வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு வழங்கப்படல் வேண்டும் – ஜனா எம்.பி

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தென்னிலங்கையில் சரத் வீரசேகர, உதயகம்பன்பில, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்தத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை,

மாகாணசபை முறைமையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவரும் அதே கருத்தினை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது வேடிக்கையானது.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளபோதிலும் தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தினை முழுமையான அமுல்படுத்தி அதனை ஒரு முதல்படியாக கொண்டு தீர்வு நோக்கிய செயற்பாட்டினை முன்கொண்டு செல்ல முடியும்.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் செயற்படுவோம்.

அவர்களின் குரல்களுக்கு நாங்களும் மதிப்பளித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் ஹர்த்தாலை அனுஸ்டிப்போம்.
இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை நாங்கள் விரும்புகின்றோம் என்ற வகையில் இந்திய பிரதமர் தனது பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் அனைத்து கட்சியினரையும் அழைத்து ஜனாதிபதி மகாநாடு ஒன்றை நடாத்தியுள்ளார். அதன் ஊடாக அமைச்சரவை உபகுழுவினை நியமித்துள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13ஆம் திருத்தச் சட்டத்தின் அதிகார பகிர்வு அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை – விக்டர் ஐவன்

13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வு ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13இன் மூலம் அதிகாரத்தினை பகிரும் போது நாம் இந்தியாவினை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இந்தியாவானது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அதிகாரங்களை வழங்கவில்லை.

சில இடங்களுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கியுள்ளது. சில மாநிலங்களுக்கு குறைவான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் அதிகாரப் பகிர்வு ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை என்பது புலனாகின்றது.

வேண்டுமெனின் வடக்கிற்கு சில வருடங்கள் அதிகாரத்தை பகிர்ந்தளித்து அதனை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கின்றனர் என்பதை அவதானிக்கலாம்.

சரியான முறையில் நிர்வாகம் நடைபெறுமெனின், தேவையான மற்றவர்களுக்கும் அவ்வாறே அதிகாரத்தினை பகிர்ந்தளிக்க முடியும்.

சில சந்தர்ப்பங்களில் எமது பக்கத்திலும் தளர்வு கொள்கையினை பின்பற்ற வேண்டும். நாம் இதனை புதிய கோணத்தில் பார்க்க வேண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு அதனை நாம் புதிய கோணத்தில் நோக்க வேண்டும்.

அவ்வாறு நோக்குவதால் நாட்டுக்கு நன்மை ஏற்படுமெனின், சிறுபான்மையினருக்கு நன்மை ஏற்படுமெனின் இந்தியா உட்பட ஏனைய நாடுகள் எமது நாட்டுக்குள் தலையிடாது.

அதிகாரப் பகிர்வு என்பது நாட்டினை பிரிப்பதல்ல. அது பொய்யான கூற்றாகும். ஏதேனுமொரு விடயத்தினை மாற்ற முற்படும் போது அது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் மாத்திரம் கலந்துரையாடி எவ்வித பலனுமில்லை.

அதில் பொதுமக்களை குறித்த விடயம் குறித்து அறிவுறுத்துவது மிக முக்கியமான விடயமாகும். அதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவும், தென்னாபிரிக்காவும் திகழ்கின்றது.

இது அரசாங்கம் மாத்திரம் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினையல்ல. ஏனைய அனைத்து கட்சிகளும் இந்த பிரச்சினை தொடர்பில் தமது பங்களிப்பினை செலுத்த வேண்டியிருந்தது. இதனை தவறவிட்டிருக்க கூடாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது – ஐக்கிய மக்கள் சக்தி

நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது. தவிர எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது.

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதிக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை.

ஏனெனில், 13 பிளஸ் தருவதாக அன்று உறுதியளித்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களே இன்று ஜனாதிபதிக்கும் ஆதரவினை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாகாணசபைத் தேர்தல் 6 வருடங்களாக இடம்பெறவில்லை. இந்தத் தேர்தலை பழைய முறையில் நடத்துமாறு நாம் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளோம். இதற்கான பிரேரணைக் கொண்டுவரப்பட்டால் நாம் ஆதரவு வழங்கத் தயாராகவே உள்ளோம்.

ஜனாதிபதி, உண்மையிலுமே அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றா அல்லது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சில பிரதேசங்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்றா நினைக்கிறார் என்பது புரியவில்லை.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பது ஏற்கனவே பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒன்றாகும்.

எனவே, இதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு தான் உள்ளதே ஒழிய, எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது.

முதலில், ஜனாதிபதி அரசாங்கத்தின் யோசனைகளை முன்வைக்க வேண்டும். அதைவிடுத்து, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச்சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

சர்வகட்சி மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அரசாங்கத்தின் யோசனை என்ன என்பதை முதலில் எமக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அந்த யோசனைகள் வெளிவந்தவுடன், நாம் இதுதொடர்பாக ஆராய முடியும்.

இதுதொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு, எமது யோசனைகளையும் இதில் முன்வைத்து அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஈழதமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அதியுயர் விருது

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார்.

