சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் – நாணய நிதியம்

குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெறவுள்ள கடன்பட்ட நாடுகளின் சந்திப்பொன்றில் சீனாவின் நிதியமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையான கடன் கொடுப்பனவாளர்களையும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

பான் கீ மூன் 2009 கூட்டறிக்கையை மகிந்தவுக்கு நினைவுபடுத்த வேண்டும்

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பான் கீ மூன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுகள் நடத்தி, இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த கோருகிறேன்.

மே 24, 2009 அன்று வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தான் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல் செய்து, அதை மென்மேலும் மேம்படுத்த (13+) உடன்படுவதாகவும், அதேபோல் சர்வதேச மனித உரிமை நியமங்களை ஏற்று இலங்கையில் கடை பிடிப்பதாகவும் உலக மன்றமான ஐநாவுக்கு, அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஐநா செயலாளர் பாங்கி-மூன், என்ற தனக்கு உறுதி அளித்ததை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன முன்னணியின் அதிகாரபூர்வ தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது எம்பிகளுக்கும், இவர்களின் பின்னால் இன்னமும் நிற்கும் சில பெளத்த பிக்குகளுக்கும் ஞாபகப்படுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

இன்று, பொறுப்பை நிறைவேற்றாத தவறு செய்து, குற்றவாளி கூண்டில் நிற்பது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல. ஒட்டு மொத்த ஐநா அமைப்பும் என நான் நம்புகிறேன். இவர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

பான்கி-மூன் மகிந்த கூட்டறிக்கையில், கையெழுத்து இட்ட ஒரு தரப்பு வார்த்தை தவறுமானால், அடுத்த தரப்பு அதை தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பெயர்தான் கூட்டறிக்கை. ஆனால், அதை ஐநா செய்யவில்லை. அது மட்டுமல்ல, போர் நிகழ்ந்த போது, வன்னியில் இருந்த ஐநா அலுவலகத்தை இலங்கை அரசு சொன்னது, என்பதற்காக மூடி விட்டு நாட்டை விட்டு வெளியேறிய அன்றைய ஐநாவின் முடிவுக்கு முன்னாள் ஐநா செயலாளர் இந்த பான்கி-மூன் பொறுப்பேற்க வேண்டும்.

அதனால்தான், இலங்கையின் இறுதி யுத்தம், சாட்சியமில்லா யுத்தமாக நிகழ்ந்தது. இன்று போர் முடிந்து ஏறக்குறைய 14ம் ஆண்டுகள் ஓடுகின்றன. முன்னாள் ஐநா செயலாளர் இலங்கை போர் தொடர்பில் அன்று உலக மாமன்றமான ஐநா சபை விட்ட தவறை இன்றாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் அதை பற்றி பேச வேண்டும். அது உலக அளவில் எடுப்படும். அன்று இலங்கை யுத்தம் தொடர்பாக ஐநா விட்ட தவறு தொடர்பில் அன்றே ஐநா சபைக்குள் ஒரு உள்ளக அறிக்கை தயார் செய்யப்பட்டதை நான் அறிவேன். அது பற்றி, முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன் இனியாவது பகிரங்கமாக பேச வேண்டும். இலங்கையின் ஊடகவியலார்கள் பாங்கி-மூனை கண்டு இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், சந்திக்கும் நபர்களின் நிகழ்ச்சி நிரலில் நான் இல்லை. நான் அவரை கண்டால் இதை அவர் முகத்துக்கே சொல்லி கேட்க விரும்புகிறேன்.

வடக்கிலிருந்து கிழக்குக்கு பேரணி மூன்றாவது நாள் திருமலை நோக்கி ஆரம்பம்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி தற்போது முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

திருகோணமலை நோக்கி பேரணி தற்போது கொக்கிளாய் வீதிவழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் ஆக்கிரமிப்புக்குள்ளான நீராவியடி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளது.

