பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிப்பு

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படுவர் என ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியப்பிராந்திய இணை அலுவலகத்தின் தலைவர் மிஹிகோ டனகா எச்சரித்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மிஹிகோ டனகா மேற்குறிப்பிட்டவாறு எச்சரித்துள்ளார்.

இவ்வாறானதொரு அச்சுறுத்தல் நிலைக்கு மத்தியில் பெண்களால் முன்னெடுக்கப்படும் சிறியளவிலான முயற்சியாண்மைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பங்களிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களை இந்த நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண நாட்டின் பல பகுதிகளிலும் பெண்களின் சிறியளவிலான வணிக முயற்சியாண்மைகளை ஊக்குவிப்பதற்கு அவசியமான செயற்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி கிராமப்புறங்களிலும் பின்தங்கிய பிரதேசங்களிலும் வசிக்கும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறிய வணிக முயற்சியாண்மைகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கும், அவற்றை சிக்கல்களின்றித் தொடர்வதற்கு அவசியமான வளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் 5.7 மில்லியன் மக்கள்

நாட்டின் மொத்த சனத்தொகையில் குறைந்தபட்சம் 5.7 மில்லியன் மக்கள் (சனத்தொகையில் 26 சதவீதமானோர்) மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக செஞ்சிலுவை மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் சர்வதேச கூட்டிணைவு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், கட்டமைப்பு ரீதியிலும் சேவை வழங்கலிலும் ஏற்பட்டிருக்கும் சீர்குலைவை சீரமைப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் மேற்குறிப்பிட்ட தொகை மேலும் அதிகரிக்கும் என்றும், அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் மேலும் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளது. இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் தீவிர பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே செஞ்சிலுவை மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் சர்வதேச கூட்டிணைவு மேற்குறிப்பிட்டாறு எச்சரித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையானது நாடளாவிய ரீதியில் 11 மாவட்டங்களைச்சேர்ந்த 2,871 குடும்பங்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட நேர்காணல்கள், நுவரெலியா மாவட்டத்தில் 10 கிராமங்களிலுள்ள 300 குடும்பங்களிடம் பிரத்யேகமாக நடத்தப்பட்ட ஆய்வுகள், 24 குழு ரீதியான கலந்துரையாடல்கள், தகவல் வழங்குனர்கள் 15 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணல்கள், ஏனைய தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு,

பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவுப்பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் என்பன நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கலில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாகக் கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களுக்கு அப்பால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் வெகுவாக உயர்வடைந்துள்ளது. சேதன விவசாயத்திற்கு முழுமையாக மாறும் திட்டம் தோல்வியடைந்ததன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

எனவே தற்போது சீர்குலைந்திருக்கும் கட்டமைப்புக்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவை வழங்கல்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பலதரப்பட்ட துறைகளுக்கு அவசியமான வசதிகள் என்பன உடனடியாக சீரமைக்கப்படாவிட்டால், ஏற்கனவே வெகுவாகப் பாதிக்கப்பட்டுப் பின்னடைவைச் சந்தித்திருக்கும் மக்கள் மேலும் பின்நோக்கித் தள்ளப்படுவர். ஏற்கனவே நாட்டிலுள்ள பெரும்பாலான குடும்பங்கள் இந்நெருக்கடியைக் கையாள்வதற்கு உணவு வேளைகளைத் தவிர்த்தல், சுகாதாரசேவைப்பெறுகையை பிற்போடல், பிள்ளைகளின் பாடசாலைக்கல்வியை இடைநிறுத்தல் மற்றும் வருமானமீட்டும் நோக்கில் அவர்களை வேலைக்கு அனுப்புதல், தமது சொத்துக்களை விற்பனை செய்தல் போன்ற உத்திகளைக் கையாண்டுவருகின்றன. குறிப்பாக தற்போது 11 சதவீதமான குடும்பங்கள் வருமானத்தை இழந்திருக்கும் அதேவேளை, 62 சதவீதமான குடும்பங்களின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியேற்பட்டுள்ளது. அதேபோன்று நாட்டின் மொத்த சனத்தொகையில் 4.9 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நுண்பாகப்பொருளாதார சீர்குலைவானது சமூக மற்றும் குடும்ப மட்டத்தில் பாரிய மனிதாபிமான அவசரநிலையாக நிலைமாற்றமடைந்திருப்பதுடன் அதன்விளைவாக பெருமளவானோர் உணவு, எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி மக்கள்மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கு ஒவ்வொரு துறைசார்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

