உண்மையை கண்டறியும் ஆணைக்குழு எனும் விஷச்செடியை வேருடன் ஒழிக்க வேண்டும் – உதய கம்மன்பில

தண்டிக்கப்பட வேண்டிய போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்திய இராணுவத்தினரை தண்டிக்கும் வகையில் சட்டமியற்றுவது எந்தளவுக்கு நியாயமானது.

தண்டனை மற்றும் மன்னிப்பு என்பன இருதரப்புக்கும் வழங்க வேண்டும். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என்ற விஷச் செடியை வேரோடு அழிக்க மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நிறுவனங்களை அவமதித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் விருப்பத்துக்கு அமைய எவரையும் விசாரிக்க முடியாது.பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கவும் முடியாது.ஆகவே சிறப்புரிமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் விளக்கம் பெற வேண்டும் அத்துடன் நாட்டு மக்களை போல் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதாரணமானவர்கள் என்பதையும் மக்கள் பிரதிநிதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளிவிவகார அமைச்சர் கடந்த முதலாம் திகதி வெளியிட்டுள்ளார். உண்மையை கண்டறியும் விவகாரம் நீதியமைச்சுடன் தொடர்புடைய நிலையில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஏன் வர்த்தமானியை வெளியிட வேண்டும் . பிரிவினைவாத கொள்கையுடைய மேற்குலக நாடுகளில் நோக்கங்களுக்கு அமையவே வெளிவிவகாரத்துறை அமைச்சர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் உண்மையை கண்டறியும் மாதிரியிலான ஆணைக்குழுவை அமைப்பதாக குறிப்பிடப்படுகிறது.ஆனால் அது உண்மையல்ல,2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளன.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தேசிய மட்டத்தில் இவ்வாறான சட்டங்கள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 17 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டது.தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினரை தண்டிக்கும் வகையில் சட்டமியற்றுவது எந்தளவுக்கு நியாயமானது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டு மக்கள் உயிர் வாழும் சூழலை இராணுவத்தினரே உறுதிப்படுத்தினார்கள்.ஆகவே இராணுவத்தினரை வஞ்சிக்கும் இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கும் சட்டமூலம் என்ற விஷச் செடியை வேருடன் அழிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.

நாட்டில் மாற்றுக் கருத்துடையோரை அடக்கவே பயங்கரவாதச் சட்டம் – விஜித ஹேரத்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் எப்போதும் மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்தி இருக்கிறது. அதனால்தான் இந்த சட்டம் தொடர்பில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டமூலத்தில் பயங்கரமான பல விடயங்கள் இருக்கின்றன என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனால் அரசாங்கத்துக்கு எதிரக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். அதன்போது அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். அரசாங்கத்திற்கு எதனையாவது செய்யுமாறு கூறினாலோ, செய்ய வேண்டாமென்று கூறினாலோ பயங்கரவாதியென்று கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கிறது. ஆனால் எமது நாட்டில் மாற்று கருத்துடையவர்களை அடக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கவிதை எழுதியதற்காக இளைஞர் ஒருவரர் பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அதேபோன்று அனைத்து பல்கலைக்கழக சங்கத்தின் தலைவர் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் 1983இல் ஜே.வி.பியினரை தடை செய்தனர். ஆனால் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்கின்றோம். வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த தூண்டியது. மக்கள் வீதிக்கு இறங்கும் போது அவர்களை ஒடுக்க இதனை பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர். அதனால் எமது நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் உண்மையான பயங்கரவாதத்தை தடுப்பதற்கு இந்த சட்டம் பயன்படுத்துவதில்லை. மாறாக மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகின்றனர். அதனால்தான் இந்த சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த வருடம்கொண்டுவந்தது. ஆனால அப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்ததால் அதனை அரசாங்கம் அன்று வாபஸ் பெற்றுக்கொண்டது. தற்போது மீண்டும் இந்த சட்ட மூலத்தை சமர்ப்பித்திருக்கிறது. இந்த சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பயங்கரமானவை. அரசாங்கம் இந்த சட்டத்தை எப்போதும் தனது எதிர் தரப்பினரை அடக்குவதற்கே பயன்படுத்தி வந்திருக்கிறது. எதர்காலத்திலும் அதனையே மேற்கொள்ளப்போகிறது. வரலாற்றில் இதற்கான அனுபங்கள் உள்ளன என்றார்.

ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய இளவரசி

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இளவரசி ஆனின் கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூம் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் கொண்டாடும் வகையில் இளவரசி ஆன் இன்று காலை நாட்டை வந்தடைந்தார்.

இந்த ஆண்டு பிரித்தானிய அரச குடும்பத்தின் முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவாகும்.

இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருக்கும் இளவரசி ஆன், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு செல்ல உள்ளார்.

மறைந்த எலிசபெத் மஹாராணியாரின் இரண்டாவது மகளும் ஒரேயொரு பெண் வாரிசும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் ஒரே ஒரு சகோதரியும் இவர் என்பது குறிப்பித்தக்கது.

மதிப்பீடுகளை மேற்கொள்ளாது அரசாங்கம் வற்வரியை அதிகரித்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

எந்தவித மதிப்பீட்டு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலே அரசாங்கம் வற்வரி அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (10) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் வற்வரியை நூற்றுக்கு 18வீதத்தால் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அரசாங்கத்துக்கு முறையாக பதில் தெரிவிக்காமல் இருக்கிறது.

