பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதே பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு – உதயங்க வீரதுங்க

பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜனபெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், ராஜபக்ஷக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க, அதற்கான வியூகத்துடன் பஷில் ராஜபக்ஷ மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜனபெரமுன மற்றும் பஷில் ராஜபக்ஷவின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜனபெரமுனவினை ஸ்தாபித்து கடந்த காலத்தில் நாட்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் பெருவெற்றிபெறச் செய்ததில் பஷில் ராஜபக்ஷவின் புத்திசாதுரியம் மிகவும் முக்கியமானது.

அந்த வகையில், அவர் நாட்டிலிருந்து வெளியேறியபோது, நாமல் ராஜபக்ஷவிடத்தில் கட்சிப்பணிகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

கட்சிக்கும், கிராமங்களில் உள்ள சாதாரண பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பினை வலுவாக வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதோடு அவர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் சம்பந்தமாக கவனம் செலுத்துவது தான் நாமல் ராஜபக்ஷவின் பிரதான பணியாக இருந்தது.

இவ்வாறான நிலையில், பஷில் ராஜபக்ஷ மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்புவது, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அழகுபார்ப்பதற்காக அல்ல.

பொதுஜனபெரமுனவை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும்.

பொதுத்தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான அறிவிப்பினை ஜனாதிபதியே செய்ய வேண்டும். இருப்பினும், பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதனடிப்படையில், பொதுத்தேர்தல் நடத்தப்படும் போது, அதற்கான வெற்றி வியூகங்களை வழங்கும் பிரதான பணியை பஷில் ராஜபக்ஷவே முன்னெடுப்பார்.

மேலும், பெரமுனவின் உறுப்பினர்களில் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவாக நிற்கின்றபோதும், முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அதில் ரணில் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே பொதுத்தேர்தலை நடத்துவதே பொருத்தமான நகர்வாக இருக்கும்.

ஏவ்வாறாயினும், பஷில் ராஜபக்ஷ மீண்டும் பொதுஜனபெரமுனவினைப் பதவியில் அமர்த்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்றார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களைச் சந்தித்த சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஞாயிற்றுக்கிழமை (25) கண்டியில், மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்க திம்புல் கும்புரே ஸ்ரீ விஜய தம்ம தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் பிரதான ஆவணக் காப்பாளர் மெதகம தம்மானந்த தேரர்களை சந்தித்து,நலன் விசாரித்து தனது எதிர்கால அரசியல் பயணத்திற்கு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

இந்த வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதே எமக்கு உள்ள ஒரே சவால்

ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் கட்சிகள் முன்வைக்கும் விடயங்களுக்கு பதிலளிக்காமல், நாட்டின் வங்குரோத்து நிலையுடன் இந்நாட்டில் பெண்கள் தலைமையிலான ஏனைய சமூகம் எதிர்நோக்கும் பாரதூரமான அவல நிலைக்கு பதில்களையும் தீர்வுகளையும் வழங்கவே செயற்படுகின்றது. பெண்களை பலர் மறந்துவிட்ட இந்த வேளையில், இன்று நேற்றல்ல 2019 ஆம் ஆண்டிலயே பெண்களுக்கான சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நீட்சியே நேற்றைய நிகழ்வு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருப்பது வறுமையை ஒழித்து பொருளாதார அபிவிருத்தி விகிதத்தை அதிகரிப்பதும், தகவல் தொழில்நுட்ப கனவை எவ்வாறு நனவாக்குவது என்பதுமே ஆகும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்துவது சவாலானது. ஏனைய கட்சிகளின் சவால்கள் தமக்கு பாதகமாக அமையாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெண்களுக்கு பக்க பலத்தை வழங்கும் முகமாக சமூக ஒப்பந்தம்

2019 ஜனாதிபதித் தேர்தலைப் போலவே, பெண்களை உள்ளடக்கிய சமூக ஒப்பந்தத்தை உருவாக்கும் ஆரம்ப நிகழ்வை கண்டியில் ஆரம்பித்தார். இங்கு பெண்களின் பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் ஆண் இல்லாத 16 இலட்சம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருப்பதாகவும், அவர்களுக்காக விசேட பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், வீட்டின் முக்கிய வருமானம் ஈட்டுபவர் என்பதுடன், இல்லத்தரசி தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் வீட்டிலிருந்தவாறே ஒரு தொழிலிலும் ஈடுபடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

திக்வெல்ல பத்தேகம பிரதேசத்தில் குறிப்பிட்ட பெண் ஒருவர் ஜேர்மனிக்கு தென்னை நாரினால் ஆன விரிப்புகளை ஏற்றுமதி செய்வது போன்று ஏனைய பெண்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும். பிரதேச செயலாளர் மற்றும் உப பிரதேச செயலாளர் எல்லைகளில் மகளிர் மேம்பாட்டு மையங்களை நிறுவி இந்நாட்டு பெண்களுக்கு கணினி பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், தொழில்முனைவு, சுயதொழில் அறிவு போன்றவற்றை வழங்க முடியும். இதன் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும், அதற்கு பெரிய பொருளாதார கோட்பாடுகள் தேவையில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவர்களுக்கு கூடிய முன்னுரிமை

தற்போது பிள்ளைகள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முதல் பணியாக பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட் சாதனம் வழங்கப்படும். இதனூடாக புதிய தகவல்கள் மற்றும் தரவுகளை அணுக முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய தொழிலாளர் சந்தைக்கு திறமையான தொழிலாளர்கள்

வீட்டு பணிப் பெண் துறையில் மட்டும் தங்கியிருக்காமல் அவர்களுக்கு பெண்களுக்கு பயிற்சி அளித்து, இதன் மூலம் திறமையான தொழிலாளர்களாக வெளிநாட்டு வேலைகளுக்கு அவர்களை வழிநடத்த முடியும். இந்தியாவைப் போன்று ஒரு தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் உலக சந்தைக்கு ஏற்ற பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அனுப்ப முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சமும் மற்றும் மூச்சும் மிகவும் வெற்றிகரமான செயற்திட்டங்களாகும்

இந்தத் திட்டங்களுக்கு மேலதிகமாக, பிரபஞ்சம் பேருந்துத் திட்டம், பிரகஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம் மற்றும் மூச்சுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் தம்புத்தேகம தேசிய பாடசாலைக்கு கூட பஸ் வழங்கப்பட்டன. திருகோணமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட ஜம்போரிக்குக் கூட அந்தப் பாடசாலையின் பிள்ளைகள் குறித்த பேருந்துலயே சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் 99.999% ஆசிரியர்கள் பிள்ளைகளை நேசிக்கும் ஆசிரியர்களே,ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்து இந்த திட்டத்தை தோல்வியடையச் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். 76 வருட அரசியல் வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் இந்த மூன்று திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது இதுவே முதற் தடவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

