நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே ! – சரத்வீரசேகரவின் கருத்துக்கு எதிராக அணிதிரண்ட சட்டத்தரணிகள்

பாராளுமன்றில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடமாகாண சட்டத்தரணிகள் இணைந்து கண்டண போராட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (11) காலை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்தில் கடந்த 04.07.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா களவிஜயத்தை முன்னெடுத்த போது அங்கு அங்கு வருகை தந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களை அந்த இடத்தில் தெரிவிப்பதற்கு நீதிபதி அனுமதி மறுத்திருந்தார்.

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிச் சென்ற சரத் வீரசேகர கடந்த 07.07.2023 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தமிழ் நீதிபதிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் தமிழ் நீதிபதிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளோடு இணைந்து வடக்கினுடைய ஏனைய மாவட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டத்தரணிகள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் பாராளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே!, நீதித்துறை சுதந்திரம் ஓங்குக!, கௌரவ நீதிபதிகளின் கடமைகளில் தலையிடாதே!, நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே !, தலையிடாதே! தலையிடாதே! நீதித்துறையின் சுதந்திரத்தில்!, நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா?, சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நட ! போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையிலே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100 வரையிலான சட்டத்தரணிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சரத்வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து வடக்கு – கிழக்கு நீதித்துறையினர் பணிப்பகிஷ்கரிப்பு

யாழ்ப்பாணம் 

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

சரத் வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்க தீர்மானித்ததாக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.

சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கண்டனப் பேரணியில் எமது சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதிகளை எச்சரித்து வெளியிட்டுள்ள கருத்தைக் கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் செவ்வாய்க்கிழமை (11) பணிப்பஷ்கரிப்பில் ஈடுபட்டு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் கண்டன ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த தில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நீதிபதிகளை எச்சரித்து தெரிவித்த கருத்தை கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி போ.பிறேமநாத் பணிப்பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (11) காலை 9 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்னால் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள், மற்றும் மட்டு நீதிமன்ற கட்டிடத் தொகுதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பணிப்பஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் நீதித்துறை சுதந்திரத்திற்காய் குரல்கொடுப்போம், நீதித்துறை சுதந்திரத்தை உறுதி செய், நீதித்துறைக்கு அரசியல் தலையீடு வேண்டாம்.

நீதித்துறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூண் ஆகும், நீதித்துறையில் இனவாதத்தை கலக்காதே, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கண்டன ஆர்பட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து, முல்லைத்தீவு  மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அம்பாறை

அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (11) ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் சுலோகங்களில் பல்வேறு வாசகங்களை எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேக, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டினார்.

அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து அகற்றினார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேகர அண்மையில் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களிற்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சாவகச்சேரி

யாழ். சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாது செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (11) வழக்கு விசாரணைகள் பிறிதொரு நாள் தவணையிடப்பட்டன.

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மன்னார்

மன்னார் சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

செவ்வாய்க்கிழமை (11) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமுகமளித்த சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததோடு, முல்லைத்தீவில் இடம் பெறும் போராட்டத்திலும் கலந்து கொள்ள முல்லைத்தீவிற்கு சென்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினத்துக்கான வழக்கு விசாரணைகள் பிரிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டது.

 

மட்டக்களப்பு சென்ற பஸ் ஆற்றில் விழுந்து விபத்து 11 பேர் உயிரிழந்தனர்

70 பயணிகளுடன் மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கி வந்த பேருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 40பேர் மருத்துவமனைகளில் சேர்க் கப்பட்டுள்ளனர்.

நேநற்றிரவு 8 மணிக்கு சற்று முன்னதாக பொலநறுவை மன்னம்பிட்டி பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிய வருகின்றது.

பொலநறுவை – கதுரவெல நகரத்தில் இருந்து மட்டக்களப்பின் காத்தான்குடி நகரத்துக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது. சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 70 பேர் இந்தப் பேருந்தில் பயணித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மீட்கப்பட்டனர்.

பொலிஸாரும் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண் டிருந்தனர். நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் இரவு 11 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன. காணாமல் போன பலர் மீட்கப்பட்டதுடன், ஆற்றில் பாய்ந்த பேருந்தும் மீட்கப்பட்டது. இந்த விபத்துக் குறித்து மன்னம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்

யாழ்தேவி புகையிரதம் 100 kmph வேகத்தில் பரீட்சார்த்த பயணம்

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு  100kmph  வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது .இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதைத்  தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று பரிட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி  80 kmph தொடக்கம் 100 kmph வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை பயணித்திருந்தது

குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி , வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது.

