நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மீறிவருகின்றது – ஜஸ்மின் சூக்கா

வீரர் தினநிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களை அரசதரப்பினர் படமெடுப்பதை தடுப்பதற்காக சர்வதேச சமூகம் தனது கண்காணிப்பாளர்களை அந்த பகுதிக்கு அனுப்பவேண்டும் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

2009 மே மாதம் முடிவிற்கு வந்த உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு காரணமானவர்களை எந்த வகை பொறுப்புக்கூறலிற்கும் உட்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமை இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை ஆழமாக்கியுள்ளது.

யுத்தம் முடிவிற்கு வந்திருக்கலாம் ஆனால் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவது தொடர்கின்றது.

பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் இழைத்துவரும் வன்முறைகள் தனிநபர்களையும் குடும்பங்களையும் பாதிப்பதுடன் மாத்திரமல்லாமல் கூட்டுசகவாழ் நம்பிக்கை பாரம்பரியம் போன்றன கட்டி எழுப்பப்படும் சமூககட்டுமானத்தையும் அழிக்கின்றது.

விடுதலைக்கான தமிழர்களின் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான குடும்பங்களின் நியாயபூர்வமான உரிமைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மீறிவருகின்றது.

2014ம் ஆண்டு முதல் பலவருடங்களாக எனது அமைப்பு இலங்கையில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி அங்கிருந்து தப்பியோடியவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது – இதன் போது அவர்கள் நினைவேந்தலில் கலந்துகொண்டவேளை அவர்களை படமெடுத்த இலங்கையின் புலனாய்வு பிரிவினர் பின்னர் அவர்களிற்கு வீடுகளுக்கு சென்று அவர்கள் அச்சுறுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

நாங்கள் சந்தித்த ஒருவர் 2022 நவம்பர் ஏழாம் திகதி வடபகுதியில் மயானத்தில் உரையாற்றியுள்ளார்- புதிய ஜனாதிபதி அவ்வாறான நிகழ்வுகளிற்கு அனுமதியளித்துள்ளதால் அவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்வது பாதுகாப்பானது என அவர் கருதியுள்ளார்,

எனினும் சில நாட்களின் பின்னர் அவரது கருத்துசுதந்திரம் நடமாடும் சுதந்திரம் ஆகியவற்றை மீறும் விதத்தில் அவரை கைது செய்து சித்திரவதை செய்துள்ளனர் அவர் தனது புதிதாக பிறந்த குழந்தையையும் வளர்ச்சியடைந்து வந்த வர்த்தகத்தையும் விட்டு இலங்கையிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார்.

இவ்வாறான விசாரணைகளின் போது பாதுகாப்பு படையினர் இந்த நினைவுகூரல்களிற்கு யார் வழங்குவது என கேள்வி கேட்கின்றனர் –

நினைவேந்தல்களை ஏற்பாடு செய்வதும் கலந்துகொள்வதும் வெறும் எதிர்ப்பின் செயற்பாடுகள் மட்டுமல்ல இந்த பயங்கரமான போரில் தப்பிய அனைவராலும் உணரப்பட்ட மிக ஆழமான தனிப்பட்ட துரயத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வன்முறைக்கு பலியானவர்களின் குடும்பத்தவர்களும் வன்முறைக்கு பலியானவர்களே மேலும் அவர்கள் காணாமல்போதல் சித்திரவதை அல்லது தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பு போன்றவற்றை அனுபவித்தவர்கள்.

அவர்கள் உயிர்பிழைத்துள்ள போதிலும் தண்டனையின்மை மற்றும் குற்ற உணர்ச்சியின் பெரும் தடையை எதிர்கொள்கின்றனர்.

உயிர்பிழைத்தவர்கள் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களது போராட்டத்தில் இறந்தவர்களையும் காணாமல்போனவர்களையும் தொடர்ந்தும் நினைவுநினைவு கூருவது ஒரு தார்மீக மற்றும் சமூக பொறுப்பு என கருதுகின்றனர்.

நவம்பர் 27 ம் திகதி குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களை இழந்தவர்கள் மாத்திரம் அவர்களை நினைவுநினைவு கூருவதில்லை,மாறாக முழுசமூகமும் தியாகத்தையும் கூட்டுதுயரத்தையும் நினைவுகூருகின்றது.

பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தப்பிப்பிழைத்த தமிழர்களின் குழுக்கள் இறந்தவர்களை தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் நினைவுகூரும் உரிமையை மீட்டெடுப்பதை நாம் காண்கிறோம். செயல்பாட்டில் அவர்கள் உயிர்வாழ்வது மற்றும் சாட்சியமளிப்பதன் அர்த்தம் என்ன என்று போராடுகிறார்கள். வருங்கால சந்ததியினருக்கு நினைவாற்றலை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக அவர்கள் தங்கள் தனிப்பட்ட துன்பங்களை மட்டுமல்ல தங்கள் சமூகங்களின் துன்பங்களையும் வெளிப்படுத்த புதிய வழிகளைக் காண்கிறார்கள்.

