கிளிநொச்சி மாணவி காலை உணவு உண்ணாமையால் ஜப்பானிய தூதுவர் முன் மயங்கி விழுந்தார்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 02 ஆ.தா.க பாடசலைக்கு ஜப்பானிய மக்களின் நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத்தை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு வருகை தந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுசி கிடாக்கியை வரவேற்கும் நிகழ்விற்காக காலை உணவு உட்கொள்ளாது வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்த பாண்ட் அணி மாணவி தூதுவருக்கு முன்னால் மயங்கி வீழ்ந்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடும் வெயில் மற்றும் காலை உணவு உட்கொள்ளாத நிலையில் பாண்ட் இசையுடன் ஜப்பானிய தூதுவரை அழைத்துவருகின்ற போதே மாணவி மயங்கி வீழ்ந்துள்ளார்.

மயங்கி வீழ்ந்த மாணவியை உடனடியாக ஆசிரியர்கள் குறித்த இடத்திலிருந்து தூக்கிச் சென்றுவிட்டனர்.

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.

செஞ்சோலை வளாகம்

செஞ்சோலையில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் இன்று (14) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையிலான இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தோடு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம்

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலின்போது படுகொலை செய்யப்பட்ட மூன்று சகோதரிகளின் தாயொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

 

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (14) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் /- வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுச்சுடர் ஏற்றி, உயிரிழந்த மாணவிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

முல்லைத்தீவு – வள்ளிபுனம், செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் 2006 ஆம் ஆண்டு இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று(14) மதியம் 12 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

 

இந்திய ஆதார் அட்டையை ஒத்த டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இந்தியாவின் நன்கொடையின் கீழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எனும் விசேட டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கும் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தமைலையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற சுயதொழிலாளர்கள் அமைப்பின் 1,200 பேருக்கு ஐக்கிய தேசிய கட்சி அங்கத்துவம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தியாவின் நன்கொடையின் கீழ் எமது நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

விசேட டிஜிட்டல் அடையாள அட்டை (Unique Digital Identity) தயாரிக்கும் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைக்காக 450 மில்லியன் இந்திய ரூபா இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோப்பால் பக்லே வழங்கி இருக்கிறார்.

இந்த வேலைத்திட்டத்துக்காக உலகில் உள்ள தகவல் தொழிநுட்பத்தின் பிரதான நிறுவனங்கள் பல எமது நாட்டுக்கு அதுதொடர்பான அறிவை இலவசமாக வழங்கி இருப்பதுடன், அதில் பில்கேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனமான பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் மன்றங்களும் உள்ளடங்குகின்றன.

இந்தியா தற்போது டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை அந்த நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அதன் மாதிரி படிவத்துக்கமையவே எமது நாட்டு மக்களுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை விநியோகிக்க இருக்கிறது.

ஒரு நபரின் உயிரியல் தகவல் (இரத்த வகை முதலிய தகவல்கள்) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவருக்கான தனி இணையத்தள கணக்கில் சேமிக்கப்படும். குறி்த்த நபரின் அனுமதியுடன், வங்கிப் பரிவர்த்தனைகள் அல்லது பிற நிறுவனத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தத் தகவல்களை அனுப்பும் வசதியும் இந்த புதிய அடையாள அட்டையுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

நபரொருவர் இந்த வழியில், தனது கடமை தேவையை மேற்கொள்வதற்காக குறித்த நிறுவனத்துக்கு செல்லாமல் இணையத்தளம் மூலம் மேற்கொள்ள முடியுமான வசதி கிடைக்கிறது.

முழு நாட்டையும் ஈ வலயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனைக்கமைய இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கபடுவதுடன் இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணையில் இடம்பெறும் எதிர்வரும் வருடம் இறுதியாகும்போது முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றார்.

