மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் – சஜித் பிரேமதாச

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

நேற்று(20) நாடாளுமன்றத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தி உற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் அதிகரித்த முதலீடு உகந்ததாக இருந்தாலும், இத்தகைய திட்டங்களை செயற்படுத்துவதில் சிறந்த மாற்று இடம் மற்றும் மிகவும் பயனுள்ள முதலீட்டு பிரதேசங்களை தெரிவு செய்வது அவசியம்.

பறவைகள் சரணாலயமாக விளங்கும் மன்னாரை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் நிலைய நிர்மாணத் திட்டம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய செயற்திட்டமாகவே பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி காற்றாலை மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் உடன்படுகிறது.

மேலும் டீசல் மாபியாவிற்கு இடமளிக்காது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நடைமுறைப்படுத்துவதில் மாற்று இடங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்திற்கு இதை விட பொருத்தமான பல இடங்கள் உள்ளன என்பதை விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.