700 ரூபாவாக உயரவுள்ள டொலர் : யாழ். பல்கலை. பொருளியல் துறை தலைவர்

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை தீர்மானிக்கும் அனுமதியை ஐஎம்எப் இடம் வழங்கினால் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதோடு ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிடம் கருத்து பகிர்ந்து கொள்ளும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பிரதானமான நிபந்தனை என்னவென்றால் இலங்கையினுடைய நாணய மாற்று விகிதத்தினை அரசாங்கம் நிர்ணயிப்பதை விட சுதந்திரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான். சந்தை சக்திகளின் ஊடாக சுதந்திரமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அதில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்றும், மத்திய வங்கி தலையிடக் கூடாது என்றும் கூறப்பட்டது.

இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுமாக இருந்தால் இப்போது இருக்கின்ற தற்பொழுது இருக்கின்ற நாணய மாற்று விகிதம் இன்னும் தேய்வடைந்து செல்லக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. அவ்வாறு தேய்வடைந்து சென்றால் இலங்கையில் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகள் இன்னும் அதிகரிக்கும்.

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இறக்குமதி நுகர்வில் தான் தங்கியிருக்கின்றார்கள். அரிசி கூட சில நேரங்களில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உண்டு. அரிசிக்கு பதிலீடாக பயன்படுத்துகின்ற கோதுமை, தானியங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றோம். எனவே இந்த பொருட்களின் விலைகள் மேலும் உயரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

தற்போது டொலர் ஒன்று 370 ரூபா என்ற நிலையில் உள்ளது. சுதந்திரமாக சந்தையில் நிர்ணயிக்க விடுகின்ற போது டொலரின் பெறுமதி 450, 500, 600, 700 என்ற அளவில் போகும். அப்படிப் போகின்ற போது இறக்குமதி செய்கின்ற பொருட்களின் விலைகள், குறிப்பாக கோதுமையின் விலை கடுமையாக அதிகரிக்கும். இதன் விளைவினால், போஷாக்கின்மை, பட்டினி, நோய்வாய்ப்படுதல் போன்ற பல பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இதனை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டுமாக இருந்தால் உள்நாட்டு பொருளாதாரத்தை முதலில் கட்டியெழுப்ப வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற, அரிசி, சிறுதானியங்கள், மரக்கறிகள் மற்றும் பழங்கள், விலங்கு வேலாண்மை போன்ற உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அதற்கு ஈடாக நாங்கள் செயலாற்றும் பட்சத்தில் இது பாரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.

கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் இல்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது:செல்வம் எம்.பி

கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் இல்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் வினவிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,”நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை என அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரிடம் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அவர்களுக்கு என்ன நடந்தது? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும். தனக்கு பிரச்சினை வரக்கூடாது என்ற ரீதியிலே அவர்கள் உயிரோடு இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்று போராடி கொண்டிருக்கின்ற தாய்மார்களுக்கு இது பதிலாக அமையாது.

இந்த விடயத்திலே நீதியமைச்சர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூற வேண்டும். அவர்கள் விடயத்தில், உயிருடன் இராணுவத்திடம் ஒப்படைத்த பின்பு நடந்த உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் விஜயதாச ராஜபக்ச கூறுகின்ற போது தான் எங்களுடைய தரப்பிலே அதனை எப்படி நோக்கலாம் என்பதனை கூற முடியும். ஆகவே உண்மைத்தன்மையை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியே கொண்டு வர வேண்டும். அவர்கள் உயிரோடு இல்லை என்ற சாட்டுப்போக்கை கூறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தாய்மாருடைய போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டாம். ஆகவே அவர்கள் உயிரோடு இல்லை என்றால் என்ன நடந்தது? படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? அல்லது அனைவரும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்களா? என்பதை இந்த அரசாங்கம் வெளிப்படையாக கூற வேண்டும்.