எந்த அடக்குமுறையும் நினைவுநினைவு கூருவதற்கான மக்களின் தேவையை தடுத்து நிறுத்தப்போவதில்லை ,குறிப்பாக அது உங்களின் குழந்தை அல்லது பெற்றோருக்கானதாகயிருந்தால்.

சித்திரவதையிலிருந்து உயிர்தப்பிய ஒருவர் பூசாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை தானும் தனது நண்பர்களும் நவம்பர் 27 ம் திகதி மெழுகுதிரியை ஏற்றுவதற்காக அதிகாலையில் எழுந்ததை நினைகூர்ந்திருந்தார்.

சிறைப்பாதுகாவலர்கள் பழிவாங்குவார்கள் என தெரிந்திருந்தும் அவர்கள் அதனை செய்தனர்.

அவர்களுக்கு உள்ள இறுதிகௌரவம் அதுவே அது மிகவும் பெருமதியானது.

போரிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது துக்கத்தை வெளிப்படுத்தி காயங்களை ஆற்ற முடியாத நிலையில் காணப்படுகின்ற சூழலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உண்மையை கண்டறியும் ஆணைகுழுவை நிறுவது பற்றி பேசுகின்றார்.

உயிர்பிழைத்தவர்கள் அந்த ஆணைக்குழுவிடம் சென்று சாட்சியமளிக்கப்போவதில்லை.

உண்மை ஆணைக்குழு நம்பிக்கை மிக்கதாக காணப்படவேண்டும் வெற்றியளிக்கவேண்டும் என்றால் ஜனாதிபதி அரசவன்முறைகள் முடிவிற்கு வரும் என்பதையும் நவம்பர் 27 ம் திகதி நிகழ்வுகள் கண்காணிக்கப்படாது என்பதையும் அதில் கலந்துகொள்பவர்கள் அவற்றை ஏற்பாடு செய்தவர்கள் பழிவாங்கப்படமாட்டார்கள் என்பதையும் உறுதி செய்யவேண்டும்.

இந்த ஒடுக்குமுறைகள் இடம்பெறுகின்ற வேளை சர்வதேச சமூகம் அமைதியாகயிருக்ககூடாது சீருடை அணியாதவர்கள் படங்களை எடுப்பதை உறுதி செய்வதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும் எனஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் 1985 முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகளை மீள வழங்க நடவடிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய வரைபடத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகள் இருந்தால் அதனை அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் படி நான் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய அந்த படங்களை மக்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கமைய, எனது அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவசாரிகள் திணைக்களத்தின் செயலாளர் நாயகம் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.

மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள இவர்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடங்கள் எவை என்பது குறித்து முழுமையான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த தகவல்களுக்கு அமைய இறுதி அறிக்கையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலாளரின் தலையிலான குழுவிடம் சமர்ப்பித்து, அதனூடாக காணி ஆணையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பின்னர் அந்த காணிகளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இதனைத் தொடர்ந்து உரிய காணியை, காணி உறுதி பத்திரத்துடன் மக்களிடம் வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர் பதவி நீக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர் பதவி மற்றும் ஏனைய பதவிகளில் இருந்து நீக்கி ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்த போதே விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

எனது உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால் ரணிலும், சாகலவுமே பொறுப்பு – விளையாட்டு அமைச்சர்

தனது உயிருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியும் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பு கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் ஒன்றியத்திற்கு சென்று கூறுகின்றார் ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும் என்று.

அதற்காக செயற்படுகின்ற என்னை வேறு விதமாக சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள்.

பணம் கொடுத்து என்னை கொலை செய்ய முயற்சிப்பார்கள்.

அவ்வாறு இல்லையெனின் போதைபொருள் கடத்தல்காரராக சித்திரிக்க முயற்சிப்பார்கள்.

ஒரு அமைச்சராக உள்ள என்னுடைய பாதுகாப்பில் அரசியல் மற்றும் நீதித்துறையின் தலையீடுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.

இது அரசியலில் ஒரு புதிய பிளவாக இருக்க வேண்டும். அதில் என் உயிர் போய்விடலாம். நான் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம்.

அது நாளையா, இன்றோ அல்லது நாளை மறுநாளோ என்று எனக்குத் தெரியவில்லை. ஜனாதிபதி மற்றும் அதற்கு சாகல ரத்நாயக்க பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் இந்த 134 வாக்குகளை அவருக்கு அளித்தது அவர் ஜனாதிபதியாகி எம்மைப் பழிவாங்குவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனக்கு வாழ்வதற்கான உரிமையை பெற்றுத் தாருங்கள். வேறு நாடுகளுக்கு அடைக்கலம் கோரி செல்ல நான் தயாராக இல்லை.

கிரிகெட் பிரச்சினை தற்போது முடிவடையவில்லை என்றால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக இந்த பிரச்சினையை முடிப்பேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் முதல் மாவீரர் சங்கருக்கு அஞ்சலி

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடக்குமுறைகள் அதிகரித்தால் மக்கள் வீறுகொண்டு எழுவர் – செல்வம் எம்.பி. எச்சரிக்கை!!!

