நாமலின் திருமண நிகழ்விற்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் போது, இலங்கை மின்சாரச சபை வழங்கிய சேவைக்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளின் ஹேவகே இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவரால் கோரப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே இலங்கை மின்சார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை ஜூலை 26ஆம் திகதி கேட்டிருந்ததாகவும், மின்சார சபை இன்று தகவல் வழங்கியதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெட்டியவில் உள்ள வீடொன்றில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்வார் எனவும் பாதுகாப்பு விளக்குகளை பொருத்துமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு, பின்னர் உபகரணங்களை அகற்றியதாகவும், இதற்காக 2,682,246 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

செலவிடப்பட்ட தொகை தொடர்பான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் தொகை வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மிஹிந்தலை விகாரையில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைப் போன்று மெதமுலன வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டுமென நளின் ஹேவகே தெரிவித்தார்.

தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை பொறுத்துக் கொள்ள முடியாது – வேலன் சுவாமிகள்

தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தகமானியிலே சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்பொருட் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் காலங் காலமாக வழிபட்டு வந்த ஆதி வழிபாட்டுமுறைப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள தமிழர்களின் வடக்குக் கிழக்குத் தாயகத்திற்கு பௌத்தம் கெண்டுவரப்பட்ட சங்கமித்தை வந்த காலத்தில் சிங்களம் என்ற மொழி, இனம் கிடையாது.

ஆனால் அந்தக் காலத்தில் தமிழர்கள் ஆட்சி புரிந்தும் பாரம்பரியமாக வழிபாடுகளை நடாத்தியும் வந்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது.

தொல்பொருள் என்பது மிகவும் தொன்மையை எடுத்துக் கூறுவது. அந்த வகையில் இங்கு அனைத்து இடங்களிலும் தமிழர்களின் வழிபாட்டிடங்களே காணப்பட்டிருக்கின்றன. மாறாக சி்ங்கள பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் எள்ளளவும் இடங்கிடையாது.

தமிழர் தாயகத்தில் பறாளாய் முருகன் ஆலயம், கீரிமலை, குருந்தூர் மலை, தையிட்டி, வெடுக்குநாறி மற்றும் மயிலத்தனைமடு போன்ற இடங்களைத் தொல்லியற் திணைக்களம் அடாவடியாக வர்த்தகமானி மூலமாகவும் ஏனைய விதங்களூடாகவும் கையகப்படுத்தி எமது நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இவ் வர்த்தகமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். தமிழர் தரப்பிலுள்ள அனைவரும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.

சர்வதேசம் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதால் நிச்சயம் நீதி கிடைக்கும். எமக்கென்று ஒரு காலம் வந்து சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எமக்குரிய தீர்வை நாமே தீர்மானிக்கின்ற பொழுது பார்த்துக்கொள்ளலாம்.

அறம், நீதி என்றோ ஓர் நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களின் நிரந்தரதீர்வு சர்வதேச கண்காணிப்புடன் பொதுசன வா்கெடுப்பாக நடாத்தப்பட்டு எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும் என்றார்

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்கத் திட்டம்

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா வெள்ளிக்கிழமை (04) தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது, வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் , மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் செயலாளர்கள் கடற்படை அதிகாரிகள் இந்திய நலன்புரியாளர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

குறித்த விஜயத்தின் போது அமைச்சருடன் கலந்து கொண்டோர் தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் தலைமன்னார் பியர் கடற்படையின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

இங்கு அவர் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாக இரு பகுதிகளை அவர் இங்கு சுட்டிக்காட்டினார். ஒன்று உடனடி அபிவிருத்தித் திட்டம் அடுத்து நீண்ட காலத்திற்கு செய்யும் திட்டங்களை அவர் வலியுறுத்தினார்.

அதாவது மூன்று மாதங்களுக்குள் குறுகிய திட்டத்தை நிறைவு செய்து தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பித்து மக்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பிரயாணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தியுள்ளார்.

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடபட்ட அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று சுழிபுரத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பறாளாய் முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை கூட்டுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் வேண்டுகோள்

இலங்கை – இந்தியப் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினைக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை வியாழக்கிழமை (03) பாராளுமன்றத்தில் மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது சபாநாயருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பர நீண்டகாலப் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது என்றும் உயர்ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டினார்.

எரிசக்தித் துறை, கல்வித்துறை மற்றும் டிஜிட்டல் துறை உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இவ்விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார்.

இலங்கை, இந்தியப் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினைக் கூட்டுமாறு கேட்டுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர், அதன் உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் கலந்துகொண்டார்.

மூதூர் தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டமையின் 17 ஆம் அண்டு நினைவு தினம்

மூதூரில் அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04.08.2023) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 17 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இப்­ப­டு­கொ­லையில் முத்­து­லிங்கம் நர்மதன், சக்­திவேல் கோணேஸ்­வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்­க­ராஜா பிறீமஸ், ஆனந்­த­ராஜா மோகனதாஸ் ரவிச்­சந்­திரன், ரிஷி­கேசன், கன­க­ரத்­தினம் கோவர்த்­தனி, கணேஷ் கவிதா, செல்­லையா கணேஷ் சிவப்­பி­ர­காசம் ரொமிலா, வயி­ர­முத்து கோகி­ல­வ­தனி, அம்­பி­கா­வதி ஜெய­சீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரை­ராஜா கேதீஸ்­வரன், யோக­ராஜா கோடீஸ்­வரன், முர­ளீ­தரன் தர்­ம­ரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா, ஆகியோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த அக்ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த மேற்­படி 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்­காரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து நிலத்தில் குப்­பு­றப்­ப­டுக்கப் பண்ணி பின்­பக்­க­மாக தலை­யில் சுட்டு படு­கொ­லை­ ப­டுத்­தி­ய­தாக அன்­றைய செய்­திகள் தெரி­வித்­தன.