மறைத்து கதை சொல்வது என்பது நிறுத்தபட வேண்டும். வருடக்கணக்கிலே தாய்மார்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கான நியாயம் கிடைக்காதவரை இதற்கான போராட்டம் தொடரும். உயிருடன் ஒப்படைத்தவர்களை உயிரோடு இல்லை என கூறுகின்றீர்களெனில், அவர்கள் யாரால் கொல்லப்பட்டுள்ளார்கள், புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூற வேண்டும். அது தான் நேர்மையான அரசியல் வாதி. அரசாங்கம் மக்கள் சார்ந்த விடயத்தில் அக்கறையோடு இருக்கிறது என்பதனை இந்த விடயங்களில் இருந்து பார்க்க கூடியதாக இருக்கலாம்.

பாதுகாப்பு செயலாளாராக இருந்த கோட்டாபய ராஜபக்ச அவர்களுடைய காலத்திலே கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்டவர்கள் பின்னர் அவர் ஜனாதிபதியாக வந்தும் அதற்கான பதில் கூறவில்லை. தற்போது அமைச்சர் இந்த கருத்தை கூறுகின்ற சூழலிலே கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இருக்கின்ற அரசாங்கம் அல்லது இராணுவம் அவர்களை படுகொலை செய்தது என்பதனை இந்த அரசாங்கம் ஒத்துக்கொள்கின்ற ஒரு சந்தர்ப்பத்தை தர வேண்டும் என்பது தான் நேர்மையான விடயமாக இருக்கும். ஆகவே நீதியமைச்சர் வெளிப்படை தன்மையோடு பேச வேண்டும். சாட்டுப்போக்கான பதில்களை கூறி தாய்மார்களுடைய போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டாம் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.”என தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பதவி மீண்டும் அலி சப்றிக்கு !

நிதி அமைச்சராக மீண்டும் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றியை நியமிக்க அரசாங்கம் ஆரம்பகட்ட இணக்கமொன்றுக்கு வந்துள்ளது.

புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஐவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குனவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோருக்கு இடையே நடந்த சிறப்பு கலந்துரையாடலில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்க முடியாது. அதன்படி, சமர்ப்பிக்கப்படும் வரவுச் செலவு திட்டத்தை மையப்படுத்தி அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

அதன்போது, வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளை அமுல்ச் செய்வது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகளையும் பேச்சுவார்த்தையையும் முன்னோக்கி எடுத்துச் செல்வது போன்ற பிரதான பொறுப்புக்களை  ஒப்படைத்து நிதி அமைச்சை அலி சப்றியிடம் மீள கையளிப்பது தொடர்பில் அவதானம் திரும்பியுள்ளது.

இதனைவிட, புதிதாக  5 அமைச்சரவை அமைச்சுக்களை  ஏற்படுத்த அவதானம் திரும்பியுள்ளதுடன்,  பொது ஜன பெரமுன கட்சியின் மூவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரபலம் ஒருவரும் உள்ளடங்கலாக ஐவருக்கு அவற்றை வழங்கவும் ஆரம்பகட்டமாக பேசப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தேர்தலை ஒத்திவைக்க முயற்சி – சஜித் குற்றச்சாட்டு

எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் தலைவராக மகிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதாகவும், அந்தக் குழுவின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு உபாய வார்தைகளைப் பயன்படுத்தி உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒத்திவைக்காமல் நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆணைக்குழுவின் ஊடாக புதிய மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும்,தேர்தல் முறைமையை மாற்றியமைக்காமல் மக்கள் அபிப்பிராயத்திற்கு செவிசாய்த்து, அவர்கள் வாக்களிக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டியதே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

உரிய காலத்தில் அந்தந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்,பல்வேறு தந்திர உத்திகளை கையாண்டு தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பு என்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

அவரது அந்த அறிக்கைகள் இன்றும் செல்லுபடியாகும் என்றால்,எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் பதவியைப் பெற்று தேர்தலை ஒத்திவைக்கும் தந்திர உத்தியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியாக கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு தேர்தலை ஒத்திவைப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும் எனவும், மக்கள் கோரிக்கை விடுப்பது தேர்தலே என்பதால் அதை வழங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் 220 இலட்சம் மக்களுடன் வீதியில் இறங்கி தேர்தலை சந்திப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்டம், அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று(05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக வாராந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ரவி கருணாநாயகக இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகி ரவி கருணாநாயக்கவுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன. ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க, நல்லாட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது இலங்கை மத்திய வங்கியில் நடந்த பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து அவர் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினர். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட்ட அவர் உட்பட கட்சியினர் அனைவரும் தோல்வியடைந்தனர்.

