யாழ். காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமை கோரும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ….! அச்சத்தில் காணி உரிமையாளர்கள்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து, அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்நிலையில், இன்றைய தினம் (26.10.2023) வியாழக்கிழமை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அப்பகுதிக்கு வந்து, இந்த காணிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரியது, நாம் கடந்த 40 வருட காலத்திற்கு முன்பே காணி உரிமையாளர்களிடம் இருந்து காணிகளை கொள்வனவு செய்து கொண்டு விட்டோம் என கூறி தனியாரின் காணிகளை தமது காணிகள் என கூறியுள்ளனர்.

பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள்

காணியை நாம் யாருக்கும் விற்கவில்லை இது எங்களின் காணிகள். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி தமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ள காணிகளே என காணி உரிமையாளர்கள் கூறி இருந்தனர். அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள்.

இந்த காணிகளையும் தமது நிறுவனம் கொள்வனவு செய்து விட்டதாக கூறி, இது உங்கள் காணி தான் என்பதற்கு எங்களுக்கு உறுதியை காண்பித்து, உறுதிப்படுத்துங்கள் என கூறியுள்ளனர்.

அதற்கு காணி உரிமையாளர்கள் நாங்கள் எதற்கு உங்களுக்கு உறுதி காட்ட வேண்டும்? உங்களின் உறுதிகளை பரிசீலித்து உங்கள் காணி எங்கே இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறினர்.

அதனை அடுத்து, இந்த காணிகளையும் கொள்வனவு செய்து விட்டோம். அதற்கான உறுதிகள் எங்களிடம் உள்ளது. அதன் ஆதாரங்களுடன் வருகிறோம் என அங்கிருந்து சென்றனர்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர் தங்குமிடம் இருந்த பகுதிக்கு அருகில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி இருந்தது. அந்த காணி எமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.

காணி உரிமையாளர்கள்

ஆனால் நாங்கள் தற்போது துப்பரவு செய்து அறிக்கைப்படுத்தும் காணிகள் எமது சொந்த காணிகளே, அந்த காணிகளை நாம் எந்த காலத்திலும் எவருக்கும் விற்கவில்லை.

அதிகாரிகள் காணி இடத்தினை மாறி விளங்கிக்கொண்டு வந்து எம்முடன் கதைத்தார்களா? அல்லது 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் எமது காணி அகப்பட்டு இருந்த கால பகுதியில் எமது காணிகளை மோசடியாக அபகரித்து விட்டார்களா எனும் சந்தேகம் எமக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

தாம் காணிகளை கொள்வனவு செய்த ஆதாரத்துடன் வருகிறோம் என அதிகாரிகள் கூறி சென்றுள்ளனர். இனி அவர்கள் வந்தாலே எமக்கு உண்மை நிலை தெரிய வரும் என அக்காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

பிரித்தானியாவில் நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதாரவாக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ சரவணராஜாவிற்கு நீதி வேண்டி தாயகத்திலும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம் பெயர்நாடுகளிலும் வாழும் செயற்பாட்டாளர்களினால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் Freedom Hunters அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று நேற்றையதினம் (25.10.2023) பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன் நடைபெற்றது.

சர்வதேசம் தலையிட வேண்டும்

இப் போராட்டத்தில் பெரியோர், இளையோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டோர், ‘நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும்’, ‘குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’, ‘சர்வதேசம் தலையிட வேண்டும்’ போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதில்லை : பொதுஜன பெரமுன தீர்மானம்!

2024 ஆம் ஆண்டுவரை மட்டும்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், இது தற்காலிக அரசாங்கமொன்று தான். 2024 ஆம் ஆண்டுவரை மட்டும்தான் இந்த அரசாங்கம் இருக்கும்.

இதன் பின்னர் இவரைக் கொண்டுவருவோம்- அவரைக் கொண்டுவருவோம் என நாம் எந்த இடத்திலும் கூறவில்லை.

ஆனால், இந்த அரசாங்கத்தை நடுவில் உடைத்து, முட்டாள் தனமான வேலையை செய்யவும் நாம் தயாரில்லை.

ஜனாதிபதிக்கோ அமைச்சரவைக்கோ நாட்டை வழிநடத்த முடியாவிட்டால், உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.

அல்லாவிட்டால் நாட்டில் காட்டுச் சட்டம் வந்துவிடும். மக்கள் தான் அரசாங்கத்தை தீர்மானிக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மனதில் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தான் உள்ளார்.

அரசாங்கமானது, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக நாட்டு மக்களை துன்பத்திற்குள் தள்ளியுள்ளது.

மக்கள் மரணித்த பின்னர், ஐ.எம்.எப்.இன் கடனுதவி கிடைத்தும் பலனில்லாமல் போய்விடும்.

எனவே, அரசாங்கம் இதுதொடர்பாகவும் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதுமையில் உள்ள சம்பந்தன் எம்.பி.பதவியை துறக்க வேண்டும் – சுமந்திரன் பகிரங்க கோரிக்கை!

