சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது – சரத் வீரசேகர

கடுமையான நிபந்தனைகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது என சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் முன்வைக்கும் கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வங்குரோத்து நிலை ஏற்பட்டபோது சீனா, இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தபட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுபுறம் அதுவரை முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்ததா என்பதை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்த தீர்மானம்!

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய மற்றும் அவசர சத்திரசிகிச்சைகள் வழமை போன்று மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவசர சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பாரத பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு உடனடியாக சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்துமாறு இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆகியோரிடத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோரே மேற்படி கோரிக்கை விடுத்ததுடன் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதற்கு இந்தியாவின் மேற்பார்வையுடன் பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் பரிந்துரைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் இடையில் இராப்போசன விருந்துபசாரமொன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இணை அமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலையுடன் உரையாடினார்கள்.

அச்சமயத்தில், சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில், 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.

ஆனால் தற்போது இலங்கையில் அதற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அதேநேரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் 1987ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதையடுத்து அரசியமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்திற்கும் தற்போது நடைமுறையில் காணப்படுகின்ற அதன் வடிவங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

1 கிலோ நெல்லை ரூபா.100 வீதம் கொள்வனவு செய்ய கிளிநொச்சியில் ரணில் உறுதி

கிளிநொச்சியில் விவசாயிகளின் நெல்லை கிலோ கிராம் ஒன்று 100 ரூபாய் விகிதம் கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை அரசு ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சியில் விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆறுமுகநாவலரின் பணிகளின் மூலமே சிங்கள தலைமைத்துவம் உருவானது; யாழில் ஜனாதிபதி ரணில்!

நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் இணைந்து செயற்பட்டால் நாட்டை வேகமாக முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசின், 1350 கோடி ரூபாய் நன்கொடையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘கலாசார மத்திய நிலையம்’ நேற்று (11) முற்பகல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க-

எமது 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் கொண்டாட நாம் தீர்மானித்தோம். அந்த வேலைதிட்டத்தை நாம் இந்த கலாசார மையத்திலிருந்தே ஆரம்பிக்கின்றோம். இது எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொடுத்த பரிசு ஆகும். அதனால் அவருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிப்பதே நான் செய்யும் முதல் விடயம்.

இந்தியாவும் இலங்கையும் முன்னெடுத்து வரும் வேலைதிட்டங்களில் பிரதானமானதொரு அம்சம் இதுவாகும். ஒரு புறத்தில் இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் மறுபுறத்தில் விசேடமாக திருகோணமாலை துறைமுகத்தின் பாரிய அபிவிருத்தி வேலைதிட்டம் தொடர்பிலும் நாம் கலந்துரையாடி வருகின்றோம்.

வலு சக்தி தொடர்பிலும் நாம் பேச்சு நடத்தி வருகின்றோம். அதுபோலவே எமது பொருளாதார நெருக்கடியின்போது இந்த கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கும் இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பை நாம் பாராட்டுகின்றோம்.

இக்கலாசார மையம் ஒரு பொதுவான மையமாகும். நான் எப்போதும் கூறுவேன் எம்மிடையேயுள்ள கலாசாரத்தை வேறு பிரிக்க முடியாது என்று. ஒரு நாயணத்தின் ஒரு பக்கம் இலங்கை என்றால் மறுபக்கம் இந்தியாவாகும்.

எம்மிடமுள்ளது ஒரு கலாசாரம். அதனை நாம் பாதுகாத்து மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதனால் இந்த மையத்தை பொதுமக்களிடம் கையளிப்பதை முன்னிட்டு உங்கள் அனைவர் சார்பிலும் இந்தியாவுக்கும் இந்தியாவின் பிரதமருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

அதுபோலவே இன்று இந்த நடன நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களுக்கும் அதன் பின்னர் பங்கெடுப்பவர்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்களிடமிருந்து எமது சுதந்திரப் போராட்டத்துக்கு கிடைத்த ஒத்துழைப்புக்காகவே 75ஆவது சுதந்திர தினத்தை நாம் இம்முறை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானித்தோம்.

யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் ஆரம்பித்த இந்து மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தை தொடர்ந்தே ஹிக்கடுவே ஶ்ரீ சுமங்கள தேரர் பௌத்த மறுமலர்ச்சியை ஆரம்பித்தார். எனவே ஆறுமுக நாவலர் முன்னெடுத்த பணிகளில் இருந்து தான் எமது சிங்கள தலைமைத்துவமும் உருவாகியது.

பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்கு நன்றி கூறும் வகையிலேயே வெசாக் தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையர்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் தலைவரே பொன்னம்பலம் இராமநாதன் ஆவார்.

1915 ஆம் ஆண்டு குழப்பங்கள் நிலவிய காலத்தில் எமது சிங்கள பௌத்த தலைவர்களை பாதுகாத்துக் கொடுத்தவர் பொன்னம்பலம் இராமநாதன் என நான் இவ்விடத்தில் கூற விரும்புகிறேன்.

ஹென்றி பேதிரிஸ் அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்குமாறு அவர் அப்போதைய ஆளுநருக்கு அறிவித்தார். அதற்கு பதிலாக ஹென்றி பேதிரிஸின் நிறைக்குச் சமனான தங்கத்தை தருவதாக க் கூறினார். எனினும் அது வெற்றியடையவில்லை.

பொன்னம்பலம் அருணாச்சலம் இலங்கை தேசிய சபையை உருவாக்கினார். தொழிற்சங்கங்களுக்கு தலைமைத்துவம் தாங்கினார். சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியிருந்த போதும் துரதிஷ்டவசமாக அவர் 1924ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதிலிருந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் எப்.ஆர் சேனாநாயக்க காலமானார்.

அவர் வாழ்ந்திருந்தால் இதை விடவும் வித்தியாசமானதொரு வரலாற்றை நாம் கண்டிருந்திருப்போம். சிங்கள கலையை எமக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தியவர் ஆனந்த குமாரசுவாமி . அவரின் காலத்திலேயே இது மேம்படுத்தப்பட்டது.

அருணாச்சலம் மஹாதேவா அவர்களும் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார். அது போலவே இந்து தர்மத்தை முன்னேற்றுவதற்கும் கொழும்பு சிவன் கோவிலை கட்டுவதற்கும் இங்கு கோவில்களை உருவாக்கவும் இந்த குடும்பம் உதவி செய்தது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையின் சிங்களம், தமிழ், பௌத்தம், இந்து ஆகிய பிரிவுகள் முன்னேற உதவி செய்தனர்.

இலங்கையர் சார்பாகவும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்கள் சார்பாகவும் அக்குடும்பத்துக்கு நன்றி கூற நாம் கடமைபட்டுள்ளோம்.

அவர்களைப் போலவே வைத்தியலிங்கம் துரைசாமியையும் எம்மால் மறக்க முடியாது. சுதந்திரத்தைப் பெறுவதற்காக டி.எஸ் சேனாநாயக்க அவர்களுக்கு உதவிய அமைச்சர் சி.சுந்தரலிங்கம் , அமைச்சர் சி.சிற்றம்பலம், அமைச்சர் நல்லைய்யாஆகியோரையும் நாம் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.

நாம் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களையும் இங்கே நினைவு கூற வேண்டும். நாம் செல்வநாயகம் அவர்களையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். அதுபோலவே அமைச்சர் எம்.திருச்செல்வம் அவர்களையும் நினைவுபடுத்துகின்றோம்.

இந்த தலைவர்களே ஏனைய தலைவர்களுடன் இணைந்து இலங்கையை ை உருவாக்குவதற்காக பணியாற்றினர். அதன் காரணமாகவே இப்பிரதேசத்தில், இந்த யாழ்ப்பாணத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இந்த அரசாங்கம் தீர்மானித்தது.