‘சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்’ (‘Chai Time at Cinnamon Gardens’) என்ற நாவலுக்காகவே அவருக்கு இவ் விருதானது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக 80களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் எடுத்துக்காட்டுவதோடு, போர், இனப்படுகொலை, இனவெறி, குடும்பம், காதல் மற்றும் நட்பு போன்ற கருப்பொருள்களை இந்த நாவல் ஆராய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “அவுஸ்திரேலிய எழுத்தாளர்களிடையே அங்கீகாரம் பெறுவது அசாதாரணமானது. ‘மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது” என சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய தம்பதிகளான சங்கரியின் பெற்றோர் 80களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்

கனேடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
இலங்கை அரசாங்கம் மனிதவுரிமை மீறல்கள் அட்டூழியங்கள் போன்றவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளதுடன் கறுப்பு யூலை படுகொலைகள் அரசியல் பேராசை காரணமாக மிகப் பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கியது எனவும் இவ்வாறான மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டு்ம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அன்று கறுப்பு யூலைப் படுகொலையை அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இந்தியப் பாராளுமன்றத்தில் 1983 இல் இனப்படுகொல என அறிவித்தது போன்று கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அந்த நாளை தமிழினப் படுகொலை நாள் என கனேடியப் பாராளுமன்றத்தில் ஏக மனதாக பிரகடனப் படுத்தினார் பிரதமர் ட்ரூடோ இதனை தமிழ் மக்களின் நீதிக்கான கதவு திறப்பிற்கான ஆரம்பமாக தமிழர்கள் பார்க்கின்றனர்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நியாயமான நீதிக்கு குரல் கொடுக்கும் கனேடிய பிரதமரின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதலை வழங்கியுள்ளது.

இலங்கையில் சிங்கள இன வாதிகளின் கனேடிய அரசாங்கம் தொடர்பான அநாகரிகமான விமர்சனங்கள் வருவதை பொருட்டாக கொள்ளாது மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை வலியுறுத்தி உள்ளமையை வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்

பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது யுத்தத்தில் உயர்நீத்த மக்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அங்கு தெரிவு செய்யப்பட்ட ஊனமுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்

தொடர்ந்து முல்லை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் மோட்டார் வாகன வரவேற்பு இவருக்கு அளிக்கப்பட்டது.

வட்டுவாகல் பாலம் தொடக்கம் முல்லைப்பட்டிணம் சுற்றுவளைவு வரை இந்த விசேட வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுனாமி நினைவாலய தரிசிப்பிலும் புனித இராயப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற நற்கருணை ஆசீர்வாதத்திலும் ஈடுபட்டிருந்தார்.

இலங்கை மக்கள் மீட்சியடைவதற்குத் அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் – ஐ.நா.வின் வதிவிடப்பிரதிநிதி உறுதி

தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் முனைப்புடன் தனது பணிகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ், நாட்டின் பொருளாதாரம் நிலைபேறான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்திய முதலீடுகளை ஊக்குவிப்பதில் அதிக அக்கறை செலுத்தப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியாகக் கடமையாற்றிய ஹனா சிங்கர் ஹம்டியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய வதிவிடப்பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸினால் மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இலங்கையில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் அவர், கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தைப் பார்வையிட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியிட்டுள்ள காணொளியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘நான் இப்போது சுதந்திர சதுக்கத்தில் இருக்கின்றேன். இது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையை வெளிக்காட்டும் வகையில் மாத்திரமன்றி, இலங்கையர்கள் அனைவரும் ஒருமித்துச் செயற்பட்டால் எவற்றைச் சாதிக்கலாம் என்பதற்கான அடையாளமாகவும் விளங்குகின்றது’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி என்ற ரீதியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ள வரவேற்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொவிட் – 19 வைரஸ் பரவலாலும், பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும் இலங்கை மக்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ், தற்போது பூகோளக் காரணிகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்றனவும் இலங்கை மக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்நெருக்கடிகளிலிருந்து இலங்கையும், இலங்கை மக்களும் மீட்சியடைவதற்குத் அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் முனைப்புடனும், வலுவான நம்பிக்கையுடனும் தனது பணிகளை ஆரம்பிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், நாடு என்ற ரீதியில் நிலைபேறான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்திய முதலீடுகளை ஊக்குவிப்பதில் அதிக அக்கறை காண்பிக்கப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் பிரான்சின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தவும்  ஒரு “வரலாற்று” பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த ஐந்து நாள் பயணம் ஜூலை 24 அன்று பிரான்ஸ்  தீவுக்கூட்டமான நியூ கலிடோனியாவில் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து வனுவாட்டு மற்றும் பப்புவா நியூ கினியாவில் நிறைவடையும்.

அதன் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜூன் மாதம் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டின் அரச தலைவர் அமர்வின் போது ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடைசியாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்த நாடுகளின் குழுவில் பிரான்ஸும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் சுதேசிய விவகார அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்பு

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.