ஜனாவின் வாக்குமூலம்: 40 வருட போராட்ட, அரசியல் வரலாறு நூல் ஒக்ரோபர் 1இல் வெளியீடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) , எதிர்வரும் ஒக்ரோபர் 1ஆம் திகதி 60 வயதை பூர்த்தி செய்யவுள்ள நிலையில், அன்று மட்டக்களப்பில் நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.

ஜனாவின் வாக்குமூலம்- எனது 40 வருட போராட்ட, அரசியல் வரலாறு என்ற நூல் வெளியிப்படவுள்ளது.

இதையொட்டி ஒக்ரோபர் 1ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராசசிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் ஆகியோருடன், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானும் நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்துறை சீர்குலைந்தமையும் காரணம் – நீதியமைச்சர் விஜயதாச

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்டம் தொடர்பான அறிவை பொது மக்களுக்கு வழங்கும் நோக்கில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தேசிய சட்ட வாரத்தின் ஆரம்ப நிகழ்வு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தலைமையில் நேற்று (28) கொழும்பு நீதிமன்ற வளாகத்திவ் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“எமது நாட்டில் சட்டத் தொழில் தொடர்பாக சாதாரண மக்கள் மத்தியில் இருந்துவரும் பிழையான கருத்தை போக்குவதற்காக முன்னாள் நீதிபதி சீ,ஜே. வீரமந்திரியினால் 2006ஆம் ஆண்டில் இந்த தேசிய சட்ட வார திட்டம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு தேவையாகும்.

தற்போது சட்ட உதவி ஆணைக்குழுவினால் குறைந்த வருமானமுடைய மக்களுக்கு இலவசமாக சட்ட சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக செயற்திறமையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்திருக்கிறோம். அதற்காக ஐரோப்பிய சங்கம், ஆசிய மன்றம், யுனேஸ்கோ மற்றும் யூ.என்.டீ.பி நிறுவனங்களின் ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறது.

அதேபோன்று மத்தியஸ்த சபை முறையை பலப்படுத்துவதற்காகவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதற்கும் சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

மேலும் கடந்த காலத்தில் எமது நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு சட்ட ஆதிக்கத்தின் வீழ்ச்சியும் காரணமாகும்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இவ்வாறான வேலைத்திட்டங்களை நடத்துவது மிகவும் பிரயோசனமாகும். என்றார்.

இலங்கை வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களின் ஊடாக மீண்டெழ வேண்டும் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

“இலங்கை அதன் வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களின் ஊடாக மீண்டெழுவதற்கான சந்தர்ப்பமாக இந்த நெருக்கடியான தருணத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்“

இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – இலங்கை வணிக சபையின் 31ஆவது பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் இங்கு கருத்துரைக்கையில்,

“நிலை பேண்தகு அபிவிருத்தியையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைந்துக்கொள்ள இலங்கை மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையின் பிரகாரம் பல்வேறு மறுசீரமைப்புகளை இலங்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலும் பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் இந்த விடயத்தை வெற்றிக்கொள்ள முழுமையாக தம்மை அர்ப்பணித்து பணியாற்றுவதையும் நான் அறிவேன்.

அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் இலக்கானது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதுடன், அதற்கான தடைகளை நீக்குவதாகும் என்பதையும் அறிவேன்.

பழைய கலாசாரங்களின் பிரகாரம் நாம் ஆரம்பித்த அதே இடத்திற்கு மீண்டும் செல்வது அல்ல இலக்காக இருக்க வேண்டியது.

இலங்கை இன்னமும் நெருக்கடியில் இருந்து மீளவில்லை. அதுதான் நாம் வெற்றிக்கொள்ள வேண்டிய இலக்கு.

அமைவிடத்தின் ஊடாக இலங்கை தெற்காசியாவில் வளர்ச்சியடைந்த நாடாக மாற முடியும். வரலாற்றில் எதிர்கொண்ட சவால்களில் பாடங்களின் ஊடாக சகலரதும் பங்குபற்றலில் ஊடாக இந்த நெருக்கடியில் இருந்து மீள இதனை ஒரு சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும்“ – எனவும் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்!! – ஜெனீவாவில் அன்புமணி இராமதாஸ்

தமிழினப் படுகொலை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும் என பாமகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில்உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கடந்த பல பத்தாண்டுகளாகவே இனவாதம் பாகுபாடு மற்றும் வேறு பல வடிவங்களிலான சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான 21-ஆம் நூற்றாண்டின் முதலாவது அட்டூழியம் மற்றும் குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அழைப்பை செயல்படுத்த அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புடைமைத் திட்டத்தின் திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களைக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசின் மீது பல்வேறு வகையான தடைகளை விதித்தல் ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நீதிமன்றங்களில் சிவில் குற்றவியல் வழக்குகளை தொடருதல் உலகில் இப்போது செயல்பாட்டில் உள்ள பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றங்களுக்கு போர்க்குற்றம் குறித்த வழக்குகளை மாற்றுதல் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி விசாரிக்கும் வகையில் பன்னாட்டு குற்றவியல் நீதி வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இதை சாதிக்க வேண்டும் என்று ஐநா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி பரிந்துரை வழங்குவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்ன் பொறிமுறைக்கு உறுப்பு நாடுகள் கீழ்க்கண்ட வகைகளில் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி சாத்தியமாகக் கூடிய அனைத்து சட்டத் தளங்களிலும் வழக்குகளை வலிமையாக்குவதன் மூலம் பொறுப்புடைமைத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள வலிமையான குழுவை அதே நிலையில் பராமரித்தல் மற்றும் வலுப்படுத்துதல்.

