இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதே உசிதம் ஆனால் அவ்வாறான மாற்றம் சிங்கள ஆட்சியாளர் இடையே ஏற்பட்டால் அதிசயமாகவே இருக்கும்.

இலங்கைத் தீவில் மையம் கொண்டுள்ள பிராந்திய மற்றும் பூகோள நாடுகள் தங்களின் நலன்களை முன்னுரிமைப் படுத்தி சிங்கள ஆட்சியாளரை முழுமையாக கையாளவே முயற்சிக்கின்றனர் அதுவே ஆட்சி மாற்றங்களுக்கும் ஸ்திரம் அற்ற ஆட்சிக்கும் வழி வகுக்கின்றது.

தமிழர் தரப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான பேரப்பலம் விடுதலைப் புலிகளிடம் மாத்திர இருந்தது துரதிஸ்ட வசமாக தனி நாட்டுக் கோரிக்கையில் ஒரு படி இறங்கி சமஸ்டி தீர்வை பெற்றுவதற்கு பச்சைக் கொடியை காட்ட தாமதித்தமையால் மௌனிப்புக்கு வழி வகுத்தது அன்று சமஸ்டி தீர்வை பெற்றிருந்தால் இன்று தனி நாட்டிற்கான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம்.

தற்போது தமிழர் தரப்பில் மிதவாத தலைமைகளும் ஏனைய தரப்புக்களும் சிங்கள ஆட்சியாளர்களையும் பூகோள அரசியல் அதிகாரத் தரப்புக்களையும் கையாள முடியாத இராஐதந்திரம் அற்ற வெற்று வேட்டுகளாகவே உள்ளனர்.

உண்மையில் இலங்கை மீது மையம் கொண்டுள்ள பூகோள அதிகாரப் போட்டிக்கு சிங்கள ஆட்சியாளர் தான் காரணம் என்றால் இந்தப் போட்டிக்குள் தமிழர்களுக்கான அதிகாரங்களை பெறுவதற்கான சாதக நிலமைகள் இருக்கின்ற போதும் அந்த பூகோள அரசியலை தமிழர் தரப்பு கையாளவில்லை.

உடல் முழுவதும் அடிகாயங்கள்! நுரையீரல் பாதிக்கப்பட்டே இளைஞர் உயிரிழப்பு – மருத்துவ அறிக்கையில் நிரூபணம்

சித்தங்கேணியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உடல் முழுவதும் அடிகாயங்கள், இயற்கையான மரணம் இல்லை, உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே நேற்றைய தினம் உயிரிழந்தார்.

சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவரே உயிரிழந்தார்.

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் அண்மையில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

அதனால் சந்தேக நபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டிருந்தது.

உடற்கூறு பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

ரெலோவின் யாழ் மாவட்ட துணை அமைப்பாளராக து.ஈசன்

ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவு செய்யப்பட்டார் அத்துடன் துணை மாவட்ட அமைப்பாளராக முன்னாள் யாழ் மாநகர துணை மேயர் து. ஈசன் தெரிவாகியதுடன் 37 பொதுக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) தனது 11 மாநாட்டை நடாத்துவதற்கு முன் ஆயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்து வருகின்றது அதற்கு அமைவாக யாழ் மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் யாழ் நகரப்பகுதியில் நடைபெற்றது

இன் நிகழ்வில் யாழ்மாவட்ட உறுப்பினர்கள் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஐனா கருணாகரம் ஊடக பேச்சாளர் கு.சுரேந்திரன் உள்ளிட்ட தலைமைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

நிர்வாகத் தெரிவில் யாழ் மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவு செய்யப்பட்டார் அத்துடன் துணை மாவட்ட அமைப்பாளராக முன்னாள் யாழ் மாநகர துணை மேயர் து. ஈசன் தெரிவாகியதுடன் 37 பொதுக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பில் பதிவிட்டவருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்பணியாற்றி  தற்போது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும் (Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறை பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் உள்ளிட்ட இருவர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவும் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

குறித்த நபர் சமூக ஊடக வெளியில் நன்கு அறிப்பட்டவர் என்பதுடன் சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு  ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருவதுடன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அச்சமின்றி சமூக ஊடக பதிவுகள் மூலம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க அழுத்தம் கொடுக்குமாறு சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்த சிவில் சமூக பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்திக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்காக சீனத்தூதுவர் இன்று(06)  மாலை தனியார் விடுதியில் யாழ்மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சார்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை  மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதில் கலந்துகொண்ட சீன தூதுவர் இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

அதையடுத்து  சந்திப்பில் கலந்து கொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் சீனத் தூதருக்கு எடுத்து கூறினர். இலங்கைக்கு அழுத்தம் தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதற்குப்  பதிலளித்த சீனத் தூதுவர், வெளிநாட்டின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது எனத்தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் உதவிகள் செய்யத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என 2 மணித்தியாலங்கள் தூதுவருக்கு புத்திஜீவிகள் எடுத்துரைத்துள்ளனர்