மலையகம் 200 நடைப்பவனி இன்றுடன் நிறைவு

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று நாலந்தாவிலிருந்து புறப்பட்டு மாத்தளையை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளையை சென்றடையவுள்ள குறித்த நடைபவணியின் இறுதி நிகழ்வுகள் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த நடைபவணியின் கோரிக்கைகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் தேவாலயத்தில் ஆரம்பமானது.

அன்றைய தினம் மலையகம் 200இன் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூபிக்கு மக்கள் மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அடுத்த நாள் 29ஆம் திகதி தலைமன்னார் தேவாலய வளாகத்திலிருந்து குறித்த நடைபயணம் ஆரம்பமானது.

இதேவேளை தழிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் நுவரெலியா தொடக்கம் தலவாக்கலை வரையிலும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை வரையிலும் நடைபவணியொன்று இடம்பெற்று வருகின்றது.

மலையகம் 200 எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த நடைபவணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெளத்த மயமாக்கலை தடுத்து நிறுத்திய ஆளுநருக்கு எதிராக பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை நிலாவெளி வீதியில் இலுப்பைக்குளத்தில் தமிழ் மக்கள் வாழுமிடத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பிக்குகள் சிலர் இன்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை புல்மோட்டை வீதியின் ஒரு பாதையை மறித்து பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பொலிஸார் பாதையின் ஒரு பகுதியின் ஊடாக போக்குவரத்தை ஒழுங்கமைத்தனர்.

விகாரை அமைக்க அத்திவாரமிடப்பட்ட பகுதிக்கு சென்ற பிக்குகள் அங்கு தற்போது புதிதாக நடப்பட்ட அரச மரக்கன்றுக்கு முன்பாக சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டு, பின்னர் வீதிக்கு வந்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம், புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறித்த பகுதியில் எது வித விகாரையும் இருக்கவில்லை என அக்கிராமத்தில் உள்ள வயோதிப பெண்ணொருவர் உட்பட சிலர் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இதனையஅடுத்து. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களுக்கும், பௌத்த மதகுரு ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம் பெற்ற போதிலும் பொலிஸாரினால் சமரசம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மொரவெவ மஹா திபுல்வெவ ஸ்ரீ இந்திரராமதிபதி பொல்ஹெங்கொட உபரதன தேரர், இந்த இடத்தில் விகாரை அமைப்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆளுநர் செந்தில் தொண்டமான் மகாசங்கத்தை வீதிக்கு இழுத்தார்.இப்போது இப்படி என்றால் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுமாயின் பிக்குகள் தமது சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.

இரா.சம்பந்தனின் அறிவுறுத்தலின் பிரகாரமே ஆளுனர் இந்த உத்தரவை பிறப்பித்ததாக பிக்குகள் குமுறினர்.

கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க சட்டவிரோத குடியேற்றங்கள் இடித்து அகற்றப்பட்டன

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் நாவலடி பிரதான கொழும்பு வீதியின் அருகில் உள்ள காணிகளைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலிகள் மற்றும் தற்காலிக கட்டடங்களை கனரக இயந்திர சாதனத்துடன் அகற்றும் பணியினை பொலிசாரின் பாதுகாப்புடன் மகாவலி அமைச்சின் அதிகாரிகள் இன்று (11) மேற்கொண்டனர்.

இதன்போது பொலிசாருக்கும் காணிகளை அமைத்தோருக்குமிடையில் கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. நிலமைகளை கட்டுப்படுவதற்கு பெருமளவு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நாவலடி- கொழும்பு வீதியில் சட்டவிரோதமான முறையில் மகாவலி அமைச்சுக்குரிய சுமார் 28 ஏக்கர் அளவுடைய காணிகளை அபகரித்து வேலிகளை அமைத்து தற்காலிக குடியிருப்புக்களை அமைக்கும் நடவடிக்கையில் ஓட்டமாவடியைச் சேர்ந்தோர் சிலர் கடந்த ஒரு மாத காலமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனை தடுக்கும் நடவடிக்கையில் பிரதேச செயலக மற்றும் வன இலாகா திணைக்களங்களுக்கு காணி அதிகாரம் இல்லை என்ற காரணம் தெரிவித்து நிர்வாக நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 07.08.2023.ஆம் திகதியன்று பிரதேசத்திற்கு வந்த மகாவலி அமைச்சின் அதிகாரிகள் குறித்த இடத்தில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட வேலிகள் மற்றும் தற்காலிகக் கட்டடங்களை அகற்றும்படி மகாவலி அமைச்சின் அதிகாரிகள் பொலிசாரின் உதவியுடன் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

அகற்றுவதற்கான கால அவகாசம் சம்பந்தப்பட்டோரினால் அன்றைய தினம் அதிகாரிகளிடம் வேண்டப்பட்டிருந்தது.

வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த நிலையில் அவர்கள் அகற்றாததினால் மகாவலி அமைச்சிற்குரிய காணி என்ற காரணத்தினால் இன்று அவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் 5ஆம் திகதியன்று, கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்துக்கு கொண்டு சென்றருந்தார். இந்த சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றும்படி ஆளுனர் உடனடியாக உத்தரவிட்டிருந்தார்.

புத்தூரில் குமரகுருபரன் விளையாட்டரங்கு திறந்துவைக்கப்பட்டது

புத்தூர் ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் விளையாட்டரங்க திறப்புவிழா நேற்று புதன்கிழமை (09.08.2023) மலை குமரகுருபரன் மைதானத்தில் வெகு சிறப்புற நடைபெற்றது.

ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் கனடா கிளையின் நிதிப் பங்களிப்பு முயற்சியின் வாயிலாகக் காணி கொள்வனவு செய்யப்பட்டு அக்காணியில் கந்தர் ஐயாத்துரை மற்றும் ஐயாத்துரை அன்னப்பிள்ளை ஆகியோரின் ஞாபகார்த்தமாக இவ் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு அவை உத்தியோகபூர்வமாக சன சமூகநிலையம் மற்றும் விளையாட்டுக் கழகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் விருந்தினர் வரிசையில் – பிரதம விருந்தினராக ஓய்வுநிலை வைத்திய அதிகாரி திருமதி இரவீந்திர வசந்தமாலா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் அதிபர் சின்னத்தம்பி திரிகரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும்,வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ், யாழ் போதனா வைத்தியசலையின் வைத்திய கலாநிதி இராசரத்தினம் துஷிந்தன், பொது சுகாதார பரிசோதகர் அனுதர்சன் ஆகியோரும் புலம்பெயர் உறவுகளில் இருந்து புத்தூர் குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் கனடா கிளை சார்பாக அதன் தலைவர் செல்லப்பா சிவராஜா மற்றும் நிர்வாகக் குழுசார்பாக செல்லையா சோதிநாதன், இராதுரை சிவாசம்பு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சனசமூக நிலையத்தின் புதிய விளையாட்டரங்கில் கலை நிகழ்வுகள் மைதான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் மஹிந்த 13 பிளஸ் நிலைப்பாட்டிலேயே உள்ளார் – பிரசன்ன ரணதுங்க

அதிகார பகிர்வு விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டார். 13 ஆவது திருத்தம் குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகள் சர்வகட்சி மாநாட்டில் முன்வைப்போம் என ஆளும் கட்சி பிரதம கொறடவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் பின்னர் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மாகாண சபைகளில் முதலமைச்சர்களாக பணியாற்றியவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலேயே இருக்கின்றோம்.

அவர் எப்போதும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாகாண சபை முதலமைச்சர்களுக்கு அமைச்சரவைக்கு வந்து அமர்வதற்கான வாய்ப்பை அவர் வழங்கியிருந்தார்.

அதிகார பகிர்வு விவகாரத்தில் மொட்டு கட்சியில் பிளவு என்று குறிப்பிட்டாலும் நாங்கள் அதிகார பகிர்வுக்காக கதைக்கின்றோம். 13 பிளஸ் தொடர்பிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ கதைத்திருந்தார். இதில் மறைக்க எதுவும் கிடையாது. ஜனாதிபதி தலைமையில் நடக்கும் சர்வகட்சி கூட்டத்தில் எங்கள் நிலைப்பாடுகளை முன்வைப்போம் மஹிந்த ராஜபக்‌ஷவின் அனுமதியுடனேயே இதனை கூறுகின்றேன் என்றார்.

13ஆவது அரசியலமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணை இனமோதலுக்கு வழிவகுக்கும் – அதுரெலியே ரத்ன தேரர்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைகள் நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களுக்கான வழியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதற்கு நாங்கள் விருப்பம் இல்லை. அதனால் சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சியின் சுயாதீன அணியை சேர்ந்த அதுரெலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இந்த சபையில் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சுயநினைவுடன் பதிலளிப்பர் என்றே நினைக்கின்றேன். அந்தக் கட்சியினரின் கருத்துக்களுடனே நாங்கள் இருந்தோம். நாங்கள் கோத்தாபய ராஜபக்‌ஷவை ஆட்சிக்கு கொண்டு வர செயற்பட்டவர்கள். தற்போது ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கும் விடயங்களின் பாரதூர நிலைமையை சபையில் உள்ளவர்கள் புரிந்துகொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

நாட்டில் பொதுப் பிரச்சினைகள் உள்ளன. நிதி, கலாசார பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்ப்பதற்கான இன விவகாரத்தை எடுக்க வேண்டாம். வடக்கிற்கான அதிகாரம், தெற்கிற்கான அதிகாரம், கிழக்கிற்கான அதிகாரம், முஸ்லிம்களுக்கு அதிகாரம் அல்ல. மில்லியன் கணக்கில் முதலீடுகளை மாகாண சபைகளுக்கு கொண்டு வர முடியும் என்று கூறுகின்றார்.