IMF ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம்

தற்போதைய மக்கள் ஆணையற்ற அரசாங்கம் மக்களுக்கு பாதகமான ஒப்பந்தமொன்றையே சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டியுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இது திருத்தப்படும். கூடிய சலுகையும் மிகக் குறைந்த அழுத்தமும் ஏற்படக் கூடிய வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏறக்குறைய 40 சதவீதமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர், LIRNEasia கணக்கெடுப்பின்படி, ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை 40 இலட்சம் அதிகரித்து 30 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது

இதனால், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மிகவும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பரேட் சட்டத்தின் மூலம் அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. வங்கி முறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நிலைமையும் கட்டுப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்கள் விரோத பிற்போக்குத்தனமான கூறுகள் அகற்றப்பட்டு மக்கள் சார்பான கருத்துக்கு கொண்டு வரப்பட்டு சாதகமாக திருத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டுக்கு கொள்கையே முக்கியம்!

நாட்டிற்கு தனிமனிதர்களை விடுத்து, கொள்கைகள், வேலைத்திட்டங்கள், செயற்பாடுகள் என்பனவே முக்கியம்.ஐக்கிய மக்கள் சக்தியில் படித்த புத்திஜீவிகள் உள்ளனர். எனவே, இதைப் பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியமில்லை, மக்கள் அதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். 76 ஆண்டு கால வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் எந்த கட்சியும் செய்யாத சேவையை இந்த ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளது. நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் என்ன கூறினாலும் தமக்கு கவலையில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் சிலர் பல்வேறு தீர்க்கதரிசனங்களை கூறினாலும் அவர்களால் பாராளுமன்றத்தில் ஒரு இடத்தை கூட பெற முடியவில்லை. பேசுபவர் என்ன சொன்னாலும் கேட்பவர் புத்திசாலித்தனமாக கேட்க வேண்டும். சர்வஜன வாக்குரிமையால் அன்றி, நாட்டை வங்குரோத்தாக்கிய 134 பேரினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியே தற்போது இருக்கிறார். நாட்டின் சுகாதாரத்தை அழித்த கெஹலியவை பாதுகாக்க 113 பேர் முன்வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் குறித்து முதலில் குரல் கொடுத்தது நாமே!

நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை பாதித்துள்ள பரேட் சட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக குரல் எழுப்பி வருகிறேன். இறுதியாக, தனது பேச்சுக்களைக் கேட்டு, அரசாங்கம் சரியானதைச் செய்ய முடிவு செய்துள்ளது, எனவே அவர் இதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அரசாங்கம் கூறியவாறு இது சரியாக நடைபெறுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பரேட் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும். இது நிறைவேறும் வரை இதற்காக முன்நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதன் பிரகாரம் 100 மில்லியன் கடன் உத்தரவாத வேலைத்திட்டம் மற்றும் கடனுதவி வழங்கப்பட்டது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோர்ட்டுக்கு இழுக்கப்படும் கட்சி? – நிலாந்தன்.

2014ஆம் ஆண்டு மன்னாரில்,முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்களின் சந்திப்பு அது.ஆயர் அப்பொழுது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் அழைப்பாளராகவும் இருந்தார்.அச்சந்திப்பில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள். சந்திப்பின் முடிவில் சம்பந்தர் ஆயரைப் பார்த்து பின்வருமாறு சொன்னார்…”பிஷப் நீங்கள் சொல்லுறதச் சொல்லுங்கோ, ஆனால் கடைசியா முடிவெடுக்கிறது நாங்கள்தான்” என்று. அப்பொழுது அப்படிச் சொல்லக்கூடிய பலம் சம்பந்தருக்கு இருந்தது. ஆனால் அவர் எடுத்த முடிவுகளின் விளைவு என்ன? அப்படிச் சொன்ன சம்பந்தர் இப்பொழுது எங்கே நிற்கிறார்? அவருடைய முடிவுகளின் விளைவாக தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிகவும் வித்தியாசமான ஒரு கூட்டு உடைந்து போய்விட்டது.அதுமட்டுமல்ல அவருடைய சொந்த கட்சியே இப்பொழுது இரண்டாகி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல,அன்றைக்கு அப்படித் திமிராகச் சொன்ன சம்பந்தரை இன்றைக்கு அவருடைய சொந்த கட்சிக்காரர்களே மதியாத ஒரு நிலை.ஆம். “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.அவள் யாரையும் மன்னிப்பதில்லை”

இப்பொழுது தமிழரசுக் கட்சி உடையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன.கடந்த வெள்ளிக்கு கிழமை கிளிநொச்சியில் நடந்த சந்திப்பின் பின் கட்சி நீதிமன்றதுக்குப் போக வேண்டிய வாய்ப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளனவா?

ஒரு குடும்பத்துக்குள் பிணக்கு வந்தால் அதை அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தீர்த்து வைப்பதுண்டு. அல்லது அந்தக் குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்ட வெளியாட்கள் அதைத் தீர்த்து வைப்பதுண்டு.அதுவும் முடியாது போனால், விவகாரம் போலீஸ் நிலையத்துக்கோ,நீதிமன்றத்துக்கோ போகும்.தமிழரசுக் கட்சிக்குள் நடப்பவற்றைப் பார்த்தால் அங்கே இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்துவைக்க கட்சிக்குள் மூத்தவர்கள் யாரும் இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.கட்சிக்குள் மூத்தவர்களாகக் காணப்படும் சம்பந்தர், மாவை, குலநாயகம், கனகசபாபதி, சிவஞானம்… போன்றவர்கள் ஏதோ ஒரு பக்கம் உலாஞ்சுவதாகத் தெரிகிறது. அதனால் அவர்கள் நடுநிலையாக நின்று விவகாரத்தைக் கையாள முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.சம்மந்தரும் மாவையும் கனகசபாபதியும் அதிகம் சிறீதரனுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார்கள்.குலநாயகமும் சிவஞானமும் அதிகம் சுமந்திரனுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்,கட்சிக்குள் வெடித்திருக்கும் பிளவைத் தீர்த்து வைப்பதற்கு கட்சியின் மூத்தவர்களால் முடியவில்லை. அதன் விளைவாகத்தான் விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றது.

