இலங்கை அரசு அனுமதி வழங்கினால் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயார் – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் (Levan S. Dzhagaryan) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க தமது நாட்டு அதிகாரிகள் தயாராகவுள்ளதாக ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தேவையான எந்தவொரு கலந்துரையாடலுக்கும் விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான பிரிவில் சோதனை நடவடிக்கை தீவிரம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் VIP பயணிகள் முனையத்தில் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு பணிப்புரைகள் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சிடம் இருந்து இந்த அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தற்போது உரிய பரிசோதனைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தை மக்கள் தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமைக்கு ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு

கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமை தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை டோக்கியோ நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வௌிநாடு அல்லது வேறு ஒரு தரப்பினரது தலையீட்டுடன் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய செயற்றிட்டங்களை இரண்டு தரப்பினரதும் இணக்கப்பாடுகள் இல்லாமல் நிறுத்துவதற்கு அல்லது இரத்து செய்வதற்கு முடியாதவாறு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக சட்டங்களை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அனைத்து பாரிய செயற்றிட்டங்கள் தொடர்பிலான யோசனைகள், அந்த செயற்றிட்டங்களின் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியதை கட்டாயமாக்குவதாகவும் ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்காக ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக ஜப்பான் பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.

இதனிடையே, ஜப்பானின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான அமைச்சர் Taro Kono-வை ஜனாதிபதி இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை நகர்த்துவதற்கான திட்டம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையினரையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையின் 20 ஆவது ஆண்டு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளை ஆரம்பிப்பதற்காக தொழில் முயற்சியாளர்களின் பூகோள இயக்கமொன்றை உருவாக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வாவிற்கு பிரித்தானியா தடை விதிக்க கோரி கையெழுத்து சேகரிப்பு

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது.

இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் மிகமோசமான யுத்த குற்றவாளியான சவேந்திரசில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற நம்பகதன்மை மிக்க மனித உரிமை அமைப்பு ஜெனரல்சவேந்திரசில்வா குறித்த 50 பக்க ஆவணமொன்றை தயாரித்து 2020 ஜூலை மாதம் பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக அறிகின்றோம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் குறித்த பிரிவிடம் இந்த ஆவணங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ளது இந்த ஆவணம் 2020 ஜூலை ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தடை நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் ஏன் சவேந்திரசில்வாவை தடை செய்யலாம் என தெரிவிக்கின்றது எனவும் இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலங்களில் சவேந்திரசில்வா 58 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியவேளை உயிர்வாழ்வதற்கான உரிமை உட்பட மீறப்பட்டமை உட்பட இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களில் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்பு குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் ஆவணம் தெளிவாக தெரிவித்துள்ளது எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – சர்வதேச மன்னிப்புச்சபை கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் இலங்கை பொலிஸாரினால் மே 18ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனசர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

நாங்கள் முன்னர் கரிசனை வெளியிட்டுள்ளபடி பயங்கரவாத தடைச்சட்டம் கண்மூடித்தனமான கைதுகளிற்கும் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கும் துணைபோகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் காலத்திற்கு காலம் ஏதேனும் நியாயமான அல்லது உரிய செயல்முறை பாதுகாப்பின்றி சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சித்திரவதைகள் போன்றவற்றின் மூலம் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவானிற்கு வழங்கிய தகவல்களின் படி அதிகாரிகள் மேலும் நால்வரிடம் வாக்குமூலங்களை பெறவுள்ளனர் அவர்கள் தாங்களும் கைதுசெய்யப்படலாம் என அச்சம்கொண்டுள்ளனர் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவேளை இந்த விடயங்கள் கவலையை ஏற்படுத்துகி;ன்றன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கான வரைவிலக்கணத்தை மேலும் விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்இவலுவான ஆதாரங்கள் இருந்தால் நியாயமான விசாரணை தரங்களை பயன்படுத்தி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றத்திற்காக அவர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் சர்வதேச மனித உரிமைகள்தரநிலைகளிற்கு இணங்க முன்னெடுக்கவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழர் தரப்பில் போராட்டங்களுடன் ராஜதந்திர நகர்வு இல்லாமையே பெரும் பலவீனம்- சபா.குகதாஸ் ஆதங்கம்

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்து செல்லும் வேளையில் தமிழ்த் தேசியத் தரப்புக்களிடம் வெறும் தேர்தல் அரசியலும் வெற்றுக் கோச போராட்டங்களும் ஆங்காங்கே கத்திக் கலைவதுமாக நடக்கிறதே தவிர போராட்டங்களுடன் ஒரு ராஜதந்திர நகர்வு எதுவும் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் தரப்பாக ஒன்று பட்டு போராட வேண்டிய நேரத்தில் தாயகத்தில் ஒரு தரப்பு ஒன்றுபடும் தரப்புக்களை விமர்ச்சிக்கும் நிலை ஆட்சியாளர்களுக்கும் பூகோள நலன் சார்ந்த நாடுகளுக்கும் அல்பா கிடைத்த மாதிரிப் போனதே தவிர தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியான பின்னடைவு தான் எஞ்சியுள்ளது.

தமிழர்களுக்கான நீதிக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கு உள் நாட்டு ஆட்சியாளர்களை இனியும் நம்புவது தமிழர் தரப்பின் பலவீனம் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச ரீதியாக அழுத்தங்களை இலங்கை அரசு மீது ஏற்படுத்தும் ராஐதந்திர நகர்வை தாயக புலம் பெயர் தரப்புக்கள் தொடர்ச்சியாக உருவாக்கவில்லை.

