பாதிக்கப்பட்ட மக்களின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ரணில் அரசாங்கத்தால் நிராகரிக்க முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச விசாரணை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான கோரிக்கை அதனை ஜனாதிபதி ரணில் அரசாங்கம் நிராகரிக்க முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆவேசப்பட்டு கொதிப்படைந்த நிலையில் பதில் வழங்கியதை காணமுடிந்தது

சர்வதேச விசாரணை நடாத்த முடியாது. ஐ.நா மனித உரிமைத் தீர்மானங்களை தான் நிராகரிப்பதாகவும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்து அழகு பார்க்கும் தரப்பு மேற்குலகம் இல்லை என்று மக்களை ஏமாற்றும் வகையிலும் மிகவும் கடும் தொனியில் பதில் வழங்கினார் .

ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசில் பிரதமராக பதவி வகித்த போது ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைத் தீர்மானத்தை ஏற்று கால நீடிப்பு பெற்றத்தை மறந்து விட்டாரா? அல்லது ராஐபக்ச அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருப்பதால் நிராகரிப்தாக கூறுகிறாரா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

நாட்டை முன்னேற்றுவதாக வெளிநாடுகளிலும் உள் நாட்டிலும் வார்த்தை ஜாலங்களால் கதை அளக்கும் ஐனாதிபதி ரணில் விக்கரமசிங்க ராஐபக்சாக்கள் தமது ஆட்சியில் நடந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு அஞ்சி தொடர்ந்து நிராகரித்த சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நா மனிதவுரிமைத் தீர்மானங்களை ரணில் விக்கிரமசிங்காவும் ஏற்றுக் கொள்கிறார் என்றால் ஐனாதிபதி நாட்டை முன்னேற்ற வில்லை ராஜபக்சக்களை காப்பாற்றுகிறார் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.

இலங்கைத் தீவு எதிர்காலத்தில் பொருளாதார ரீதியான நிலையான வளர்ச்சியை அடைய வேண்டுமாயின் பூகோள நாடுகளின் அரசியல் சதுரங்க ஆட்டத்தை கட்டுப்படுத்துவதுடன் சுயாதீன சர்வதேச விசாரணை பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடாத்தப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும் இதனை மேற்கொள்ளாமல் ரணில் அல்ல எவர் ஜனாதிபதிக் கதிரைக்கு வந்தாலும் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது.

சர்வதேச விசாரணை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான கோரிக்கை அதனை ஜனாதிபதி ரணில் அரசாங்கம் நிராகரிக்க முடியாது காரணம் மக்கள் ஆணை இழந்த பாராளுமன்றத்தை வழிநடத்தும் மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.