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு பாராளுமன்ற படிகளாக 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்காக 4இலட்சத்து 19ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுமக்களின் வரிப்பணமாக உள்ளது. ஊழல் தடுப்புப் பற்றி பேசப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இதுவொரு மாற்றுவடிவமாக அமைகின்றதா? என்று வினவப்பட்டபோது பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.

அந்தவகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார்.

2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் தனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார்.

எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தன் தனது முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம் என்றார்.

Posted in Uncategorized

சீன பெற்றோலிய உற்பத்திகள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம்

கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனை செய்வது மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுவது என ஆரம்பித்திருந்தனர். இந்நிலைமை, தற்போது வடக்கிலும் ஆரம்பித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மானிப்பாய் மெமோறியல் வீதியில் சினோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட் லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை இன்று செவ்வாய்க்கிழமை மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்வில் பங்குதாரர்களான பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயசாந்த தொட்டஹேவகே, தேசிய விற்பனை முகாமையாளராக துசிதகுமார, விற்பனை முகாமையாளர் எம்.குகன் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் சினோபெக் எரிபொருள் விற்பனை முகாமையாளர்கள் வாகன திருத்துநர்கள் வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

சீனக் கப்பல் இலங்கை வருகை

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி சீனாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த Shi Yan 6 ஆய்வுக் கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Shi Yan 6 கப்பலுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ருகுணு பல்கலைக்கழகம் அதிலிருந்து விலகியது.

இந்த பின்னணியில், கப்பலின் வருகையை அடுத்த மாத இறுதி வரை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியது.

எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அருகில், இந்து சமுத்திரத்தில் ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த Shi Yan 6 கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலின் வருகை தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், கப்பல் வருகைக்கு எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமில் காந்தன்‌ உள்ளிட்ட இருவரை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கிய‌ பாதுகாப்பு அமைச்சு

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவினர்‌ எனும்  குற்றச்சாட்டில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த அந்தோனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகிய இருவரும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்தனர்‌ எனும்‌ குற்றச்சாட்டில் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

அமைச்சரவை மாற்றத்தில் மகிழ்ச்சியில்லை‌ : பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) அமைச்சரவையில் மாற்றம் செய்தார்.

03 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எவ்வாறாயினும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவலையடைந்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தீர்மானம் ஜனாதிபதி எடுத்த தவறான முடிவாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் பலத்தை பாராளுமன்றத்தின் தலைவருக்கு வழங்குகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான்.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவை, அரச பெருந்தோட்ட முயற்சியாண்மை மறுசீரமைப்பு அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் ஜனாதிபதி நியமித்தார்.

அமெரிக்க தூதுவர்‌ இலங்கையின்‌ உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எதிர்காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது.

2022 மே 9 ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தூதுவர் கருத்து தெரிவித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

இரண்டு வாரங்களிற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் கூட்டம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் குழுவின் தலைவர் உறுப்பினர்கள் முப்படை தலைவர்கள் பாதுகாப்பு செயலாளர் உட்பட்டவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்  தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளார்.

ஆயுதமேந்தாத ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து வெளிப்படையான விசாரணையை அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார், ஆர்ப்பாட்டங்களிற்கான மக்களின் உரிமையை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் என தனது கடிதத்தில் சரத்வீரசேகர  தெரிவித்துள்ளார்.

டயர்களை எரிப்பது வீதிகளை புகையிரத பாதைகளை மறிப்பது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அழி;ப்பது பொலிஸார் மீது கற்களை வீசி எறிவது போன்றவற்றை ஆர்ப்பாட்டங்களாக அமைதியான நடவடிக்கைகளாக கருதமுடியுமா என சரத்வீரசேகர தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தூதுவருக்கு இதனை கிரகிப்பதற்கான ஆற்றல் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை குறித்து  அறிக்கை வெளியிடுவதற்கு தனிநபருக்கு உள்ள உரிமை குறித்து அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள சரத்வீரசேகர பொலிஸார் ஆயுதமேந்தாத  ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டனர் என தெரிவித்ததன் மூலம் தற்போது எங்கள் நாட்டில் வசிக்கும் தூதுவர் இலங்கை குறித்து உலகிற்கு பாதகமான செய்தியை அனுப்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்களின் போது அமெரிக்க இராணுவம் எவ்வாறு நடந்துகொண்டது அவர்களை கட்டுப்படுத்தியது என்பதையும் சரத்வீரசேகர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது அறிக்கைகள் மூலம் ஜூலிசங்  அரசாங்கத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்தார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாண, உள்ளூராட்சி தேர்தல்களை நடாத்துவது மிக அவசியம் – மகிந்த தேசப்பிரிய

அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள  முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எனினும் முன்னர் கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய ஆறுமாதங்களில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை ஆணைக்குழு பூர்த்தி செய்வது மிகவும் கடினம்,பல மணித்தியாலங்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டியிருக்கும் ஒருவருட காலத்திற்கு கூட இது நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை அவை இந்த காலத்தின் தேவை எனினும் இவற்றிற்கு முன்னர் எங்களிற்கு காணாமல்போன மாகாண சபை தேர்தலும் புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் அவசியம்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.