சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன் ஓய்வு

நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன்(சனிக்கிழமை) ஓய்வு பெற்று செல்வதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் ஒரே தடவையில் இந்தளவு பெருமளவிலான அரச ஊழியர் ஓய்வு பெற்று செல்வதால் அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரச ஊழியர் ஓய்வு பெறும் வயதெல்லையை கடந்த அரசாங்கம் 65 என அறிவித்த போதும் தற்போதைய அரசாங்கம் அந்த வயதெல்லையை 60 ஆக குறைத்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

யாழ் கோட்டையின் நுழைவுச் சீட்டுக்கான விலை அதிகம்

யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டின் விலை அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை தான் வாங்கிக்கொண்டதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணக்கோட்டையில் சீன நாட்டுடன் தொடர்புடைய ஒரு பொருள் ஒன்றை தான் கண்டதாகவும், இதன் மூலம் சீனாவுடனான யாழ்ப்பாணத்திற்கான தொடர்பு பழமையானது எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கோட்டையில் உள்நாட்டவர்களுக்கு, 20 ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 4 அமெரிக்க டொலரும் நுழைவு சீட்டு என அறவிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

பயணிகள் வருகை, புறப்பாடு அட்டைகள் ஒன்லைன் மூலம் பூர்த்தி செய்யும் வசதி

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வருகை அட்டைகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் புறப்பாடு அட்டைகள் புதிய முறையின் மூலம் சரிபார்க்கப்படும்.

எனவே, இரண்டு விமானப் பயணிகளும் தங்கள் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தங்கள் அட்டைகளை ஒன்லைனில் நிரப்ப முடியும்.

திணைக்களம் பயணிகளை www.immigration.gov.lk அல்லது https://eservices.immigration.gov.lk என்ற திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு ஊடாகப் பார்வையிடுமாறு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், பயணிகள் குடிவரவு மற்றும் குடியகல்வு நடைமுறைகளை எந்தவித அசௌகரியமும் இன்றி நிறைவு செய்ய முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள தமிழ் தலைவர்களால் பிரச்சினைகளிற்கு தீர்வை தர முடியாது: வினோ எம்.பி

தற்போதுள்ள தமிழ் தலைவர்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர முடியாது. தற்போதுள்ள சிங்களத் தலைவர்களினாலும் அது முடியாது. ரணில் விக்கிரமசிங்க கபடத்தனமான பேச்சையே நடத்த விரும்புகிறார் என தெரிவித்துள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் (ரெலோ) சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவத்துள்ளார்.

நேற்று வவுனியாவில் சமத்துவ கட்சியின் வன்னி பிராந்திய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

சமத்துவ கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு போட்டியாக உள்ள ஒரேயொரு கட்சி சமத்துவக்கட்சிதான். தமிழ் மக்கள் மத்தியில் பல கட்சிகள் இருந்தாலும், அனைவரதும் இறுதி இலக்கு தமிழ் மக்களின் விடுதலையாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் மத்தியில் கட்சிகள் அதிகரித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த பலர் பல கட்சிகளை தொடங்கியுள்ளனர். தற்போது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட நடக்கும் முயற்சிகளிற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ் கட்சிகள் நிச்சயமாக ஒன்றிணையாது. அதனால்தான் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஊடாக தீர்வை பெற முடியாது. தமிழ் மக்களிற்கு தீர்வு கிடைக்கக்கூடாதென்பதில் சிங்கள கட்சிகள் ஓரணியாக செயற்படுகின்றன. ஆனால், தீர்வை பெறுவதில் தமிழ் தரப்பிடம் ஒற்றுமையில்லை.

கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்பதற்காகவே நான் விமர்சனங்களை வைக்கிறேன். விடுதலைப் புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பு மாற்றப்பட வேண்டுமென நினைக்கும் சிலர் கூட்டமைப்பிற்குள் உள்ளனர் என்றார்.

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிந்ததுடன், தமிழ்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், அவரது நியமனத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவையில் உள்வாங்கப்படவுள்ள மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில், மலையக இந்திய வம்சாவளி தமிழர் சார்பில் பிரதாப் ராமானுஜத்தின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு பேரவைக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 3 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் தற்போது 5 சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு உத்தர லங்கா சபாகய கட்சி எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனமானது இழுபறி நிலையில் உள்ளது.

சீனாவினால் யாழ் மக்களுக்கு நிவாரண பொதிகள் கையளிப்பு

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில், யாழ்ப்பாண மக்களுக்கான நிவாரண பொதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

யாழ் மாவட்டத்தில் 1320 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக இன்றையதினம் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் கே.பாலகிருஸ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நட்பு ரீதியான உதவிகளை தொடர்ந்தும் சீனா இலங்கைக்கு வழங்கும்

சீனா நாடும், இலங்கை நாடும் கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம். இலங்கைக்கான சீனாத்தூதுவர் ஹுவெய் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, சீனா ஆகிய இருநாட்டின் நட்பு என்பது நட்பின் நண்பன் அந்தவகையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பு செய்வதற்கான உணவுப்பொதிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இது வந்து சீனாத்தூதரகத்தின் நிகழ்ச்சகத்திட்டமாக காணப்பட்டுகின்றன.

மேலும் ஒன்பது ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் எரிபொருள்கள் கிடைக்கபெறவுள்ளது. அவை யாழ்ப்பாண விவசாயிகள், கடற்றொழில் மீனவர்கள் ஆகியோர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

மேலும் பத்தாயிரம் மெற்றிக்தொண் அரிசி இலங்கைக்கு சீனா நாடு பெற்றுக்கொடுக்கப்படயிருக்கின்றது. இவ் அரிசிகள் மூலமாக வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட யிருக்கின்றது என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக உயர்நீதிமன்றத்திற்கு வழங்கிய வாக்குறுதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பாதுகாக்கும் என நம்புகிறோம்.