சுடலைக்கழிவு அரசியல்? – நிலாந்தன்

1970களில் தமிழ் இளைஞர் பேரவையில் உறுப்பினராக இருந்தவரும் தமிழரசு கட்சியோடு நெருங்கிச் செயற்பட்டவரும்,பிந்நாளில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின், இணைந்த வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்பில் இருந்தவருமாகிய, ஒரு மூத்த அரசியல் செயற்பாட்டாளரின் நேரடி அனுபவம் இது…….தமிழரசுக் கட்சியோடு நெருங்கிச் செயற்பட்ட காலப்பகுதியில் இளையவர்கள் அமிர்தலிங்கத்தின் வீட்டு முன் விறாந்தையில் தங்குவதுiண்டாம். ஒருநாள் இரவு அவர்கள் சுவரொட்டி ஒட்டுவதற்காக போகும்பொழுது அவர்களோடு சேர்ந்து அமிர்தலிங்கத்தின் மகன் ஒருவரும் சென்றிருக்கிறார். இரவு முழுதும் மகனைத் தேடிக் காணாத அமிர்தலிங்கம் அடுத்த நாள் காலை இந்த இளைஞர்களோடு அவரைக் கண்ட பொழுது பின்வரும் தொனிப்படப் பேசியிருக்கிறார்… “நீயும் படிக்காமல் இவங்களப்போல காவாலியாத் திரியப் போறியா?”

1970களில் அமிர்தலிங்கம் எந்த நோக்கு நிலையில் இருந்து அவ்வாறு கூறினாரோ,அதே நோக்கு நிலையில் இருந்துதான் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளின் பின் சுமந்திரனும் கதைக்கிறாரா ? “20 வருடங்களாகக் கூட இருந்தவர்களை நல் வழிப்படுத்த எடுத்த முயற்சியிலும் நாம் தோல்வி அடைந்து விட்டோம்” இவ்வாறு சுமந்திரன் அண்மையில் சாவகச்சேரியில் வைத்துக் கூறியுள்ளார். முன்பு பங்காளிகளாக இருந்த கட்சிகளை நோக்கித்தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார். அவர்களை நல்வழிப்படுத்த முற்பட்டோம் என்று கூறுகிறார். ஆயின் அவர்கள் திருத்தப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று பொருள்.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குற்றவாளிகள் அல்லது திருத்தப்பட வேண்டியவர்கள் என்று அவர் கருதுகிறாரா? இரண்டு தசாப்தங்களாக ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது இனித் திருந்த மாட்டார்கள் என்று கூறுகிறாரா?

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஏறக்குறைய அரசாங்கம் கூறுவதுபோல புனர்வாழ்வழிப்பது என்ற பொருளில்தான்.ஒரு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவ்வாறு கூறத்தக்க மனோநிலை எங்கிருந்து வருகிறது? நாங்கள் தூய மிதவாத கட்சி. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாதவர்கள்.எமது கைகளில் ரத்தம் இல்லை. கொலைப் பழி இல்லை.நாங்கள் படித்தவர்ள்;நாங்கள் எப்பொழுதும் நல்வழியில்தான் செல்கிறோம்…. என்று நம்பும் ஒரு மிதவாத பாரம்பரியத்தில் இருந்தா அவ்வாறு கூறப்படுகிறது?

ஆனால் தமிழரசுக் கட்சி அப்படி கூறமுடியாது. ஏனெனில் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட அரசியல் செயற்பாட்டாளரும் உட்பட ஆயிரக்கணக்கான இளவயதினரை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தூண்டியதே தமிழ் மிதவாதிகள்தான்.குறிப்பாக தமிழரசு கட்சியானது தேர்தல்களில் தோற்கும்பொழுது தீவிர தேசிய நிலைப்பாட்டை கையில் எடுக்கும்.(இப்பொழுது, பேச்சுவார்த்தை மேசையில் தீவிரமான நிலைப்பாட்டை எடுப்பது போல).அப்பொழுது அவர்கள் பேசும் வீர வசனங்களில் மயங்கி இளையோர் அவர்கள் பின் செல்வார்கள்.அந்த இளையோரை தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராகத் திருப்பி அவர்களைத் தண்டிக்குமாறு தூண்டியது தமிழ் மிதவாதிகள்தான். மேடைகளில் அவர்கள் செய்த முழக்கங்களை கலாநிதி சிதம்பரநாதன் “வார்த்தை வன்முறை-வேர்பல் வயலன்ஸ்” என்று வர்ணிப்பார். இவ்வாறு தமிழ் மிதவாதிகளால் தூண்டப்பட்டு போசிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டதே தமிழ் ஆயுதப் போராட்டம் ஆகும். எனவே தமிழரசுக் கட்சி இதில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறமுடியாது. தனது கையில் ரத்தம் இல்லை என்றும் கூறமுடியாது.

