சனல் ஐ அலைவரிசையை லைக்கா நிறுவனத்துக்கு வழங்குவதை நிராகரித்தது அமைச்சரவை

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ‘சனல் ஐ’ அலைவரிசையை ‘லைக்கா குழுமத்திற்கு’ (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை நிராகரித்துள்ளது.

அமைச்சரவை நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.

வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சபையில் சமர்ப்பித்துள்ளார்.

ஜூலை மாத இறுதியில் லைக்கா குழுமத்திற்கு ‘சனல் ஐ’ வழங்க இரு தரப்பினரும் இணங்கியிருந்த போதிலும், ரூபவாஹினியின் பணிப்பாளர் சபை அல்லது ஊடக அமைச்சின் முன் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது.

எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனல் ஐ தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதால் தனியார் முதலீட்டாளருக்கு மாற்றுவதற்கு முன்னாள் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை முன்மொழிந்திருந்தது. அதன்படி, இது தொடர்பான டெண்டர் அறிவிப்பு பெப்ரவரி 03, 2023 அன்று வெளியிடப்பட்டது, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வது பெப்ரவரி 17 அன்று முடிவடைந்தது. உரிய திகதியில், நாட்டிலுள்ள 2 நன்கு அறியப்பட்ட தகவல் தொடர்பு முகவர் நிறுவனங்கள் மட்டுமே அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன.

ஆனால், ஊடகத்துறை அமைச்சரால் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அண்மையில் ‘சனல் ஐ’ சனலை இரண்டு நிறுவனங்களுக்கும் தெரிவிக்காமல் ‘லைக்கா’ நிறுவனத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்திருந்தார்.

வீதிப் பெயர்ப்பலகையில் தவறான சிங்கள மொழி அர்த்தம்; பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்புக் கோருகிறார் நிரோஷ்

தனது பதவிக்காலத்தில் இடப்பட்ட பெயர்ப்பலகையில் சிங்கள மொழி தவறாக இடம்பெற்றமையினால் அப் பிழையான அர்த்தத்தினால் சிங்கள சகோதரர்களுக்கு ஏற்பட்ட  பாதிப்புக்களுக்கு தான முன்வந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதுடன் உரிய திருத்தத்தினை மேற்கொள்ளவும் பிரதேச சபை செயலாளரிடம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எம்மால் புனரமைக்கப்பட்ட கோப்பாய் பகவான் பாதைக்கான வீதியின் பெயர்ப்பலகையில் காணப்பட்ட சிங்கள மொழியில் தவறு காரணமாக அது பிழையான அர்த்தத்தினை சிங்கள மொழியில் வெளிப்படுத்தியது. இது சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டிருந்ததுடன் சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பலரும் முகப்புத்தகத்தில் கவலை தெரிவித்திருந்தனர். இதனை சமூக செயற்பாட் விஸ்வநாதன் ஆதித்தன் எனது கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதனையடுத்து தான் சிங்கள மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக விமர்சனத்தில் உண்மையுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளேன். எனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் பிரதேச சபை செயலாளர் இராமலிங்கம் பகிரதனின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன் பிரதேச சபை நடவடிக்கையினை எடுப்பதற்கு வசதியாக முதற்கட்ட கருமமாக அங்கு காணப்பட்ட தவறான அர்த்தத்தில் காணப்பட்ட சிங்கள பதத்தினை மறைத்துள்ளதுடன் இயன்ற விரைவில் குறித்த பெயர்ப்பலகை பிரதேச சபையால் மாற்றியமைக்கப்படவுள்ளது.
இவ் பெயர்ப்பலகை எனது பதவிக்காலத்தில் இடப்பட்டதன் அடிப்படையில் இதனால் பாதிக்கப்பட்ட சகோதர மொழி மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கின்றேன். நாம் தமிழராக இந் நாட்டில்; வரலாற்று ரீதியில் எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்டது என்பதையும் ஒடுக்கப்படுகின்றது என்பதையும் நான் நன்கு அறிவேன். இன்றும் நாட்டில் தமிழ் மொழி எந்தளவு தூரம் அரச கரும மொழிச் சட்டங்களுக்கு அமைய பரிபாலிக்கப்படவில்லை என்பதையும் எமது மொழி பல இடங்களில் துசணமாகக் கூட அர்த்தப்படுத்தல் இடம்பெற்றுள்ளதை கண்டு அவற்றுக்கு எதிராக நான் செயற்பட்டும் இருக்கின்றேன்.

