IMF இன் மேலும் எட்டு நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய இலங்கை அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த 33 நிபந்தனைகளை ஜூன் இறுதிக்குள் நிறைவேற்றியுள்ள இலங்கை அரசாங்கம் மேலும் எட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.

‘IMF Tracker’ எனும் இணையக் கருவி மூலம் இலங்கையின் செயல்திறனைக் கண்காணித்து வரும் வெரிடே ரிசர்ச் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் நான்காக இருந்த நிறைவேற்றப்படாத நிபந்தனைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, ஜூன் எட்டாக அதிகரித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுதல், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுதல் என்பனவும் இதில் அடங்கும்.

மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான அனைத்து 52 முக்கிய அரச நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கான திட்டத்தைத் தயாரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

பந்தயம் மற்றும் கேமிங் வரிகளின் திருத்தம், இலங்கை மத்திய வங்கி சட்டம் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டங்களை இயற்றுவதற்கு உறுதியளித்திருந்த போதும் இந்த வரைவுகள் இன்னும் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படாமை காரணமாக மேலும் தாமதமாகியுள்ளது.

29,000 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாகாண காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில்இ வனத்துறை, மகாவெலிய மற்றும் தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு மக்களுக்குச் சொந்தமான சுமார் 100,000 ஏக்கர் காணிகளை எல்லைகளை பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளதாக மாகாண கிராம அதிகாரிகள் மற்றும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் அந்த காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவு கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரடியன்பற்று, புதுக்குடியிருப்பு,ஒட்டுச்சுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் வெலிஓயா ஆகிய மாகாணங்களின் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

விடுவிக்கப்படவுள்ள 29,000 ஏக்கர் காணிக்கு மேலதிகமாக மேலும் 17,000 ஏக்கர் காணியில் விவசாயம் செய்வதற்கு வன பாதுகாப்பு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மக்கள் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான தேசிய கொள்கை வகுக்கும் குழுவிடம் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் இலங்கை விஜயம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் யுவான் ஜியாஜுன் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அவர் ஜூலை 19 முதல் 23 வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான யுவான் ஜியாஜுன், சீனாவின் சோங்கிங் நகர சபையின் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.

அவரது இலங்கை விஜயத்தின் போது, இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ் – சென்னை நாளாந்த விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சேவையானது யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய கால அட்டவணையின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து விமானம் 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்திய அலையன்ஸ் எயார் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் சேவைகளை தொடங்கியது.

இதனை தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு ஒருமுறை என யாழ்ப்பாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் சேவைகள் இடமபெற்றன.

அதன்படி கடந்த ஜூன் மாதம் வரை, கொரியர் சேவை மூலம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே 12,000 க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக தமிழர்கள் தமது இனத்துவ அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது – அமைச்சர் ஜீவன்

மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சிறுவர்களின் நலன் கருதி பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதிகளில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான தெளிவுபடுத்தலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,” இலங்கையில் இவ்வருடம் சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையக தமிழர்கள் பலர், இலங்கை தமிழர்கள் என்பதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதனால் மலையக தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவிட்டது. சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேரே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல கணக்கெடுப்புக்கு வரும் சில அதிகாரிகளும், தோட்டத்தில் வாழ்பவர்கள்தான் இந்திய தமிழர்கள், நகரத்தில் வாழ்பவர்கள் இலங்கை தமிழர்கள் என எண்ணிக்கொண்டு கணக்கெடுப்பு நடத்துகின்றனர். மேலும் சிலர் தமிழ் பேசினால் அவர்கள் இலங்கை தமிழர்கள் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இம்முறை இவ்வாறான தவறுகளுக்கு இடமளிக்க கூடாது. எனவே, மலையக தமிழர்கள் தம்மை மலையக தமிழர்களாகவே கணக்கெடுப்புக்குள் உள்ளடக்க வேண்டும். அப்போதுதான் எமது இனத்தின் இருப்பு பாதுகாக்கப்படும்.

மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும். இது காங்கிரசுக்கான கணக்கெடுப்பு அல்ல. மக்களுக்கானது, எனவே, இந்த விடயத்திலும் எவரும் அரசியல் நடத்தக்கூடாது.

அதேவேளை, மலையக அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்றால் அதற்கான நடவடிக்கை அவசியம். மக்களுக்கு சேவை செய்யவே நாம் வந்துள்ளோம். அதற்காகவே மக்கள் வாக்களிக்கின்றனர். சேவை வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும். எனவே, அரசியல் வாதிகளை கடவுளாக பார்க்கும் நிலை மாற வேண்டும். சமூக நீதி கோட்பாடு முக்கியம்” – என்றார்.