தமிழரசு கட்சியின் தேர்தல் மேடைகளில் இளையோர் உணர்ச்சிவசப்பட்டு விரலை வெட்டி தலைவர்களின் நெற்றியில் ரத்தத் திலகம் வைத்தார்கள். அவ்வாறு ரத்தத்தால் பொட்டு வைத்த ஒருவர் பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக வந்தார்.அவருக்கு இயக்க பெயரும் பொட்டு என்று வைக்கப்பட்டது. இப்படியாக இளைஞர்களை ரத்தம் சிந்துமாறு ஊக்குவித்த ஒரு கட்சி இப்பொழுது தன்னை ஒரு தூய மிதவாதக் கட்சியாக கூறிக்கொள்ள முடியாது.

ஏன் அதிகம் போவான்? தமிழரசுக் கட்சியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் இந்தியாவில் ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பொழுது அதை அமிர்தலிங்கம் தடுக்கவில்லை.

இவ்வாறு தமது இயலாமை,பொய்மை,போர்க்குணமின்மை என்பவற்றிற்கு எதிராகத் திரண்டு வந்த இளையோரின் கோபத்தைத் திசைதிருப்பி ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஊக்கிவித்ததன்மூலம் தமிழ்த் தலைமைகள் தந்திரமாக போராட்ட பொறுப்பை இளைய தலைமுறையின் தலையில் சுமத்தின.ஆயுதப் போராட்டம் படிப்படியாக அரங்கில் முன்னேறத் தொடங்கிய பொழுது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மிதவாதிகள் பின்னரங்கிற்கு தள்ளப்பட்டார்கள்.ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் மிதவாதிகளுக்கு எதிராகவும் திரும்பியது.அதாவது ஆயுதப் போராட்டத்தால் தண்டிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ் மிதவாதிகளும் இருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனினும் அதே ஆயுதப் போராட்டம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பின் ஒரு பண்புருமாற்றத்துக்கு தயாராகியது அதன் விளைவுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.கூட்டமைப்பு எனப்படுவதே 2009க்கு முந்திய ஒரு பண்புருமாற்றத்தின்-trasformation-விளைவுதான்.நவீன தமிழ் அரசியலில் தோன்றிய சாம்பல் பண்பு அதிகமுடைய (grey) ஒரு கட்டமைப்பு அது. அப்பண்புருமாற்றத்தை 2009 க்குப் பின் அடுத்த கட்டக் கூர்ப்புக்கு எடுத்துச் செல்ல சம்பந்தர் தவறிவிட்டார்.வரலாறு அவருக்கு நிர்ணயகரமான,உன்னதமான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது.ஆனால் வரலாறு அவருக்கு வழங்கிய பொறுப்பை அவர் பொருத்தமான விதத்தில் நிறைவேற்றவில்லை.ஒரு பண்புருமாற்ற காலகட்டத்தை அவர் வீணடித்து விட்டார்.ஒரு பண்புருமாற்றத்துக்குத் தலைமைதாங்க அவரால் முடியவில்லை.அதற்கு அவசியமான அரசியல் உள்ளடக்கமும் அவரிடமில்லை.

 

தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள். ஆயுதப் போராட்டம் என்றாலே எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். இதில் எல்லாருக்கும் ஏதோ ஒரு விகிதமளவுக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு.தமிழ் மக்கள் தங்களுடைய இறந்த காலத்தைக் கிண்டத் தொடங்கினால் பிணமும் நிணமும் எலும்புக்கூடுகளுந்தான் வெளியேவரும்.தமிழ் மக்களைப் பொறுத்தவரை இறந்த காலத்தை கிண்டுவது என்பது அதன் பெரும்பாலான அர்த்தத்தில் புதைமேடுகளைக் கிண்டுவதுதான்.அப்படிக் கிண்டத் தொடங்கினால்,ஒருவர் மற்றவரைக் குற்றவாளியாக்குவதிலேயே தேசம் பல துண்டுகளாக சிதறிப் போய்விடும்.