இந் நிலையில் விமர்சனங்களை முன்வைப்போரின் ஆதங்கத்தினை மதிக்கின்றேன்.  எமது பதவிக் காலத்தில் இடப்பட்ட பகவான் பாதைக்காக பெயர்ப்பலகையில் காணப்பட்ட பதமும் தவறான சிங்கள அர்த்தப்படுத்தலுக்கே உரியது என்பதை இன்று தெரிந்து கொண்டேன்.  கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மோலாக பகிரங்க வெளியிலும் இப் பெயர்ப்பலகை காணப்பட்டுள்ளது. இது வருந்தத்தக்கது.

இதுபற்றிய தவறு சுட்டிக்காட்டப்பட்டவுடன் அரச உத்தியோகத்தார்கள் செயற்பட்டுள்ளார்கள். எமது மொழி பயன்பாட்டுத் தவறு காரணமாக இவ் விடயத்தில் பாதிக்கப்படும் ஒவ்வொரு சிங்கள சகோதரர்களிடத்திலும் நான் மன்னிப்புக்கோருகின்றேன். இதேவேளை வடக்குக் கிழக்கிற்கு வெளியே தமிழ் மொழி அழுலாக்கம் மற்றும் தவறான அர்த்தப்படுத்தல்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை அவசியம் என்பதையும் அதற்கெதிராக போராடுவதற்கும் முற்போக்காளர்களை  வலியுறுத்துகின்றேன்.

மேர்வின் சில்வா மனநோயாளியா?சட்டவாட்சி இல்லையா? ஐனாதிபதியின் நடவடிக்கை என்ன? – கேள்வியெழுப்பிய சபா குகதாஸ்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஒரு நீண்டநாள் மனநோயாளியா? அல்லது தன்னை சிங்கள மக்கள் பெருமையாக நினைப்பார்கள் என நினைத்து எல்லை மீறிய நாகரிகமற்ற வார்த்தைகளால் உளறி வருகிறாரா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு-கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கைவைப்போரின் தலையை எடுப்பேன் என அண்மையில் களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா  எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் அவரது உரைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  மேர்வின் சில்வாவின் உரை தொடர்பில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா  ஒரு கூட்டத்தில் பேசும் போது பல விடையங்களை பேசினாலும் வடக்கு  கிழக்கு தமிழர்கள் தொடர்பில் அவர் பேசியது அடிப்படை மனிதவுரிமை மீறல் மாத்திரமல்ல சட்டத்தை தன்னுடைய கையில் எடுத்துள்ளார்.  அதாவது வடகிழக்கில் தமிழர்கள் விகாரைகளில் கை வைத்தால் அவர்களது தலையை களணிக்கு கொண்டு வருவேன் என ஊளையிட்டுள்ளார்.

இதற்கு முன்னைய காலத்தில் முன்னாள் மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை அம்மையாரை திருமணம் செய்வதாக வாய்கிழிய கத்தினார். அதன் பின்னர் முன்னேஸ்வரம் ஆலய வேள்வியை தடுப்பதாக பிதட்டினார். இறுதியில் மன்னிப்பு கேட்டார் தற்போது தமிழரின்  தலையை எடுக்கிறாராம்.

உண்மையான சட்டவாட்சி நடைபெறுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டுமாக இருந்தால் உடனடியாக சட்ட நடவடிக்கையை எடுத்து மனிதவுரிமைகளை பாதுகாக்க வேண்டும்  இல்லாவிட்டால்  மேர்வின் சில்வாவின் கருத்தை ஆட்சியாரின் மறைமுக சர்வாதிகாரமாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களை இனவாதிகளையும் மனநோயாளிகளையும் வைத்து கிள்ளுக்கீரையாக பாவிக்க நினைத்தால் நாடு மீண்டும் மிகப் பெரும் அதள பாளத்தில் எதிர்காலத்தில் செல்லும் என்பதை தென்னிலங்கை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழரின் தலை பற்றிப் பேசும் மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்ததே! – மனோ கணேசன்

