கணினி குற்றங்களுக்கு திட்டமிட்ட 38 சீனப் பிரஜைகள் அளுத்கமவில் கைது!

கணினி குற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் நேற்று சனிக்கிழமை (1 ) கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீன தூதரகத்தின் உதவியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், 5 பெண்களும் அடங்குவர்.

சந்தேக நபர்கள் வசமிருந்த 40 மடிக்கணினிகள், 120 கையடக்கத் தொலைபேசிகள், பல கணினி உபகரணங்கள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்- திருகோணமலையில் பொது மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி

திருகோணமலை,குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அமளிதுமளி நிலவியுள்ளது .குறித்த சம்பவம் நேற்று (1) இடம்பெற்றுள்ளதுடன் ஒரு வாரகாலமாக இந்த நிலைமை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலருடன் சென்றிருந்த வேளையில் பொதுமக்களை மெய்பாதுகாவர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார். புல்மோட்டை அரிசி மலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே இவ்வாறான சண்டித்தன வாய்த்தகராறில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறிய மாற்றங்களுடன் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த யோசனை தயாரிக்கப்பட்டதாக விஜயதாஷ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டது.

மனித உரிமைகள் பேரவையும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியது.

இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஏற்கனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் குறித்து உரையாட ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடுகின்றது

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது தேர்தலை நடத்துவது தொடர்பான உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேநேரம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று தெரிவித்திருந்தது.

அத்தோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 10 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவரதனவை சந்திப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

தவிசாளர் நிரோஸ், தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்திய வழக்கு யூலை 17க்கு தவணையிடப்பட்டது

யாழ் – நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தடை ஏற்படுத்தினார் என தொடுக்கப்பட்ட வழக்கில், காவல்துறையினர் தாம் மேலதிக ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து எதிர்வரும் யூலை மாதம் 17 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

வெள்ளிக்கிழமை 31.03.2023 மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே அச்சுவேலி காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது காவல்துறை தரப்பில் இருந்து தாம் மேலதிக ஆலோசனையினைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மன்றில் தெரியப்படுத்தப்பட்டது.

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் இராணுவத்திணருடன் இணைந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் போன்று வெட்டிய நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் நிரோஸ் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட எதிர்பின் காரணமாக இரண்டாது தடவையாகவும் தொல்லியல் திணைக்களத்தினால் நிலாவரையில் நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஸ் பெருந்தொகையானோரை அழைத்து வந்து தமது கருமங்களுக்கு தடை ஏற்படுத்தனார் என மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இதனிடையே கடந்த மாதமும் இராணுவத்தினரால் புத்தர் சிலையுடன் பௌத்த கட்டுமானம் ஒன்று நிலாவரையில் நிறுவப்பட்ட நிலையில், அவை தவிசாளர் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தகது.

தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என தென் இலங்கை திட்டமிட்டு செயல்படுகிறது- முன்னாள் யாழ்.பல்கலை துணைவேந்தர்

மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் பத்து லட்சம் காணிகளில் தமிழர்கள் எவருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ், நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற இந்து சமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் துணைப் பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில்,

இலங்கையில் காணப்படுகின்ற தொல்லியல் திணைக்களம், வனவத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன மிக வேகமாகச் செயற்படுகின்றன.

தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் மேய்ச்சல் தரவைகள் வழிபாட்டு இடங்களை தொல்லியல் வன ஒதுக்கப்பகுதி என காணிகளை கையகப்படுத்தி காணி அற்றவர்களாக்குவதே திட்டம்.

யுத்த காலப்பகுதியில் தமிழர்களுடைய புராதன அடையாளங்கள் மற்றும் வரலாற்று நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என்பதில் தென் இலங்கை திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் பிரதேச செயலகமோ மாவட்ட செயலகமோ கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் உள்ள சபையாக காணப்படுகிறது.

மகாவலி L வலயத்தில் உள்ளடங்கும் முல்லைத்தீவு மாவட்டம் வெலி ஓயா பகுதி மற்றும் முழுதாக சிங்கள மக்களுக்கே குடியேற்ற திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் காணியற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் காணிகள் வழங்கப்படவில்லை.

இந்து சமயம் பல்வேறு வழிகளிலும் நசுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றன.

இந்து சமயத்தில் இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து வலுவான ஒரு அமைப்பின் கீழ் செயல்படும்போது தமிழ் மக்களின் நிலங்களையும் இந்து சமயத்தையும் பாதுகாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

விரைவில் புதிய அரசியல் கட்சி உருவாக்கம்; குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி – சம்பிக்க ரணவக்க

அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பதுளை வெலிகம ஹோட்டலில் நடைபெற்ற 43வது பிரிவின் பணிகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் புதிய கட்சி குறித்து தெரிவித்தார்.

அடுத்த மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும், ஏனெனில் இந்த நாட்டை இந்த திவால் நிலையிலிருந்து காப்பாற்ற, தகுதி அடிப்படையிலான அரசியல் கட்சி தேவை.

மேலும், குடும்ப பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி ஏப்ரல் 29 இல் காரைக்கால் படகுச்சேவை ஆரம்பிக்கும்

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் காரைக்கால் துறைமுகம் இடையே படகு சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் 29ஆம் திகதி தொடங்கும்.

திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளதாக கப்பல் சேவையை நடத்தவுள்ள Indsri Ferry Service Pvt Ltd நிறுவன தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள் மற்றும் பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், படகு சேவைக்கான உள்கட்டமைப்பைக் கட்டமைக்க இந்திய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால், இந்தத் திட்டம் பின்னர் தாமதமானது. காங்கேசன்துறை துறைமுகத்தை மேலும் ஆழப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்ப கட்ட சேவையில் ஈடுபடும் படகுகளை விட பெரிய படகுகளுக்கு இடமளிப்பதற்கும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு மேலும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.

ஆரம்பத்தில், படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கும் சேவையில் ஈடுபடும். ஒரு பயணத்தில் 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயங்காது.

காங்கேசன்துறை- காரைக்கால் படகுப் பயணம் அண்ணளவாக 4 மணித்தியாலமென மதிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இந்தியா

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகமும் இந்திய திட்டமொன்றை கோரியுள்ளதுடன், அதற்கு வெளியில் இந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

எதிர்வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அந்த விஜயத்தின் போது இது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கிடையில், எரிபொருள் விநியோகம், விநியோகம் மற்றும் விற்பனையை 3 சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் கடந்த வாரம் முடிவு செய்தது.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே சிலை வைக்கப்படுமாம்!

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு இன்று (02) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உரிய ஆவணங்களையும் கோரினார்.

மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாக தீர்த்துவைக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அத்துடன், வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (03) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜீவன் தொண்டமான் பிரஸ்தாபிக்கவுள்ளார்.

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு களப் பயணம் மேற்கொண்ட இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் முதலில் வழிபாகளில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடினார். ஆலய நிர்வாகத்திடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை. அவற்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் கோரினார்.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் இருப்பதால், சட்டத்துக்கு மதிப்பளித்து, தீர்ப்பு வெளியான பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

 

ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இதொகாவின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா உட்பட பலர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.