ஒர் ஆயுத மோதலுக்கு பின்னரான அரசியல் என்ற அடிப்படையில்,தமிழ் மக்கள் இரண்டு தளங்களில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்று நீதிக்கான போராட்டம்.இரண்டு,அந்தப் போராட்டத்துக்காக தேசத் திரட்சியை ஆகக்கூடியபட்சம் உடையவிடாமல் பாதுகாப்பது.அவ்வாறு தேசத்திரட்சியை பலமான நிலையில் பேணுவதென்றால்,அதற்கு தமிழ் அரசியலில் பண்புருமாற்றம் அவசியம்.அதாவது வெளி நோக்கிய நீதிக்கான போராட்டம்; உள்நோக்கிய பண்புருமாற்றம்.அதற்கு பரந்த மனம் கொண்ட பெருந்தலைவர்கள் வர வேண்டும்.

ஆனால் சம்பந்தர் அவ்வாறான ஒரு பெருந் தலைவரல்ல.தமிழ் அரசியலில் முன்னெப்பொழுதும் தோன்றியிராத ஒரு சாம்பல் பண்புமிக்க கூட்டுக்கு சுமார் 20 வருடங்கள் அவர் தலைமை தாங்கினார்.தமிழ் மிதவாத அரசியலிலேயே அதிகளவு ஆசனங்களை(22) வென்ற அக்கூட்டு படிப்படியாகச் சிதைந்து போய்விட்டது.அதற்கு அவரும் பொறுப்பு.அவர் தலைமை தாங்கிய ஒரு கூட்டுக் கலைந்தபொழுது,அதன் தலைவராக,அதைக்குறித்து அவர் உத்தியோகபூர்வமாக எதையும் சொல்லவில்லை.அல்லது சொல்ல முடியவில்லை.கூட்டமைப்பின் சிதைவு என்பது சம்பந்தருடைய தலைமைத்துவத்தின் தோல்வியுந்தான்.தமிழ் பண்புருமாற்ற அரசியலின் தோல்வியுந்தான்.அது தமிழரசுக் கட்சியின் தோல்வியுமா என்பதை இனிவருங்காலமே தீர்மானிக்கும்.

கடந்த சில கிழமைகளுக்குள் கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை தமிழரசு கட்சியும் இறுக்கமான ஒரு கட்சியாக உள்ளதா என்ற கேட்குமளவுக்கு நிலைமைகள் காணப்படுகின்றன.கடந்த கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும்போது மார்ட்டின் வீதியில்,கட்சித் தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.ஆனால் வேட்பு மனுக்கள் சுமந்திரனின் அணியைச் சேர்ந்த ஒருவருடைய அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு நேரடியாக கச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றஞ் சாட்டப்படுகிறது.அதாவது கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை என்று பொருள்.அது மட்டுமல்ல, கிளிநொச்சியில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது, சுமந்திரனுக்கு விசுவாசமான அணியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகிறார்கள்.அவர்களில் சிலர் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியில் இணைந்து விட்டார்கள்.சிறீதரனின் அன்ரன் பாலசிங்கம் கட்சியை எங்கே கொண்டு போகிறார்?

பிரதேசசபைத் தவிசாளரின் வீட்டின் முன் போடப்பட்ட சுடலைக்கு கழிவு

கடந்த திங்கட்கிழமை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரின் வீட்டுக்கு முன் சுடலைக் கழிவுகள் ஒரு மூட்டையாகக் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பதனை அவர் முகநூலில் பதிவேற்றியுள்ளார்.அதை யார் செய்தது என்பது நிரூபிக்கப்படவில்லை.எனினும் முகநூலில் பிரதேச சபை தவிசாளர் எழுதிய குறிப்பில்,சுயேட்சைக் குழுவின் மீதே குற்றஞ் சாட்டப்படுகிறது.ஒரே கட்சிக்குள் ஒரே தேர்தல் தொகுதிக்குள் ஏற்பட்ட மோதல்கள் சுடலைக் கழிவுகளை வீட்டின் முன் போடும் அருவருப்பான ஒரு வளர்ச்சிக்கு வந்து விட்டனவா? இருபது வருடங்களாக ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது முன்னாள் பங்காளிகளை ஒட்டுக் குழுக்கள்.தூள் கடத்திகள்,தலையாட்டிகள் என்று அழைக்கலாமென்றால்,நாளை,கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறுபவர்களுக்கு என்னென்ன பட்டங்களைச் சூட்டப் போகிறார்கள்?