அடக்குமுறைகள் நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது, அதற்கு எதிராக மக்கள் வீறுகொண்டு எழுகின்ற சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

போர் நின்றுவிட்டது நாங்கள் சகல விடயங்களையும் செய்யமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கமுடியாது. துப்பாக்கி சத்தங்கள் இல்லையே தவிர அதே போர் சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் கூட்டம் மட்டக்களப்பில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினமான கோவிந்தன் கருணாகரனின் இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டத்தினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆயுதப்போராட்டங்கள் தொடங்கியதே அடக்குமுறைகளுக்கு எதிராகத்தான்.இந்த அடக்குமுறை என்பது தொடர்ச்சியாக இருக்கும். சிங்கள தேசத்தின் அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது ஒட்டு மொத்தமாக தமிழர்களின் தேசத்திற்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றது.

ஓவ்வொரு விடயத்திலும் எமது பிரதேசம் பறிபோகும் நிலையில் இந்த அடக்குமுறைகள் என்பது எதிர்பார்க்கவேண்டிய விடயம். ஆயுதப்போராட்டம் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்தது.எங்களைப் பொறுத்த வரையில் அடக்குமுறைகள் நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது,அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக வீறுகொண்டு எழுகின்ற நிலைப்பாடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் சாத்தியக்கூறுகள் இப்பொழுது காணப்படுகின்றன.

அந்த வகையில் எமது மக்கள் இதற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்.ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மாவீரர்களின் குடும்பங்களை கௌரவித்ததே தவறாக பார்க்கப்பட்டுள்ளது. அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த விடயத்தில் நாங்கள் பின்நோக்கி செல்லமுடியாது. மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.அதற்கான ஆதரவினை நாங்கள் தொடர்ச்சியாக வழங்குவோம். போர் நின்றுவிட்டது நாங்கள் சகல விடயங்களையும் செய்யமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கமுடியாது. துப்பாக்கி சத்தங்கள் இல்லையே தவிர அதே போர் சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த மண்ணுக்காக உயிர்நீர்த்த அனைவரையும் நாங்கள் அஞ்சலி செலுத்தவேண்டும் – என்றார்

பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை ஆலடி சந்திக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியின் முன்னால் கேக் வெட்டப்பட்டது.

நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிக்கிரியையில் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு இறுதி மரியாதை

சந்தேக நபரை துரத்திச் சென்ற போது ஆற்றில் குதித்து காணமல் போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா – எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது.

உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் பொலிஸ் திணைக்களத்தினர் இறுதி மரியாதையை செலுத்தினர்.

இறுதிக் கிரியையின் போது மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு உயிரிழந்தவருக்கு இறுதி மரியாதையை செலுத்தி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஒரு தொகை பணத்தையும் கையளித்தார்.

உயிரை துச்சமென கருதி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் அவருக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கபெறும் என அவர் குடும்பத்தினருக்கு வாக்குறுதியளித்தார்.

இதன்போது பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பூதவுடல் அரச மரியாதையுடன் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (23) குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மேலும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜா-எல பகுதியில் ஆற்றில் பாய்ந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத நினைவேந்தல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : பொலிஸ் பேச்சாளர்

வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்கள் சட்டத்துக்கு எதிரானதாக அமையும் பட்சத்தில் அவை தொடர்பில் பாராபட்சமின்றி குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வடக்கு,கிழக்கு மாகாண பொலிஸ் பிரதானிகளுக்கு பொலிஸ் மா அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வடக்கு,கிழகில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (26)  எழுச்சியுடன் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் உள்ளிட்ட உரிய பணிப்புரைகள் மாகாண பொலிஸ் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சட்டத்துக்கு எதிரான முறையில் நினைவேந்தல் செயற்பாடுகுளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆகவே இவ்விதமான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் சட்டத்தினை மீறும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாமல் ராஜபக்‌ஷ வலியுறுத்தல்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உரை தொடர்பில் கடும் விமர்சனம் காணப்படுகிறது. வெறுக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி எதிர்த்தரப்பினரை சாடுகிறார். ஆகவே, இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடமும், சபை முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கட்சி என்ற ரீதியில் பலமாக செயற்படுகிறோம். அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் அரசியல் ரீதியில் முக்கிய தீர்மானங்களை அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம். ஜனாதிபதியின் தீர்மானங்கள் நூற்றுக்கு நூறு வீதம் சிறந்தது என்று குறிப்பிட முடியாது. நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோற்றம் பெறக்கூடாது என்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுகிறோம். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உரை தொடர்பில் கடும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. சபைக்கு பொருந்தாத, வெறுக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி ஆளும் தரப்பின் உறுப்பினர்களை சாடுகிறார், ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை குறிப்பிடுகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுங்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவரின் பாராளுமன்ற உரையை நேரலையாக ஒளிபரப்புவதை தாமதப்படுத்துமாறு சபாநாயகரிடமும், சபை முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.