மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை ; இராணுவம், கடற்படையால் நிர்மாணப் பணிகள்

இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை – மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது.

இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும்.

இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் குழு ஒன்று இரவு வேளை சென்றிருந்தது. அங்கு புத்தர் சிலை ஒன்றை அவர்கள் வைத்துச் சென்றனர்.

மறுநாள் காலை இதை அவதானித்த அப்பகுதி மக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினரின் தலையீட்டில் அங்கிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டது.

எனினும், சில நாட்களின் பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலயத்தை அண்மித்து – ஆலய வளாகத்திலேயே மீண்டும் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து மலைப்பகுதியில் “கெட்டியாராமை சிறீ பத்ர தாது ரஜ மகா விகாரை” க்கான நிர்மாணப் பணிகள் நடை பெற்றன.

இராணுவமும் கடற்படையும் இணைந்து இரவு – பகலாக இந்த விகாரையின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

திருகோணமலையில் ஏற்கனவே இந்துக்களின் முக்கியத்துவம் பெற்ற கன்னியா வெந்நீரூற்று முழுமையாக பௌத்த மயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழர் தாயகத்தின் முல்லைத்தீவு – குருந்தூர்மலை, வவுனியா – வெடுக்குநாறி மலை என இந்து ஆலயங்கள் பல பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் தமிழ், சிங்கள மக்களிடையே மோதல்

திருகோணமலை – திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய கிராமத்திலுள்ள தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் இன்றைய தினம் (06.04.2023) பாரிய மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடற்பரப்பில் சிறுபான்மை இனத்தவகள் மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதையடுத்து, தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிகள், நியமங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (06) வியாழக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் விசேடமாக ‘இலஞ்சம் அல்லது ஊழலுக்கு எதிரான விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு’என்ற பெயர் வடிவிலான சுயாதீன ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இடையறா வழியுரிமையையும், பொது இலட்சியையொன்றையும் கொண்டிருக்க வேண்டும்.

தவிசாளர் உட்பட மூன்று உறுப்பினர்களை கொண்டதாக ஆணைக்குழுவின் அமைப்பு காணப்படும்.சட்டம் – மருத்துவ கணக்காய்வுசட்டம் – மருத்துவக் கணக்கியல், பொருளியல், சர்வதேச தொடர்புகளும் இராஜதந்திர சேவைகள், பகிரங்க அலுவலக முகாமைத்துவம் அல்லது பொது முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஆகக்குறைந்தது 20 ஆண்டுகால சேவைகளை கொண்டிருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் ஒவ்வொர் உறுப்பினர்களும் இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும், அறுபத்திரெண்டு வயதிற்கு மேற்பட்டவராக இருத்தலாகாது, உடல் ரீதியிலும், உளரீதியிலும் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும். அத்துடன் தகுதி வாய்ந்தவராகவும், நேர்மையானவராகவும், உயர் ஒழுக்கமுடையவராகவும், நன்மதிப்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சம்பளம் பெறும் தொழில்களில் ஈடுபட்டிருப்பின் அவற்றை துறத்தல் வேண்டும். அத்துடன் ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகிக்கும் போது சம்பளம் பெறும் சேவைகள், உயர் தொழில்கள் ஆகியவற்றை தொடர கூடாது.

ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினராக பதவியேற்க முன்னர் அவர்கள் தங்களின் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும், பொறுப்புக்களையும் அரசியலமைப்பு பேரவைக்கு வெளிப்படுத்த வேண்டும்.

ஆணைக்குழுவின் தவிசாளர் ஐந்தாண்டு காலத்திற்கும், ஏனைய உறுப்பினர்கள் நான்காண்டு காலத்திற்கும் பதவி வகிப்பார்கள். இவர்களின் சம்பளம் பாராளுமன்றத்தின் திரட்டு நிதியத்தின் மீது பொறுப்பாக்கப்பட்டுள்ளது, பதவி காலத்தின் போது சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர குறைக்கப்பட கூடாது.