இலங்கையின் நிலைமை தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்றில் விவாதம்

இலங்கையின் நிலைமை குறித்து அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றம் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கான பிரித்தானியாவின் பதில் குறித்த பின்வரிசை வணிகக் குழுவின் விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி பொதுச்சபையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பமான விவாதங்களை முன்வைக்க, பின்வரிசை வணிகக்குழு வாய்ப்புகளை வழங்குகிறது.

முன்னதாக கடந்த ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வின் போது பிரித்தானியா தலைமையிலான இலங்கை தொடர்பான முக்கிய குழுவே, இலங்கைக்கு எதிரான யோசனையை முன்னகர்த்தி அதனை நிறைவேற்றியது. இதன்படி இலங்கையின் போர் குற்றம் தொடர்பான பொறுப்புக்கூறல் உள்நாட்டில் இருந்து சர்வதேசத்தின் கைகளுக்கு செல்கிறது. எனினும் இதனை இலங்கை கடுமையாக ஆட்சேபித்து வருகிறது.

சமஷ்டித் தீர்வே என்பதில் தமிழ்த் தலைமைகள் அனைவரும் ஒற்றுமை

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் தங்களுக்குள் கட்சிகள், அணிகளாகப் பிரிந்து நின்றாலும், தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே ஒரே வழி என்பதில் மிக உறுதியாகவும், ஒருமித்த நிலைப்பாட்டிலும் உள்ளனர் எனும் அரசின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் பதிலளித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தலைவர்கள் பிளவுபட்டிருக்கின்றார்கள் என்று சாக்குப் போக்குக் கூறி, சமாளிப்பதை விடுத்து, சமஷ்டித் தீர்வுக்கு வழி பாருங்கள்.

தமிழ்த் தலைமைகள் வெவ்வேறு கட்சிகளில் வெவ்வேறாகப் பிரிந்து நிற்கலாம். அவர்களின் அணுகுமுறைகள், போக்குகள் வேறுபடலாம். ஆனால், தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலேயே தீர்வு என்பதில் அவர்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளார்கள்.

இந்நிலையில், தமிழ் தலைமைகளிடையே பிளவு, வேறுபாடு, கருத்து முரண்பாடு, குத்துவெட்டு என்று சாக்குப் போக்குச் சொல்லி விடயத்தைச் சமாளிப்பதை விடுத்து, தமிழ் தலைமைகளின் இந்த ஒன்றுபட்ட நிலைப்பாட்டை கவனத்தில் எடுத்து, அதில் பொதிந்துள்ள நீதி, நியாயத்தைப் புரிந்து கொண்டு, விரைந்த தீர்வுக்கு முன்வாருங்கள்.

மேலும், காலத்தை இழுத்தடித்துச் சாக்குப் போக்குக் கூறிச் சமாளிப்பதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கில் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்தவர்களுக்கு எதிராக வனவளத்திணைக்களம் முறைப்பாடு : இருவர் கைது

வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடும்ப வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்த குடும்பஸ்தர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 – 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் வழங்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் முடிவடைந்த பின் 84 வரையிலான குடும்பங்கள் அப் பகுதியில் மீள்குடியேறினர்.

அம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமையால் மீளவும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் 15 குடும்பங்கள் வரையில் தற்போது அங்கு வசித்து வருகின்றனர். அம் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளுடன் இணைந்த காணித் துண்டங்களில் தோட்ட செய்கை மற்றும் நெற் செய்கை என்பவற்றை மேற்கொள்வதற்காக காணிகளை உழுது பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் அது வனவளத்திணைக்களத்திற்குரிய காணி எனத் தெரிவித்து அவர்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்துள்ளதுடன், உழுது பயிற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (04) பிணையில் விடுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது குடியிருப்பு காணிகளில் ஒரு வயிற்றுக் கஞ்சிக்கு கூட பயிர் செய்ய வனவளத் திணைக்களம் அனுமதிக்கவில்லை எனவும் இது குறித்து அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மௌனம் காத்து வருவதாகவும் மீள்குடியேறிய மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்