“தமிழரின் தலையைக் கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்குத் தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தைத் திருடர்கள், தரகுப் பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்தக் குடும்பத்துடனேயே மேர்வின் சில்வா குடும்பம் நடத்தினார் என்பதும் நாடறிந்த சங்கதி. ஒருவேளை அத்தகைய திருட்டுத் தரகுப் பணம் பெரும் பிரச்சினையால் ராஜபக்சர்களுடன் நடத்திய குடும்பம் பிரிந்ததோ என்ற கேள்வியும் எப்போதும் இந்நாட்டு மக்கள் மனங்களில் இருக்கும் சங்கதி.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“எல்லாவற்றையும் மிஞ்சிய உலக மகா கேலிக்கூத்து என்னெவென்றால் உலகத்துக்கு அஹிம்சையைப் போதித்த போதிசத்துவர் பெயரில் இவர் தமிழர்களின் தலையை வெட்டுவாராம். இவரைப் போன்றவர்களிடமிருந்து பெளத்தைப் போதிசத்துவர்தான் மீண்டும் பிறந்து வந்து காப்பாற்ற வேண்டும்” என்றும் மனோ எம்.பி. குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

“முன்னையை ராஜபக்ச ஆட்சி காலத்தில், ஊடகவியலாளர்களின் கால்களை உடைப்பேன் என்றும் இந்த மேர்வின் சில்வா சொன்னார். அப்புறம் அரச ரூபவாஹிணிக் கூட்டுத்தாபனத்துக்குச் சென்று தன் தலையையே உடைத்துக்கொண்டு வந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு சிங்கள மக்களாலேயே அரசியலில் இருந்து விரட்டப்பட்டார்.

நாட்டில் விகாரைகளையோ, கோயில்களையோ, பள்ளிகளையோ, தேவாலயங்களையோ கட்டுவிப்பதில், பூஜைகளைச் செய்வதில் இடைஞ்சல்கள் ஏற்பட்டால், அதைச் சட்டப்படி அணுக வேண்டும். அந்தச் சட்டமும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

தமிழர் தலைகளைக் கொய்து வருவேன் என்ற இப்படி தலை வெட்டும் காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. இவரைப் பாரதூரமானவராக எடுக்கத் தேவையில்லை. ஆனால், இவரது கருத்து பாரதூரமானது. நாட்டில் இன மத குரோதத்தை உருவாக்கும் கருத்து. இவருக்கு எதிராகச் சட்டம் பாய வேண்டும். அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இது பற்றி தங்கள் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் புகார் செய்ய வேண்டும்.” – என்றார்.

கிளிநொச்சி மாணவி காலை உணவு உண்ணாமையால் ஜப்பானிய தூதுவர் முன் மயங்கி விழுந்தார்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 02 ஆ.தா.க பாடசலைக்கு ஜப்பானிய மக்களின் நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத்தை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு வருகை தந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுசி கிடாக்கியை வரவேற்கும் நிகழ்விற்காக காலை உணவு உட்கொள்ளாது வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்த பாண்ட் அணி மாணவி தூதுவருக்கு முன்னால் மயங்கி வீழ்ந்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடும் வெயில் மற்றும் காலை உணவு உட்கொள்ளாத நிலையில் பாண்ட் இசையுடன் ஜப்பானிய தூதுவரை அழைத்துவருகின்ற போதே மாணவி மயங்கி வீழ்ந்துள்ளார்.

மயங்கி வீழ்ந்த மாணவியை உடனடியாக ஆசிரியர்கள் குறித்த இடத்திலிருந்து தூக்கிச் சென்றுவிட்டனர்.

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.

செஞ்சோலை வளாகம்

செஞ்சோலையில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் இன்று (14) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையிலான இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தோடு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம்

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலின்போது படுகொலை செய்யப்பட்ட மூன்று சகோதரிகளின் தாயொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

 

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (14) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் /- வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுச்சுடர் ஏற்றி, உயிரிழந்த மாணவிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

முல்லைத்தீவு – வள்ளிபுனம், செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் 2006 ஆம் ஆண்டு இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று(14) மதியம் 12 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

 

இந்திய ஆதார் அட்டையை ஒத்த டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இந்தியாவின் நன்கொடையின் கீழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எனும் விசேட டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கும் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தமைலையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற சுயதொழிலாளர்கள் அமைப்பின் 1,200 பேருக்கு ஐக்கிய தேசிய கட்சி அங்கத்துவம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தியாவின் நன்கொடையின் கீழ் எமது நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

விசேட டிஜிட்டல் அடையாள அட்டை (Unique Digital Identity) தயாரிக்கும் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைக்காக 450 மில்லியன் இந்திய ரூபா இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோப்பால் பக்லே வழங்கி இருக்கிறார்.

