சில கடுமையான தீர்மானங்களை எடுக்க சர்வதேச நாணய நிதியமே காரணம் – ருவன்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே வரி அதிகரிப்பு உட்பட சில கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களை இலகுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வங்குராேத்து நிலைமையை அறிந்துகொண்டு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு கூட பணம் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் பணம் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி தேவை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த இவ்வாறான கடுமையான தீர்மானங்கள் சரியே என மக்கள் இந்த வருட இறுதியில் புரிந்துகொள்வார்கள் என்றும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாமல் போனால் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் ஏற்கனவே முடிவடைந்திருந்த நிலையில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அரசியலமைப்பின் ஊடாக விதிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய ஒரு வருடகாலத்துக்கு ஆட்சி காலம் நீடிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

அதன் காரணமாகவே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்தி உறுப்பினர்களை தெரிவுசெய்துகொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்தபோதும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை அரசாங்கத்தினால் வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்தலை உரிய திகதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் மார்ச் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய திகதிக்கு நடத்த முடியாமல்போகும் சாத்தியம் இருப்பதால், மாநகர சபைகளின் நிர்வாகத்தை மாநகர ஆணையாளர்களுக்கு கீழ் கொண்டுவரவும் நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாகத்தை மாநகர செயலாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு கீழ் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நீதிமன்றத்துக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதில் பாதிப்பு – தேர்தல் ஆணைக்குழு தலைவர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள திறைசேரி நிதி வழங்குவதை தாமதப்படுத்துவதால் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்க தீர்மானித்துள்ளோம்.

தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை புதன்கிழமை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசியலமைப்பின் பிரகாரம், எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக உயர்நீதிமன்றத்துக்கு வாக்குறுதி வழங்கினோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தேர்தல் பணிகளை தொடருமாறு உயர்நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள 10 பில்லியன் ரூபாவை திறைசேரியிடமிருந்து முழுமையாக கோரவில்லை. ஆரம்பகட்ட பணிகளை கூட முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை கட்டம் கட்டமாக விடுவிப்பதை திறைசேரி தாமதப்படுத்துகிறது.

நிதி நெருக்கடியால் தபால் மூல வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை அரச அச்சக திணைக்களம் கடந்த திங்கட்கிழமை இடைநிறுத்தியது. நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரியிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவது கடினமானது என திறைசேரி அறிவித்துள்ளது.

நிதி நெருக்கடியினால் எதிர்வரும் 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த தபால்மூல வாக்கெடுப்பு மறுஅறிவித்தல் விடுக்கும் வரை பிற்போடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது நிச்சயமற்றதாக உள்ளது. ஆகவே உயர்நீதிமன்றத்துக்கு வழங்கிய வாக்குறுதியை எம்மால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள திறைசேரி நிதி விடுவிப்பை தாமதப்படுத்துவதால் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் உள்ளமைக்கு வருத்தமடைகிறோம் எனவும், தேர்தல் தொடர்பில் தற்போதைய நிலைவரத்தை உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

அதிகளவிலான மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

பொருளாதார நெருக்கடிகள், அரசியல் குளறுபடிகள் மற்றும் அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக்கொள்கை காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்களின்   எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறிப்பாக, சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் எண்ணிக்கைகளும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கிராம மட்டங்களில் உள்ள அரச மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் வெளியேறுதல் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைகள் இதுவரையில் மருத்துவ நிபுணர்களின்  பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை.

மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும்,  தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.

அதேவேளை, அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் உறுதியின்மையே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற பிரதான காரணமாகும். அதேபோன்று அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பில் இந்த தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

மேலும், தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுத்துள்ள நியாயமற்ற வரிக்கொள்கையும் மற்றுமொரு காரணமாகும். இதனாலும் அதிகளவிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்றார்.

கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிக்கத் தடை; மாநகர சபை தீர்மானம்

கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிப்பதற்கு தடை விதிக்கும் தீர்மானம் கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 58ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு புதன்கிழமை (18) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உப தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது உரையாற்றிய அவர் கூறியதாவது;

கல்முனைப் பிரதேசத்தில் மரணிக்கின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களின் பூத்தவுடல்களை இங்குள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்து விட்டு, உரியவர்களின் நினைவாகவும் அடையாளப்படுத்துவதற்குமென அவர்களது குடும்பத்தினரால் கல்லறைகள் கட்டுப்படுகின்றன. இது எமது பாரம்பரிய மரபாக இருந்து வருகின்ற போதிலும் தொடர்ச்சியாக இதனைச் செய்வதற்கு அனுமதித்தால் இன்னும் சிறிது காலத்தில் இம்மயானத்தில் பூத்தவுடல்களை அடக்கம் செய்வதற்கு இடமில்லாமல் போகின்ற நிலைமை ஏற்படும்.

அதேவேளை, இப்பிரதேசத்தில் இன்னொரு புதிய மயானத்தை உருவாக்குவதற்கும் இடமில்லை என்கிற விடயத்தையும் சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இதனைக் கருத்தில் கொண்டே இம்மயானத்தில் அடக்கம் செய்யப்படுகின்ற பூத்தவுடல்களுக்கு கல்லறைகள் கட்டுவதைத் தவிர்த்து, அவற்றை அடையாளப்படுத்துவதற்கான பெயர் விபரங்களை ஒரு பலகையிலோ அல்லது கல்லிலோ எழுதி, நடுவதன் மூலம் எதிர்காலங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

மாநகர சபையின் பொது வசதிகள் குழுவின் தவிசாளர் என்ற ரீதியில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, இப்பிரேரணையை இச்சபையில் சமர்ப்பித்திருக்கிறேன். இதனை ஹென்றி மகேந்திரன் கொண்டு வந்திருக்கிறேன் என்பதற்காக, அரசியல் காரணங்களுக்காக எவரும் எதிர்த்து விடாதீர்கள். இது நமது சமூகம் சார்ந்த, எதிர்கால சந்ததியினரின் நலன் சார்ந்த விடயம் என்பதை கவனத்தில் கொண்டு இப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்குங்கள் என்று அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

 

இதைத்தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான எஸ்.சந்திரசேகரம் இராஜன், எஸ்.குபேரன் ஆகியோரின் கருத்துகள் மற்றும் மாநகர முதல்வரின் ஆலோசனைகளையடுத்து குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பண்டா செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது: ஜனா எம்.பி

பண்டா செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் இந்த நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது ஊடகவியலாளர்கள்கூட மரணித்திருக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்குமாறு கோரி கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் கடந்த சனிக்கிழமை (18) மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களினால் எனக்கு வழங்கப்பட்டுள்ள மகஜரை நிச்சயமாக நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கையில் பாரப்படுத்துவேன். இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் 50 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரையில் எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைத்ததாகத் தெரியவில்லை.

மாறி மாறி இந்த நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்களின் காலத்தில் இவ்வாறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக ராஜபக்ஸ சகோதரர்களின் ஆட்சிக்காலத்தில் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் இருக்கின்றார்கள். இந்த நாட்டிலே அடிப்படை மனித உரிமைகளுக்கும், ஜனநாயக அரசியல் உரிமைகளும் இல்லை. இதனைவிட அரசியலமைப்பை மீறிக்கொண்டு செயற்படும் நாடாகவும், அரசாகவும்தான் இந்த நாடு இருந்து வருகின்றது.

வடகிழக்கிலே 2009 மே இல் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டாலும், படையினரிடம் கையளிக்கப்பட்டு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவ்வாறானதொரு நாட்டிலேதான் குறிப்பாக நீதியில்லாத நாட்டிலே தமிழ்; மக்களாகிய நாங்கள் நீதியை வேண்டி நிற்கின்றோம்.

