தேர்தலுக்கு நிதி இல்லையெனில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து பெறவும் – தவிசாளர் நிரோஸ்

தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்றால் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள் என , தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே தியாகராஜா நிரோஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு இலங்கையினுடைய திறை சேரியாக இருக்கலாம் அல்லது நாட்டினுடைய வருமானங்களின் அடிப்படையாக இருக்கலாம் அதற்கான செலவினங்களை ஈடு செய்வதற்கான பணம் போதாது இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் ஆணைக்குழு எடுத்து வரும் முயற்சியை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த தேர்தல் ஒத்திவைக்காமல் நடத்தப்பட வேண்டும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒரு மக்கள் ஆணையை மீளவும் பெற வேண்டிய ஒரு சூழல் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இதற்கான பணம் போதாது என்கின்ற காரணம் காட்டப்பட்டு ஒத்துழைக்கப்படுமானால் நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கு ஒரு பகிரங்கமாக விடயத்தை முன்வைக்கின்றோம்.

இது உள்ளூராட்சி மன்ற தேர்தல் என்ற காரணத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை பெறலாம். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்கள் தனியாக வருமானம் ஈட்டும் ஒரு அரச கட்டமைப்பாக இருக்கின்றன, அவ்வாறான சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு தேர்தலுக்கான செலவீனங்களை அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து பெறுவதற்கு உரிய சுற்று நிரூபம் ஊடாக முன்னெடுத்தாவது இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

ஏனெனின் தேர்தல்கள் என்பது கருத்து பெறுவதற்கும் கருத்து தெரிவிப்பதற்குமான சுதந்திரம் என்ற அடிப்படையில் ஜனநாயகத்துக்காக எங்களுடைய செலவீனங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

அதேநேரம் அதனை எங்களுடைய கௌரவ அதையும் ஏற்றுக்கொள்ளும். எங்களைப் போன்ற ஏனைய சபைகளும் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

அரசாங்கம் நிதியில்லை என்று சொல்லி தேர்தல்களை ஒத்தி வைக்குமானால் நிச்சயமாக இது ஒரு ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற செயல் என்கின்ற அடிப்படையில் சர்வதேசம் சில உதவிகளை இந்த தேர்தல்கள் நடத்துவதற்காக செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

நாளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாளை நாடு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாளை 08.02.2023 காலை 8 மணி தொடக்கம் 09.02.2023 காலை 8:00 மணி வரை இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதன் போது அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய சேவை இடம்பெறாது.

மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் மேலும் 40 வரையிலான தொழிற்சங்கங்கள் இணைந்து இப்பணிப்பு புறக்கணிப்பினை மேற்கொள்கின்றன.

தேர்தலுக்கு திறைசேரி பணம் தராவிட்டால் உயர்நீதிமன்றத்தை நாடுவோம் – தேர்தல் ஆணைக்குழு

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் உரிய பதில் அளிக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவ தெரிவித்தார்.

அரசாங்க அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் போன்றவற்றுக்கு முற்பணத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், அந்த கோரிக்கைகளுக்கு அமைய அடிப்படை செலவினங்களுக்காக திறைசேரி செயலாளரிடம் 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தேர்தலை இடைநிறுத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர், உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு தேவையான முன்பணம் பெறாவிட்டால், அறிவிக்கப்பட்ட திகதியில் வாக்குப்பதிவை நடத்த முடியாது என்றும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் அச்சகத் திணைக்களமும் 100 மில்லியன் ரூபாவை முற்பணமாக வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தற்போது 40 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் 60 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சடிக்கும் பணியை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமென திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தனியார்துறையினருக்கும் சுகாதார காப்புறுதி வழங்க சட்டத்தில் திருத்தம்

அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில், தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பிரேரணையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகவும், முன்மொழிவை செயல்படுத்துவதற்காக 1980ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை! – அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக வேண்டியும், சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்கலைக் கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு வந்துள்ளார்கள். இதற்கு வலுச் சேர்ப்பதற்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து 500 இற்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டுள்ளோம். எமது போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே திருக்கோவிலில் வைத்து எமது உறவுகளை தங்கவேலாயுதபுரத்திற்குச் செல்வதற்குப் புறப்பட்ட வேளை இருவர் முகமூடிகளை அணிந்து கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை உடைத்துவிட்டுச் சென்றனர். இதனால் சாரதி நூலிடையில் உயிர் பிழைத்துள்ளார். தற்போது நாம் தேடிக் கொண்டிருப்பது எமது உறவுகளைத்தான். நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தங்கராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தங்கராசா செல்வராணியின் தலைமையில் பேரூந்துகளில் பொதுமக்கள் தமது காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் புகைப்படங்களைத் தாங்கியவண்ணம், செவ்வாய்கிழமை (07) நண்பகல் மட்டக்களப்பை வந்தடைந்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-

எனக்கு திங்கட்கிழமை(06) நள்ளிரவு 12 மணி வரையில் 6 நீதிமன்ற உத்தரவுகள் கிடைத்துள்ளது. செவ்வாய்கிழமை(07) நீதிமன்றிற்குச் சென்றுதான் தற்போது இப்போராட்டத்திற்குச் சமூகம் கொடுத்துள்ளேன். புலனாய்வாளர்கள் எம்மை மிகவும் துன்பப்படுத்துகின்றார்கள்.

நாங்கள் தேடிக்கொண்டிருப்பது எங்கள் உறவுகளைத்தான் நாங்கள் அயுதம் ஏந்திப் போராட வரவில்லை. தடிகளைக் கொண்டு வரவில்லை, எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையே கேட்டு வருகின்றோம். எமது போராட்டம் வெற்றி பெறவேண்டும். 170 இற்கு மேற்பட்ட எமது உறவுகளை இழந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தற்போதுள்ள உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். எமக்கான நீதி இந்த போராட்டத் தொடரில் வரவேண்டும் என இதன்போது அவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் பதவி விலகல் கடிதம் ஏற்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக சார்ள்ஸ் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்!; பௌத்த பிக்குகள் யாழில் அறிவிப்பு

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர்.

தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சற்று முன்னதாக இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே

பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் இதனை அறிவித்தனர்.

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகளின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரா.சம்பந்தன் : தோல்வியின் அடையாளம் – யதீந்திரா

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி இராஜவரோதயம் சம்பந்தனை தமிழ் மக்களின் தலைவராக்கியது. அவர் தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாதவொரு நபரானார். ஈழப்போராட்ட காலத்திலும், அதற்கு முன்னரும், தமிழ் தேசிய அரசியலில் சம்பந்தனென்னும் பெயர் தீர்க்கமான பங்கு எதனையும் வகித்திருக்கவில்லை. திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர் என்பதை தவிர. இந்த பின்னணில் நோக்கினால், சம்பந்தன் ஒர் அரசியல் ஆளுமையாக செயலாற்றுவதற்கான காலமென்பது, 2009இற்கு பின்னர்தான் வாய்த்தது. இந்த அடிப்படையில், அவரது தலைமைத்துவத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருந்தது. அதாவது, தமிழ் தேசிய அரசியலானது, அதுவரையில் யாழ்ப்பாண தலைமைத்துவங்களினாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. வரலாற்றில் முதல் முதலாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தமிழ் தேசிய அரசியலுக்கு தலைமையேற்றார்.

இந்த அடிப்படையில் சம்பந்தனது தலைமைத்துவம் கவனிப்புக்குரியதாக இருந்தது. அவரது தலைமைத்துவத்திற்கு இன்னொரு வரலாற்று சிறப்புமிருந்தது. அதாவது, ஈழப் போரின் வீழ்ச்சிக்கு பின்னரான அரசியலை வழிநடத்தும் வரலாற்று பொறுப்பு அவருக்கு வாய்த்தது. முன்னாள் ஆயுத இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஓரே குடையின் கீழ் வழிநடத்துவதற்கான வாய்ப்பை பெற்ற முதல் அரசியல்வாதியும் சம்பந்தன்தான். இந்த பின்புலத்தில், அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள எவருமே பின்நிற்கவில்லை. வரலாற்றில் முதல் முதலாக, வடக்கு தலைமைகள் அனைவருமே, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்தன. இணைந்து பயணித்தன. முன்னாள் ஆயுத இயங்கங்களும் மிதவாத அரசியல் கட்சிகளும் ஒரணியாக பயணிப்பதற்கான அரசியல் சூழல் உருவாகியது. இந்த வாய்ப்பை, புதிய அரசியல் சூழலை சம்பந்தனால் ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடிந்ததா?

