ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது – சஜித் பிரேமதாச

யுத்த வெற்றியை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டுவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரவ்பதானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யுத்த வெற்றியை காரணம் காட்டியே சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டு நாட்டை அழித்தனர். ஆனால் இன்று பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் ஒழுந்து கொண்டு ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அனுபவித்து வருருகின்றனர். மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்ததோடு அதிக விலைக்கு நனோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்தனர்.

எனவே இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு நாம் கொண்டு வருவோம். தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களை மீட்டு, அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொலிசார் சீருடை இல்லாது சிவில் சமூகத்துடன் தொடர்பாடக்கூடாது! மனோ எம்.பி. அறிவுறுத்தல்

வெள்ளவத்தை பொலிஸ் வலயத்தின் பசல்ஸ் ஒழுங்கை பகுதியில், இரகசிய சுற்றுவளைப்பு தேவைக்காக சீருடை அணியாமல் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதியில் வீதியில் சாதாரண கடமையில் ஈடுபட்டிருந்த மகேஷ்வர குருக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை, பொலிசார் தமது செய்கை தொடர்பில், வண.குருக்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டதுடன் சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் இந்து குருக்கள் – பொலிசார் மத்தியில் ஏற்பட்ட பிணக்கு தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

வாகன போக்குவரத்து தொடர்பில் ஏற்பட்ட சிறு பிணக்கை இனவாத சொற்பிரயோகம், வாக்குவாதம், உடல்ரீதியான பலவந்தம் வரை பொலிசார் கொண்டு சென்றுள்ளனர்.

குருக்களின் புதல்வர் பலவந்தமாக சீருடை அணியாத பிரிவினரால் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இரு தரப்பும் சமாதான உடன்பாட்டுக்கு வந்து பிரச்சினை, திங்கட்கிழமை (22) மாலையே முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மத குருமார்களுக்கு உரிய பெருந்தன்மையுடன் பொலிசாரை தான் மன்னித்து விட்டதாக, குருக்கள் என்னிடம் தெரிவித்தார்.

குருக்கள் அவ்விதம், கூறி இருந்தாலும், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய மட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இனி பொலிஸ் சீருடை இல்லாமல் பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத்துடன் தொடர்பாடலில் ஈடுபடக்கூடாது எனவும், வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சுபாஷ் காந்தவெலவிடம் நான் கண்டிப்பாக கூறியுள்ளேன்.

அதன்படி தனது நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக பொறுப்பதிகாரி காந்தவெல எனக்கு உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்தார்.

அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களாலேயே சிதைக்கப்பட்டுள்ளது – எஸ்.பி. திஸ்ஸநாயக்க

69 இலட்சம் மக்களின் ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் ஏறிய அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களாலேயே சிதைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெரும்பான்மையான ஆணையை வழங்கிய நிலையில் உருவாக்கப்பட்ட அரசாங்கம் எங்கள் சொந்த தலைவர்களால் சிதைக்கப்பட்டதில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இருந்தாலும், ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை எவராலும் மாற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நான்கு வருடங்களின் பின்னர் அதிபர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை 69 இலட்சம் மக்களின் ஆணையை பெற்று ஆட்சிபீடமேறிய கோட்டாபய ராஜபக்சவின் சீர்கெட்ட நிர்வாக திறன் காரணமாக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து பாரிய போராட்டத்தை நடத்திய நிலையில் அவர் ஆட்சிபீடத்தை துறக்கவேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது

இந்திய உயர்ஸ்தானிகர்- மைத்திரி கொழும்பில் சந்திப்பு

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்றையதினம்(23) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இச் சந்திப்பானது, முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், புதிய உயர்ஸ்தானிகருக்கு மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கை இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் இந்தியாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கைக்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் யுக்திய நடவடிக்கையை நிறுத்த முடியாது – பதில் பொலிஸ் மா அதிபர்

யுக்திய விசேட நடவடிக்கையை ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாதாளம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை.

அவர்களின் நடவடிக்கைகளை ஒழிப்பதே எங்களின் ஒரே இலக்கு, எவருடனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் குற்றச் செயல்களால் ஆதாயம் அடைபவர்களாவர். போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் 65% க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதன் மூலம் போதைப்பொருள் இருப்புக்கள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.