இந்நிலையில் புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக   கடந்த 6மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட கங்கேசன்துறை – கொழும்புக்கான புகையிரத சேவைகளை இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் ரெலோ தலைவரால் வவுனியாவில் திறந்து வைப்பு

போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் இன்று வவுனியா தேக்கவத்தையில்  திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட  இச்சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகளால் அணுகக் கூடிய வகையில் அலுவலகங்களைத் திறக்கவுள்ளது.

இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று  திறந்து வைத்தார்

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் போராளி மறைந்த  சிவகுமாரன், விடுதலைப்புலிகளின் அரசியல் பெறுப்பாளர் தமிழ் செல்வன், அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அரசியல் கைதியான  அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேழிக்குமரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆய்வு ஐ.நா பிரதிநிதிகள் முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன் வேண்டுகோள்

கொக்கு தொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழி ஆய்வாராய்ச்சியானது, மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறையின் அடிப்படையில் அதன் பிரதிநிதிகள் முன்பாக இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழிகள் அகழ்வு ஊடாக பல மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது கடந்த காலத்தில் குற்றச்சாட்டப்பட்ட வகையிலே யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பல விடயங்களிற்கு சாட்சியமாக விளங்குகின்றது.

மனித உரிமை பேரவையில், மனித உரிமை உயர்தானிகராலும் இந்த யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்களிற்கான சாட்சியங்களை பதிவு செய்கின்ற ஒரு பொறிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த அகழ்வாராய்ச்சி என்பது மனித உரிமை உயர்தானிகர் அல்லது ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதிகள் முன்பாகவும் இந்த சாட்சியங்களிற்கான அலுவலகம் திறக்கப்பட்டு இதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய நிதி ஒதுக்கீட்டினையும் ஐ.நா செய்துள்ளது.

ஆகவே அவர்களையும் வைத்துக்கொண்டு இந்த அகழ்வாராச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்தவர்களின் தோண்டியெடுக்கப்படும் மனித புதைகுழிகளின் விபரங்களை சரியான முறையில் பதிவு செய்ய முடியும்.

குறிப்பாக கொக்குத் தொடுவாய் என்பது தமிழ் மக்கள் பூர்விகமாக வாழ்ந்த இடம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் என்பது மட்டுமன்றி யுத்தத்திற்கு முன்னரே அங்குள்ள தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும், கிராமங்கள் அழைக்கப்பட்டதும் என்று பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்த விடயங்களை சர்வதேச பிரதிநிதிகள் மாத்திரமன்றி குறிப்பாக ஐ.நாவினுடைய மனித உரிமை உயர்தானிகருடைய அல்லது மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் அல்லது அலுவலர்கள் முன்னாலே இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வருகை

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு பயணம் செய்யவுள்ளார்.

மேலும் எதிர்வரும் 20 ஆம் திகதி அதிபர் ரணில் அமைச்சர்களான, அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோருடன் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிபர் ரணில் விக்ரமசிங்க முக்கியத்துவமிக்க இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

OMP அலுவலக பதிவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் ஜோகராஜா, கிளிநொச்சி பிராந்திய இணைப்பாளர் நிசாந்தன் ஜீட் பீரிஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் போராடுவதற்கான உரிமை இருந்தாலும் பதிவுக்காக வருகை தருபவர்களிற்கு இடையூறு இல்லாமல் செயற்படுமாறும் ஆணையாளர் தெரிவித்தார்.

பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 150,000 தாண்டியது

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது.

கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மேலும் சுமார் 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பாக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுனர் தயாரா?

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு  மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது-

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலிடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் அவர்கள் ஊடகங்களில் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

ஆளுநரின் கோரிக்கைக்கு முன்பாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக முன்னாள் ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்சவும் தற்போதைய ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புலம்பெயர் தமிழர்களிடம் இந்த கோரிக்கையை நேரடியாக முன் வைத்துள்ளனர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு நேரடியாக சென்றும் தமிழர் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளார்.

அதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்கள் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல கடிதத்தை ஊடகங்களுக்கும் உரிய தரப்புக்களுக்கும் வழங்கியுள்ளனர் அதற்கான ஆரோக்கியமான பதிலை இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில் வடக்கு ஆளுநரின் கோரிக்கை வந்துள்ளது உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் வடக்கல்ல தமிழர் தாயகத்தை தாண்டியும் முதலீடு செய்ய தயாராக உள்ளனர்.

ஆளுநர் ஐனாதிபதியின் நேரடி முகவராக இருப்பதால் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஐனாதிபதிக்கு முன் வைத்துள்ள கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்காவுடன் கலந்துரையாடி நிறைவேற்ற தயாரா? அப்படி நிறைவேற்றிய பின்னர் இவ்வாறான கோரிக்கையை முன் வைத்தால் சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.