சம்பந்தன் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னணி செயற்பாடாளராக ஒருபோதுமே இருந்ததில்லை. அவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழியாக அரசியலுக்குள் பிரவேசித்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி, 1976இல், தனிநாட்டுக்கான வட்டுக் கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த கோசத்துடன் 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டதன் மூலம்தான், சம்பந்தன் முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றார். இதிலுள்ள சுவார்சியமான விடயம். அதன் பின்னர் மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் 2001இல்தான், சம்பந்தன் தேர்தலில் பெற்றிபெற முடிந்தது. இடைப்பட்ட காலத்தில் சம்பந்தன் எந்தவொரு தேர்தல்களிலும் வெற்றிபெறவில்லை. 1994இல், திருகோணமலையில், தங்கத்துரையே வெற்றிபெற்றிருந்தார். தோல்வியடைந்த சம்பந்தன், பதவியை விட்டுத்தருமாறு தங்கத்துரையிடம் கேட்ட கதையை, திருகோணமலையின் பழைய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அறிவார்கள். தங்கத்துரை 1997இல், சிறீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற தாக்குதலின் போது, கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது இடத்திற்கு சம்பந்தன் நியமிக்கப்பட்டார்.

ஈழ ஆயுத விடுதலைப் போராட்ட காலத்தில் சம்பந்தன் அதன் மீதான தீவிர ஆதரவாளராக ஒரு போதுமே இருந்ததில்லை. முக்கியமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை சம்பந்தன் ஒருபோதுமே ஏற்றுக்கொண்டவரல்ல. இவ்வாறானதொரு பின்னணியில்தான், சம்பந்தன் விடுதலைப் புலிகளால் இலக்குவைக்கப்பட்ட நபரானார். சந்திரிக்கா குமாரதுங்கவுடன் நெருக்கமாக இருந்த காலத்தில், சம்பந்தன் விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்ததாகவே பரவலாக பேசப்பட்டது. 2012இல், சம்பந்தன் ஆற்றிய பாராளுமன்ற உரையொன்றின் போது, அவரே இதனை குறிப்பிட்டிருக்கின்றார். 2001இல், இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களோடு வெற்றிபெற்றது. ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலமானது, விடுதலைப் புலிகள் அமைப்பை பொறுத்தவரையில், முக்கியமானதொரு திருப்புமுனைக்குரிய காலமாக இருந்தது. 2001 செப்டம்பரில், அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குலைத் தொடர்ந்து, உலக அரசியல் நிலைமைகள் சடுதியாக மாற்றமடைந்தன. பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய யுத்தத்தை அமெரிக்கா பிரகடணம் செய்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன. இதே 2001இல்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உருவானது.

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் சம்பந்தனுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இருந்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு, பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பங்குகொள்வது, அவர்களது கூட்டத்தில் பேசுவது என்பதை தவிர பிரத்தியேக முக்கியத்துவங்கள் இருக்கவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளையமைப்பாகவே செயற்பட்டிருந்தது.

2004இல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக விடுதலைப் புலிகள் அமைப்பு மாவட்டங்கள் தோறும் பணியாற்றியிருந்தது. இதன் காரணமாகவே, 2004இல், திருகோணமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறமுடிந்தது. 2005இல், இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் நோக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பு தேர்தல் பகிஸ்கரிப்பை அறிவித்திருந்தது. இந்த முடிவை அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரித்திருந்தது. உண்மையில் இதனை சம்பந்தன் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தன் எதிர்க்கவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளை விரோதித்துக்கொள்ள சம்பந்தன் விரும்பவில்லை. சம்பந்தனும் கூட்டமைப்பும் அன்றைய சூழலில் முற்றிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர் என்பதற்கு, இதனைவிடவும் வேறு சான்றுகள் தேவையில்லை.

ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியை தொடர்ந்து அரசியல் நிலைமைகள் வேகமாக மாற்றமடைந்தது. தேர்தல் பகிஸ்கரிப்பில் தொடங்கிய புலிகளின் புதிய அரசியல் நகர்வுகள், இறுதியில் அவர்களுக்கான புதைகுழியானது. இந்தப் பின்புலத்தின்தான் சம்பந்தனது புதிய அரசியல் அவதாரம் ஆரம்பிக்கின்றது. அதுவரையில் எந்தவொரு முக்கியத்துவமற்றிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் எவராலும் தவிர்க்க முடியாதவராக மாறுகின்றார். உள்நாட்டிலும், ராஜதந்திர தரப்பினர் மத்தியிலும் கவனிப்புக்குரிய தமிழ் தலைவரென்னும் அந்தஸ்த்தை பெறுகின்றார்.

சம்பந்தனது ஆளுமைக்குரிய காலமாக 2010 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியை மட்டுமே குறிப்பிட முடியும். சம்பந்தனது ஆரம்பகால நகர்வுகளை உற்று நோக்கினால் ஒரு விடயத்தை தெளிவாகப் பார்க்கலாம் விடுதலைப் புலிகள் அமைப்பு (பிரபாகரன்-பாலசிங்கம்) எந்த இடத்தை சரியாக விளங்கிக் கொள்ளா முடியாமல் சறுக்கியதோ, அந்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதையே சம்பந்தன் ஒரு பிரதான வழிமுறையாக பற்றிக்கொள்ள முற்பட்டார். அதாவது, இந்திய, அமெரிக்க ஆதரவை வெற்றிகொள்ள வேண்டும். 2010, ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்ததிலிருந்து, 2015இல் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட்டதுவரையில், அனைத்துமே இந்திய மற்றும் மேற்குலக விருப்பங்களை ஆதரிப்பதாகவே இருந்தது. இந்திய மற்றும் அமெரிக்க விருப்பங்களுடன் முக்கியமாக புதுடில்லியின் ஆதரவை வெற்றிகொள்ளும் உபாயங்களை இந்தக் கட்டுரை வரவேற்கின்றது. அதுதான் சரியானதும் புத்திசாலித்தனமான அரசியலுமாகும். ஆனால் 2010இற்கு பின்னர் கிடைத்த வாய்ப்புக்கள் எவற்றையுமே சம்பந்தன் முறையாகவும் நேர்மையாகவும் கையளவில்லை. இந்த இடத்தில்தான் சம்பந்தனது தோல்வியின் கதை ஆரம்பிக்கின்றது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். சம்பந்தனுக்கு முன்னர் இருந்தவர்கள் வெற்றிபெற்றவர்களா? பதில் சுலபமானது. அனைவருமே தோல்விடைந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் தோல்வியடைந்த காலமும், அன்றைய அரசியல் சூழலும் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் சம்பந்தனது காலத்தில் உள்ளுக்கும், வெளியிலும் எந்தவொரு சவாலும் இருந்திருக்கவில்லை. அதே வேளை, போருக்கு பின்னரான அரசியல் சூழலை கையாளும் முழுமையான ஆளுமையுள்ள ஒருவராகவே சம்பந்தன் இருந்தார். அனைத்துமே சம்பந்தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. சம்பந்தன் மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடியளவிற்கு கூட்டமைப்புக்குள் எவரும் இருந்திருக்கவில்லை. அவர்கள் அனைவருமே சம்பந்தனை பின்தொடர்வதற்கு தயாராகவே இருந்தனர்.

ஆனால் அனைத்தையும் சம்பந்தன் அவரது தலைமைத்துவ மோகத்தாலும், கட்சி மோகத்தாலும், அரசியல் நேர்மையின்மையாலும் போட்டுடைத்தார். 2010இல், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். அவரைப் போன்ற சிக்கலான ஒருவரை கையாளுவதிலுள்ள சிக்கல்களை இந்தக் கட்டுரை புரிந்துகொள்ளுகின்றது. ஆனால் இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு, ஏனையவர்களை தொடர்ந்தும் அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவத்தை சம்பந்தன் வழங்கியிருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்து, அதனை ஒரு பலமான தேசிய இயக்கமாக மாற்றவேண்டுமென்று ஏனைய கட்சிகளும், தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்டிருந்த புத்திஜீவிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