அறிக்கை அளவில் இனப்படுகொலை , சர்வசன வாக்கெடுப்பு, சமஷ்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  என்ற விடையங்களை பேசினாலும் இதனை அடைவதற்கான பொறிமுறை இராஐதந்திர நகர்வுகளை கையாள தவறியவர்களாக தமிழர் தரப்பு  உள்ளனர்.

இலங்கையில் நடந்தது தமிழினப் இனப்படுகொலை தான் என்பதை ஒரு நாடு அங்கீகரிப்பதற்கு உரிய செயல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற் கொள்ளாமையே இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை என காலத்தை கடத்துவதுடன் நீதியை நீர்த்துப் போகவும் செய்கிறது.

தற்போதைய சூழலில் அரசியல் அதிகாரத்தின் மூலம் தான் தமிழர் தாயக இருப்புக்களை தக்க வைக்க முடியும் என்ற உண்மையை விளங்கியும் வெற்றுக் கோசம் இடுவதையே சில தரப்புக்கள் முதன்மைப் படுத்துகின்றனர்.

கடந்த காலத்தில் இனப் பிரச்சினை தொடர்பாக முன்னெடுத்த அத்தனை போராட்டங்களிலும் எந்தத் தவறுகள்  காரணமாக பின்னடைவைச் சந்தித்தோம் அல்லது அதிகார சக்திகளை எப்படி கையாள தவறினோம் என்பதை மீள் பரிசீலனை செய்தால் அதுவே பிரச்சினைக்கு  சரியான பாதையைக் காட்டும்  இதனைத் தமிழர் தரப்பு ராஐதந்திர ரீதியாக இதுவரை கையாளவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக தமிழர் தரப்பு எடுக்கின்ற உறுதியான ராஐதந்திர நகர்வே தாயக இருப்பை பாதுகாக்கவும் பரிகார நீதிக்கான கதவுகளையும் திறக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியா எதிர்கொள்ளும் மூன்று சவால்கள் – ஜப்பான் உரையில் ஜனாதிபதி ரணில்

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் சவால்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் இடம்பெற்ற ஆசியாவின்  எதிர்காலம் என்ற நிக்கேய் போராத்தின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ஆசியா எதிர்கொள்ளும் இந்த மூன்று சவால்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

ஆசியா முழுவதிலும் உள்ள பல்வேறுபட்ட அரசியல் அமைப்புகள் மற்றும் மனித உரிமைகளின் வரையறைகளுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற வகையில் ஆசியாவின் முக்கியத்துவம் உலக சனத்தொகையில் 60வீதமான மக்கள் வாழ்வது  உலக பொருளாதாரத்திற்கு ஆசியாவின் மிகப்பெரிய பங்களிப்பு குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் மீட்சி இந்தியாவின் உள்நாட்டு கேள்வி போன்றவற்றையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மிகவும் ஆற்றல் மிக்க பிராந்தியமாகவும் மாறியுள்ளது என்றும், அதன் பொருளாதாரம் ஏற்கனவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் குறித்து ‘நிக்கேய்’ மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது ஆசிய நாடுகளின் வெப்பநிலை உயர்வு, கடுமையான  வானிலை நிலைமைகள் மற்றும் கடல் மட்ட உயர்வு , ஆசிய நாடுகளின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும் என வலியுறுத்தினார்.

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான  ரயில் சேவை மீண்டும்  ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ரயில் பாதை  திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுமே  இடம்பெறுகின்றன.

இந்நிலையில், அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மீண்டும்  ரயில் சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தை ரயில்வே திட்ட பணிப்பாளர்  அசோக முனசிங்க தெரிவித்தார்.

சீனத் தூதரகத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

சீனத் தூதரகத்தின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு களுவன்கேணி கடற்தொழிலாளர் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

 

வடக்கு – கிழக்கு மீனவர்களுக்கு விரைவில் சீனாவின் மண்ணெண்ணெய் – கடற்றொழில் அமைச்சர்

சீன அரசாங்கத்தினால் கடத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணை விரைவில் வடக்கு கிழக்கில் உள்ள ஏழு கடை தொழில் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முழுவதுமான கடற்தொழில் அமைச்சர் என்ற வகையில் மீனவ மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். மீனவ மக்களின் வாழ்வாதாரம் அன்றாட தொழில் நடவடிக்கை வீட்டு வசதிகள் என்பவற்றை மேம்படுத்தும் முகமாக சீன அரசாங்கம் சுமார் 1500 மில்லியன் ரூபாக்களுக்கான செயற் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

அதன் ஆரம்ப நடவடிக்கையாக இலங்கையில் உள்ள 15 கடற் தொழில் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 27 ஆயிரம் படகு உரிமையாளர்களுக்கு, ஒருவருக்கு 150 லீட்டர் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 75 லீட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதோடு இரண்டாம் கட்டமாக எஞ்சியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

வட மாகாணத்தில் உள்ள நான்கு கடற் தொழில் மாவட்டங்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று கடற்தொழில் மாவட்டங்களுக்கும் விரைவில் மண்ணெண்ணை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் கடற் தொழிலாளர்களுக்கான வீடு மற்றும் கடற்தொழிலாளர்களுக்கான வலைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

அது மட்டுமல்லாது எரிபொருள் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு பற்றியில் இயங்கக்கூடிய படகினை சம்பிரதாயபூர்வமாக கடலில் இறக்கியுள்ளோம்.

எரிபொருளிலும் பார்க்க பற்றியில் இயங்குப் படகு இலாபகரமானதாகவும் சூழலுக்கு மாசு இல்லாத தொழில் நுட்பமாக கருதும் நிலையில் அதனை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகவே ஜப்பான் அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கமும் கடற் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ள நிலையில் விரைவில் அதற்குரிய செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.