இந்த வேலைத்திட்டத்துக்காக உலகில் உள்ள தகவல் தொழிநுட்பத்தின் பிரதான நிறுவனங்கள் பல எமது நாட்டுக்கு அதுதொடர்பான அறிவை இலவசமாக வழங்கி இருப்பதுடன், அதில் பில்கேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனமான பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் மன்றங்களும் உள்ளடங்குகின்றன.

இந்தியா தற்போது டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை அந்த நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அதன் மாதிரி படிவத்துக்கமையவே எமது நாட்டு மக்களுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை விநியோகிக்க இருக்கிறது.

ஒரு நபரின் உயிரியல் தகவல் (இரத்த வகை முதலிய தகவல்கள்) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவருக்கான தனி இணையத்தள கணக்கில் சேமிக்கப்படும். குறி்த்த நபரின் அனுமதியுடன், வங்கிப் பரிவர்த்தனைகள் அல்லது பிற நிறுவனத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தத் தகவல்களை அனுப்பும் வசதியும் இந்த புதிய அடையாள அட்டையுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

நபரொருவர் இந்த வழியில், தனது கடமை தேவையை மேற்கொள்வதற்காக குறித்த நிறுவனத்துக்கு செல்லாமல் இணையத்தளம் மூலம் மேற்கொள்ள முடியுமான வசதி கிடைக்கிறது.

முழு நாட்டையும் ஈ வலயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனைக்கமைய இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கபடுவதுடன் இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணையில் இடம்பெறும் எதிர்வரும் வருடம் இறுதியாகும்போது முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றார்.

பொலிஸாரிடம் நம்பிக்கை இல்லை; இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி மக்கள் போராட்டம்

பொலிஸார் மீது நம்பிக்கை இல்லாததால், தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்று திங்கட்கிழமை (14) காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாார் மீது நம்பிக்கை இல்லை. பொலிஸார் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ்த் தரப்புக்கள் சரியான பொறிமுறையை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும்

தற்போது எம் தாயகமான வட-கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் மிக வேகமாக தினம் தினம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இதனை எதிர்கொள்ள சரியான பொறிமுறை ஒன்று அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து மேற்கொள்வது அவசியமானது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் பல்கலைக்கழக சமூகத்தினது பங்களிப்பு புலமைசார் தளத்தில் அத்தியாவசியமானது அதே போன்று சட்டரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ள சட்டவாளர்களின் பங்களிப்பு இப்போது போன்று தொடர்ந்து கிடைப்பதுடன் அது அனைத்து பிராந்திய மட்டத்திலும் ஒருங்கிணைத்த நிபுணத்துவத்துடன் இருப்பது மேலும் பலம் சேர்க்கும்.

அத்துடன் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் பல்கலை உள்ளிட்ட உயர் கல்வி மாணவர்கள் மேலும் வீச்சாக போராட்டங்களை மக்கள் சார்ந்தாக ஒழுங்கமைக்க வேண்டும்.

அரசியலாளர்கள் தொடர் அழுத்தத்தை அரசுக்கு வழங்குவதுடன் பாராளுமன்றை புறக்கணித்தல் உட்பட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தயாராக வேண்டும்.

மேலும் பன்னாட்டு மற்றும் இந்திய அரசின் கவனத்தை மேலும் ஈர்த்து இந்த பாரிய பௌத்த மேலாண்மையை திணிக்கும் பூர்வீக தமிழர்களின் சிவ வழிபாட்டு இடங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக எம்முள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து முன்வருவோம்.

அமைப்புசார் நிலையில் இயங்கும் நாம் அனைவரும் எம் அமைப்புக்ளின் தனித்துவங்களை பேணும் அதே நேரம் எம் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக இருப்பை இத்தீவில் நிலைநிறுத்தவதற்காக ஒருங்கிணைந்த கட்டமைப்பாக செயற்பட இந்த தீர்க்கமான தருணத்தில் அழைப்பு விடுகின்றோம்.