பொலிஸாரிடம் நம்பிக்கை இல்லை; இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி மக்கள் போராட்டம்

பொலிஸார் மீது நம்பிக்கை இல்லாததால், தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்று திங்கட்கிழமை (14) காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாார் மீது நம்பிக்கை இல்லை. பொலிஸார் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ்த் தரப்புக்கள் சரியான பொறிமுறையை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும்

தற்போது எம் தாயகமான வட-கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் மிக வேகமாக தினம் தினம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இதனை எதிர்கொள்ள சரியான பொறிமுறை ஒன்று அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து மேற்கொள்வது அவசியமானது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் பல்கலைக்கழக சமூகத்தினது பங்களிப்பு புலமைசார் தளத்தில் அத்தியாவசியமானது அதே போன்று சட்டரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ள சட்டவாளர்களின் பங்களிப்பு இப்போது போன்று தொடர்ந்து கிடைப்பதுடன் அது அனைத்து பிராந்திய மட்டத்திலும் ஒருங்கிணைத்த நிபுணத்துவத்துடன் இருப்பது மேலும் பலம் சேர்க்கும்.

அத்துடன் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் பல்கலை உள்ளிட்ட உயர் கல்வி மாணவர்கள் மேலும் வீச்சாக போராட்டங்களை மக்கள் சார்ந்தாக ஒழுங்கமைக்க வேண்டும்.

அரசியலாளர்கள் தொடர் அழுத்தத்தை அரசுக்கு வழங்குவதுடன் பாராளுமன்றை புறக்கணித்தல் உட்பட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தயாராக வேண்டும்.

மேலும் பன்னாட்டு மற்றும் இந்திய அரசின் கவனத்தை மேலும் ஈர்த்து இந்த பாரிய பௌத்த மேலாண்மையை திணிக்கும் பூர்வீக தமிழர்களின் சிவ வழிபாட்டு இடங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக எம்முள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து முன்வருவோம்.

அமைப்புசார் நிலையில் இயங்கும் நாம் அனைவரும் எம் அமைப்புக்ளின் தனித்துவங்களை பேணும் அதே நேரம் எம் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக இருப்பை இத்தீவில் நிலைநிறுத்தவதற்காக ஒருங்கிணைந்த கட்டமைப்பாக செயற்பட இந்த தீர்க்கமான தருணத்தில் அழைப்பு விடுகின்றோம்.

அதே நேரம் இந்த பிரச்சினையை இதயசுத்தியோடு அணுகி அரசு தீர்க்க தவறின் இந்த தீவில் இனங்களிற்கிடையே சமாதான சகவாழ்வு தொடர்ந்து கேள்விகுறியாகி நாட்டின் எதிர்காலம் அதலபாதாளத்திற்கு செல்லும் என்பதை சுட்டிகாட்டுகின்றோம்

தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என பகிரங்கமாக கூறும் அளவிற்கு வந்துள்ள அரசியலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதும் தமிழரின் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக மிக மோசமான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

இருப்பினும் இவற்றை செய்ய தவறின் தமிழர் நாம் தொடர் சாத்வீக போராட்டங்களிற்கும் ஒத்துழையாமை இயக்க முன்னெடுப்புகளிற்கும் தள்ளப்படுவோம் என இந்த சந்தரப்பத்தில் அரசிற்கு ஆழமாக வலியுறுத்துகின்றோம்.

வடக்கு,கிழக்கில் விகாரைகள் மீது கைவைப்பவர்களின் தலையை எடுத்துக் கொண்டே களனிக்கு வருவேன் – மேர்வின் சூளுரை

வடக்கு-கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கை வைப்போரின் தலையை எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேலும் கூறுகையில்,“ யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள், எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர். கிழக்கில் உள்ளவர்கள் எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.தெற்கிலுள்ளவர்கள் எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.

இங்கு பகுதி பகுதியாக ஒன்றும் இல்லை.இது எமது தாய்நாடு.அதற்கான உறுதிப்பத்திரம் எம்மிடமே உள்ளது. நீங்கள் விரும்பினால் எங்களுடன் சமாதானமாக நல்லிணக்கத்துடன் வாழ முடியும்.

மேலும் வடக்கிலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். பிரபாகரனின் பகையை வைத்துக்கொள்ள வேண்டாம். பிரபாகரன் ஆட்கொலை செய்தார். இந்த நாட்டின் இராணுவத்தினர், பொலிஸார் கொன்று குவித்தார். அவர்களின் குடும்பங்கள் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளது. அந்த பகை இன்றும் உள்ளது. இன்றும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதிக்கு நான் மிகவும் மரியாதையுடன் ஒன்றைக் கூறுகின்றேன். இந்த நாட்டிலுள்ள வளங்களை புலம்பெயர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், வீதிக்கு இறங்குங்கள் என களனி மக்களுக்கு கூறுகின்றேன்.