மேலும் நாட்டின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முழுமையாக அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன – கனடிய பிரதமர்

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தைப்பொங்கல் நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே அவர் இந்த கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் தமது தந்தையாரின் தலைமையிலான லிபரல் கட்சி 1800 இலங்கை தமிழர்களை கனடாவில் குடியேற்றியது.

இந்த தொகை கடந்த பல தசாப்தங்களில் அதிகரித்து இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடாக கனடா பார்க்கப்படுகிறது.

அத்துடன் கனடாவின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு வியக்கத்தக்கது.

இதன் காரணமாகவே 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தை தமிழர் வரலாற்று மாதமாக கனேடிய அரசாங்கம் பிரகடனம் செய்தது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கனடா தொடர்ந்தும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் செயற்பட்டு வருகிறது.

அத்துடன் வேறு எந்த நாடும் நடைமுறைப்படுத்தாத வகையில் இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.

ஜனாதிபதி 17 மாதங்களில் 18 வெளிநாட்டு பயணங்கள் – சஜித் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவும் நெருக்கடி இயற்கையாக உருவானதொன்றல்ல. திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும், இது பொருளாதார பயங்கரவாதம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பொருளாதார பயங்கரவாதிகள், தங்கள் குண்டர் கும்பல்களுடன் கைகோர்த்து, நாட்டை வங்குரோத்தாக்கி விட்டு உலகம் சுற்றி வருகின்றனர். மக்கள் படும் துன்பங்களை உணர்வாறின்றி செயற்படும் ஆட்சிப் போக்குக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மக்களை பலிகடாக்கி மக்கள் படும் துன்பங்களையும், வலிகளையும் கருத்தில் கொள்ளாமல், மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருகிறார். நாட்டின் ஜனாதிபதியாக 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை போதாமையினால் மேலும் 200 மில்லியன் ஒதுக்கிக் கொண்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாரம்மல நகரில் நேற்று(21) இடம்பெற்ற ஜன பௌர நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை சிங்கப்பூர் ஆக மாற்றுவேன் என்றும் தொங்கு பாலத்தால் சென்று நாட்டை கட்டியெழுப்புவேன் என ஜனாதிபதி அவர்கள் கூறினாலும், வரிசையில் நின்று இறந்தவர்கள், தரக்குறைவான மருத்துவத்தால் உயிர் இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் முட்டாள்தனமான கொள்கைகளால் நாட்டை அழித்து வருகிறது. நட்பு வட்டார முதலாளித்துவத்தை பின்பற்றும் இந்த அரசாங்கம் மக்கள் சக்தியினால் விரட்டியடிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார, தேர்தல்கள் நடக்கவிருக்கும் இந்த காலப்பிரிவில், எதிர்க்கட்சியின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமாகும்.

யுத்தமொன்று இல்லாத தேர்தல் காலத்திலயே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம்,பயங்கரவாதி யார் என்பது குறித்தான வரைவிலக்கணம் எதுவும் இந்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

எந்த ஒரு நபரையும் கைது செய்யலாம்.அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும், இந்நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவுமே தேர்தலை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் இதை மேற்கொள்கின்றனர்.

இதனாலையே இந்நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க இச்சட்ட மூலத்திற்கு எதிராக மனுவை தாக்கல் செய்துள்ளோம்.

ஜனநாயகத்தையும், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் அடக்குமுறைக்குட்படுத்தவே தேர்தல் வருடமொன்றில் இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தையும், இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தையும் அரசாங்கம் கொண்டு வருகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக முன்னெடுப்பு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது.

விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான அதிதிகள் அயோத்திக்கு வருகை தந்திருந்ததுடன், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ராமனை தரிசிக்க வந்திருந்தனர்.

முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவெகவுடா, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர், டி.ஆர்.டி.ஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளால் குறித்த கவனயீர்ப்பு மற்றும் அடையாள உண்ணாவிரத போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.

பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுதந்திரமான வெளிப்படுத்துவதற்கும் ஒன்றுசேருவதற்குமான உரிமையினை உறுதிசெய், அரசே இலங்கை அரசியல் யாப்பிலுள்ள மனித உரிமையை மீறி செயற்படாதே, மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசுடைய கடமையாகும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு உட்பட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதன்போது, கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டு அவை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.