ஜனவரி மாதம் 4ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமாயின் பெப்ரவரி 25 முதல் மார்ச் 11 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலத்தில் புதன்கிழமை (டிச. 28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இம்மாத இறுதியில் வெளியிடுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 8 ஆம் திகதி குறிப்பிட்டது,ஆனால் இதுவரை எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. ஆனால் ஜனவரி மாதம் 04ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளார்கள்.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு வாக்குறுதி வழங்கியது,

இந்த வாக்குறுதியை ஆணைக்குழு பாதுகாக்கும் என எதிர்பார்க்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு ரிட் மனுக்கல் எதிர்வரும் மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை  எதிர்வரும் மாதம் (ஜனவரி) 09 ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும்.தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 14 அல்லது 17 நாட்களுக்குள் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு 5 முதல் 7 வார காலத்திற்குள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என்றார்.

வரி அதிகரிப்பால் பாரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் புலம்பெயர்வு

ஜனவரியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள் காரணமாக  இலங்கையின் பாரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் செலவுகளை குறைப்பதற்கும் அல்லது வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வதற்கும் சிந்திக்கின்றனர் என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.

கடும் வருமானவரிகள் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால் இலங்கையின் பாரிய நிறுவனங்களை சேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள்  செலவுகளையும் முதலீடுகளையும் குறைக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

இலங்கை அரசாங்கம் வங்குரோத்து நிலையை அறிவித்து பத்துமாதங்களிற்கு பின்னர்  புதிய வரிகள் நடைமுறைக்கு வரவுள்ளன.

எனினும் புதிய வரிகள் வருமானம் உழைப்பவர்களின் நுகர்வுதிறன் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன, குறிப்பாக ஏற்கனவே கடன்பட்டவர்கள் வீடுகளிற்காக வங்கிகளில் கடன் பட்டவர்கள்  நுண்கடன்களை பெற்றவர்கள் அதிகளவு பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.

மாதாந்தம் 150,00 ரூபாயை உழைக்கும் இலங்கையர் ஒருவர்  தனது தனது வருமானத்தில் 2.3 வீதத்தினை செலுத்தவேண்டும் ஆனால் ஒரு மில்லியன் உழைப்பவர் 28.7 வீதத்தினை செலுத்தவேண்டும்.

எப்படி செலவுகளை குறைப்பது என தெரியவில்லை என்கின்றார் வங்கி துறையை சேர்ந்த 52 வயது நபர்.

இவர் ஏற்கனவே தனது வாகனங்களிற்கான லீசிங் மற்றும் வீட்டு கடன் போன்றவற்றை செலுத்தவேண்டிய நிலையில் காணப்படுகின்றார்.

நான் இரு கடன்களையும் பெற்றவேளை வட்டிவீதம் குறைவாக காணப்பட்டது என்னால் மாதம் ஒரு இலட்சம்  ரூபாயை சேமிக்க முடிந்தது என தெரிவித்த அவர் தற்போது பணவீக்கம் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றவற்றால் எதனையும் சேமிக்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நான் மலிவான பொருட்களிற்கு மாறிவிட்டேன் என மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் தெரிவித்தார்.

இவரை போன்ற பல தனியார் துறை ஊழியர்கள் ( ஏற்கனவே வருமான வரி செலுத்துபவர்கள் ) புதிய வரி குறித்து ஏமாற்றம் வெளியிட்டனர்.

தனியார் துறையை சேர்ந்த பலர் தாங்கள் வரிகளை செலுத்த தயார் என குறிப்பிட்ட அதேவேளை வெளிப்படைத்தன்மையின்மை அரசாங்கத்தின் பண விரயம்  பொறுப்பற்ற அரசியல் தீர்மானங்கள் போன்றவை இந்த வரிகள் அவசியமற்றவை என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தனர்.

ஊதிப்பெருப்பிக்கப்பட்டுள்ள  அரசசேவை குறித்தும் தனியார் துறையினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட வினைத்திறன் அற்ற அரசசேவையை தொடர்ந்தும் காப்பாற்றுவதற்கு அரசசேவையை சேர்ந்தவர்கள் தங்கள் சக்தியை வீணடிக்கின்றனர் இது எப்படி நியாயமான விடயமாகும் என வாகனங்கள் திருத்தும் நிலையத்தை சேர்ந்த சுனில் என்பவர் கேள்வி எழுப்பினார்.

எனது ஊழியர்கள் மோசமான காலநிலைக்கு மத்தியிலும்மேலதிக நேரம் வேலை பார்த்து சம்பாதிக்கின்றனர் காலையிலிருந்து நள்ளிரவு வரை வேலைபார்க்கின்றனர் என குறிப்பிட்ட அவர் அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களிற்கு வருமானம் வழங்குவதற்காக தனியார் துறையை சேர்ந்தவர்கள் மீது அரசாங்கம் எப்படி வரி சுமையை செலுத்த முடியும் எனகேள்வி எழுப்பினார்.

புதிய வரிகளுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

அரசாங்கத்தின் புதிய வரிகள் குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிடவுள்ளது.

2023 ஜனவரியின் கடைசி வாரத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரியின் இறுதி வாரத்தை கறுப்பு ஆர்ப்பாட்ட வாரம் என அறிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க அரசாங்கம் அறிவித்துள்ள தன்னிச்சையான வரிமாற்றங்கள் தங்களின் தொழில்துறையை சேர்ந்தவர்களிற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பல வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட மகஜரை ஜனவரி 10 ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.