மேலும் இந்த கூட்டத்தின் பின்னர் நான் வடக்கு கிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகள் மீது கை வைக்க வந்தால், நீங்கள் மகாநாயக்கர்கள் மீது கை வைக்க வந்தால், நான் வெறுமனே களனிக்கு வர மாட்டேன். உங்களின் தலையை எடுத்துக்கொண்டு தான், களனிக்கு மீண்டும் வருவேன். எனக்கு பணியாற்றுவதற்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் மீண்டும் நாட்டின் ஜனாதிபதி ஆக வேண்டுமாயின், ராஜபக்ச திருடர்களை பிடியுங்கள், இந்த நாட்டின் திருடர்கள், தரகு பெறுவோர் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இடங்களில் 6 வீதமானவை, பசில் ராஜபக்ச என்ற தரகுதாரர், யாருக்கு கொடுத்தார். இன்று மக்களுக்கு மின்சாரம் இல்லை. விவசாயம் அழிவடைந்துள்ளது, குடிநீர் கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன.

இதேவேளை நுவரெலியாவில் மகிந்த ராஜபக்ச, கிரிக்கெட் விளையாடுகின்றார். ராஜபக்ச குடும்பத்தினர் கிரிக்கெட் விளையாடுகின்றனர். கிரிக்கெட் விளையாடும் நேரமா இது? 13ஐ வழங்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். சிலர் அதனை வேண்டாம் என்கின்றனர்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோருக்கு நான் ஒன்றை கூறுகின்றேன். நாம் ஜனாதிபதி தேர்தல் முறையை மாற்றி அமைப்போம் என உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வாக்குறுதி எடுங்கள்.”- என கூறியுள்ளார்.

200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக வந்தவர்களை நினைவில் நிறுத்துகிறேன் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று முடிந்த தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனியானது 200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருகை தந்தவர்களை நினைவுகூருவதாக உள்ளது என்பதை தான் நினைத்துப் பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில்,

இலங்கையின் ஏனைய சமூகத்தினருடன் தாங்களும் சரிசமமாக வாழ்வதற்கான போராட்டத்தை நினைவுகூரும் விதத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு வார நடைபயணி முடிவுக்கு வந்துள்ளது.

200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக வந்தவர்களை நினைவுகூரும் விதத்திலும் முன்னெடுக்கப்பட்ட நடைபயணத்தில் கலந்துகொண்டவர்களை நினைவில் நிறுத்துகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இது பொருத்தமான தருணம் அல்ல – பொதுஜன பெரமுன

13வது திருத்தத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இது உரிய தருணமல்ல என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இது பொருத்தமான தருணமிலலை என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் தெரியப்படுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக உள்ள பொதுஜனபெரமுனவின் பிரிவும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்துள்ளது.

பலவீனமான பொருளாதார நிலை காரணமாக அரசாங்கமே நெருக்கடியான நிலையில் உள்ள இந்த தருணத்தில் அரசாங்கம் 13 வதுதிருத்தத்தை விஸ்தரிப்பதற்கு இணங்கினால் அரசாங்கம் தேவையற்ற அழுத்தத்திற்குள்ளாகலாம் என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்

நாடு வலுவான பொருளாதாரநிலையில் உள்ளவேளை 13வதுதிருத்தத்தை விஸ்தரிப்பது குறித்து சிந்திக்கலாம் என்ற யோசனையை முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரட்சி காரணமாக அரசாங்கம் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்

அரசாங்கம் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.

தொடரும் வரட்சியான காலநிலை அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

அரசாங்கம் அவசரமாக மின்சாரத்தை தனியார் துறையினரிடமிருந்து கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ள அதேவேளை வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நஸ்ட ஈட்டை வழங்கவும் தீர்மானித்துள்ளது.