இதன் ஆபத்துக்களை இந்த சபை சிந்திக்க வேண்டும். ஏதேனும் மாகாணத்திற்கென அவ்வாறு முதலீட்டை கொண்டு வர முடியாது. சீனாவை உதாரணமாக கூறியுள்ளீர்கள். அது தனி கட்சி நாடு. அங்குள்ள நிலைமை வேறு. அதனை இங்கே ஒப்பிட முடியாது.

இப்போது மீண்டும் மக்கள் அலை ஏற்பட்டு, மோதல் நிலைமைகளுக்கு நாட்டை கொண்டு செல்ல முடியாது. மாகாண சபை முறைக்கு இப்போதும் நாங்கள் எதிர்ப்பு. ஆனால் மாகாண சபை முறைமையை நீக்குமாறு கோரவில்லை. அருகிலுள்ள இந்தியாவை கோபித்துக்கொண்டு மீண்டும் மோதல்களுக்கு செல்வதற்கு நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய சூழ்நிலை 50 வீதம் உள்ளது. மிகுதி 50 வீதத்தை நாடு முழுவதும் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டாலே தீர்க்க முடியும். இதனால் இந்த பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.

வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிட போகின்றதா? 13 ஆவது திருத்தத்தை வழங்கியதும் யுத்தம் முடிந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் யுத்தம் நடைபெற்றது. நாங்கள் மீண்டும் இனவாத போராட்டத்திற்கு செல்ல தயாராக இல்லை. இதனால் நாட்டு மக்களின் கோபத்தை உண்டாக்க வேண்டாம். நீங்கள் செய்யும் இந்த செயற்பாடு மீண்டும் இனவாத மோதல்களுக்கான பாதையையே ஏற்படுத்தும். இதற்கு நாங்கள் விருப்பமில்லை.

சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவாருங்கள்.அதற்காக நாங்கள் வருவோம். முதலில் ஜனநாயகத்துக்காக தேர்தலை நடத்துங்கள் என்றார்.

காணி அதிகாரம் வழங்கப்பட்டால் வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும் – சரத் வீரசேகர

பௌத்த மரபுரிமைகளுக்கு எதிர்மறையாக தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் செயற்படும் போது 13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை.

காணி அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும்.

மாகாண சபை முறைமை வெள்ளையானை போன்றது. புதிய அரசியலமைப்புக்கே மக்களாணை உண்டு, ஆகவே மாகாண சபையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகார பகிர்வு குறித்து ஜனாதிபதி புதன்கிழமை (9) விசேட உரையாற்றினார். நான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை பார்வையிட்டுள்ளேன்.

பௌத்த தொல்பொருள் மரபுரிமை வாய்ந்த வவுனியாவில் வெடுக்குநாறி பகுதியில் உள்ள பௌத்த மரபுரிமை சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காணி அதிகாரம் வழங்காத போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுரிமைகள் இவ்வாறு அழிக்கப்படும் போது காணி அதிகாரத்தை வழங்கினால் என்ன நேரிடும் என்பது கேள்விக்கிடமாகவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த மரபுரிமை சின்னங்கள் காணப்படுகின்றன. அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே எங்களின் உரிமை இவை சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் சொந்தமானது.

பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு எதிர்மறையாக செயற்படும் அடிப்படைவாத தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றி பேசுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நாடு பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரே அதிகார பகிர்வை கோருகிறார்கள்.

விடுதலை புலிகளின் ஆயுதமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது. 30 வருடகால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாததை தற்போது தட்டில் வைத்து வழங்க முயற்சிப்பது முறையற்றது. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் பேர் உயிர் நீத்தார்கள், 14 ஆயிரத்துக்கும் அதிகமான படை வீரர்கள் தமது உடல் அங்கங்களை அர்ப்பணித்தார்கள்.