இதுவரை மூடி மறைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழினப்படுகொலை மற்றும் 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் திட்டமிட்ட பரவலான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் பொறிமுறை மூலம் ஆதாரங்கள் திரட்டப்படுவதை உறுதி செய்தல்.

மூன்றாவதாக இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவெறியை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உறுப்பு நாடுகளை கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் காலம் காலமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதன் மூலமாகவும் இலங்கை அரசின் உதவியுடன் இந்து கோயில்கள் சிதைக்கப்படுவதன் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை மாற்றத்தை தடுத்து நிறுத்துதல்.

ஐக்கிய நாடுகள் அவையின் மூலமாக இலங்கை அரசி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றம் மற்றும் பிற பன்னாட்டு பொறிமுறை அமைப்புகளில் கொண்டு சென்று நிறுத்தி தண்டனை பெற்றுத் தருதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் துறைமுகங்கள் விமானப் போக்குவரத்து துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா விருப்பம்

இலங்கையின்துறைமுகங்கள் விமானநிலையங்களை பாதுகாப்பதுகுறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டுவிட்டரில் இலங்கைக்கானஅமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவை தான் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் துறைமுகங்கள் விமானநிலையங்களின் அபிவிருத்தி குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ள அவர் இவை இலங்கையின் வர்த்தக மற்றும் தனியார் துறையினரை முன்னிறுத்திய அபிவிருத்திகளிற்கு அவசியமானவை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விமானப்போக்குவரத்து துறை துறைமுகங்கள் போன்றவற்றின் வெளிப்படையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குமான அர்ப்பணிப்புடன் அமெரிக்கா உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்

அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக, ரி.சரவணராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்-

எனது மாவட்ட நீதிபதி பதவி உள்ளிட்ட பதவிகளை என் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக இராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்கள் தரப்பினருடன் பேசும்போது-

“அண்மையில் எனக்கான பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து வந்தனர்.

சட்டமா அதிபர், என்னை தனது அலுவலகத்தில் 21.09.2023ம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன். இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன்“ என தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பை மீறி குருந்தூர் சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்ட விவகாரத்தில், முல்லைத்தீவு நீதிபதி மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ரி.சரவணராஜா தற்போது நாட்டில் இல்லை. முறைப்படி விடுமுறை எடுக்கும் செயன்முறையின்படி, இந்தியா செல்வதற்காக விடுமுறை பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா மலையகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நோக்கங்களை நிறைவேற்ற தவறியுள்ளதால் இரண்டாம் தவணைக்கடன் தாமதமாகலாம் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் இரண்டாம் தவணைக்கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

.இலங்கை தனது திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறியுள்ளதால் சர்வதேச நாணயநிதியத்தின் இரண்டாம் தவணைக்கடன் தாமதமாகலாம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது

இரண்டாவது தவணைக்கடன் எப்போதும் வழங்கப்படும என்பது குறித்து நிலையான காலஅட்டவணை எதனையும் தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரியொருவர் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இரண்டாம் தவணைக்கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியத்தின் ஆசிய பசுபசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் பீற்றர் புருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் திருப்தியடைவதற்கு இரண்டு விடயங்கள் அவசியம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் கொள்கைள் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் நாங்கள் இணக்கப்பாட்டினை எட்டவேண்டும் அதுவே நாங்கள் முன்னேறிச் செல்ல உதவும் அதன் மூலமே நாங்கள் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே ஒருவிடயத்தில் ஒரு வருடத்தில் குறைபாடுகள் உள்ளதை நாங்கள் காணமுடிகின்றது அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் உட்கட்டமைப்பு பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் பூரண ஆதரவு

வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு.ஜீன் பிரான்கொயிஸ் பக்டேட் (Jean Francois Pactet) தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது வடமாகாண மக்களின் பொதுவான உட்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் பிற வளர்ச்சி செயல்முறைகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இப்பகுதி சிறுவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண அனுசரணையை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநர் பிரான்ஸ் தூதுவரிடம் விளக்கி கூறினார். வடமாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பிரான்ஸ் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் சினோபெக் நிறுவனம் மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைக்க அனுமதி

சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு இலங்கையில் மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால் சினோபெக் நிறுவனத்துக்காக 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 145 எரிபொருள் நிலையங்களை பொறுப்பேற்பதற்கு அந்த நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

தற்போது, மேலும் 50 நிலையங்களை அமைப்பதற்காக சினோபெக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மொத்த எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை 200 எரிபொருள் நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

எனினும், ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், வழங்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்களைப் பரிசீலிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆளுநரின் தடையுத்தரவுக்கு மத்தியிலும் விகாரை கட்டுமானப் பணிகள் முன்னெடுப்பு

திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் (25) இரவு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை விதித்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் இரகசியமாக முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருதாக மக்கள் அதிருப்தி வெளியிடுகின்றனர்.

குறித்த பகுதியில் விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்பின்னர் 09ம் திகதி காலை மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டிருந்தது.

சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் குறித்த விகாரை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இச்செயற்பாடானது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் குறித்த விகாரைக்கான பணிகளை இடைநிறுத்தக்கோரி ஆளுநரினால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.