இப்பொழுதும் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவெடுத்தால்,விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட மூப்போடும்;முதிர்ச்சியோடும்;பக்குவத்தோடும்; மிடுக்கோடும் கட்சிக்குள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

கொழும்பில் நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் வழக்கு தொடுத்த அதே காலப்பகுதியில், திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் அவருக்கு இணக்கமானவர்கள் என்று கருதப்படுகின்றவர்களால் இரண்டு வழக்குகள் கொடுக்கப்பட்டன.தென்னிலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை சுமந்திரன் எதிர்க்கிறார். ஆனால் அவருடைய சொந்தக் கட்சியை உடைக்கும் வேலைகளை அவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு ஊடாகச் செய்கிறார் என்று அவருடைய எதிரணி அவரை குற்றம் சாட்டுகின்றது.

ஆனால் தான் அந்த வழக்குகளுடன் சம்பந்தப்படவில்லை என்று சுமந்திரன் மறுத்திருக்கிறார்.எனினும்,அவர்தான் எல்லாவற்றின் பின்னணியிலும் நிற்கிறார் என்ற அபிப்பிராயம் பரவலாகக் காணப்படுகின்றது.அவருடைய பெயர் மேலும் கெட்டுக்கொண்டே போகிறது.

பிரச்சனை ஒரு சட்ட விவகாரம் ஆக்கப்பட்டதும் சிறீதரன் தன்னுடைய முகநூலில் “தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று எழுதினார். அதன்பின் அவருக்குப் பதில் கூறுவது போல, சுமந்திரனுக்கு ஆதரவான வடமாராட்சியைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அதே வசனத்தை தனது முகநூலில் எழுதினார். இதில் யார் தர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள்? யார் அதர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள்? எது தர்மம்?

கட்சி பல ஆண்டுகளாக யாப்பை மீறி வழி நடத்தப்பட்டிருக்கிறது என்று சிவகரன் கூறுகிறார்.அவர் தமிழரசு கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்தவர்.பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்.பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக சிவில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகிய போது அவர் சுமந்திரனின் பக்கம் நிற்கிறார் என்ற குற்றச்சாட்டு எதிரணியால் முன்வைக்கப்படுகின்றது.கட்சியின் யாப்பு நடந்து முடிந்த தேர்தலில் மட்டும் மீறப்படவில்லை. தேர்தலுக்கு முன்னரே அது மீறப்பட்டு விட்டது.அதற்குக் கட்சியின் முக்கியஸ்தர்களாகக் காணப்பட்ட எல்லாச் சட்டத்தரணிகளும் பொறுப்பு.சிவகரனின் வார்த்தைகளில் சொன்னால்,கட்சிக்குள் “வழிப்போக்கர்கள்” தலையெடுத்ததே யாப்புக்கு முரணாகத்தான்.

சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் யாப்பானது தமக்கு நீதியைத் தரவில்லை என்று கூறிப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் உள்ள மூத்த பெரிய கட்சியானது தனது சொந்த யாப்பையே மீறிச் செலுத்தப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் சட்டத்தரணிகள் பலர் உண்டு. சட்டத்தரணிகளின் அரசியல் அல்லது அப்புக்காத்துக்களின் அரசியல் ஒரு மூத்த பெரிய கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

கட்சிக்குள்ளேயே விவகாரத்தைத் தீர்த்து வைக்க முடியவில்லை என்பது கட்சி தோற்றுப் போய்விட்டதைக் காட்டுகின்றது.கட்சிக்குள் மூத்தவர்களாகக் காணப்படும் யாரும் அதைத் தீர்த்து வைக்கும் தகமையோடும் முதிர்ச்சியோடும் இல்லை என்பதையும் அது காட்டுகின்றது.கட்சிக்குள் மட்டுமல்ல கட்சிக்கு வெளியேயும் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்குப் பொதுவான யாரும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

முன்பு கட்சிகளுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முனைந்த சிவில் சமூகங்கள் இப்பொழுது கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்தும் ஒரு விடயத்தில் தலையிடுவதாகத் தெரியவில்லை. வழமையாக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் சிவகரன் இப்பொழுது சுமந்திரனுக்குச் சார்பானவராகப் பார்க்கப்படுகிறார்.ஆங்கிலம் பேசும் உலக சமூகத்துடன் அதிகம் இடையூடாடும் தமிழ் சிவில் சமூக அமையம்-இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் அமைப்பு-அதுவும் தலையிடும் நிலமைகளைக் காணவில்லை.அந்த அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரான குருபரன் தமிழரசுக் கட்சிக்கு எதிரானஒரு வழக்கில் தோன்றுகிறார்.இவ்வாறு சிவில் சமூகங்கள் இரு தரப்பையும் ஒரு மேசைக்கு அழைத்துக் கொண்டுவரும் சக்தியற்றிருக்கும் ஒரு சூழலில்,மதத் தலைவர்களும் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.பொதுவாக சிவில் சமூகங்கள் முன்கை எடுக்கும் போதுதான் மதத் தலைவர்களும் அவற்றோடு இணைந்து செயல்படுவதுண்டு. இம்முறை சிவில் சமூகங்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் விடயத்தில் சிவில் சமூகங்கள் தலையீடு செய்திருக்கின்றன.ஆனால் ஒரு கட்சிக்குள் பிணக்குகள் ஏற்படும்போது அதைத் தீர்ப்பதற்கு சிவில் சமூகங்கள் தலையிட்டது குறைவு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் மணிவண்ணன் அணி உடைந்து வெளியே வந்த பொழுது, சில தனிநபர்கள்தான் தலையிட்டார்கள்.எனினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள்ளும் உடைவு வந்திருக்கிறது.அதைத் தீர்ப்பதற்குச் சிவில் சமூகங்கள் தலையிடாத ஒரு நிலை காணப்படுகிறது.

அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூத்த கட்சிகளில் ஒன்றாகவும் உள்ளவற்றில் பெரியதாகவும் காணப்படும் ஒரு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்கைத் தீர்த்துவைக்க கட்சிக்குள் மூப்பாக உள்ளவர்களாலும் முடியவில்லை;கட்சிக்கு வெளியேயும் யாரும் இல்லையா?இது தமிழரசுக் கட்சியின் சீரழிவை மட்டும் காட்டவில்லை. தமிழ் அரசியலின் சீரழிவையும் காட்டுகின்றது. ஒரு பொதுவான,பலமான மக்கள் இயக்கம்;ஒரு தேசிய இயக்கம் இல்லாத பாரதூரமான வெற்றிடத்தை அது காட்டுகின்றது.

