இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை நாமல் ராஜபக்ஷ சந்தித்தார்

இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் கிழக்கு ஆளுநருடன் ஆலோசனை

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின்போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் வெள்ளிக்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

டெலிகொம் நிறுவனத்தின் உரிமத்தை வெளிச்சக்திகளுக்கு விற்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்குமா? – சஜித் கேள்வி

ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து வெளி நிறுவனத்திற்கு மறுசீரமைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) நிலையியற் கட்டளை 27 /2 இன் கீழ் கேள்வி நேரத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் புதிய முகாமைத்துவ திட்டத்தின் அடிப்படையில் தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனங்களின் செயற்பாட்டுச் செலவுகளைக் குறைப்பது மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும். என்றாலும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களை அதிக இலாபம் ஈட்டக்கூடிய முறைமைக்குச் செல்ல வேண்டும். பொது நிறுவனங்களின் மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட அலகு மூலம், டெலிகொம் மற்றும் காப்புறுதி நிறுவனம் உட்பட அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், குறித்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதற்கான ஏலத்தை சமர்ப்பித்த நிறுவனங்கள், அவர்களின் தகுதி மற்றும் டெலிகொம் நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால் அந்த அறிக்கையையும் சபைக்கு முன்வைக்க வேண்டும். இந்த அறிக்கையை நாட்டுக்கு வெளிப்படுத்தாது மறைத்து வைத்திருக்க வேண்டாம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் 9.6.2023 திகதியிட்ட அறிக்கையின் பிரகாரம், டெலிகோம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், டெலிகொம் நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து வெளி நிறுவனத்திற்கு மறுசீரமைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுமா என கேட்கிறேன்.

காப்புறுதி கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கிய பிறகு கிடைத்த இலாபத்தை விட,அரசாங்க உடைமையின் போது அதிக இலாபம் ஈட்டியுள்ளமை இராஜாங்க நிதி அமைச்சின் இலாப நஷ்ட அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.எனவே இதன் பின்னணியில் உள்ள காரணங்களை அரசாங்கம் இனம் கண்டுள்ளதா என கேட்கிறேன்.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 8 பில்லியன் பெறுமதியான விசுபம்பாய சொத்துக்களை 4 பில்லியனுக்கு விற்க தயாராகி வருகின்றனர்.இதற்காக ஒரு பகுதியை குறைந்த விலைக்கு விற்க தனி தரகர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு குறைந்த பெறுமதிக்கு விற்பனை செய்ய எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கேரளா கைத்தொழில் அமைச்சர் ராஜீவை சந்தித்த அநுர குமார குழுவினர்

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்கின்ற இந்திய விஜயத்தின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.

இந்தியாவின் கமியூனிஸ்ட் கட்சியை (CPIM-Kerala) முதன்மையாகக்கொண்ட இடதுசாரிக் கூட்டமைப்பினால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற கேரளா மாநிலத்திலேயே இன்று அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். மூன்று கோடியே ஐம்பது இலட்சத்திற்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட கேரளா மாநிலம் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வேகமான முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதியுயர் இடத்தை கேரளா உரித்தாக்கிக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (09) முற்பகல்வேளையில் கேரளா தலைநகரமான திருவனந்தபுரத்தில் மாநில அரசாங்கத்தின் கைத்தொழில்கள் மற்றும் சட்டம் பற்றிய அமைச்சர் ராஜீவை சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அமைச்சர் ராஜீவ் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு அங்கத்தவராக விளங்குவதோடு கட்சியின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரைப்போன்றே ஒரு சட்டத்துறை பட்டதாரியுமாவார்.

அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (Vikram Sarabhai Space Centre) அவதானிப்புச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர். அந்த நிறுவனத்தின் பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு இந்திய விண்வெளி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் தகவல்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் பிரதானமான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக அமைவதோடு அது இந்தியாவின் செய்மதி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அவசியமான ரொக்கெட்டுகளையும் விண்வெளிக் கலங்களையும் உற்பத்திசெய்து வருகின்றது. அதேவேளையில் தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர் அதன் கட்டுப்பாட்டு நிலையத்தையும் விண்வெளி அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

அதன் பின்னர் மேற்படி குழுவினர் இந்தியத் தகவல் தொழில்நுட்ப துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற முதலாவதும் மிகப்பெரியதுமான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களிலொன்றான திருவனந்தபுரத்தின் Technopark இலும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தருடன் நிறுவனம் சம்பந்தமான விசேட தகவல்கள் பற்றியும் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர்.

இந்த Technopark 1990 இல் கேரளா மாநில முதலமைச்சர் ஈ. கே. நாயனாரின் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அது 800 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டுள்ளதோடு கட்டிடத்தின் பரப்பளவு 10.6 மில்லியன் என குறிப்பிடப்படுகின்றது. அதற்குள் 480 கம்பெனிகள் இயங்கிவருவதோடு 70,000 பேருக்கு மேற்பட்ட தொழில்வாண்மையாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேரள மாநில ஆட்சியின் கீழேயே நிருவகிக்கப்பட்டு வருகின்றது.

அடுத்ததாக இந்த பிரதிநிதிகள் குழு G Tech நிறுவனத்தின் பிரதம செயலாளரால் முன்வைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான சமர்ப்பணத்தில் பங்கேற்றதோடு கேரளா பல்கலைக்கழகத்தில் அவதானிப்புச் சுற்றுப்பயணத்திலும் இணைந்து கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தலைநகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள கரையோர Kovalam இன் Vellar கைப்பணிகள் கிராமத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு உருவாகியது.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் 10 ஆந் திகதி இலங்கை திரும்ப உள்ளனர்.

தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமையாவிடில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம்.தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமையாவிடின் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.சந்தைப்படுத்தல் பொருளாதாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.வெகு விரைவில் சிறந்த திட்டங்களை வெளியிடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாட்டின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலுக்காக அமுல்படுத்தப்பட்ட தவறான தீர்மானங்களினால் தேசிய பொருளாதாரம் ஒடுக்கப்பட்டுள்ளது.தொழிலின்மை தீவிரமடைந்துள்ளதுடன் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதாரத்தின் இயந்திரம் செயலிழந்துள்ளது.

பொருளாதார பாதிப்புக்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள தீர்மானங்களினால் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருந்தாலும் ஏழ்மை இரட்டிப்படைந்துள்ளது.எதிர்பாராத வீழ்ச்சிக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். போராடுகிறார்கள். தற்போதைய ஸ்திரப்படுத்தல் தற்காலிகமானதாக உள்ளது.நிலையான பொருளாதார செயற்திட்டங்களை உறுதியாக அமுல்படுத்தாவிட்டால் இந்த ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலை என்பன மீண்டும் பலவீனமடையும், சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் தோற்றம் பெறும்.

நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய வேண்டுமாயின் போட்டித்தன்மையான சமூக சந்தைப்படுத்தல் பொருளாதாரத்தை அமுல்படுத்த வேண்டும். பொருளாதார விவகாரத்தில் தனிப்பட்ட சுதந்திரம் இன்றியமையாததாகும். தொழிற்றுறை மற்றும் முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டுமாயின் பொருளாதார தனிமனித சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பணவீக்கம் நிலையான தன்மையில் பேணப்பட வேண்டும்.பணவீக்கத்தில் நிலையற்ற தன்மை காணப்படும் போது பொருளாதார மீட்சிக்கான துறைசார் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது. மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டமை பொருளாதார வீழ்ச்சிக்கான பிரதான காரணியாகும். வட்டி வீதம்,பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பன நிதி கொள்கையுடன் தொடர்புடையது,நிதி கொள்கை பிரச்சினைக்குரியதாகக் காணப்படும் போது வட்டி வீதம், பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பனவற்றை நிலையானதாகப் பேண முடியாது. மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களினால் நிதி ஒழுக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

பொருளாதார ரீதியில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் வெற்றி பெற வேண்டுமாயின் சந்தை பொருளாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொருளாதார மீட்சிக்கான 20 திட்டங்களை முன்வைத்துள்ளார். 2022.ஆகஸ்ட் மாதமும்,2023 பெப்ரவரி மாதமும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான திட்டங்களை முன்வைத்தோம்.ஆனால் அரசியல் நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு அரசாங்கம் எமது யோசனைகளைக் கவனத்திற் கொள்ளவில்லை.

பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு ஆரம்பத்திலிருந்து நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.பாரம்பரியமான எதிர்க்கட்சியாகச் செயற்படவில்லை.சந்தை பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்திய சிறந்த திட்டங்களை வெகுவிரைவில் வெளிப்படுத்துவோம் என்றார்.

இந்தியா – இலங்கைக்கிடையில் பெற்றோலிய குழாய் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் திருகோணமலை எண்ணெய் தாங்கி மற்றும் கொழும்பை இணைக்கும் பெற்றோலியக் குழாய் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் மூலம் இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்தியா சென்றுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர்.

தொழில்நுட்ப ஆய்வுகள், தேவையான சந்தை பகுப்பாய்வு, நிதி பகுப்பாய்வு மற்றும் வணிக மாதிரிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பொறிமுறையை தீர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேக குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் எண்ணெய் தாங்கி, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் கூட்டு முயற்சியின் கீழ் முதலீடுகள் மற்றும் திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பு

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி லெப்டினன் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நல்லெண்ணப் பயணமாக தற்போது இலங்கை வந்துள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ நேற்று வியாழக்கிழமை (08) இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த இராணுவ பிரதானி இராணுவ தலைமையக நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வரவேற்கப்பட்டதுடன், அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே சந்திப்பின் போது மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி இலங்கை இராணுவம் மற்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படை ஆகிய இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவூப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று ஆரம்பமான நிலையில் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை – சஜித் பிரேமதாச

கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச பொது நிதிக் குழு மற்றும் வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) நிறுவனம் பகுப்பாய்வின் பிரகாரம், தெற்காசியாவிலேயே நமது நாடுதான் அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிடுகிறது.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டில் 3 மடங்கு அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கையில் 100 மின்சார அலகுகளுக்கு மாதத்துக்கு 5280 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 2078 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.

200 அலகுகளுக்கு எமது நாட்டில் 12960 ரூபாய் வசூலிக்கப்படுவதோடு தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 4609 ரூபாவே வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே,இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் மட்டுமின்றி,

தொழில்முனைவோருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சலுகை வழங்குங்கள். வாக்குகளை இலக்காகக் கொண்டு மின் கட்டணத்தை 4 சதவீதமாக குறைத்த விடயத்தில் திருப்திபட முடியாது.

மக்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக கட்டணக் குறைப்பை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.