ஏனெனில் வற்வரி அதிகரிப்பு மேற்கொள்ளும்போது அதுதொடர்பாக எந்த மதிப்பீட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளாமலே இதனை அரசாங்கம் செய்திருக்கிறது.

வற்வரியை அதிகரித்த பிறகு இதுபோன்ற கணக்கெடுப்பை மேற்கொள்வது கடும் பிரச்சினைக்குரிய விடயமாகும். வற்வரி அதிகரிப்பதற்கு முன்னர் இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மதிப்பிட்டு ஆராய்ந்த பின்னரே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் வற்வரி உயர்வால் கிராமப்புற,நகர்ப்புற மற்றும் தோட்டப்புற சமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் தற்போது கணக்கெடுப்பு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது.

முறையான நிதி நிர்வாகத்தில் வரிகளை விதிக்கும் அல்லது அகற்றும் முன் நிதி தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்வாறானதொன்றை முன்னெடுக்கவில்லை.

அத்துடன் வற்வரி அதிகரிக்கப்பட்டபோது பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்கிறது.

சர்வதேச பொதுசன வாக்கெடுப்பு மூலமே தீர்வினை அடையலாம் – வேலன் சுவாமிகள் வலியுறுத்தல்

வடக்கு,கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடாத்தப்படுகின்ற பொது சனவாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடையமுடியும் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

50ஆவது உலக தமிழராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 09 பேரது 50வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக உள்ள நினைவாலயத்தில் இன்று இடம்பெற்றது. நினைவேந்தலினை செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழமானது தொடர்ச்சியாக இனவழிப்புக்கு உட்பட்டு வருகின்ற காரணத்திலே எங்களது இனத்துக்கு சிங்கள அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை நினைவுகூருவது காலத்தின் தேவையாக காணப்படுகின்றது. அனைவரும் ஒரணியாக திரண்டு நினைவேந்தலினை அனுஷ்டிக்கவேண்டும்.

இளம் சந்ததியினர்களிடம் நினைவேந்தலினை கடத்த வேண்டும். இனவழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற தருணத்தில் 50 ஆவது ஆண்டிலே நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

01.வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும் தருணத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்

02.இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்

03.சர்வதேச நீதிமன்றத்திற்கு இனப் படுகொலையாளிகளை பரப்படுத்தவேண்டும்

04.ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடாத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் அடையமுடியும் என்றார்.

மலையக தியாகிகளின் நினைவுதினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு

மலையக தியாகிகளின் நினைவுதினம் புதன்கிழமை (10) யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது.

மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா கரிசனை

யுக்திய நடவடிக்கை குறித்து இலங்கைசட்டத்தரணிகள் சங்கமும் மனித உரிமை ஆணைக்குழுவும் வெளியிட்டுள்ள கரிசனைகளை அமெரிக்காவும் பகிர்ந்துகொள்வதாக இலங்கைகக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

சட்டஅமுலாக்கல் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின் கொள்கைகளைஉரியநடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சமநிலையை பேணுவது நீதிக்கும் மக்களின் நம்பிக்கையை தக்கவைப்பதற்கும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்தார் பிரித்தானிய இளவரசி ஆன்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இன்று புதன்கிழமை (10) நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அங்கு அவர்களுக்கு பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இளவரசி ஆன் விருந்தினர் அபிப்பிராயப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் யாழ். வேலணையில் கண்டுபிடிப்பு

யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ் ஆய்வுத் தொடர்ச்சி 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கரையோர வளங்களின் வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ் அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கருவிகள் மற்றும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் ஏராளமான தொல்பொருட்கள் காணப்படுகின்றன. இத்தகைய எச்சங்கள் இலங்கையில் தெற்கு கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய மிக அண்மித்த சான்று மாந்தையில் கி.மு.1600க்கு முற்பட்டவை கிடைக்கப்பெற்றிருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த இவ் அகழ்வாராய்ச்சியில் இருந்து கிடைத்த தொல்பொருள் சான்றுகளின் காலப் பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தை இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்நோக்கி நகர்த்தியுள்ளது.

இவ்வகழ்வாய்வினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மற்றும் பாரம்பரிய முகாமைத்துவத் துறையின் மூத்த விரிவுரையாளர் திலங்க சிறிவர்தன அவர்களுடன் இணைந்து Groningen Institute of Archaeology of the University of Groningen in the Netherlands நிறுவனத்துடன் இணைந்து இந்திகா ஜெயசேகர, ஜனினா நோனிஸ் அத்துடன் தொல்லியல் மற்றும் பாரம்பரிய கற்கைகள் நிறுவகத்தின் நதீரா திஸாநாயக்க மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொல்லியல் துறை மாணவர்களான டக்சினி, கனுஸ்டன், சுசாந்தி ஆகியோர் இவ் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்

04 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை உறவுகளின் 50வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள நினைவிடத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்றது.

மதத்தலைவர்களாகிய வேலன் சுவாமிகள், மறவன் புலவு சச்சிதானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு முதன்மையான பிரதான சுடரினை ஏற்றினர். பின் மலர்மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.

இவ் நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சுரேஷ்பிரேமசந்திரன், மாகாணசபை உறுப்பினர்களாகிய கஜதீபன், சர்வேஸ்வரன், யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் முதல்வராகிய இமானுவேல் ஆனனோல்ட், வி.மணிவண்ணன், மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தினர்.