மாகாண சபைகள் செயற்பட்ட போது 10 கல்வி அமைச்சர்கள்,10 விவசாய அமைச்சர்கள் என பல அமைச்சர்கள் இருந்தார்கள். நாட்டில் தற்போது கல்வி,சுகாதாரம்,விவசாயம் உள்ளிட்ட சேவைகள் முன்னேற்றமடைந்துள்ளதா இல்லை, மாகாண சபை முறைமை வெள்ளை யானை போலவே உள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே மக்களாணை உள்ளது. ஆகவே மாகாண சபை முறைமையை நீக்கி புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றம் மூலமே தீர்வைக் காண முடியும் – மிலிந்த மொரகொட

இலங்கை ஜனாதிபதியின் சமீபத்தைய இந்திய விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர்மிலிந் த மொராகொட இலங்கை இந்தியாவின் பாதுகாப்பை தனது பாதுகாப்பாக கருதுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின்போது பூகோள அரசியல் மற்றும் மூலோபாய அரசியல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என மிலிந்தமொராகொட குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பே எங்களின் பாதுகாப்பு எங்கள் மத்தியில் நீண்டகால நாகரீக உறவுகள் காணப்படுகின்றன நாங்கள் ஒரே இரத்தத்தை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ள அவர் இரு நாடுகளுக்கும் இடையில் அதிக தொடர்பாடல்களும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன அவை இலங்கைஜனாதிபதியின் விஜயத்தினால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து இந்திய பிரதமரின் கருத்து குறித்து டைம்ஸ்ஒவ் இந்தியாவிற்கு கருத்து தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட 13 வது திருத்தம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து எந்த சந்தேகமும் இல்லை,எனினும் இதற்கு நாடாளுமன்றம் மூலமே தீர்வை காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைநல்லிணக்கம் குறித்த ஆர்வத்துடன் உள்ளது ஜனாதிபதி தொடர்புபட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் இலங்கை ஆழமாக துருவமயப்படுத்தப்பட்டுள்ள சமூகம் நாடாளுமன்றம் மூலமே தீர்வை காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தான் என்ன செய்ய முயல்கின்றார் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளார், உண்மை ஆணைக்குழுவை அமைப்பதன் மூலம் அவர் அதனை செய்ய முயல்கின்றார்,எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு சிங்கள சிறுபான்மையினர் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – விமல் வீரவன்ச

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினமாக வாழும் சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்து சபையில் பேசுவது இல்லை.

தமிழ்,முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துவதை போல் சிங்களவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.

இவர் இன்றுதான் பிரச்சினைகள் தொடர்பில் ஆரம்பித்துள்ளார். ஆகவே சிங்களவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம், பிரச்சினையொன்றும் இல்லை என பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அப்பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பிரதிநிதிகளுக்கு ஏதும் பிரச்சினை இல்லையா, திஸ்ஸ விகாரை பிரச்சினை, முல்லைத்தீவு குருந்தூர் பிரச்சினை என பல பிரச்சினை காணப்படுகிறது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன அடிப்படையில் வேறுபாடு காண்பிக்காமல் சகல தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகளை ஒரு இனத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம். அது தவறு இப்பிரதேசங்களில் சிறுபான்மையினத்தவர்களாக வாழும் சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்து இந்த சபையில் எவரும் பேசுவது இல்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்களவர்களை புறக்கணிக்க வேண்டாம் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் பிரச்சினைகள் குறித்து என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் தான் இன்று விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று தான் இவர் ஆரம்பித்துள்ளார். ஆகவே சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் அதில் பிரச்சினையொன்றும் இல்லை என்றார்.

13 ஆவது திருத்தத்துக்கு ரணிலில் காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும் இல்லையேல் எதிர்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உங்களின் காலத்தில் தீர்வு காணுங்கள்.

இல்லையென்றால் எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட எதிர்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள். அவ்வாறு நிகழ்ந்தால் நீங்கள் வாழ்ந்தாலும், இறந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார்.இதனை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைகளை மீளாய்வு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். சாதக மற்றும் பாதக விடயங்களை ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை அறிவிப்போம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டு வரவில்லை நீங்கள் தான் (ஜனாதிபதியை நோக்கி) கொண்டு வந்தீர்கள்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ் காந்தியுடன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது நான் உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கோட்டை அரச மரத்தடியில் போராட்டத்தில் ஈடுபட்டோம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உங்களின் காலத்தில் (ஜனாதிபதியை நோக்கி) தீர்வு காணுங்கள்.

இல்லையென்றால் எங்களை போல் எமது பிள்ளைகள்,பேரப் பிள்ளைகளும் எதிர்காலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகலாம். அவ்வாறு இடம்பெற்றால் நீங்கள் வாழ்ந்தாலும்,இறந்தாலும் நிம்மதி இல்லாமல் போகும்.ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்.

Posted in Uncategorized