நாம் தற்போது புதியதொரு பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இலங்கையர்களாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நல்லிணக்கம் தொடர்பில் நான் கடந்த 08 ஆம் திகதி அன்று பேசினேன். எனவே அது பற்றி நான் இங்கே மீண்டும் பேசப் போவதில்லை. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் நான் நேற்று பேசினேன். அதனால் அது குறித்தும் நான் இங்கே பேசப்போவதில்லை. ஆனால் கலாசாரம் தொடர்பில் நான் இங்கு பேசப்போகிறேன்.

இந்த தருணத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நல்லிணக்கம், அபிவிருத்தி, கலாசாரம் இவையே எமது கொள்கையாகும். யாழ்ப்பாணக் கலாசாரத்தில், தமிழ் கலாசாரத்தில் இலங்கையின் கலாசாரம் போஷணைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் கலாசாரம் இலங்கையிலிருந்து உருவான கலாசாரம் என்பதுடன் இது தமிழ் நாடு மற்றும் கேரளாவுடனும் தொடர்புபட்டதொரு கலாசாரம் ஆகும். இது விசேடமாக தஞ்சாவூரிலிருந்து வந்த பாணடியன், விஜய நகர் இராச்சியங்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

சந்திரபாகு ஆட்சியாளர் முதல் ஆரியச்சக்கரவர்த்தி அரசர்களின் காலம் வரை, சப்புமல் புவனேகபாகு அரசரின் காலம் , சங்கிலி மன்னனின் காலம் ஆகியவற்றின்போது விசேட கலாசார பிணைப்புகள் இப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்டன.

நல்லூரில் பாரிய கோயிலைக் கட்டுவித்தனர். அதுபோலவே சங்கிலிய மன்னரின் பாரிய மாளிகை இருந்தது. அன்று நிர்மாணிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளைப் பார்த்தால் அந்த மாளிகைகள் எவ்வளவு விசாலமானது என்பதை புரிந்து கொள்ளலாம். கோட்டை அரசருக்கு இதைவிட பெரிய மாளிகையொன்று அவசியம் என்றால் அவரது மாளிகை இதைவிட மிக பிரமாண்டமாக இருந்திருக்குமென எம்மால் இதைப் பார்த்து ஊகித்துக் கொள்ள முடியும்.

‘சிராவஸ்தி மஹால்’ எனும் விசாலமான கலாசார மத்திய நிலையம் ஒன்று இருந்தது. தஞ்சாவூர் சிராவஸ்தி மஹால் அதற்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. பழைய புத்தகங்கள் இருந்தன. வரலாறு குறித்தும் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பிலும் பயன்படுத்தப்பட்டு வந்த செக்கராச சேகரம் என்ற நூலையும் திருக்கேதீஸ்வரத்தையும் போர்த்துக்கீசிலிருந்து வந்தவர்கள் அழித்ததுடன் அவற்றை தீயிட்டும் கொளுத்தினர்.

அதனால் தான் மீகபுள்ளே ஆரச்சி போர்த்துக்கேயருக்கு எதிராக இரண்டு கலகங்களை முன்னெடுத்தார். அவரை மறந்துவிட வேண்டாம். மீண்டும் இக்கலாசாரம் ஒல்லாந்து காலத்தில் இழக்கப்பட்டது. தேசவழமை சட்டமாக்கப்பட்டது. மீண்டும் வரலாறு புதுபிக்கப்பட்டது.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இது மீண்டும் மேம்படுத்தப்பட்டது. 1840இல் முதலாவது பத்திரிகை வெளியிடப்பட்டது. புத்தகங்கள் வெளிவந்தன. அதனுடாக மீண்டும் இலக்கியம் வளர்ந்தது. எனினும் யுத்தத்துடன் இவையனைத்தும் மீண்டும் அழிக்கப்பட்டன. நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. யாழ்.கோட்டை சிதைக்கப்பட்டது.

யுத்தம் நடந்தாலும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் அதுபோலவே வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரும் இந்த தமிழ் கலையையும் கலாசாரத்தையும் பாதுகாத்தனர். இலங்கைக்கு உள்ளும் இலங்கைக்கு வெளியிலும் தற்போது அதற்கு புத்துயிர் கிடைத்துள்ளது.