ஏழை நாடுகள் கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு ஐ.நா கோரிக்கை

ஏழை நாடுகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு உலக நிதி அமைச்சர்களிடம் ஐநா வளர்ச்சித் திட்டம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு 25 குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் வருவாயில் 20 சதவீதத்தை கடன் சேவைக்காக செலவிட்டதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு, கடன் சுமை தாங்க முடியாததாகிவிட்டது என்றும் ஐநா வளர்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் அச்சிம் ஸ்டெய்னர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று, பணவீக்கம் மற்றும் கடன் வாங்கும் செலவுகளின் அடுத்தடுத்த எழுச்சி 165 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர், சுமார் 1.65 பில்லியன் பேர் ஒரு நாளைக்கு 3.65 டொலருக்கும் குறைவாகவே செலவு செய்கின்றார்கள் என கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிட்டளவு மக்களுக்கு உணவை பெற்றுக்கொள்வதில் கூட பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் ஐநா வளர்ச்சித் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் வறுமையின் அதிகரிப்பு ஆபத்தானது என சுட்டிக்காட்டிய ஸ்டெய்னர், வறுமையில் உள்ள 165 மில்லியன் மக்கள் அனைவரும் குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கான இறக்குமதித் தடை விரைவில் நீக்கம்

வாகனங்கள் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சின் போதே ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்பட மேலும் 930 பொருட்களின் இறக்குமதித் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதேநேரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 500 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 250 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

ஏற்கனவே தடை செய்யப்பட்ட பொருட்களை இரண்டு கட்டங்களாக செப்டம்பர் முதல் வாரத்திற்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார ரீதியாக இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவியளிக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற இந்திய வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக இலங்கையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவுப் பாலத்தை உருவாக்க முடிந்துள்ளது.

அது இலங்கை மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். இலங்கை மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் அந்த மக்களுடன் இந்தியா இருந்தது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்திய அரசாங்கம் உட்பட வர்த்தக சமூகம் உதவிகளை வழங்கியது.

இலங்கை, தற்போது நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது என்றே கூற வேண்டும்.

நிதி நெருக்கடியின் போதும், இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் வியாபாரங்களை ஆரம்பித்து இலங்கையின் நிதி நிலைமை நன்றாக உள்ளது என்ற செய்தியை உலகுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தார்கள்.

இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய வர்த்தகர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள அரசாங்கங்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறே ஆதரவளித்துள்ளார்.

இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு வழங்கப்படும் என்பதை இங்கு நினைவுகூர்கிறேன்.

இது இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் வாக்குறுதி என்றே கூற வேண்டும்.- என்றார்.

கடற்றொழில் அமைச்சர் பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைக்கிறார் என குற்றச்சாட்டு

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களிடம் சலுகையைப் பெற்றும், பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைத்தும் வருவதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (13) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய நாட்டிலே மீனவர்கள் பல கோணங்களிலும் பல இன்னல்கள் சந்தித்து கொண்டு வருகின்ற இந்த நேரத்திலே, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு செயற்கையான துன்பங்களையும் துயரங்களையும் கொடுத்துக் கொண்டுவரும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது.

நாம் எமது கடற்தொழில் சம்பந்தமான விடயங்களையும் அதன் அபிவிருத்தி தொடர்பான விடயங்களையும் அரசிடம் இருந்து கேட்டுப் பெறுவதுமே வழக்கம். அந்த வகையிலே இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் சில விடயங்களை முன்வைத்த போதும் எந்தப் பலனும் கிட்டவில்லை.

இந்தியாவில் இருந்து வருகின்ற இழுவை மடி தொழிலாளர்கள் எங்களுக்கு செய்கின்ற அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள் என்பவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினால் அங்கே கடத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்து அந்தப் போராட்டத்தை நிறுத்தி அதனை முறியடிக்கின்றார்.

உள்ளூர் இழுவை மாடி தொழில் செய்யக்கூடாது என்ற சட்டம் அரச வர்த்தமானி அறிவித்தலில் இருந்த போதும் கூட, உள்ளூர் இழுவை மடித்தொழிலைச் செய்து நமது எஞ்சிய வளங்களையும், வாழ்வாதாரத்தையும் உள்ளூர் இழுவைமடி தொழிலாளர்கள் சீரழித்து வருகின்றார்கள். இதற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அங்கேயும் வந்து குறுக்கே விழுந்து அந்தப் போராட்டத்தை தடுப்பதும் இல்லாமல் அந்த இழுவை மடி தொழிலாளர்களுக்கு தானும் ஊக்கம் கொடுத்து ஏதோ சலுகையைப் பெற்று, அந்தத் தொழிலை மீண்டும் மீண்டும் சட்டத்திற்கு முரணாக செய்வித்துக் கொண்டு வருகின்றார் கடற்தொழில் அமைச்சர்.