அரங்கில் உள்ள புத்திஜீவிகள்,கருத்துருவாக்கிகள்,குடிமக்கள் சமூகங்கள், மதத்தலைவர்கள்,ஊடகவியலாளர்கள் போன்ற யாருமே இந்த விடயத்தில் தலையிடாத ஒரு நிலை.பெரும்பாலானவர்கள் இது தங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு விடயம் என்று கருதிக்கொண்டு பார்வையாளர்களாகக் காணப்படுகிறார்கள்.சிலர் அரசியற் கூர்ப்பின் வழியில்,சிதைய வேண்டியது சிதையட்டும் என்று கூறுகிறார்கள்.இது தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாகப் பலமாக இல்லை என்பதைக் காட்டுகின்றது. இது தமிழரசுக் கட்சிக்கு வந்த சோதனை மட்டுமல்ல, தமிழ் அரசியல் சமூகம் முழுவதற்கும் வந்த ஒரு சோதனை.

அவ்வாறு கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்கு நீதியான,மூப்பான ஆட்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது. இந்த நிலை தொடருமாக இருந்தால்,கட்சியின் எதிர்காலத்தை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும். நீதிமன்றத்தில் இப்பொழுது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளுக்கான தீர்ப்புக்களின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்படும்.

தமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை,போர்க் குற்றம்,மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும், உள்ளதில் பெரிய ஒரு கட்சி தனக்குள் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.எந்த உள்நாட்டு நீதியை ஏற்றுக்கொள்ள மறுத்து பன்னாட்டு நீதியைக் கேட்கின்றதோ,அதே உள்நாட்டு நீதியின் முன் போய் நிற்கின்றது.இது,தமிழ் மக்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றதா?அல்லது அப்புக்காத்துமாரின் அரசியல் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தோற்கடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றதா?

-நிலாந்தன்

தமிழர்களது இனப்பிரச்சினையில் ஜே.வி.பி.

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் 1987 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வழக்குத் தொடர்ந்ததன் அடிப்படையில் 2006 ஒக்ரோபர் 10ஆம் திகதி வடகிழக்கு இணைப்பு செல்லாது மற்றும் சட்டவிரோதமானது என்ற அறிவித்தல் வந்தது. இது ஜே.வி.பி யின் தமிழர்கள் விடயம் தொடர்பான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டும்.

ஆனால், இன்றைய காலங்களில் தமிழர்களது விடயங்களில் அக்கறையானவர்களாக தம்மைக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்த ஜே.வி.பியின் தாபகத் தலைவர் ரோஹ விஜயவீர தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தீவிரமாக எதிர்த்தார். அவர் இலங்கையின் ஆட்சியை ஆயுத முனையில் பிடிக்க இரண்டு முறை முயற்சித்தார்.

1971இல் அவரது இயக்கம் மேற்கொண்ட ஆயுதப் புரட்சி தோல்வியானது. மீண்டும் இலங்கை அரசுக்கு எதிராக 1987-1989 காலப் பகுதியிலும் முயற்சி பயனற்றுப் போனது உலப்பன தேயிலைத் தோட்டத்தில் ஒளிந்திருந்த விஜயவீராவை, இராணுவம் 1989 ஒக்ரோபர் 3ஆம் திகதி கைது செய்தது. நவம்பருடன் அவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவர்கள் அரசியல் இயக்கமாகச் செயற்பட்டு வருகிறார்கள்.

குறிப்பிட்டளவான ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் பெறும் கட்சியாக அது வளர்ந்தது. ஆனால், கடந்த சில தேர்தல்களிலும் தேசிய அரசியலிலும் சரி, தமிழர்களது விடயங்களிலும் சரி கணக்கிலெடுக்கப்படாத நிலையை எட்டியிருந்த ஜே.வி.பி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவை விரட்டியடித்த அரகலயவுடன் சற்று மேம்படுத்திக் கொண்டதுடன், இப்போது இந்தியா அழைத்துப் பேசும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இது ஒரு முன்னேற்றம்தான்.

அதே நேரத்தில் மக்களிடமும் ஆதரவைப் பெருக்கிக் கொண்டது என்ற ஒரு மாயையும் தன்வசப்படத்திக் கொண்டுள்ளது என்பது உண்மை. அரசியலிலும் பன்னாட்டு உறவுகளிலும் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ இல்லை என்பது பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிரூபிக்கப்படலாம். அதற்கு ஜே.வி.பியும் விலக்களிப்புக்கு உட்பட்டதல்ல.

ஜே.வி.பி யின் இந்திய விஜயம் அந்நாட்டின் இராட்சிய நலன்கள் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல இலங்கைத் தமிழர்களது விவகாரத்திலும் முக்கியமானது. ஆனாலும், இந்தியா மேற்கொண்ட ஜே.வி.பி தொடர்பான இராஜதந்திர நகர்வு அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சிக்குள் தள்ளியதுடன், உலகில் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ கிடையாது என்ற கோட்பாட்டை இந்தியா கடைப்பிடிப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா எந்த அளவுக்கு அக்கறையுடனும் கவனத்துடனும் இருக்கிறது என்பதற்கு நல்லதோர் உதாரணமாக இருக்கும் ஜே.வி.பி யினருக்கான அழைப்பு நல்லதொரு சமிக்ஞையாக இருந்தாலும், வேறு ஒரு நாடி பிடிப்பாகவும் இருக்கலாம்.

அதே நேரத்தில் இலங்கை அரசியலில் முழுமையான ஈடுபாட்டுடன்தான் இருக்கிறோம் என்பதனை வெளிப்படையான அறிவிப்பாகவும் இதனைக் கொள்ளலாம். ஜே.வி.பி. எனும் மக்கள் விடுதலை முன்னணி ரோஹண விஜயவீரவால் 1960களில் ஆரம்பிக்கப்பட்டவேளை, அவருடைய கடும்போக்கு அரசியலுடன் இந்தியா தொடர்பிலும் விரோதப் போக்கையே கடைப்பிடித்துவந்திருந்தார்.

அதற்கு அவர் கொடுத்த விளக்கமாக இலங்கை நாட்டின் சுயாதிபத்தியத்துக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பிலான நிலைப்பாடு அமைந்திருந்தது. அவர்கள் தொடர்ந்து கொண்டிருந்த கடும்போக்கு இந்திய விஜயத்துடன் சற்றுத் தளர்ந்திருப்பதாகவே பேசப்படுகிறது.

எதிர் நிலைப்பாட்டு அரசியலையே மேற்கொண்டுவருகின்ற ஜே.வி.பியானது கடும்போக்கைக் கடைப்பிடித்திருந்தாலும் ஆட்சி அதிகாரம் என்று வருகின்றவேளை, கடும்போக்கைத் தணித்து இராஜதந்திர ரீதியில், ஓரளவுக்கேனும் மென்போக்கு தேவையானதாக இருக்கிறது என்பதனையே இந்தியாவின் அழைப்பையேற்று சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கின்றமை காட்டிநிற்கிறது.

பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவமுடையதான இலங்கை, இந்தியாவுக்கு அதன் தேசியப் பாதுகாப்பு, ஒருமைப்பாடு என பல்வேறு விடயங்களிலும் தேவையானதொன்று. எனவே இங்கு ஏற்படவிருக்கின்ற அல்லது ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற அரசியல் மாற்றம் பார்வைக்கு உட்படுவதில் தவறொன்றுமில்லை.

அந்தவகையில்தான் ஜே.வி.பியினருக்கான இந்திய அழைப்பும் அமைந்திருக்கிறது. இவ்வருடத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் இந்தியா, மேற்குலக சக்திகளாலும் முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது. இது தவிர்க்கமுடியாதது.

இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்‌ஷ, வாக்களித்த சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டமையில் ஜே.வி.பியினரின் பங்கு முக்கியமாக இருந்தது. அதன் பின்னர் உருவாகியிருக்கின்ற அரசியல் மாற்றம் அவர்களது பக்கம் பெரும் மக்கள் அலையொன்றை உருவாக்கியிருக்கிறது.

மூன்று ஆசனங்களையே பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற அக் கட்சிக்கு இது சாதகமானதே. அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புகளின்படி தற்போதைய ஜனாதிபதிக்கும் ஜே.வியினருக்கும் இருக்கின்ற ஆதரவானது சம அளவுகளிலேயே காணப்படுகின்றமை தெரியவருகிறது.

அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு அளவினை விடவும் ஜே.வி.பிக்கு அதிகம் என்பதே இதிலுள்ள பிரதான விடயமாகும். இந்திய ஊடகம் ஒன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 50 சதவீதம் ஆதரவு இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியா ஜே.வி.பியை இந்தியா அழைத்தமைக்கு ஓர் உந்துதலாகும்.

இலங்கையில் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் ஒரு கட்சியை இந்தியா தங்களுடைய அனுசரிப்புக்குள் இழுத்தக் கொள்வதற்காகவே இந்த அணுகல். இது தவிர வேறொன்றில்லை.

இன்னொருபுறம், 70களின் பிற்பகுதியிலிருந்து தமிழருடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை ஜே.வி.பி. வலியுறுத்திவந்திருந்தது. இந்த அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் அதில் இணைந்து செயற்பட்டார்கள்.

பின்னர் 1986இல் ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீர, அதன் மத்திய குழுவுக்காற்றிய மிக நீண்ட உரையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் முறியடிக்கப்பட வேண்டிய ஓர் ஏகாதிபத்திய சதி என்றார். அதுவே இன்றுவரை ஜே.வி.பியின் அரசியல் வேதமாகத் திகழ்கிறது. இதில் ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.

அதனோர் அங்கமே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வட, கிழக்கினை அவர்கள் பிரித்து வேறாக்கியமையாகும். இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினை அமுல்படுத்துவதில் முழு எதிர்ப்பாக இருந்து வருகின்ற இக்கட்சியை எவ்வாறு இந்தியா தம்முடைய பார்வைக்குள் அல்லது கட்டுக்குள்கொண்டுவர முயல்கிறதா என்பது கேள்வி.

அப்படியானால், நாங்கள் ஒப்பந்தத்தைச் செய்தோம். அது உங்களது நாட்டின் அரசியலமைப்பில் இருக்கிறது. அதனை நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாடு காரணமாக இருக்கலாம். இருந்தாலும், இந்தியா தன்னுடைய நலன்களை அலசாமல் இந்த நகர்வை எடுத்திருக்க வாய்ப்பில்லை.

இந்த நகர்வு ஒருவேளை, ரணிலுக்கு தேர்தலில் வெற்றி கிட்டாவிட்டால், தற்போதிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை விடவும் அதிகப்படியான வாக்குகளைப் பெறப்போகின்ற ஒருவர் அனுரகுமார திசாநாயக்கவாக இருப்பார்.

அவ்வேளையில், ஏற்படக்கூடிய தர்மசங்கடத்தினைத் தவிர்த்துக்கொள்வதற்கு இந்தியா முன்கூட்டியே இந்த நகர்வினை எடுத்திருக்கிறது என்றும் கொள்ளமுடியும். எது எவ்வாறானாலும், தற்போதைய ஜனாதிபதியான ரணில்தான் இந்தச் சந்திப்புக்கான வேலைகளைச் செய்து கொடுத்தார். ஜே.வி.பி. க்கு இந்தியா தம்முடைய ஆதரவினை வழங்குவதற்கு முன்வருகிறது.

தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ஜே.வி.பி. யின் ஒத்துழைப்பு முயற்சிக்கப்படுகிறது. என்றெல்லாம் பேசப்படுகின்ற பல்வேறு விடயங்கள் இதற்குள் இருக்கத்தான் செய்கிறது. ரணில் இதனை ஏற்பாடு செய்கிறார் என்றால், ஜே.வி.பி தொடர்பில் அவர் வெளியிடும் கருத்துக்கள் அரசியலாக இருக்கும்.

இல்லாவிட்டாலும், ரணிலுக்கு ஜே.வி. பியின் ஆதரவு கிடைப்பதற்கு ஏதுநிலைகள் ஏற்படுத்தப்பட முயற்சிக்கப்படலாம். ஆனாலும், இது இந்தியாவின் தனிப்பட்ட முயற்சியாக இருக்க வாய்ப்புமில்லை. எப்படியிருந்தாலும், ஜே.வி.பி. யினை இந்தியா, அவசர அவசரமாக உள்வாங்க முற்படுவதற்கு வேறும் காரணங்கள் இருக்கலாம். இல்லாமலுமிருக்கலாம்.

அரசியலில், இராஜதந்திரம் சகஜம்தானே.! என்றவகையில் தமிழர்களுடய விவகாரத்திலும் தேசிய அரசியலிலும் ஒரு நெகிழ்வுப் போக்கை, அனுசரிப்பு நிலைப்பாட்டை கைக்கொள்ள விளையும் ஜே.வி.பி. எதிர்வரும் காலங்களில் தமிழர்களது அரசியல், இனப்பிரச்சினை தொடர்பில் நல்லெண்ணத்தைக் கைக்கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வோம்.

– லக்ஸ்மன்

சதுரங்க ஆட்டமாடும் இலங்கை தமிழரசுக் கட்சி

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால், கட்சியின் செயற்பாடுகளை வழக்குகள் மூலம் ஒரு சில வருடங்களேனும் முற்றாக முடக்கி அதன் மூலம் தனது தோல்விக்கு பழிவாங்க கட்சிக்குள் ‘தோற்றுப்போன’ தரப்பு ஒன்று மேற்கொள்ளும் சதுரங்க ஆட்டமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான நீதிமன்ற வழக்குத் தாக்கல்கள் அமைந்துள்ளன.