திரைப்படம் உள்ளது. யுத்தம் பற்றிய புத்தகங்கள் உள்ளன. அதுபோலவே கலையும் உள்ளது. புதிய கலை உருவாகியுள்ளது. புதிய கலாசாரம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதுபோலவே அனைத்து இடங்களில் இருந்தும் கருத்துகள் உள்வாங்கப்படுகின்றன.

நாம் இங்கே சம்பிரதாய தமிழ் இசையைக் கேட்கிறோம். திரைப்படங்கள் ஊடாக நாம் தமிழ் பாடல்களை செவிமடுக்கின்றோம். அதுபோலவே ஏ.ஆர் ரஹ்மானின், ‘சின்னச் சின்ன ஆசை’யின் இசைக்கும் நாம் பாடல் பாடுகின்றோம். யொஹானியின், ‘மெனிக்கே மகே ஹித்தே’ என்ற பாடல் இசைக்கும் நாம் பாட்டு பாடுகின்றோம். இவ்வாறு கலாசாரம் புதிய கலை வடிவம் பெற்றுள்ளது. அதனை நாம் முன்னேற்ற வேண்டும்.

காலி இலக்கிய விழாவைப் போன்றே யாழ்ப்பாணத்திலும் நாம் ஓர் இலக்கிய விழாவை நடத்துவோம் என நான் கலாசார அமைச்சரிடம் கூறினேன்.

அதுபோலவே இங்கு நாம் புதிய கலையொன்றை முன்னேற்றுவோம். இலங்கைக் கலையின் ஒரு பகுதியாக இதனையும் உள்ளடக்குவோம். முக்கிய பகுதியாக அடையாளப் படுத்துவோம். இந்தப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தூக்கி நிறுத்த வேண்டும். அப்போது இது எமது எல்லோரதும் நாடு ஆகும். இந்த இடம் தான் யாழ்ப்பாணத்தின் தமிழ் கலாசாரத்தின் மத்திய நிலையமாக இருக்க வேண்டும். அதனால் அமைச்சரே, நாம் இந்த இடத்திற்கு ‘சரஸ்வதி மஹால்’ என பெயரிடவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறுங்கள். நாம் புதிய எதிர்பார்ப்புடன் முன்னேறிச் செல்வோம். அனைவருக்கும் நன்றி. என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வருகையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட சிவாஜிலிங்கம்

ஜனாதிபதியின் வருகை எதிர்த்து தமிழ்த் தேசிய கட்சியின் எம்.கே சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

போராட்டமானது காந்தி சிலைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் அனந்தி சசிதரன், வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி துணிவற்றவர். எம்மை இப்பாதையால் நடந்து சென்று சந்திக்க கூட பொலிசார் எமக்கு அனுமதி அளிக்கப்படவில்லை .பொலிசார் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமிழில் உரையாடவில்லை சிங்களத்தில் பேசி இனவாதத்தை ஏற்படுத்துகின்றனர் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பொலிசாருக்கு ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் பல மணி நேரங்கள் முறுகல் நிலை ஏற்பட்டது. பொலிசாரை திட்டி பல வார்த்தை பிரயோகங்களால் சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டார் அதே போல் போலிசாரும் பல கருத்துக்களை ஆக்ரோஷமாக வெளியிட்டனர்.

கஜேந்திரன் எம்.பி உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுதலை

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள்பிணையில் விடுவித்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டார்.

சனிக்கிழமை (11) இரவு 11மணியளவில் நீதவானின் வாசஸ்தலத்தில் 18 பேரையும் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே பதில் நீதவான் இந்த உத்தரவையிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேர் சனிக்கிழமை (11) மதியம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதை தடுப்பதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றிருந்தனர்.

எனினும் தடை உத்தரவை மீறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கப்பட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே 18 பேரையும் பிணையில் விடுத்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டார்.