அட்டைப் பண்ணைகளால் தமக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை நாங்கள் தெளிவுபடுத்தி பல முறைப்பாடுகளை செய்தாலும் அதனை முறியடித்து அட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி கொடுப்பது மட்டுமில்லாமல் அதில் தானும் பினாமிகளை வைத்து, தனக்கு சொந்தமான அட்டைப் பண்ணைகளையும் போட்டு அங்கே மீனவர்களுடைய வாழ்வாதாரத்தையும் சுரண்டிக் கொண்டு வருகின்றார்.

எங்களுடைய பிரச்சனைகளை சொல்லக் கூடிய ஒருவராக மீன்பிடி அமைச்சர் இருக்க வேண்டிய நிலையில், நாங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக, எங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைக்கின்ற, எங்களை அழிவு பாதையில் இட்டுச் செல்கின்ற ஒரு வழியை வகுக்கின்ற இக்கட்டானவராகவே எமது மீன்பிடி அமைச்சர் காணப்படுகின்றார்.

என்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றதிலிருந்து வடபகுதியிலே என்னென்ன அபிவிருத்தியை செய்திருக்கின்றார் என நாங்கள் கோடிட்டு பார்க்க வேண்டும். வடபுலத்தில் எங்கேயாவது ஒரு மீன்பிடித் துறைமுகம் வந்திருக்கின்றதா?,

அல்லது நங்கூரம் இடும் மையம் வந்திருக்கின்றதா?, அல்லது மீனவர்களுக்கு வசதியாக எரிபொருள் நிலையங்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றாரா?, அல்லது அவர்களுக்கு குளிரூட்டி பெட்டிகள் ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றாரா?, இது தவிர போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பல்லாயிரம் பேருள்ள நிலையில் இன்று வரை அவர்களுக்கான வாழ்வாதாரமாக ஏதாவது அரசிடமிருந்து தொழில் உபகரணங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றாரா? எதுவுமேயில்லை.

இப்படியாக எங்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாக எங்கள் அபிவிருத்தியை வளர விடாமல் தடுக்கின்ற ஒருவராக தங்களது மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாவனந்தா செயற்பட்டு கொண்டு வருகின்றார். அந்த வகையிலே அவரிடம் முறைப்பாடு செய்து எந்தவொரு செயல்பாடுகளையும் செய்ய முடியாது. ஆகையால் ஜனாதிபதியை சந்தித்து அவரிடம் சில முறைப்பாடுகளை செய்யலாம் என நினைத்திருக்கின்றோம் – என்றார்.

மடியில் கனம் இருப்பதால் பிதற்றுகிறார் கமால் குணரட்ன – சபா குகதாஸ்

மடியில் கனம் இருப்பதால்  கமால் குணரட்ன பிதற்றுகிறார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரின் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஓய்வு நிலை இராணுவத் தளபதியும் ஆன கமால் குணரட்ன ஊடக அறிக்கையில் எதற்கு எடுத்தாலும் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள் என பிதட்டியுள்ளார்.

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் நடந்தால் இறுதிப் போரில் முக்கிய தளபதியாக வன்னிப் போர்க்களத்தில் நின்ற கமால் குணரட்ன மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தினால் உளற ஆரம்பித்துள்ளார்

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச படைகளினாலும் ஆட்சியாளர்களினாலும் மேற் கொள்ளப்பட்ட மேற் கொள்ளப்படுகின்ற அநீதிக்கு ஆட்சியாளர்களினால் நீதி கிடைத்த வரலாறு இருக்கிறதா? நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பை மதித்து நடந்த சந்தர்ப்பம் உண்டா? உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களின் மூலம் நீதி கிடைத்ததா ? இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள் நாட்டில் நீதி கிடைக்கும் என நம்ப தயார் இல்லை முழுமையான நம்பிக்கையை இழந்த பின்னர் சர்வதேச நீதியை கோரி உள்ளனர்.

இறுதிப் போரில் அரச படைகள் மேற் கொண்ட யுத்தக் குற்றங்கள் இனப்படுகொலைகள் யாவற்றுக்கும் பக்கச் சார்ப்ற்ற விசாரணை நடப்பதாக இருந்தால் கமால் குணரட்ன உற்பட்ட குழுவினர் போர்க்குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளதால் பிதட்டுகிறார் பாதுகாப்பு செயலாளர்.

ஏப்பிரல் 21 படுகொலைக்கு கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் கதவினை தட்டினார் என்பதை குறுகிய காலத்தில் கமால் மறந்து விட்டாரா? கர்தினால் உள் நாட்டில் நீதி கிடைக்காமையால் தான் சர்வதேசத்தின் கதவுகளை திறந்து நீதியை பெற்றுத் தருமாறு கேட்டார் என்பதை உலகமே அறியும் கமாலின் கருத்தை பார்த்தால் கர்தினாலும் சிறுபிள்ளைத் தனமாகவா நடக்கிறார்? இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.