கடந்த ஜனவரி 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானது, செல்லுபடியற்றது. எனவே, குறித்த இரண்டு பொதுச்சபைக் கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதுமென தெரிவித்து திருகோணமலையில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக யாழ்.

மாவட்ட நீதிமன்றில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரினால் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தாக்கல்களின் பின்னணியில்தான் ‘தோற்றுப்போன தரப்பின்’ சட்ட விளையாட்டுகள் இருப்பதாக உள் ‘வீட்டு’த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு, அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தலைவராகப் பெரும்பான்மை வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நிலையில், தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து தகுதிகளையும் கொண்டவன் என்ற தலைக் கனத்துடனும் களமிறங்கியவர் அடைந்த எதிர்பாராத தோல்வி மற்றும் கடந்த ஜனவரி 27ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவின்போது, தலைவர் பதவி நனவாகாத நிலையில், பொதுச் செயலாளர் பதவியையாவது அடைந்து விட வேண்டுமெனத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர் மீண்டும் ஆசைப்பட்டு அதுவும் கிடைக்காத நிலையில், தனது விசுவாசியான திருகோணமலையைச் சேர்ந்த குகதாசனை பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டுமென மேற்கொண்ட சதிகள், குழிபறிப்புக்கள் கட்சியைப் பிளவு படுத்தும் காய் நகர்த்தல்கள் மத்தியில் குகதாசன் தெரிவு செய்யப்பட்டபபோதும், அதற்குக் கிளம்பிய கடும் எதிர்ப்புக்களினால் இன்று வரை அவர் அந்த பதவியை ஏற்க முடியாத நிலை ஆகிய இரு காரணங்களின் பின்னணியிலேயே தற்போது இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது ஒன்றும் ரகசியமானதல்ல.

‘தோற்றுப்போன’ தரப்பின் விசுவாசிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள் ‘வீட்டு’தரப்புக்களினால் கூறப்படும் இவ்வழக்கைத் தாக்கல் செய்தவர்கள், ‘இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜனவரி 27இல் தெரிவான குகதாசனையே நியமிக்க வேண்டும். பொதுச் செயலாளர் பதவிக்கு மீள் தெரிவு இடம்பெறக்கூடாது. அத்துடன், பொதுச் செயலாளர் பதவி பங்கிடவும் படக்கூடாது. இதற்கு கட்சியின் புதிய தலைமை இணங்கினால் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

இல்லையேல் இன்னும் இன்னும் வழக்குகள் தாக்கல் செய்வோம்’ என்ற முடிவில் இருப்பதாக தெரியவருகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்று, கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச் சபையில் பலர் இடம் பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டைக் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கைத் தாக்கல் செய்தவரும் அதனைத் தெரிந்து கொண்டே வாக்களித்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அப்போது தனது விருப்பத்துக்குரிய தலைவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளார்.

ஆனால், அவர் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்ததாலேயே இப்போது வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். தான் விரும்பிய தலைவர் வெற்றி பெற்றிருந்தால் கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச்சபையில் பலர் இடம்பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டை இவர் முன்வைத்திருக்க மாட்டார்.

இதனால்தான் இந்த வழக்குத் தாக்கல் சூழ்ச்சிகளின் பின்னணியில் ‘தோற்றுப்போனவர்’ இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கும் தரப்பு பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றது. அதாவது இலங்கை தமிழரசுக் கட்சியை உடைக்கும், புதிய தலைமையைச் செயற்படவிடாது தடுக்கும், கட்சியின் ​பொதுச் செயலாளராகத் தனது விசுவாசியையே நியமிக்க வேண்டும் என விடாப்பிடியாக நிற்கும் தோற்றுப்போனவரின் நடிப்பில் உருவாக்கப்பட்டதே இந்த வழக்குகள் என்பதே தமிழ்த் தேசிய விசுவாசிகளின் குற்றச்சாட்டு.

வழக்கு தாக்கல் செய்தவர்களின் இந்த நோக்கம் அல்லது நிபந்தனை இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்குக் காற்றுவாக்கில் தெரிவிக்கப்பட்ட போதும், ‘தமிழரசுக் கட்சிக்கு எதிரான ‘உள் வீட்டு’ சூழ்ச்சிகளை முறியடிப்போம். வழக்குகளைச் சந்திக்கத் தயார்’ என கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனும் புதிய தலைவர் சிவஞானம் ஸ்ரீதரனும் உறுதியாக இருப்பதனால். தமது நிபந்தனைகளை ஏற்காது விட்டால் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவும் நீதிமன்ற சவாலுக்குட்படுத்தப்படும் என்ற மறைமுக மிரட்டல்களிலும் ‘தோற்றுப்போன’ தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் ‘உள் வீட்டு’ தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும், வெளியிலும் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றிப் புரிதல்களும் எமக்குத் தெளிவாக உள்ளன. 75 வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாகக் கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேநேரம், கட்சியின் நிர்வாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன். விசேடமாகக் கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீள நடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.

மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்மானத்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன். விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, அனைத்து தடைகளையும் முறையாகக் கையாண்டு அவற்றைக் கடந்து எமது பாரம்பரிய அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றோம் என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன் எடுத்த வரலாற்றுத் தவறான முடிவினால் அவர் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் பற்ற வைத்த தீ இன்று தான் பற்றி எரிய அண்மையில் இரா.சம்பந்தன் எம். பி. பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கோரியது. தற்போது சம்பந்தன் விதைத்த வினையின் விளைவாக அவரின் கட்சியையே அறுக்கத் தொடங்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

இதேவேளை, கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது ‘தமிழ் கட்சிகளின் பிளவு ஆபத்தானது.

பிளவுகள் சரி செய்யப்பட்டு அரசியல் பயணங்கள் தொடர வேண்டும். தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது. இந்தக் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார். தமிழ் கட்சிகள் பிளவடைந்து முடிந்து தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுத்தப்படுவதை அவர் அறியவில்லை போலும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முச்சந்தியில் நிற்கும் நிலையில், இவ்வாறானதொரு நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தங்களின் தனிப்பட்ட நலன்களுக்கும் வறட்டு கௌரவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது விட்டிருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று ஸ்ரீதரன் தலைமையில் தலை நிமிர்ந்து நின்றிருக்கும். இந்தப் பிரச்சினையைச் சுமுக தீர்வு காணாது கௌரவப் பிரச்சினையாக, இரு அணிகளின் பிரச்சினையாக மாற்றினால் தந்தை செல்வா சொன்னதைச் சற்று மாற்றி, ‘இலங்கை தமிழரசுக் கட்சியை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறவே நேரிடும்.