ஆணைக்குழுவானது 158 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் அதன் பணிகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் பொறுப்பு கூற வேண்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 159 ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆணைக்குழுவின் செயலாற்றுகை தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(1) பிரிவு 41 மற்றும் 65ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணைக்குழு அதன் தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கும் அதன் பணிகளை நிறைவேற்றுவதற்குமான கூட்ட நடப்பெண் இரண்டு உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் பொறுப்புக்களாக விதிகளை அழுத்திக் கூறுதல், வலியுறுத்தல் ஊடாக ஊழலை தடுத்தல் தொடர்பான கல்வி அல்லது பயிற்சியை உரிய தரப்பினருக்கு வழங்கல், ஊழல், அதற்கான காரணங்களும் அதன் பாரதூரத்தன்மை மற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் என்பன தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், ஊழலைத் தடுத்தல், ஊழலுக்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபடல். ஆணைக்குழுவானது குடியியற் சமூகத்தினதும், அரச சார்பற்ற மற்றும் சமுதாய அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்களினதும் முனைப்பான பங்குப்பற்றலை ஊக்குவித்தல் வேண்டும்.

இலங்கையில் இந்து மதத்தின் இருப்புக்கு ஆபத்து : பாரதப் பிரதமருக்குக் கடிதம்

இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன.

ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்து கலாசாரம், பாரம்பரியம், கோவில் ஆகியவற்றின் இறுதிக் கோட்டையை இலக்குவைக்கிறது.

1948ஆம் ஆண்டின் பின்னர் 1800 ஆலயங்களையும் பாரம்பரியங்களையும் அழித்த பின்னர் இது இடம்பெறுகின்றது.

இலங்கையின் வட பகுதியில் அதிகளவு மதிப்புக்குரியதாக காணப்படும் கீரிமலை பகுதியில் காணப்பட்ட ஐந்து நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டுள்ள ஆதிசிவன் ஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அழிக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்த கரிசனையுடனும் அவசரத்துடனும் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இராணுவம் அந்த பகுதியை மிக நீண்டகாலம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பின்னர் பொதுமக்களை அங்கு செல்வதற்கு அனுமதித்த வேளையே இது தெரியவந்தது.

கோவில் இருந்த பகுதியில் அதனை அழித்துவிட்டு ஜனாதிபதி மாளிகையொன்றை கட்டியுள்ளனர். இதன் மூலம் இந்துக்கள் இறந்தவர்களுக்கான இறுதி மரியாதைகளை முன்னெடுக்கும் பகுதியின் புனிதத்தை சீர்குலைத்துள்ளனர்.

2015இல் இந்தியாவின் கௌரவ பிரதமர் நரேந்திர மோடி இந்த பகுதிக்கு அருகில் உள்ள நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இலங்கையில் உள்ள இந்து பாரம்பரியம், கலாசாரத்தின் இறுதிச் சின்னமாக காணப்படுகின்றவற்றை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவும், சர்வதேச சமூகமும் பிணையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் இது இடம்பெறுகின்றது.

புனிதப் பொருள்களை அவமதிக்கும் இந்த செயல் இடம்பெற்ற சில காலத்துக்குள் கிழக்கு திருகோணமலையில் உள்ள இந்துக்களின் புனித பகுதியான கன்னியா நீரூற்றை அனுராதபுர நகரத்துடன் தொடர்புடையது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதனை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஐயனார் கோவில் அழிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயத்தின் பல விக்கிரகங்கள் களவாடப்பட்டன.

இலங்கைக்கான சர்வதேச உதவிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை, இலங்கையில் இந்து பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை அழிக்கும் தனது நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை அரசாங்கம் இந்த உதவியை பயன்படுத்த நிதி வழங்கும் சமூகம் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்து மத கலாசாரம் அழிக்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை அமைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை, இலங்கைக்கு நிதி வழங்கும் சமூகம் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள முல்லைத்தீவு மணற்கேணி பூர்வீக வரலாற்று பிரதேசங்கள் விகாரைகளாக மாற்றம்

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு – மணலாறு, மணற்கேணிப் பகுதிக்குரிய தமிழ் மக்கள் சிலர், மணற்கேணிப் பகுதியிலுள்ள தமது காணிகளை துப்பரவுசெய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி தருமாறு முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தைக் கோரியுள்ளனர்.

