பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் நாடாளுமன்றுக்கு – சுசில் பிரேமஜயந்த

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு பதிலளித்தார்

சபாநாயகர் தலைமையில் சனிக்கிழமை (03) நாடாளுமன்ற அமர்வு கூடிய போது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்களின் அபிலாசைக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதாக குறிப்பிடுவதை ஏற்க முடியாது.போராட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்றப்பட்டுள்ளன.நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக நாடாளுமன்ற மட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் தேசிய சபை, துறைசார் மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன்,புதிதாக மூன்று விசேட தெரிவுக் குழுக்களை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்புக்காக நடைமுறையில் இருந்த சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.சமூக கட்டமைப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் விசேட தேவையுடையவர்களுக்கான சட்டம்,ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்கள் காலத்தின் தேவைக்கமைய திருத்தம் செய்யப்படவுள்ளன.

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இயற்றுவதற்கான சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

7 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம்

7 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதுவதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அமைப்புகளில் குறித்த 7 அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஏழு அரசியல் கட்சிகள் வருமாறு

1. ஐக்கிய காங்கிரஸ் கட்சி
2. இரண்டாவது தலைமுறை
3. ஶ்ரீ லங்கா சமூக ஜனநாயகக் கட்சி
4. நாட்டுப்பற்றாளர் ஐக்கிய தேசியக் கட்சி
6. மக்கள் அறிவுசார் முன்னணி
7. ஈரோஸ் ஜனநாயக முன்னணி
3. ஜனநாயக மக்கள் காங்கிரஸ்

கடந்த நவம்பர் 28ஆம் திகதி கூடிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்ட முடிவு எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை இலங்கையில் 79 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்ட 7 அரசியல் கட்சிகளுடன் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.

ஜனவரியில் இருந்து இணையத்தின் மூலம் கடவுச்சீட்டு விநியோகம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை வீட்டில் இருந்தபடியே திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்க முடியும்.

கைரேகை போன்ற விடயங்களுக்காக மாத்திரம் விண்ணப்பதாரர் திணைக்களத்துக்கு வரவேண்டியிருக்கும்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கைரேகைகளைப் பெறுவதற்காக 50 முகப்பு அலுவலக மையங்களை நிறுவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 50 பிரதேச செயலக அலுவலகங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வீசாவில் ஆட்களை அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்களுக்குத் தடை

சுற்றுலா வீசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களின் உரிமம் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டொலர்கள் இன்றி உண்டியல் வடிவில் பணத்தை கொண்டு வந்த பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்துறை அமைச்சின் வரவு – செலவுத் திட்டம் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முதலீடு செய்ய மாலைத்தீவுக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய மாலைத்தீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் (Faisal Naseem) இன்று (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது, மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைதீவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைதீவுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், போதைப்பொருளுக்கு எதிராகப் போராடுவதற்கு மாலைதீவின் உதவியை வேண்டினார்.

வட மாகாணத்தை இலக்காக கொண்டு சுற்றுலாத்துறையை, கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் – ஹரின்

கொழும்பில் இருந்து யாழ். பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை இம்மாதம் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மாகாணத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (டிச. 2) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை, சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம்; ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

யாழ்.பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்துவது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாட்டுக்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும் – ஹர்ஷ

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும். எத்தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உரையாடியதை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடன் மறுசீரமைப்பு மற்றும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் உறுப்பினர் குறிப்பிட்ட விடயத்தை ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் கோ ஹோம் சைனா என்பது பொருத்தமற்றது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எத்தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஆகவே இவ்விடயத்தில் முரண்பாடற்ற வகையில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

 

அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்தார் அலி சப்ரி

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

வோசிங்டனில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கடன்மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பிற்கு முன்னர் கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அமெரிக்காவிற்கு இலங்கையுடன் உள்ள நீண்;ட உறவை நினைவுகூர்ந்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையின் 75வருடத்தினை அடுத்த வருடம் கொண்டாடுகின்றோம் காலநிலை நெருக்கடி உட்பட சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றோம் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் காலநிலை மாற்றம் குறித்தவிடயத்திற்கு தீர்வை காண்பதற்கு இலங்கை சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது எனவும் பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அமெரிக்கா 240 மில்லியன் டொலர் உதவிகளையும் கடன்களையும் வழங்கியுள்ளது,பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு மாத்திரமில்லாமல் அரசியல் ஸ்திரதன்மை முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இருநாடுகளும் இணைந்து செயற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் அமைச்சர்களுடன் சீனத் தூதரகம் சென்றார் மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று மாலை கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் முன்னாள் ஜனாதிபதியுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் இராகவனும் சீனத் தூதரகத்துக்கு சென்றுள்ளார்கள்

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1989 முதல் 2002 வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1989 முதல் 2004 வரை மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்த H.E. ஜியாங் ஜெமின் (H.E Jiang Zemin) மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்றார்.

அதேவேளை அனுதாப குறிப்பிலும் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவர் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

ஜனநாயகம் மனித உரிமைகளை இன்று எமக்கு கற்றுத்தரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அன்று சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவராவார். அவ்வாறான ஒருவரால் என்மீது சுமத்தப்படும் போலியான சேறு பூசல்களை  ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நோக்கி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆற்றிய உரையைத்  தொடர்ந்து சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அவர் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

வனஜீவராசிகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் சேறு பூசல்கள் மாத்திரமே உள்ளன என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டு தமது எதிர்ப்பை தெரிவிக்க உரையாற்ற அனுமதி கோரினார்கள்.

எனினும் இந்த பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுமாறு சபாநாயகர் உறுப்பினர்களை நோக்கிக் குறிப்பிட்டார். ”அவ்வாறாயின் சேறு பூசலையும் நிறுத்த சொல்லுங்கள். வனஜீவராசிகள் அமைச்சின் விவாதத்தின் போது சேறு பூசல்களை இடம்பெறுகிறது.

காலி முகத்திடலுக்கு மிருகங்கள் வந்தால் அடித்து விரட்டட்டும்” என ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் குறிப்பிட்டார். இதன்போது எழுந்து உரையாற்றிய முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, ”எனது பெயரைக் குறிப்பிட்டால் நான் பதிலளிக்க வேண்டும்.

நான் கடந்த 9 மாதங்களாக பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை.” என்றார். இதன்போது குறிக்கிட்ட சபாநாயகர் , ”உங்களின் பெயரை குறிப்பிடவில்லை” என்றார்.

இதன்போது சரத் பொன்சேக்கா விமலவீர திஸாநாயக்கவை நோக்கி , ”யானை தடுப்பு கால்வாய் அமைத்தது முட்டாள் தனமானது” என்று குறிப்பிட்டார். இவர் அமைச்சராக பதவி வகிக்கும் போது ஒன்றும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த விமலவீர திஸாநாயக்க , ”அரசாங்கத்தின் செலவு இல்லாமல் யானை கால்வாய் அமைத்தேன். அதனால் இன்று அந்த பிரதேச மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்.

60 000 , 70 000 பேரை கொன்றவர் இன்று எமக்கு ஜனநாயகம் பற்றி குறிப்பிட வருகிறார். சண்டியர்களை பாதுகாத்த பீல்ட் மார்ஷல் எமக்கு ஆலோசனை வழங்க வருகிறார் என்றார்.