-முருகாநந்தன் தவம்

இலங்கை சிறையிலிருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம்

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி வரும் பாரதப் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை நீதிமன்றம் இலங்கை வெளிக்கடை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள 151 விசைப்படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் நேற்று காலை 10 மணியில் இருந்து தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

மீனவர்களின் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக தங்கச்சிமடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் மீனவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என நேற்று இரவு முழுவதும் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப் பகிர்வு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

அதிகார பகிர்வு அனைவரையும் உள்வாங்கும் அபிவிருத்தி ஆகியவை இலங்கையின் பேண்தகு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய பெரும்பான்மைவாதம் குறித்தும் எச்சரித்துள்ளார்

இந்தியாவின் 2022 ரைசினா டயலொக் 2024 நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலில்கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இலங்கை 1980களின் நடுப்பகுதியில் இனமோதலை எதிர்கொண்டது என்பது உங்களிற்கு தெரியும்- இனமோதலிற்கு முன்னர் நாங்கள் பாதுகாப்பு செலவீனங்களிற்காக மிகவும்குறைவாகவே 0.5செலவிட்டோம்.

இது 1985 இல் மூன்று வீதமாக அதிகரித்தது பின்னர் பத்து வருடங்களின் 1995 இல் 5.9 வீதமாக அதிகரித்தது.

1985 இல் எங்களின் பாதுகாப்பு செலவீனம் 188 மில்லியன் டொலர் 2008 இல் இது 1.5 மில்லியன் டொலராக மாறியது.

1980-90களில் எங்களின் சமூகஅபிவிருத்தி சுட்டிகள் ஏனைய தென்னாசிய நாடுகளை மிகவும் சிறப்பானவையாக காணப்பட்டன.

நாங்கள் அபிவிருத்தி;க்காக செலவிட்டிருக்ககூடியவற்றை பாதுகாப்பிற்காக செலவிட்டோம்,

இலங்கையை பொறுத்தவரை நாங்கள்அனைவரும் ஜனநாயகம் குறித்து நம்பிக்கை கொண்டுள்ள போதிலும் நாங்கள் பெரும்பான்மைவாதம் குறித்து அவதானமாகயிருக்கவேண்டும்.

1970களில் இலங்கையில் கல்விசீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டபோது அது சில சமூகத்தினர் பாரபட்சத்திற்குள்ளாக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது. இது அந்த சமூகத்தினர் ஆயுதங்களை ஏந்தும் நிலையை ஏற்படுத்தியது.

ஆகவே நாங்கள் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும் ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பதை நாங்கள் நம்புகின்ற போதிலும் அபிவிருத்தி என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியாக காணப்படவேண்டும்,சமூகத்தின் ஒரு பகுதியினருக்கான அபிவிருத்தியாக மாத்திரம் அது காணப்படமுடியாது.

ஒருநாடாகவும் முன்னோக்கி செல்வதற்கும் நாங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும், நாங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளாவிட்டால் அரசியல்வாதிகள் பெரும்பான்மைவாதம் என்ற துரும்புச்சீட்டை பயன்படுத்துவார்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை மாத்திரம் கவரும் நோக்கத்துடன் செயற்படுவார்கள்.

வடக்கு-கிழக்கு அரசியல்வாதிகளை இணைத்து புதிய கூட்டணி அமைத்து ரசியல், பொருளாதார புரட்சி ஏற்படுத்துவோம்

தென்னிலங்கை அரசியல்வாதிகள் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு புதிய அரசியல் கூட்டணி முன்னோக்கி பயணிக்கும். இப்புதிய கூட்டணியின் ஊடாக அரசியல் புரட்சியையும், பொருளாதார புரட்சியையும் ஏற்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

புதிய அரசியல் கூட்டணியின் கொழும்பு மாவட்ட முதலாவது பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (24) ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் யாருடன் இணையப் போகின்றோம் என்று கேட்கின்றனர். நாம் யாருடனும் தனித்து இணையப் போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானாலும், பொதுஜன பெரமுனவானாலும் சகலரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதன் காரணமாகவே பல திசைகளிலும் காணப்பட்ட நாம் அனைவரும் இன்று ஒன்றிணைந்து கூட்டணியை அமைத்துள்ளோம்.

75 ஆண்டுகள் வாக்குறுதி அரசியலால் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த கலாசாரத்தை நாம் மாற்றியமைக்க வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் பிரிவினைவாதங்களால் நாடு பல கலவரங்களை எதிர்கொண்டது. 30 வருட கொடூர யுத்தத்தையும் எதிர்கொண்டது. இனியொருபோதும் அவ்வாறான யுத்தங்களுக்கும் வன்முறைகளுக்கும் இடமளிக்கக் கூடாது.

பிரபாகரனின் யுத்தத்தை வெற்றி கொண்டாலும் எம்மால் பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாமலுள்ளது. எனவே, அதற்கு நாம் தயாராக வேண்டும். அதற்காக சிறந்த வேலைத்திட்டத்துடன் எவ்வித இன, மத பேதமும் இன்றி இணைந்து பயணிக்க வேண்டும். தற்போதுள்ள இந்த நிலைமைகளின் அடிப்படையில் எம்மால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்க முடியாது. எனவே தான் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

வியத்மக அமைப்பை கட்டியெழுப்பி புதிய ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி அவரை வெற்றி பெறச் செய்தோம். எனினும் அது தோல்வியிலேயே முடிவடைந்தது. எனவே இனி நாம் அவதானத்துடன் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். தென்னிலங்கை அரசியல்வாதிகள் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் முன்னோக்கி பயணிப்போம். அதற்கு எடுத்துக்காட்டாகவே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இன்று எம்முடன் இணைந்துள்ளார். புதிய கூட்டணியின் ஊடாக புதிய அரசியல் புரட்சியையும், பொருளாதார புரட்சியையும் ஏற்படுத்துவோம் என்றார்.

மார்ச் முதல் வாரத்தில் ரணில் – பசில் சந்திப்பு; ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இறுதித் தீர்மானம்

உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறனதொரு நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் (2023) அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். ஜனவரி மாதம் இறுதியில் நாடு திரும்புவதாக இருந்த போதிலும் இதுவரையில் பஷில் ராஜபக்ஷ நாட்டுக்கு வரவில்லை. இவ்வாறானதொரு நிலையில் இவ்வாரம் இறுதியில் அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல் வழங்கியது.