ஆனால் சம்பந்தனோ, அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதன் காரணமாக கூட்டமைப்பு பலவீனமடைந்து கொண்டே சென்றது. கூட்டமைப்பு பலவீனமடைவது தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்துமென்னும், சிறிதளவு கரிசனை கூட சம்பந்தனிடம் இருக்கவில்லை. சம்பந்தனது தவறுகளால் இறுதியில் கூட்டமைப்பு சிதைவடைந்தது. கூட்டமைப்பின் தலைவராக இருந்து கொண்டே, கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சிகளுக்கு சம்பந்தன் துணைபோனார். ஒரு அரசியல் அமைப்பின் தலைவரே, அதனை சிதைக்க முயற்பட்ட அதிசயம் தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே நிகழ்ந்தது. சம்பந்தனின் தவறுகள் இன்று அவர் உயிரோடு இருக்கின்ற போதே, கூட்டமைப்பை சிதைத்துவிட்டது. கூட்டமைப்பிலிருந்து தமிழசு கட்சி வெளியேற முற்பட்ட போது, கூட்டமைப்பின் தலைவராக அதனை தடுக்க சம்பந்தன் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

இன்று மீளவும் தமிழ் அரசியல் உரையாடல்கள் 13வது திருத்தச்சட்டத்திற்கே திரும்பியிருக்கின்றது. இதனை முன்கூட்டியே கணித்து, அப்போதே பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்தக் கட்டுரையாளர் பல்வேறு சந்தர்பங்களில் இதனை வலியுறுத்தியிருக்கின்றார். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தை உச்சளவில் பயன்படுத்தியிருக்க முடியும். தமிழர்களுக்கு வாய்ப்பான சூழல் அப்போதிருந்தது. ஆனால் சம்பந்தன் தான்தோன்றித்தனமாக அனைத்தையும் நாசமாக்கினார். வரமுடியாத அரசியல் யாப்பிற்காக ஜந்து வருடங்களை வீணாக்கினார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, புதுடில்லியை எட்டியும் பார்க்கவில்லை. அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, இந்திராகாந்தியுடன் நட்புறவை ஏற்படுத்தியிருந்தார். தமிழினத்திற்காக அந்தப் பதவியை உச்சபட்டசமாக பயன்படுத்தியிருந்தார். ஆனால் மரியாதையுடன் புதுடில்லிக்கு விஜயம் செய்ய வேண்டிய சம்பந்தனோ, பத்தோடு பதினொன்றாக, அரசாங்க அமைச்சர்களோடு இணைந்து புதுடில்லி சென்றிருந்தார். சம்பந்தனது எதிர்கட்சி தலைவர் தகுதியை பயன்படுத்தி, புதுடில்லியின் ஆலோசனையுடன் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தை சிறப்பாக கையாண்டிருக்கலாம். ரணில்-மைத்திரி அரசாங்கமும் அதனை நிராகரித்திருக்காது. ஏற்கனவே 13 பிளஸ் தொடர்பில் வாக்குறுதியளித்திருந்த மகிந்த ராஜபக்சவும் ஒரு கட்டத்திற்கு மேல் அதனை எதிர்த்திருக்க வாய்ப்பில்லை. இறுதியில் தமிழ் இனத்திற்கு எந்தவொரு பயனுமில்லாமல் அனைத்தும் முடிவுற்றது. கோட்டபாய ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து மீளவும் அனைத்தும் பழைய நிலைமைக்கே திரும்பியது.