ஈழத்தமிழர் பிரச்சினையை விரைந்து தீர்த்து வைக்கவேண்டும்- நல்லை ஆதீன முதல்வர், ஆறுதிருமுருகன் வேண்டுகோள்

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் தீர்த்து வைக்கவேண்டும் என யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை அமைச்சர் எல்.முருகனிடமும் பா.ஜ.கவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நல்லை ஆதீன முதல்வரும் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகனும் தெரிவித்தனர்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சரிய குருவையும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகனையும், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இந்திய தகவல் ஒலிபரப்பு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.கவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையும் இன்று (11) சனிக்கிழமை நல்லை ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக நல்லை ஆதீன முதல்வரும் ஆறுதிருமுருகனும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

இலங்கையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுதான் சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கங்கள் காலத்துக்குக் காலம் பல முயற்சிகள் எடுத்துள்ளன. அந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளன.

இந்தக் காலத்தை முறையாக பயன்படுத்தி இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் அனைத்து உரிமையுடன் வாழ்வதற்கு ஒரு தீர்வினை கண்டு, அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்கவேண்டும்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலாசார நிலையம் யாழ்ப்பாண மக்களுக்குரியது. யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை வளர்ப்பதற்கு யாழ் மக்களிடம் தான் அதனை ஒப்படைக்க வேண்டும்.

திருகோணேஸ்வரத்தின் புனிதத் தன்மையை பாதுகாப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகள் நெருக்கடிகளை தீவிரப்படுத்தும் – சிவில் அமைப்புகளும், தனிநபர்களும் கூட்டறிக்கை

நாடொன்றின் சுதந்திரம் என்பது அந்நாட்டு மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவித்து, கௌரவமான பிரஜைகளாக வாழ்வதற்கு கொண்டிருக்கும் உரிமையிலேயே தங்கியிருக்கின்றது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது.

அரசாங்கத்தின் தற்போதைய அடக்குமுறைகள், நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மேலும் தீவிரமாக்கும் என்று 40 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும், 89 தனிநபர்களும் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தி சமூகம் மற்றும் சமயத்துக்கான நிலையம், இலங்கை ஆசிரியர் சங்கம், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், மனித உரிமைகள் அலுவலகம், சட்ட மற்றும் சமூக நிதியம், மக்களுக்கான சட்டத்தரணிகள் பேரவை உள்ளிட்ட 40 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் 89 தனிநபர்களும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமையும் மீறப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் பெருந்தொகை நிதியை செலவிட்டு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுநர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் மீது வன்முறைக் குழுக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

குறிப்பாக, அரசாங்கத்தின் ‘சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள்’ இடம்பெறும் நாளில் ஆர்ப்பட்டங்கள் மற்றும் பேரணிகளை நடாத்துவது குறித்து நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய, எவ்வித குழப்பங்களோ அல்லது பொது மக்களுக்கான இடையூறுகளோ இன்றி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் ஊடாக அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்கள் கொண்டிருக்கும் உரிமை எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அதுமாத்திரமன்றி, இத்தாக்குதல்களின்போது கைதுசெய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் மருத்துவ மற்றும் சட்ட உதவியை பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டதன் ஊடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

நாடொன்றின் சுதந்திரம் என்பது அந்நாட்டு மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவித்து, கௌரவமான பிரஜைகளாக வாழ்வதற்கு கொண்டிருக்கும் உரிமையிலேயே தங்கியிருக்கிறது. ஆனால், தற்போதைய அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக தற்போது நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

பொருட்களின் விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை, வேலையிழப்பு, வரிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் தமது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நீண்ட கால யுத்தம் மற்றும் இனவாத அரசியலால் ஒடுக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்களும், மேலும் பலருக்கு கிடைத்ததாக கூறப்படும் ‘சுதந்திரத்தின்’ பின்னரும் தமக்குரிய அடிப்படை உரிமைகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் துன்பப்பட்டு வருகின்றனர்.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்று, 75 ஆண்டுகள் நிறைவடையும் இத்தருணத்தில் நாட்டு மக்கள் முகங்கொடுத்துவரும் இப்பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தாமல், அவை தொடர்பில் குரல் கொடுக்கும் மக்களை தொடர்ச்சியாக ஒடுக்க முயல்வது கவலைக்குரிய விடயமாகும்.