ஜனாதிபதி வேட்பாளரை மையப்படுத்தி ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமநிலைப்படுத்தவே பஷில் ராஜபக்ஷ அவசரமாக நாடு திரும்புவதாக அந்த தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஒருதரப்பு முன்வைத்துள்ள நிலையில், மற்றுமொரு தரப்பு அதனை எதிர்த்து வருகிறது. இதனால் கட்சிக்குள் நாளுக்கு நாள் முரண்பாடுகளும் பிளவுகளும் தீவிரமடைந்து வருகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோரை தொடர்ந்தும் தொலைப்பேசி ஊடாக தொடர்புகொண்டு நாட்டின் அரசியல் நிலைமைகளையும் கட்சியின் செயல்பாடுகளையும் பஷில் ராஜபக்ஷ கருத்தில் கொண்டிருந்தார்.

அதே போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிராமிய மட்டத்தில் உள்ள மக்கள் ஆதரவுகள் குறித்தும் பல்வேறு வகையில் கணிப்புகளை அவர் முன்னெடுத்திருந்தார். இதன் பிரகாரம், 20 வீதம் தொடக்கம் 25 வீதம் வரையிலான மக்கள் ஆதரவு கிராமிய மட்டத்தில் இன்னும் உள்ளதாக பஷில் ராஜபக்ஷவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் ஆதரவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் அரசியல் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதே பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனையாக உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இதன்போது பொதுஜன பெரமுன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்று அரசியல் கட்சியுடன் இணைந்து கட்சியின் சின்னத்தை புதுப்பித்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே பஷில் ராஜபக்ஷ இவ்வாரம் இறுதியில் நாடு திரும்புகிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் மார்ச் 3ஆம் திகதி கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்கள் வேறுபட்டாலும் இந்த சந்திப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி நவீன கடலோர காவற்படைக் கப்பலை இலங்கைக்கு வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க பிரதிச் செயலாளர் வர்மா உறுதி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதென அமெரிக்க இராஜாங்க முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்தார்.

இரு தினங்கள் (பெப்ரவரி 23 – 24 ) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா அரசாங்க, சிவில் சமூகம் மற்றும் பொருளாதாரத் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்ட நிலையில், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரைச் சந்தித்த செயலாளர் வர்மா இலங்கையினை நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்தும் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட இலங்கையில் மேற்கொள்ளப்படும் சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினார்.

மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதிச் செயலாளர் வர்மா வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும் ஒரு அதிக ஸ்திரத்தன்மையுடைய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை கடற்படையின் திறன்களை பலப்படுத்துவது உட்பட, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலானபாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

பெப்ரவரி 23 ஆம் திகதி, அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று முன்னாள் அமெரிக்க கடலோரக் காவல்படை கப்பல்களில் ஒன்றான SLNS விஜயபாகு கப்பலுக்குச் சென்ற பிரதிச் செயலாளர் வர்மா பின்வருமாறு கூறினார். “நடுத்தர தாங்குதிறன் கொண்ட ஒரு நான்காவது கப்பலையும் இலங்கைக்கு வழங்குவதற்கான தனது நோக்கத்தை இராஜாங்கத் திணைக்களம் காங்கிரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளதென்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த முயற்சிக்கு நிதியளிப்பதற்காக வெளிநாட்டு இராணுவ நிதியளிப்பாக 9 மில்லியன் டொலர்களை திணைக்களம் ஒதுக்கியது. காங்கிரஸின் அறிவிப்புக் காலம் நிறைவடைந்த பின்னர், கப்பலை இலங்கைக்கு வழங்குவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தப் பரிமாற்றம் நிறைவடைந்தால், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அது மேலும் பலப்படுத்தும்.

இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் ரோந்து செல்வதற்கும், அதன் தேடுதல் மற்றும் மீட்புப் பகுதியைக் கண்காணிப்பதற்கும், இந்து சமுத்திரத்தின் பரபரப்பான கடல் வழித்தடங்களைக் கடந்து செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் மேலதிக பாதுகாப்பை வழங்குவதற்குமான இலங்கையின் திறனை இந்தக் கப்பல் அதிகரிக்கும்.

கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டபோது அங்கு இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித்த பண்டார தென்னகோன், இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

“அமெரிக்கா முன்னர் இலங்கை கடற்படைக்கு மூன்று கப்பல்பளை வழங்கியுள்ளது. கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் சட்ட அமுலாக்க பணிகள், மனித கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் ஆகிய பணிகளுக்காக இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படும் அதே நேரத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் கால பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கும் அவை உதவி செய்கின்றன. நான்காவது கப்பலின் இந்தப் பரிமாற்றமானது, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பேணிப்பாதுகாப்பதற்காக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பின் ஒரு நீண்ட வரலாற்றில் மற்றுமொரு முக்கிய புள்ளியாகும்.” என தூதுவர் சங் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்திலுள்ள ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையமான மேற்கு கொள்கலன் முனையத்திற்கும் (WCT) பிரதிச் செயலாளர் வர்மா விஜயம் செய்தார். அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் 553 மில்லியன் டொலர் நிதியளிப்புடன், கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் (CWIT) பிரைவட் லிமிடட் இனால் தற்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மேற்கு கொள்கலன் முனையமானது தெற்காசியப் பிராந்தியத்திற்கு இன்றியமையாத ஒரு உட்கட்டமைப்பை வழங்கும்.

2021 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட தனது முழு கொள்ளளவுடன் இயங்கும், கொழும்பு துறைமுகத்தின் இப்புதிய இணைப்பானது துறைமுகத்தின் மிகவும் ஆழமான முனையமாக அமைவதுடன், இலங்கையின் இறையாண்மைக் கடன்களை அதிகரிக்காமல், கொழும்பு துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்துக் கொள்ளளவை அதிகரிப்பதையும், பிரதானமான கப்பல் வழித்தடங்கள் மற்றும் சந்தைகளை இணைக்கும் முதன்மை ஏற்பாட்டியல் மையமாக அது வகிக்கும் பங்கை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆர். வர்மா முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் பதவியில், அவர் திணைக்களத்தின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாகச் செயற்பட்டு, நவீனமயமாக்கல், வெளிநாட்டு உதவிகள் மற்றும் பலதரப்பட்ட பணியாளர்கள் தொடர்பான விடயங்களிலும் மூலோபாயம் தொடர்பான விடயங்களிலும் திணைக்களத்தின் முயற்சிகளை வழிநடத்துகிறார். பிரதிச் செயலாளர் வர்மா முன்னர் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றி, மிகப்பெரிய அமெரிக்கத் தூதரகங்களில் ஒன்றான இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை வழிநடத்தியதுடன் இருதரப்பு உறவுகளில் வரலாற்று ரீதியான முன்னேற்றங்களை அடைவதற்கும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.