இந்த நிலையில்தான் உளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நிருணயிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்த்தல்கூட நடைபெறுமா? அல்லது நடைபெறாதா? என்ற நிலமையும் காணப்படுகின்றது. மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்குரிய தேர்தலை அரசாங்கம் எந்த காரணங்களைக் கூறியாவது குறிப்பாக பொருளாதார நிலமையைக் கூறியாவது தேர்தலை நடத்தாமலிருக்க அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி மாகாணசபை முறைமைக்கு முழு அதிகாரங்களையும் பரவலாக்கி இலங்கையின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற 13 வது திருத்தச் சட்டத்தை ஓரளவாவது நிறைவேற்றுவதற்காக இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் முன்வந்திருக்கின்றார். ஆனால் புத்த பிக்குகள் 13 திருத்தச் சட்டம் அல்லை தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் கொடுக்கக் கூடாது என போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

1956 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கா, தந்த செல்வநாயகத்துடன் பண்டா செல்வா ஒப்பந்தத்தை ஏற்படுத்திய போதும், அப்போது புத்த பிக்குகள் கொழும்பிலிருந்து கண்டிக்கு ஜே.ஆர் அவர்களது தலைமையிலே ஒரு ஊர்வலத்தை நடாத்தியிருந்தார்கள். இதனால் அந்த ஒப்பந்தம் நிலைவேறாமல் சென்றிருந்தது. அந்த ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் இந்த நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது ஊடகவியலாளர்கள்கூட மரணித்திருக்கமாட்டார்கள்.

இந்நிலையில் 13 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு புத்தபிக்குகள் எதிராக இருப்பது இந்த அழிந்த நாட்டை மீண்டும் மீண்டும் அழிப்பதற்கான எடுகோளாகவுள்ளது. எனவே அவ்வப்போது ஊடகவியலார்களின் படுகொலைகளுக்கும், காணாமலாக்கப்பட்டதற்குமாக நீதிவேண்டிப் போராடுகின்றோம், எனவே அற்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்து உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு செல்வோம் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்களை முன்னெடுக்கவும்  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து தேர்தலை நடத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒன்றிணைவதன் ஊடாக நாட்டிற்கு ஏற்பட கூடிய நெருக்கடிகளையும் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களுடன் சனிக்கிழமை (18) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.

இதன் போது அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

தேர்தல் நடவடிக்கைகளுடன்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் தொடர்புப்பட போவதில்லை. ஆனால் நாட்டிற்கான திட்டங்களின் போது பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து தரப்புகளுடனும் ஒன்றிணைந்து செயல்பட நான் எப்போதும் தயாராகவே உள்ளேன்.

நாட்டின் பொருளாதார நிலைமைகளை சீர் செய்யவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நான் ஏற்கனவே கூறியது போன்று குறைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்ல அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

தேர்தல்கள் ஆணைக்குழு நிதி கோருகின்றது. மறுப்புறம் அரச அச்சக தினைக்களத்தின் தலைவர் வாக்கு சீட்டு அச்சிட நிதி கோருகின்றார்.

உரிய நிதியை  வழங்கா விடின்  வாக்கு சீட்டுகளை அச்சிடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு நெருக்கடியான நிலைமை என இதன் போது கருத்து தெரிவித்த ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த ஐதே.க வின் தவிசாளர் வஜிர அபேவர்தன கூறுகையில், யாசகர்கள் வீதிகளில்  பணம் கேட்பார்கள். இருப்பவர்கள் கொடுப்பார்கள்.

இல்லாதவர்கள் கடந்து செல்வார்கள் என்றார்.  எவ்வாறாயினும் தேர்தலுக்கு நிதி வழங்க திறைச்சேரியில் நிதி இல்லை. ஜனாதிபதி ஏற்கனவே கூறியது போன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் 8000 ஆயிரம் என்ற எண்ணிக்கையை வீதத்தால் குறைத்து தேர்தலுக்கு செல்ல எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக தெரிவித்தார்.

அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது ஒக்டோபர் மாதம் அளவில் எவ்விதமான பிரச்சினையும் இன்றி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தியிருக்க முடியும் என ஐ.தே.கவின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன இதன் போது குறிப்பிட்டார்.

தேர்தலை விட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை சீர்குழைக்கும் நோக்கமே எதிர்கட்சிகளுக்கு இருந்தது. இதனால் அந்த கட்சிகளில் பெரும் பிளவுகள் கூட ஏற்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் கூறினார்.

இந்த கருத்துக்களை செவிமெடுத்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்களை முன்னெடுக்கவும்  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து தேர்தலை நடத்த ஒன்றிணைவார்களாயின் தான் அதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

வெளியேற தயாராகும் ஜேர்மனி நிறுவனங்கள்; பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாவிடின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இலங்கை இழக்கும் – ஜேர்மன் தூதுவர்

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட் (Holger Seubert) இன்று கொழும்பில் ஊடகவியலாளர்கள் குழுவிடம் தெரிவித்ததாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இந்த கட்டம் முடிவிற்கு வருகின்றது இதன் காரணமாக இலங்கை அதனை இழக்கும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் இலங்கையால் அதனை இழக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் இலங்கையில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள், நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என சில எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சில ஜேர்மன் நிறுவனங்கள் இறக்குமதித் தடை குறித்து கவலை தெரிவித்துள்ளன.

மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் அவர் கூறினார். பல ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருவதுடன் வாகன உதிரி பாகங்கள் உட்பட ஜேர்மன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான Mitsubishi மற்றும் Taisei ஆகியவை இலங்கையில் தனது செயற்பாடுகளை குறைப்பதாக அண்மையில் அறிவித்திருந்தன. இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜேர்மனியும் இலங்கைக்கான கடன்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டவுடன் நிலைமை மேம்படும் என்று நம்புகிறோம் என்று ஜேர்மன் தூதுவர் கூறினார். ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கான ஒட்டுமொத்த வணிகச் சூழல் குறித்தும் கவலைகள் இருப்பதாக Seubert கூறினார்.

முதலீட்டுச் சபை உட்பட இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்

தேர்தல் ஆணைக்குழுவுடன் அரச அதிகாரிகள் ஒத்துழைக்காதது தண்டனைக்குரிய குற்றம்: சட்டத்தரணிகள் சங்கம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்கும் அரச அதிகாரிகளின் முயற்சிகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தேர்தல் நடைமுறையில் தலையிடுவதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அனைத்து தேர்தல்களும் இலங்கையின் ஜனநாயக செயற்பாட்டின் இன்றியமையாத அங்கம் எனவும் அவை தடைப்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.

பொது நிதியை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்படும் அரசாங்கத்தின் சமீபத்திய வாரங்களில் பல முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவை தேர்தல்களை நடத்துவதைத் தடுக்கும் விளைவைக் கொண்டிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டது.

வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்படுவதற்கு முன்னதாக நிதியை விடுவிக்குமாறு அரசாங்க அச்சகத்தின் கோரிக்கையும், தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், தேர்தலுக்கு நிதி இல்லை என்று திறைசேரியின் செயலாளரின் அறிவிப்பும் இதில் அடங்கும்.