சம்பந்தனை புத்திக் கூர்மையுள்ளவரென்று சிலர் சொல்வதுண்டு. அது உண்மைதானா? பிராந்திய சக்தியான இந்தியாவின் பிரதமர், உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர், கடந்த 21 வருடங்களாக இந்தியாவில் தொடர்ந்தும் வெற்றியை மட்டுமே கண்டுகொண்டிருந்தவரான, சிறி நரேந்திரமோடி – கூட்டமைப்பை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தார். புதுடில்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தனோ, சில்லறைத்தனமான காரணங்களை கூறி அந்த சந்திப்பை பிற்போட்டார். மாவையின் மகனுக்கு திருமணம்- அதற்கு போக வேண்டியிருக்கின்றது. இதுதான், ஒரு பிராந்திய சக்தியின் தலைவரை சந்திப்பதை பிற்போடுவதற்கு சம்பந்தன் கூறியிருந்த காரணம். ஒரு பத்தாமாண்டு மட்டுமே படித்தவர் கூட, இவ்வாறானதொரு காரணத்தை கூறியிருக்கமாட்டார். இதுதான் சம்பந்தனது புத்திக் கூர்மையோ? அப்போதே கூட்டமைப்பின் பங்காளிகள் சம்பந்தனை கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றியிருக்க வேண்டும். ஏனெனில் அப்போதே கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் தகுதியை சம்பந்தன் இழந்துவிட்டார்.

2010-2020 காலப்பகுதி வரையில் சம்பந்தனது அனைத்து நகர்வுகளுமே தோல்வியிலேயே முடிந்திருக்கின்றது. இன்று கூட்டமைப்பிலும் சம்பந்தன் இல்லை. தமிழரசு கட்சியிலும் சம்பந்தனை பொருட்படுத்த எவருமில்லை. தவறுகள் பின்னர் தவறுகள் மீண்டும் தவறுகள், இதுதான் கடந்த பத்துவருடங்களாக சம்பந்தன் செய்தவை. தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் இராஜவரோதயம் சம்பந்தனது இடம், தோல்விக்கும், ஏளனத்திற்கும், அரசியல் முட்டாள்தனத்திற்குமான சான்றாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில், இனிமேல், இடம்பெறப் போகும் எதற்கும் சம்பந்தன் காரணமாக இருக்கப் போவதில்லை. சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி, நாங்கள் எங்கோ சென்றுவிட்டோமென்று கூறியிருந்தார். ஆனால் அதனை தாண்டி எங்கும் செல்லவில்லை, செல்லவும் முடியாதென்பதே, மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் அதனை தாண்டி எங்கோ சென்றுவிட்டோமென்னும் வாதத்தின் பெறுமதியென்ன? இதனை சரியாக புரிந்துகொண்டு செயற்பட்டிருந்தால், சம்பந்தன் தோல்வியடைந்திருக்க வேண்டியதில்லை. இப்போது, சம்பந்தன் ஒரு தோல்வியின் அடையாளம் மட்டுமே

சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் எடுபிடிகளுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை

வடகிழக்கிலுள்ள ஐந்து கட்சிகள் ஒரே கொடியின் கீழ் ஒரே சின்னத்தின் கீழ் ஒன்றுபடமுடியுமாக இருந்தால் ஏன் கஜேந்திரகுமார் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோருடைய கட்சிகள் ஒன்றிணையாது ஏன் வெளியே நிற்கின்றது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.சிறிகாந்தா குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நல்லூர் பிரதேச சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது.

இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஒற்றுமை என்கின்ற தளத்தின் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியே நிற்கின்ற கட்சிகளால் ஒன்றிணைய முடியவில்லை என்றால் அவர்களை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என்றும் ந.சிறிகாந்தா குறிப்பிடுகின்றார்.

அத்துடன் சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் எடுபிடிகள் இன்று களமிறக்கப்பட்டுள்ள பல்வேறு அரசியல் எடுபிடிகளுக்கு இந்த சுதந்திர தமிழ் மண்ணிலே இடம் இல்லை என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனோல்​​ட் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்திய வழக்கு ஒத்திவைப்பு

யாழ்.மாநகர சபை முதல்வர் ஆனோல்டை, முதல்வராகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் பெப்ரவரி 13ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளது.

ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ். மாநகர சபையின் முதல்வராக இ.ஆனோர்ல்ட் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரியும் யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது இரு தரப்புகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கை பெப்ரவரி 13ஆம் திகதிக்கு தவணையிட்டார்.

குறித்த வழக்கில், யாழ். மாநகர முதல்வர் , யாழ் மாநகர ஆணையாளர், சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கே.சயந்தன் ஆகியோரும் மனுதாரரான யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன், வி.மணிவண்ணன், வி.திருக்குமரன் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.