அதே நேரம் இந்த பிரச்சினையை இதயசுத்தியோடு அணுகி அரசு தீர்க்க தவறின் இந்த தீவில் இனங்களிற்கிடையே சமாதான சகவாழ்வு தொடர்ந்து கேள்விகுறியாகி நாட்டின் எதிர்காலம் அதலபாதாளத்திற்கு செல்லும் என்பதை சுட்டிகாட்டுகின்றோம்

தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என பகிரங்கமாக கூறும் அளவிற்கு வந்துள்ள அரசியலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதும் தமிழரின் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக மிக மோசமான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

இருப்பினும் இவற்றை செய்ய தவறின் தமிழர் நாம் தொடர் சாத்வீக போராட்டங்களிற்கும் ஒத்துழையாமை இயக்க முன்னெடுப்புகளிற்கும் தள்ளப்படுவோம் என இந்த சந்தரப்பத்தில் அரசிற்கு ஆழமாக வலியுறுத்துகின்றோம்.

வடக்கு,கிழக்கில் விகாரைகள் மீது கைவைப்பவர்களின் தலையை எடுத்துக் கொண்டே களனிக்கு வருவேன் – மேர்வின் சூளுரை

வடக்கு-கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கை வைப்போரின் தலையை எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேலும் கூறுகையில்,“ யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள், எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர். கிழக்கில் உள்ளவர்கள் எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.தெற்கிலுள்ளவர்கள் எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.

இங்கு பகுதி பகுதியாக ஒன்றும் இல்லை.இது எமது தாய்நாடு.அதற்கான உறுதிப்பத்திரம் எம்மிடமே உள்ளது. நீங்கள் விரும்பினால் எங்களுடன் சமாதானமாக நல்லிணக்கத்துடன் வாழ முடியும்.

மேலும் வடக்கிலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். பிரபாகரனின் பகையை வைத்துக்கொள்ள வேண்டாம். பிரபாகரன் ஆட்கொலை செய்தார். இந்த நாட்டின் இராணுவத்தினர், பொலிஸார் கொன்று குவித்தார். அவர்களின் குடும்பங்கள் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளது. அந்த பகை இன்றும் உள்ளது. இன்றும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதிக்கு நான் மிகவும் மரியாதையுடன் ஒன்றைக் கூறுகின்றேன். இந்த நாட்டிலுள்ள வளங்களை புலம்பெயர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், வீதிக்கு இறங்குங்கள் என களனி மக்களுக்கு கூறுகின்றேன்.

மேலும் இந்த கூட்டத்தின் பின்னர் நான் வடக்கு கிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகள் மீது கை வைக்க வந்தால், நீங்கள் மகாநாயக்கர்கள் மீது கை வைக்க வந்தால், நான் வெறுமனே களனிக்கு வர மாட்டேன். உங்களின் தலையை எடுத்துக்கொண்டு தான், களனிக்கு மீண்டும் வருவேன். எனக்கு பணியாற்றுவதற்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் மீண்டும் நாட்டின் ஜனாதிபதி ஆக வேண்டுமாயின், ராஜபக்ச திருடர்களை பிடியுங்கள், இந்த நாட்டின் திருடர்கள், தரகு பெறுவோர் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இடங்களில் 6 வீதமானவை, பசில் ராஜபக்ச என்ற தரகுதாரர், யாருக்கு கொடுத்தார். இன்று மக்களுக்கு மின்சாரம் இல்லை. விவசாயம் அழிவடைந்துள்ளது, குடிநீர் கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன.

இதேவேளை நுவரெலியாவில் மகிந்த ராஜபக்ச, கிரிக்கெட் விளையாடுகின்றார். ராஜபக்ச குடும்பத்தினர் கிரிக்கெட் விளையாடுகின்றனர். கிரிக்கெட் விளையாடும் நேரமா இது? 13ஐ வழங்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். சிலர் அதனை வேண்டாம் என்கின்றனர்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோருக்கு நான் ஒன்றை கூறுகின்றேன். நாம் ஜனாதிபதி தேர்தல் முறையை மாற்றி அமைப்போம் என உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வாக்குறுதி எடுங்கள்.”- என கூறியுள்ளார்.