சுழிபுரம் பறாளாய் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை  நாட்டிய மரம் என  வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை காலை பத்து மணியளவில் சுழிபுரம் சந்தி. பகுதியில் காலை கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், வரலாற்றினை திரிபுபடுத்தும் சிங்கள அரசு இன்னும் ஒரு படி மேல் சென்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய மேலும் வரலாற்றினை திரிபடைய செய்துள்ளது.

சங்கமித்தா இலங்கைக்கு வருகை தந்ததாக கி.மு 3ஆம் நூற்றாண்டு என வரலாற்று மூலாதாரங்களில் திரிபடைய கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆலய தர்மகர்த்தாவினர் குறித்த ஆலயம் 1768 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் பொழுது எதுவித அரச மர எச்சங்கள் குறித்தும் தமது முன்னையவர்களோ அல்லது ஆதாரங்களோ குறிப்பிடவில்லை எனவும் தற்பொழுது ஆலயத்தில் உள்ள மரம் மிக குறைந்தளவான காலப்பகுதிக்கு உரியது எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆலயத்தினரிடம் ஆகக்குறைந்த  கலந்துரையாடலை கூட செய்யாது  எதேச்சதிகாரமான முறையில் இந்த  சிங்கள அரசு திட்டமிட்ட  பெளத்தமயமாக்கல் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தொடர்ச்சியாக சிங்கள  அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் இதனை வலியுறுத்தி நாளைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சுழிபுரம் சந்தி பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

ஆகவே இதனை வலுச்சேர்க்கும் முகமாக பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தமிழ் தேசியத்தின்பால் செயற்படும் இளைஞர் யுவதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கட்சிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டைக்காக இந்தியாவினால் 450 மில்லியன் இந்திய ரூபாய்கள் அன்பளிப்பு

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விப்பத்திரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உரிய கால வரையறையின்படி, அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முற்பணமாக இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட தொகையில் 15% சதவீதமான, அதாவது 450 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான காசோலையை, இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளித்தார்.

உரிய கால வரையறைக்கமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், வாரத்திற்கு ஒருமுறை கூடி அதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யுமாறும் சாகல ரத்நாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும்,  இந்திய – இலங்கை ஒத்துழைப்பின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, இதற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் 300 பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாட்டில் தளர்வு

செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்தில் நாட்டிற்கு 45.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அண்மைய பொருளாதார நெருக்கடியுடன் சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி, 1,465 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதன் பிறகு டிசம்பர், பெப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் பொருட்களின் ஒரு பகுதி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

 

 

தமிழ் அரசியல்வாதிகள் காணி,பொலிஸ் அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோ ரீதியான உற்சாகத்தினை வழங்குகின்றனர் – சனத் நிசாந்த

மாகாணசபையில் பாரிய அதிகார கட்டமைப்பு இருக்கும் பொது பணத்தை தீருப்பி அனுப்பி விட்டு தற்போது பொலிஸ் காணி அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோரீதியான உற்சாகத்தினை தமிழ் அரசியல்வாதிகள் வழங்குகின்றனர் என நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்தார்.

வவுனியா தரணிக்குளத்தில் குழாய் மூலமான நீர்ப்பாசன திட்டத்தினை பெறுவதற்காக மக்களின் செலவீனங்களை உள்ளடக்கி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்க கருத்துதெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வட மேல் மாகாணசபையில் நான் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளேன். இதன் அடிப்படையில் பார்க்கின்ற போது தமிழ் அரசியல்வாதிகள் காணி பொலிஸ் அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோ ரீதியான உற்சாகத்தினை வழங்குகின்றனர்.

மாகாணசபை என்பது விசாலமான அதிகாரங்களை கொண்ட கட்டமைப்பு. வடக்கு கிழக்கு மாhகாணசபையில் 13 திருத்தச்சட்டம் மற்றும் பொலிஸ் காணி அதிகரம் என கூறிக்கொண்டிருப்பதை விடுத்து 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மாகாணசபைக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை எப்படி வெல்லலாம் என சிந்தி;க்க வேண்டும்.

13ஆவது திருத்தச்சட்டம் ஊடாகவே மத்திய அரசும் மாகாண அரசும் சம்பந்தப்படுகின்றது. பெரு வீதிகள், புகையிரதம், மின்சாரம், இலங்கை போக்குவரத்து சபை, நீதிக்கட்டமைப்பு, தேசிய பாடசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் தவிர அனைத்தும் மாகாணசபையின் ஊடாக செயற்படுத்தவும் நிறுவனங்களாகும்.

அவற்றை வெற்றி கொண்டு வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முடியும். 13 ஆவது திருத்த சட்டத்தினால்;. கிடைக்காத சின்னச்சின்ன பிரச்சனைகளை விடுத்து கிடைத்ததை வெற்றி கொண்டு செயற்படுத்த பாடுபட வேண்டும்.

13 பற்றி பேசிக்கொண்டு வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியை கூட உரிய முறையில் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் நிலை காணப்பட்டது.

எனவே கிடைத்த அதிகாரத்தினை பயன்படுத்தி அதனூடாக செய்ய முடிந்தவற்றை செய்ய வேண்டும். அதனைவிடுத்து கிடைக்காததற்காக காத்திருப்பது தேவையற்றது என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.