பொலிஸ் – காணி அதிகாரங்களினால் நாடு துண்டாடப்படும் – சரத் வீரசேகர

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவரும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வீடொன்று பற்றியெறியும்போது சுருட்டை பற்றவைத்ததைப் போன்று, இன்று சில தமிழ்க் கட்சிகளும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் ஒரு சில சர்வதேச நாடுகளும் செயற்பட்டு வருகின்றன.

நாடு இன்று பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், நாட்டை துண்டாட, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்கள்.

இந்து – லங்கா ஒப்பந்தத்திற்கு இணங்க, வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து ஒருவருடத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும் என்றே கூறப்பட்டிருந்தது. அது 13 ஆவது திருத்தசட்டம் கிடையாது.

அத்தோடு, இந்த ஒப்பந்தத்தில் அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாகக் கூறப்படவில்லை.

அப்படியிருக்கையில், எவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் வந்தது? இது இந்தியாவின் தேவைக்காக எம்மீது சுமத்தப்பட்ட ஒன்றாகும்.

இந்த சிறிய நாடு 9 மாகாணங்களாக பிரிந்து செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது.

அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. அங்கு மேற்கு வெர்ஜீனியா மாநிலமானது இலங்கைளவு பரப்பளவைக் கொண்ட மாநிலமாகும்.

அதேபோன்று அமெரிக்காவின் அலஸ்கா மாநிலமானது இலங்கையை விட பாரிய மாநிலமாகும்.

இப்படியான மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில்தான் சமஷ்டி முறைமை தேவைப்படுகிறது.

அதைவிடுத்து இலங்கை போன்றதொரு சிறிய நாட்டை சமஷ்டியாக்க முற்படுவதானது, இலங்கையை பிரிக்கவேயாகும். இலங்கையென்பது ஒற்றையாட்சி முறைமைக்கொண்ட நாடாகும்.

69 இலட்சம் மக்கள் வாக்களித்து, எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்கியிருப்பதானது, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்கல்ல.

மாறாக ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை முன்னேற்றவே என்பதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, 13 ஐ அமுல்படுத்தி, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். 13 ஐ நாம் இப்போதும் நடைமுறைப்படுத்தி தான் வைத்துள்ளோம்.

ஆனால், பொலிஸ் – காணி அதிகாரங்களை வழங்கி ஐக்கிய இலங்கையை பிரிக்க நாம் என்றும் இடமளிக்கப் போவதில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடு – ஜனாதிபதி

சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவு செலவு செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று சுதந்திரத்திற்குப் பின்னர் எமக்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. சுதந்திரம் அடைந்து 100 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் நாட்டின் மறுசீரமைப்புக்கு அவசியமான பல நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வரலாற்று தொடர்பிலான  நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றை மறந்து விட்டோம் என்பதே தங்கள் மீது  இப்போதுள்ள பாரிய குற்றச்சாட்டு என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அப்படியானால் அவ்வாறானதொரு நிறுவனத்தை ஆரம்பித்தே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனமொன்றை நிறுவவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்பதாக இந்தியா ஐ.எம்.எப் இற்கு தெரிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இலங்கையானது, இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் கடன்களை வழங்கவேண்டியுள்ளது.

இதுவும் கடன் மறுசீரமைப்பின் கீழ் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு துரித உதவியாக 4 பில்லியன் டொலர்களை வழங்கியது.

எவ்வாறாயினும், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும், இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப் பணத்தை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ரெலோ உட்பட ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகிய 5 கட்சிகளும் இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.

வவுனியா மாநகரசபையில் ரெலோ ஆட்சி அமைக்கும் – வினோ எம்.பி நம்பிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் வவுனியா மாநகரசபையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது மற்றும் வட்டாரங்களில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பங்காளி கட்சிகளுக்கிடையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாநகரசபை மற்றும் 3 பிரதேச சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி போட்டியிடுகின்றது.

இதன்போது வவுனியா மாநகரசபையில் குறித்த கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் மாநகர மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் பொறுப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஈ. பி. ஆர். எல். எப் கட்சியும் செட்டிகுளம் பிரதேச சபையில் புளொட்டும் வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஜனநாயக போராளிகள் கட்சியும் ஆட்சி அமைக்கும் பெறுப்பை குறித்த கூட்டணி பகிர்ந்துள்ளது.

இந் நிலையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பிலும் பங்காளி கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டியுள்ளதாகவும் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை உயர் ஸ்தானிகர் இடையே சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் பரஸ்பர உறவை பேணுதல், மீட்டெடுத்தல் மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் குறித்து இந்த கலந்துரையாடப்பட்டது.

இது இந்தியா- இலங்கை இடையே நடைபெறும் வழக்கமான உரையாடலின் ஒரு பகுதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வார இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது.