கடந்த சில வாரங்களாக திறைசேரியின் செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் தேர்தலை நிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை தெளிவாக வெளிப்படுத்துவதாகவும், இதனால் மக்களின் இறையாண்மை, மக்களின் வாக்குரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட தேர்தல்களைத் தடுப்பதற்கான இத்தகைய முயற்சிகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீது முன்னோடியில்லாத தாக்குதலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன மற்றும் எதிர்காலத்தில் தேர்தல் செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் செல்வாக்கற்ற நிறைவேற்று அதிகாரம் அல்லது சட்டவாக்க சபைக்கு தேர்தலுக்கான வளங்களை ஒதுக்குவதை தடுக்கும் அபாயகரமான முன்னுதாரணமாக அமையும் என்றும் இலங்கை மக்கள் தமது பிரதிநிதிகளையும் தலைவர்களையும் தெரிவு செய்வதிலிருந்து தடுக்கலாம் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அரசியலமைப்பின் 104 பி (2) மற்றும் 104 ஜிஜி (1) ஆகிய பிரிவுகள் அனைத்து அரச அதிகாரிகளும் தேர்தல்கள் ஆணையத்துடன் ஒத்துழைக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதையும், அவ்வாறு செய்ய மறுப்பது அல்லது தவறுவது சிறைத்த தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் சட்டத்தரணிகள் சங்கம் உறுதிப்படுத்துகிறது.

அரசியலமைப்பின் 33 (c) பிரிவின்படி, தேர்தல் ஆணைக்குழுவழன் வேண்டுகோளின்படி, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான சரியான சூழ்நிலையை உருவாக்குவதை உறுதிப்படுத்த ஜனாதிபதிக்கும் அதிகாரம் உள்ளது.

50 மில்லியன் வழங்கினால் 5 நாட்களுக்குள் வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டு வழங்க முடியும் – அரச அச்சக தலைவர்

வரவு – செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 50 மில்லியன் ரூபாவேனும் வழங்கப்பட்டால், குறிப்பிட்ட தினத்திலிருந்து 5 நாட்களுக்குள் வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டு வழங்க முடியும்.

சுற்று நிரூபத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், உரிய பாதுகாப்பு வழங்கப்படாமை என்பவற்றின் காரணமாகவே வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் தாமதமடைந்துள்ளதாக அரச அச்சகத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்கு 401.5 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிப்பிடப்பட்டு, தேர்தல் ஆணைக்குழுவிடம் 50 சதவீதம் முற்பணம் கோரப்பட்டது. எவ்வாறிருப்பினும், அதில் 40 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப் பெற்றது.

இந்நிலையில் அரச நிறுவனங்கள் எவையும் கடனில் சேவை வழங்கக்கூடாது என சுற்று நிரூபம் வெளியிடப்பட்டது. அதற்கமைய தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்கான நிதி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த 13ஆம் திகதி நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு இதுவரையில் பதில் கிடைக்கப் பெறவில்லை.

எவ்வாறிருப்பினும், தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளை தாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக அவை எம்மால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எனினும், இதற்கான பாதுகாப்பினை வழங்குமாறு கடந்த 14ஆம் திகதி பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கும் இன்னும் பதில் வழங்கப்படவில்லை.

இதற்கு முன்னர் எந்தவொரு தேர்தலின் போதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பின்றி வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டதில்லை. ஆனால், தற்போது வெறுமனே 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தால், இன்றுடன் அச்சு நடவடிக்கைகளை முழுமையாக நிறைவடையச் செய்திருக்க முடியும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 18 மில்லியன் வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியுள்ளது.

இதில் 3 சதவீதம் தபால் மூல வாக்களிப்புக்கானவை ஆகும். வரவு – செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 50 மில்லியன் ரூபாவேனும் வழங்கப்பட்டால், குறிப்பிட்ட தினத்திலிருந்து 5 நாட்களுக்குள் வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டு வழங்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு முழுமையாக ஒட்டுமொத்த வாக்குச் சீட்டுக்களையும் அச்சிடுவதற்கு 20 – 25 நாட்கள் தேவையாகும். இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் காலத்தில் அரச அச்சகத்தின் செயற்பாடுகள் கால தாமதமானது கிடையாது.

எனினும், இம்முறை சுற்று நிரூபத்தின் ஊடாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் உரிய பாதுகாப்பு கிடைக்கப் பெறாமையால் இந்த நடவடிக்கைகள் கால தாமதமடைந்துள்ளமை கவலைக்குரியது.

மேலும், இது தொடர்பில் எனக்கு வேறு எந்த வகையிலும் அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.