முன்னைய அரசாங்கங்கள் கடைபிடித்த தன்னிச்சையான, தான்தோன்றித்தனமான கொள்கைகளும் அடக்குமுறை நடவடிக்கைகளுமே நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு பிரதான காரணம் என்பதை நாம் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

எனவே, அரசாங்கத்தின் தற்போதைய அடக்குமுறைகள் இந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் தீவிரமாக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தல் என்பன இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாகும்.

ஆனால், இந்த அரசாங்கம் தான்தோன்றித்தனமான முறையில் அந்த உரிமையை மீறுகின்றது. ஆகவே, நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமை உள்ளடங்கலாக அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக தீர்க்கமாக தலையிடுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரிடமும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தில் தீர்வையற்ற (Dutyfree) கடை திறந்து வைப்பு

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (11) தீர்வையற்ற கடை (Dutyfree) திறந்து வைக்கப்பட்டது.

தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

விரைவில் சென்னை- பலாலி இடையிலான விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ தெரிவித்தார்.

யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தில் தீர்வைற்ற கடையினை திறந்து வைத்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பலாலி விமானத்தின்ஊடாக பயணிக்கும் பயணிகளுக்காக மேலும் பல வசதிகளை ஏற்படுத்த உள்ளோம். தற்போது நான்கு விமான சேவைகள் மாத்திரமே வாரத்தில் இடம்பெறுகின்றன எதிர்வரும் காலங்களில் ஏழு விமான சேவைகள் ஒரு வாரத்தில் இடம் பெறுவதற்குரியவாறு எயாலைன்ஸ் நிறுவனத்தினருக்கு அறிவுறித்தியுள்ளோம்.

அதேபோல இரத்மனாலை பலாலிக்கிடையிலான உள்ளூர் விமான சேவையினையும் விரைவில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளோம் .

அத்தோடு பலாலி விமான நிலையத்தினை விஸ்திரித்து இங்கே பயணிக்கும் பயணிகளுக்கும் மேலும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை எடுத்துள்ளோம்.

வர்த்தக ரீதியில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இன்று முதலாவது தீர்வையற்ற கடை திறக்கப்பட்டுள்ளது அதேபோல மேலும் பல கடைகள் இந்த அரசாங்கத்தின் அனுமதியோடு திறப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதில் அழகு சாதன பொருட்கள் மற்றும் மேலும் பல பொருட்கள் அடங்கிய தீர்வையற்ற கடைகள் இங்கே திறக்கப்படவுள்ளன.பலாலி விமான நிலையத்தை மேலும் விஸ்தரித்து பயணிப்போர் மிகவும் வசதியாக பயணிப்பதற்கு முயற்சிக்கின்றோம்.

தீர்வையற்ற கடைகளுக்காக ஒரு தனியான கட்டட தொகுதியினை அமைக்கவுள்ளோம் அதேபோல் விமானத்திற்குள் உள் நுழையும் வெளியேறும் பாதைகள் விஸ்தரிக்கப்பட்டு பயணிகள் சௌகரியமாக பயணிக்கக் கூடியவராக ஏற்பாடுகள் மேற்கொள்ள உள்ளோம்.

அத்தோடு இன்று முதலாவது தீர்வையற்ற கடை திறக்கப்பட்டுள்ளது அதேபோல மேலும் பல தீர்வை யற்ற கடைகளை திறப்பதற்கு யோசித்திருக்கின்றோம் அதற்கு ஒரு நடைமுறை உள்ளது குறிப்பாக சுங்கம் மற்றும் அரசாங்கத்தின் கேள்விகோரல் முறையின்படி உரியபடி விண்ணப்பித்து தீர்வையற்ற கடைகளுக்குரிய அனுமதியினை பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களும் இந்த நடைமுறைகளை பின்பற்றி தீர்வையற்ற கடைகளுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.