படையினரால் அபகரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியேறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவில்லை

பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பலாலி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பலாலி வடக்கு வசாணி பகுதியை சேர்ந்த தேவமலர் என்ற பெண் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைய நாட்களாக பலாலி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான செய்திகளை நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள். 1990 ஆண்டு யுத்தம் காரணமாக தனது தாய் இடம் பெயர்ந்து சென்றனர்.

ஆனால் நாங்கள் இங்கே பிறக்கவில்லை. எங்கள் சொந்த நிலத்தை இப்போது தான் நாங்கள் பார்க்கின்றோம். இங்கு இருந்து இடம் பெயர்ந்த பின்னர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தோம். தற்போதும் அனுபவித்து வருகிறோம். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டோம்.

ஒழுங்கான மலசல கூடம் இல்லை. கிணறு இல்லை, முகாம்களின் அருகில் வசிக்கும் மக்களின் வீடுகளில் அவற்றுக்காக சென்றோம். தற்போது கூட இங்கு மலசல கூட வசதி, நீர் வசதி மின் வசதி, இல்லாமல் கடற்கரைகளில் நாங்கள் எமது தேவையை பூர்த்தி செய்கிறோம்.

காணிகளை விடுவித்தது எமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இன்னும் பல இடங்கள் விடுவிக்க வேண்டியுள்ளது. அந்த மக்களின் சந்தோசங்களையும் நாங்கள் பார்க்க வேண்டும்.

தற்போது காணிகளை விட்டும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை. வீடு சீரமைப்பதாக இருந்தாலும் காணி துப்பரவாக்குவது என்றாலும் நீங்கள் வழங்கும் பணம் போதுமானதாக இல்லை.

இந்த கடற்கரையின் வருமானத்தை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். எனவே விரைவில் எங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய உதவிகளையும் மலசல கூட வசதி, நீர் வசதி, மின்சார வசதிகளையும் மேற்கொண்டு தருமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பலாலி காணி விடுவிப்பதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவிக்கையில்,

இந்த காணி விடுவிப்பில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெறும் 109 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கு வெறும் 80 ஏக்கர் காணிகளே கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2500 ஏக்கர் காணிகள் உள்ள இடத்தில் வெறுமனே 80 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. காணிகள் தற்போது விடுவிக்கப்பட்ட மக்கள் புன்னகைத்தாலும் அவர்களுக்கு முன் பெரியதொரு போராட்டம் உள்ளது.

கடந்த 30 வருடங்கள் போராட்டம் காரணமாக உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்த மக்கள் எந்த ஒரு பொருளாதார வாய்பும் இல்லாத வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு அரசாங்கம் காணிகளை விடுவித்துள்ளது.

வெறும் காணிகளை மாத்திரம் வழங்கி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் அவர்களுக்கு வீடுகள் உடனே கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு வாழ்வாதார தொழில் முயற்சிக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் மேலும் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இந்த அரசாங்கம் விடுவிக்க வேண்டியுள்ளது. எனவே உள்நாட்டில் மக்கள் காணிகள் இல்லாது இருப்பது கொடுமையான விடயம். எனவே இம் முறை ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக இந்த அரசாங்கம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக காணிகளை விடுவிக்க வேண்டும்.

நாங்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த காணி விடுவிப்புபை பார்க்கிறோம். ஆனால் வெறுமனே இந்த 109 ஏக்கர் காணி விடுவிப்பில் நாங்கள் திருப்தி கொள்ளவில்லை. 2009 யுத்தம் முடிந்து விட்டது.

யாருக்கு பாதுகாப்பு மக்களின் காணிகளில் உணவகங்கள் கட்டுவதற்கும் ,விடுதிகள் கட்டுவதற்கும்,தென்னந்தோப்பு வைப்பதற்கும் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்குமா? இந்த மக்களின் காணி.

எனவே மக்களின் காணிகள் அனைத்து விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் சார்பாக கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசால் மேலும் 50 பேரூந்துகள் இலங்கைக்கு அன்பளிப்பு

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் மேலும் 50 பேருந்துகள் போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிராமிய பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் 500 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.

பொருளாதார மீட்சிக்காகவும், இலங்கையின் கிராம புற அபிவிருத்திக்காகவும் இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்றைய தினம் (5) 50 பேருந்துகளுக்கான ஆவணங்களை கையளித்தார்.