அந்தவகையில் மணற்கேணிப்பகுதி காணி உரிமையாளர்கள் சிலர் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்து, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரனை இன்று (06) சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலின்போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் ஊடாக, காணி ஆவணங்களைச் சமர்ப்பித்து, காணிகளைத் துப்பரவு செய்வதற்குரிய கோரிக்கையினை மாவட்டசெயலகத்திற்கு வழங்கும்போது, அதற்குரிய அனுமதியை விரைவாக வழங்க முடியுமென முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மணலாறு – மணற்கேணி கிராமம் என்பது, தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கையும் கிழக்கையும் ஊடறுத்துப் பாய்கின்ற பறையன் ஆற்றிற்கு அருகே அமைந்துள்ள வடக்கிற்குரிய, தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமமாகும்.

மணற்கேணிப் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டிற்கு முன்னர் 36தமிழ் குடும்பங்கள் பூர்வீகமாக இருந்ததாகவும், இதனைவிட குறித்த பகுதியில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு வயல் நிலங்கள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் 1984ஆம் அண்டிற்கு முன்னர் மணற்கேணிப் பகுதியில் பாரிய கல்நடை மற்றும், விவசாயப் பண்ணைகளுடனும், பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் என்பவற்றுடனும் இங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் செழிப்பாக வாழ்ந்தார்கள் எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறு செழிப்பாக வாழ்ந்த மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இந் நிலையில் தற்போது மணற்கேணி உள்ளிட்ட எல்லைக்கிராமங்களில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கள் மிகத் தீவிரமாக முனைப்புப் பெற்றுள்ளன.

இவ்வாறான சூழலில் கடந்த 26.03.2023 அன்று மணற்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களுக்கு  கொக்குத்தொடுவாய் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கள ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கள ஆய்வின்போது மணற்கேணி உள்ளிட்ட எல்லைக்கிராமங்களில் பௌத்த மயமாக்கல் மற்றும், சிங்கள ஆக்கிரமிப்புமுயற்சிகள் தீவிரப்படுத்தப்படுவதும் இனங்காணப்பட்டது.

குறிப்பாக மணற்கேணி மற்றும், அதனை அண்டிய எல்லைக்கிராமங்களில் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் துப்பரவு செய்யப்படுவதும், தமிழர் வழிபாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டிருப்பதும், தமிழர்களின் பூர்வீக தொல்பொருள் எச்சங்கள் உள்ள இடங்கள் விகாரைக்குரிய இடங்களாக கூகுள் வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டுள்ளமையும் இனங்காணப்பட்டிருந்தது.

அதன்படி மணற்கேணி மற்றும் அதனை அண்டிய எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழர்களின் வரலாற்று எச்சங்கள் உள்ள இடங்கள் அக்கரவெலிய விகாரை, வண்ணமடுவ விகாரை, மகாப்பிட்டிய விகாரை என விகாரைக்குரிய இடங்களாக கூகுள் வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் இவ்வாறாக பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் மாணலாறு – மணற்கேணி எல்லைக்கிராமத்திற்குரிய மக்கள் சிலரே இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து, முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு வருகை தந்து தமது காணிகளைத் துப்பரவுசெய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கோரியிருந்தனர்.

இக் கலந்துரையாடல் தொர்பில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தம் இடம்பெறுவதற்கு முன்பு மணற்கேணி என்னும் இடத்திலே மத்திய தரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளுடைய உரிமையாளர்களில் சிலர் வருகை தந்திருந்தனர்.

குறித்த காணிகளைத் துப்பரவுசெய்து பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த செயற்பாடுகளை, கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம்தான் மேற்கொள்ளவேண்டும்.

எனவே கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் ஊடாக, காணி ஆவணங்களைச் சமர்ப்பித்து, காணிகளைத் துப்பரவு செய்வதற்குரிய கோரிக்கையினை மாவட்டசெயலகத்திற்கு வழங்கும்போது, நாம் அதற்குரிய அனுமதியை விரைவாக வழங்கி, குறித்த காணிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இதுதவிர வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமான முறையில் மணற்கேணிப் பகுதியில் காணி துப்பரவு செய்வதான முறைப்பாடும் எமக்குக் கிடைத்துள்ளது.