தனியார் துறையினரிடமிருந்து அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இந்த வாரம் அனுமதியளித்துள்ளது.ஆறுமாத காலத்திற்கு நாளாந்தம் 100 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

அடுத்த மாதம் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை நீர்மின்சாரஉற்பத்திபாதிக்கப்படுவதால் தேவை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள இலங்கை மின்சாரசபை நாளாந்தம் 150 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்யவேண்டியிருக்கும்என தெரிவித்துள்ளது.

நீர்மின் உற்பத்தியில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நுரைச்சோலைமின்நிலையத்தின் ஒரு பிரிவு தொழில்நுட்ப பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சியைக் கைப்பற்ற ஜே.வி.பி சதி – ஜனாதிபதி ரணில்

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிரபல ஊடகம் ஒன்றும் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி கூட்டத்தில் இந்த விடயங்களை தெரிவித்த ஜனாதிபதி, அரச கவிழ்ப்பு சதி தொடர்பான புலனாய்வு அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார். மேலும் குறித்த சதி திட்டம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்து ஜனாதிபதி கூறுகையில்,

நாட்டில் காணப்படும் வறட்சியை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியும் பிரபல ஊடகம் ஒன்றும் வன்முறைகள் ஊடாக ஆட்சி கவிழ்ப்பு சதியை முன்னெடுத்து வருகின்றன. கடந்த ஆண்டை போன்று மக்களை வன்முறையாளர்களாக்கி வீதியில் இறக்கி அரச எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை போராட்டங்களின் இறுதி இலக்கு ஆட்சி கவிழ்ப்பு சதியாகும். இதனை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான குழுவே முன்னெடுக்கின்றது. சதித்திட்டத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. புலனாய்வு அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த வீடியோ ஆதாரங்களை அவதானியுங்கள். ஆதாரங்களை உள்ளடக்கிய அறிக்கையையும் பாருங்கள். மீண்டும் நாட்டை வன்முறைக்குள் கொண்டுச் செல்ல இடமளிக்க முடியாது.

எனவே ஜே.வி.பியின் ஆட்சி கவிழ்ப்பு சதி குறித்து கவனத்தில் கொள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை எதிர்வரும் நாட்களில் நியமிக்க உள்ளேன். பாதுகாப்பு தரப்புகளுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு தற்போது ஒரு சுமூகமான நிலைக்கு வந்துள்ளது. பொருளாதார மறுசீரமைப்புகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் முழுமையான ஒத்துழைப்புகள் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு கிடைத்துள்ளன. பல்வேறு மக்கள் நலசார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அனைத்து வழிகளிலும் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முயற்சிகளை முன்னெடுத்துள்ளேன்.

இவற்றை சீரழித்தும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கவுமே முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வறட்சியை காரணம் காட்டி மக்களை வன்முறைக்குள் தள்ளுவதற்கு இடமளிக்க முடியாது. விவசாயத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாய நடவடிக்கைகளுக்கு என கூறி சமனல குளத்திலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பதாகவே தண்ணீர் விடுவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டதொரு செயல்பாடாகும்.

எனவே சமனல குளத்திலிருந்து தண்ணீரை விடுவித்தமை குறித்து முழுமையான அறிக்கையை கோரியுள்ளேன். யார்? எந்த நோக்கத்திற்கு இதனை செய்தார்கள் என்ற முழுமையாக விசாரணைகளை முன்னெடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். அநாவசியமான காலப்பகுதியில் சமனல குளத்தின் நீர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் ஏற்கனவே முறையிட்டுள்ளனர்.

உடவலவ நீர்தேக்கத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாததொரு தருணத்தில் சமனல குளத்திலிருந்து எவ்வாறு நீரை விடுவிக்க முடியும். இது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதே போன்று உடவலவ நீர்தேக்கத்தினால் பயனடைகின்ற 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில், 13 ஆயிரம் ஏக்கர் நெல் செய்கைக்கும் ஏனைய 12 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர் செய்கைக்குமே ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், 25 ஆயிரம் ஏக்கரிலும் நெல் பயிரிட்டமையானது, யாருடைய ஆலோசனைகளின் பேரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற பிரச்சினையும் அங்குள்ளது.

இந்த விடயம் குறித்தும் தனித்து விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.