இலங்கையின் கிராம புறங்களின் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் அண்மையில் 75 பேருந்துகள் போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டன. அவற்றில் 40 பேருந்துகள் பதிவு நடவடிக்கைகளுக்காக உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 500 பேருந்து செயற்றிட்டத்தை எதிர்வரும் மாதத்துடன் நிறைவுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற பேருந்துகளை கிராமபுற போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு துரிதமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

பலாலியில் ஒரு துண்டு நிலம்கூட பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை – மக்கள் ஆதங்கம்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பலாலி வடக்கு இல 254 பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தது .

இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒரு துண்டு நிலம்கூட பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுதந்திரத்தினத்துக்கு முன்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி காணி விடுவிப்பு நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து பார்த்த போது தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச நிலமாக காணப்பட்ட சிறிய நிலப்பரப்பை விடுவித்து விட்டு பொதுமக்களின் காணி விடுவிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளதாகவும் மாறாக தமது பூர்வீக குடி நிலங்கள் வீடுகள் என்பன படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை தம்மால் விடுவிக்கப்படுள்ள நிலத்திலிருந்துகொண்டு பார்க்கமுடிவதாகவும் அந்த நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்வதோடு முகாம் அமைத்தும் வாழ்ந்துவருவதை பார்க்க முடிவதாகவும் பலாலி வடக்கு இல 254 பகுதி காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தேர்தல் செலவு மதிப்பீட்டை பார்த்து தேர்தல்கள் ஆணைக்குழு அதிர்ச்சி

உள்ளூராட்சித் தேர்தலை விட மூன்று மடங்கு செலவோடு தேர்தலை நடத்துவதற்கு உதவுவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கோரிக்கைக்கு மாறாக மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு சேவைகளை வழங்குவதற்கு 2.8 பில்லியன் ரூபாய் தேவை என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொடுப்பனவுகள், எரிபொருள் செலவுகள், வாகன வாடகை, தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு பொருட்கள், எழுதுபொருட்கள் மற்றும் இதர செலவுகளை உள்ளடக்கிய மதிப்பிடப்பட்ட செலவுகள் ஆறு மடங்கு அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த அதிகரிப்புகளில் வாகன வாடகை செலவு 138 மில்லியனில் இருந்து 745 மில்லியனாகவும் எரிபொருள் கட்டண மதிப்பீடுகள் 108 மில்லியனில் இருந்து 675 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட மதிப்பீடுகளை விட பொலிஸ் திணைக்களம் அனுப்பிய மதிப்பீடுகள் மிக அதிகமாக உள்ளது என்றும் செலவுகளுக்காக உரிய பத்திரங்களை வழங்கினால் மட்டுமே பணம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை தேர்தலுக்கு தயாராவதற்கு தேவையான 100 மில்லியனில் இருந்து 35 மில்லியனை மட்டுமே பெற்றுள்ளதாகவும் உரிய நேரத்தில் நிதி கிடைக்காததால் கவலைப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார்- பற்ரீஸியா ஸ்கொட்லன்ட்

நீங்கள் சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குடும்பம் என்ற ரீதியில் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உலகளாவிய அமைப்புகளை விரிவுபடுத்தும் நெருக்கடிகளின் சிக்கலான இடத்தில் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் குறிப்பிட்டுள்ளார்.

‘சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கான காரணம் தீர்க்கப்படாமல் உள்ளது!’

75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கு அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிலையான அரசியல் தீர்வொன்றை இலங்கை கண்டடைவதை உறுதி செய்ய வேண்டும் என பிரிட்டன் அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரிட்டன் வாழ் தமிழர்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவமயமாக்கல், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பன தொடர்பில் நீதி, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை மற்றும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வினை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்வியை முன்னிறுத்தி தமிழர்கள் ஆதீனத்தை புறக்கணித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான சம்பவங்கள், காணி அபகரிப்பு மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் இன்னமும் தொடர்வதாகவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நியாயமான ஆட்சி நிர்வாகத்தை உறுதிப்படுத்தி, ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் நாட்டை முன்னகர்த்திச் செல்லக்கூடியவாறாக இலங்கையின் அரச கட்டமைப்பு மாற்றமடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.