எனவே நாம் அது சம்பந்தமாகவும், குறித்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திற்கு அறிவித்தல் வழங்கி, அவ்வாறான நடவடிக்கைகள் இருப்பின், நாம் அவ்வாறான செயற்பாடுகளுக்கெதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் – என்றார்.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணத்தை மீளாய்வு செய்ய வேண்டும் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் பயங்கரவாததத்திற்கு கொடுத்துள்ள வரைவிலக்கணத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் என்ற பிரிவில் பயங்கரவாதத்திற்கு கொடுத்துள்ள வரைவிலக்கணத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் என மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வந்துள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு இந்த வரைவிலணக்கத்தின் பரந்துபட்ட நோக்கம் இந்த விடயத்தை சிக்கலாக்குகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் அபிப்பிராயபேதத்தினை வெளிப்படுத்தும் நியாயபூர்வமான செயற்பாடுகளிற்கும் பயங்கரவாத செயற்பாடுகளிற்கும் இடையில் வித்தியாசம் காண்பதை கடினமானதாக்கியுள்ளது எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணங்காதிருப்பவர்கள் சிவில் சமூகத்தினரை இலக்குவைப்பதற்காக அரசாங்கம் பயங்கரவாதம் குறித்த பரந்துபட்ட வரைவிலக்கணத்தை பயன்படுத்தக்கூடும் என மனித உரிமை ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

இது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையை மீறுகின்றது எனவும் தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு சுதந்திரமான பேச்சிற்கான உரிமையும் மீறப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணம் பேச்சுசுதந்திரம் நடமாட்ட சுதந்திரம் ஆகியவற்றின் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படலாம் என்ற அச்சம்காரணமாக பொதுநலன்கள் குறித்த விடயங்களில் மக்கள் வெளிப்படையாக கருத்து கூற தயங்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் சமூக-பொருளாதார கட்டமைப்பை மீட்டெடுக்க உதவி

ஐரோப்பிய ஒன்றியம் அதன் அமுலாக்கப்பங்காளியான ‘வேல்ட் விஷன்’ உடன் இணைந்து பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் சமூக – பொருளாதாரக்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 மாதகாலத்துக்கான 2 மில்லியன் யூரோ நிதியுதவியின்கீழ் ‘கிரேஸ்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘கீழ்மட்ட மோதல் தடுப்பு’ செயற்திட்டம் வத்தளை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கற்பிட்டி, நவகத்தேகம, முந்தல் மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளிலும் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் சமூக – பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய விரிவான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ‘கிரேஸ்’ செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 130,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டெனிஸ் சைபி, ‘இலங்கை பாரிய நெருக்கடிக்கு மத்தியில் இருப்பதுடன், இது இலங்கையர்கள் பலரை மிகமோசமாகப் பாதித்துள்ளது. எனவே வெகுவாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரை அடையாளங்காணும் நோக்கிலேயே நாம் ‘வேல்ட் விஷன்’ அமைப்புடன் இணைந்து பணியாற்றிவருகின்றோம். அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரில் பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை விரைவில் பொருளாதார மீட்சியை எட்டும். – இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது திறைசேரியின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற இம்முயற்சியினை பாராட்டிய பிரதி உயர் ஸ்தானிகர்,

இவ்வாறான அமர்வுகளை 6 மாதங்களுக்கு ஒரு தடவை ஒழுங்கமைக்கவேண்டுமென்ற முன்மொழிவுக்கு தனது ஆதரவினையும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியம் குறித்த விவகாரங்களில் இலங்கை மக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவினை வழங்கியதாக தெரிவித்த அவர்,

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை

தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

நட்டத்தை ஏற்படுத்தும் அரச நிறுவனங்களை திறைசேரி பாதுகாக்காது

நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நட்டம் அடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் ஆயிரத்து 29 மில்லியன் ரூபாய் எனவும், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபாய் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாயிற்கும் அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலாபம் ஈட்டும் நிறுவனங்களால் திறைசேரிக்கு வரியாக 28 மில்லியன் ரூபாயே செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்குவது என்பது இந்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணத்தை இந்த நிறுவனங்களின் பராமரிப்புக்காக ஒதுக்குவது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசாங்கம் மக்களுக்கு சுமையை ஏற்றி நிறுவனங்களை நடத்தாது, ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாகவே செயற்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.