இனப்பிரச்னை தீர்ந்தால் பொருளாதார நெருக்கடி நீங்கும் – அனுர பிரியதர்ஷன யாப்பா

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டுமாயின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு எட்டப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வு காண்பது அவசியமாகும். இனப்பிரச்னைக்கு தீர்வு காண குறுகிய கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது எனவும் அவர் கூறினார்.

அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் தேசிய ரீதியான பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியமாகும். இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண இணக்கப்பாடு எட்டப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் மற்றும் அரசியலமைப்பினை அடிப்படையாக கொண்டு அரசியல் தீர்வு விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும். தேசிய பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவேண்டிய தருணம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. ஆகவே சகல தரப்பினரது ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக கருதி தீர்வு காண இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அடிப்படை பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றார்.