எனினும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13ஐ முழுமையாக அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத, சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தும் இன அடிப்படையிலான பிரச்சினை, நாங்கள் அடையாளப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் மனங்களை வெல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மை எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அடிப்படையில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தல், ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இராணுவத்தினர் மீது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளால் கொழும்பில் இன்று (16) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்றைய தினம் (16) காலி வீதி , கொள்ளுபிட்டியிலிருந்து பம்பலப்பிட்டி வரையான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதன் போது பொலிஸாரினால் பிரதான வீதி மறிக்கப்பட்டிருந்தமையால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மெரைன் டிரைவ் வீதியில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

150 நாட்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறும் பயங்கரவாத தடைச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்குமாறும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யூனியன் ப்ளேஸ் ஊடாக காலி முகத்திடலுக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

02 மில்லியன் குடும்பங்களுக்கு 02 மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்க அங்கீகாரம்

சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம்  பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 40,000 மெற்றிக்தொன் அரிசி தேவைப்பதோடு, அதற்கு அரசாங்கம் 61,600  மெற்றிக்தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.

சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கீழ் தற்பொழுது காணப்படும் முறையை பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்பட உள்ளதோடு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார  மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களின் ஒருங்கிணைப்புடன் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

நெல் கொள்வனவுக்கு 6,200 மில்லியன் ரூபாய், நெல் உலர்த்துவதற்கு 290 மில்லியன் ரூபாய், கதிரடிக்கு வாடகைக்கு 590 மில்லியன் ரூபாய், பொதிச் செலவுக்கு 200 மில்லியன் ரூபாய், நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 160 மில்லியன் ரூபாய், அரிசி போக்குவரத்துச் செலவுக்கு 600 மில்லியன் ரூபாய் என்ற வகையில் 8,040 மில்லியன் ரூபாய் இதற்காக மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட செலவு மாறுபடும்.தேவை ஏற்பட்டால், சுமார் 10,000 ரூபாய் வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு இதற்குப் பயன்படுத்தப்படும்.

கமத்தொழில் திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2022/2023 பெரும்போகத்தில் நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு சுமார் 732,201 ஹெக்டெயராக இருந்ததோடு, மற்றும் எதிர்பார்க்கப்படும் நெல் விளைச்சல் 3.3 மில்லியன் மெ.தொன்களாகும்.

இதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு சுமார் 2.2 மில்லியன் மெ.தொன்களாகும்.  நாட்டின் மாதாந்த அரிசித் தேவையான சுமார் 210,000 மெற்றிக் தொன்களைக்  கருத்திற்கொண்டால், எதிர்வரும் பெரும்போகத்தில் அரிசி மேலதிக கையிருப்பு கிடைக்கலாம்    என அவதானிக்கப்படுகின்றது.

அதன்படி, நெல் விவசாயி மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் வகையில், 2020/23 பெரும்போகத்தில் குறிப்பிட்ட அளவு நெல் கொள்முதல் செய்வதில் அரசாங்கம் தலையிடுவது அவசியம் ஆகும்.

மேலும், நாட்டில் நிலவும்  கடினமான பொருளாதார நிலைமை காரணமாக, சமூகத்தின் குறைந்த வருமானம் பெறும்  குழுக்களின்  போசாக்கு  மட்டத்தைப் பேணுவதற்கு ஆதரவளித்து   இந்த நெருக்கடியின் பாதகமான விளைவுகளிலிருந்து அவர்களை  பாதுகாக்க வேண்டும்.   சமுர்த்தி பயனாளர்கள் உட்பட  சுமார் 2 மில்லியன் குடும்பங்களாக இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2023 வரை  இவர்களுக்காக அரசாங்கம்   மேலதிக நிதியை  வழங்கியிருந்தாலும், இந்த குறைந்த வருமானம் பெறுபவர்களை சில காலம் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

2022/2023  பெரும் போகத்தில்  நெல் அறுவடை முந்தைய பருவத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை  பராமரிப்பதற்கு மேலதிக ஒத்துழைப்பை வழங்குவதற்காக  குறிப்பிட்ட அளவு நெல்லைப் பயன்படுத்துவது பொருத்தமானது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுவோர் பயனடைவார்கள்.

திறைசேரி செயலாளர், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், விவசாய அமைச்சின் செயலாளர், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர், பெண்கள், சிறுவர்  விவகார   மற்றும் சமூக வலுவூட்டல்  அமைச்சின் செயலாளர் மற்றும் சகவ  மாவட்டச் செயலாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்  மற்றும்  ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் என்பன உத்தேச திட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து  ஆராயப்படும்.

உத்தேச அரிசி விநியோகப் பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, விவசாயிகள் வாங்கும் நெல் வகைகளின் உற்பத்திச்  செலவு, அரிசி கொள்வனவு செய்யும்  உத்தரவாத விலை, நெல் ஆலை  உரிமையாளர்களின் பங்களிப்பு, போக்குவரத்து முறை, கதிரடி வாடகை  ஆகியவை குறித்து விரிவாக ஆராயப்படும்.

2019ஆம் ஆண்டு இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளையே விடுவிக்க நடவடிக்கை

கடந்த 2019ஆம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 110ஏக்கர் காணியினையே தற்போது விடுவிக்க பாதுகாப்பு தரப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப் பகுதியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணி விடுவிப்பு கைவிடப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்றதை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைகளின்தளபதிகள், படைகளின் பிரதானி பங்குபற்றுதலுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் காணிவிடுவிப்பு தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், கீரிமலை, காங்கேசன் துறை , மயிலிட்டி , பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் முப்படையினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக படைத்தரப்பு ஜனாதிபதியின் முன் உறுதி அளித்தது.

குறித்த காணிகளில் 30 ஏக்கர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் மிகுதி ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இக்காணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகளே எனவும், புதிதாக காணிகள் எதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.