Category: தற்போதைய செய்திகள்
தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள – பா.உ. ஜனா
தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நிரந்தரமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றால் இணைந்த வடகிழக்கில் முழு அதிகாரங்களையும் பரவலாக்கி ஒரு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைக் கொடுத்தால்தான் இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான நாடாக இருக்கும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சு, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் (29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இன்று காலையில் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதியும் இந்த சபையில் ஒட்டு மொத்த நாட்டு மக்களையும், குறிப்பாக தமிழ் மக்களையும் வேதனைப்படுத்தும் ஒரு கருத்தைப் பரிமாறிக் கொண்டார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்றுகூறியிருந்தார். தற்போதைய ஜனாதிபதி அவர்கள் கடந்த சில அமர்வுகளுக்கு முன்பு அனைவரையுமே இந்த சபையில் எழுப்பி இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு நீங்கள் எல்லாம் தயாரா என்று கேட்டது மாத்திரமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை எழுந்து 13 பிளஸ் என்று கூறுங்கள் என்று கூறிய ஜனாதிபதி மாவட்ட சபைகளைப் பற்றி பிரஸ்த்தாபித்திருப்பது மிகவும் வேதனையான விடயம்.
மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் என்றாலே எங்களுக்கு ஞாபகம் வருவது யாழ்ப்பாண நூலகத்தை எரித்த சம்பவம் தான். அந்த மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலையும் அந்த அதிகாரப்பரவலாக்கத்தையும் என்றோ இந்த நாட்டு மக்கள் நிராகரித்து விட்டார்கள்.
உங்களுக்குத் தேவையென்றால், தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நிரந்தரமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றால் இணைந்த வடகிழக்கில் முழு அதிகாரங்களையும் பரவலாக்கி ஒரு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைக் கொடுத்தால்தான் இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான நாடாக இருக்குமென்பதை மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்.
சுகாதார அமைச்சு, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இந்த நாட்டின் முக்கியமானதும், பிரபலமானதும், பிரச்சினைகளுக்குரியதுமான அமைச்சுக்களில் இவையும் ஒன்று.
2023க்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் சுகாதார அமைச்சுக்கான மொத்த செலவின மதிப்பீடு 319 லட்சத்து 990 மில்லியன்களாகும்.
சுகாதார அமைச்சானது, எமது நாட்டில் சுகாதார அமைச்சர்களாகப் பதவி வகித்த பலரின் செயற்றிறன் இன்மையை வெளிப்படுத்தியது மாத்திரமன்றி, பல அமைச்சர்களது பதவி விலகல்களுக்கு, பல அமைச்சர்களது ஊழல்களுக்குக் காரணமான ஒரு அமைச்சாக இருந்திருக்கிறது.
பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சராக நியமனம் பெறக்கூடிய, நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கக்கூடிய தகுதியும், திறமையும் உள்ளவர்கள் பலர் இருந்தும் ஜனாதிபதி, பிரதமர் அவர்களின் விருப்பம் மாத்திரமே இந்த அமைச்சிற்குரிய அமைச்சரை நியமனம் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றிருந்தது. சுகாதார அமைச்;சு இன்று- கடும் விமர்சனத்தை எதிர்நோக்க வேண்டி வந்தமைக்கான காரணமும் அதுவேயாகும்.
அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் மருத்துவம் சார் தொழிற் சங்கங்களுக்கும், சுகாதார அமைச்சுக்குமான நெருக்கமான இணைப்பு இன்மையே சுகாதார சேவையின் முக்கியமான குறைபாடாகும்.
அதையும்விட சுகாதார அமைச்சின் சகல மட்டங்களிலும் ஊழல்கள் இருந்ததை கடந்தகாலங்களில் காணமுடிந்தது.
மருந்துக் கொள்வனவில் ஊழல், மருத்துவ உபகரணங்கள் கொள்வனவில் ஊழல், தரமான மருந்துகளைப் பெறுவதில் ஊழல் என்று சகல மட்டங்;களிலும் ஊழல் காணப்பட்ட அமைச்சே சுகாதார அமைச்சாகும்.
இதற்கு சிறந்த ஒரே ஒரு உதாரணம் கடந்த ‘கொவிட் -19’ தொற்று பரவிய காலத்தில் அரசு நடந்து கொண்ட முறை இதற்கு சான்றாகும். இராணுவத் தளபதியை‘கொவிட்’ செயலணியின் தலைவராக நியமித்து யுத்தம் நடத்தியதைப் போல ‘கொவிட்’ஐ கட்டுப்படுத்த முயற்சித்தார்கள். இங்கு இராணுவத்தை இணைத்ததை தவறு எனக் கூறவில்லை. சுகாதார அமைச்சையும் சுகாதார உயர் பதவி ஆளணியினரையும் இராணுவத்தின் கீழ் இராணுவ ஆணைக்கு கட்டுப்படுத்தி வைத்தீர்கள்.
‘கொவிட் -19’ தடுப்பூசியினை பெற்ற விலைக்கும் அதாவது அதன் உண்மையான விலைக்கும் – செலுத்திய விலைக்கும் இடையிலான வேறுபாடுகள் நிலவியதாக அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. அன்னியச் செலாவணிப் பிரச்சினையால் நாடு அவதியுற்ற நேரம் நோய்த் தடுப்புக்காக கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் அதன் காலாவதித் திகதி முடிவடைந்ததனால் அழிக்கப்பட்டதாகவும் அறிய முடிந்தது. இவற்றின் உண்மைத் தன்மையை கௌரவ அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.
விஞ்ஞான பூர்வமான ஆய்வு வழிமுறைகளில் பெற்ற முடிவுகளைக் கொண்டு சுகாதாரத் துறையினை அபிவிருத்தி செய்வதை விடுத்து ‘நீர்முட்டிகளை கங்கையில் வீசி’ எமது சுகாதாரத் துறையினை வளர்க்க முடியாது என்பதை தற்போதைய அமைச்சராவது புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று மண் மாபியா, மர மாபியா, போல சுகாதாரத்துறையும் பணமீட்டும் மாபியாக்களைக் கொண்ட துறையாக மாறி வருகின்றது. எமது இலவச சுகாதார சேவை இன்று சவாலுக்குள்ளாகி வருகிறது. சுகாதாரத் துறையும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் சிலர் அரசியல்வாதிகள் போல நடந்து கொள்கின்றார்கள்.
அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதை விட தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதே மேல் என்ற நிலைக்கு மக்கள் மனம் மாறியுள்ளது. இத்தகைய மன மாற்றத்துக்கு அரச வைத்திய சாலைகளில் பணிபுரியும் சில வைத்தியத் துறைசார் நிபுணர்களின் நடத்தை காரணமாக இருப்பது ஒன்றும் ரகசியமல்ல. இதற்காக அவர்களது தனிப்பட்ட சிகிச்சை வழங்குவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், சில மகப்பேற்றுச் சிகிச்சைகள், சில அறுவைச் சிகிச்சைகள், சில பரிசோதனைகள், குறிப்பிட்ட சில தனியார் வைத்தியசாலைகளில் தான் செய்யப்படவேண்டும் என மறைமுகமாக நோயாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவது பகிரங்க ரகசியமாகும்.
அண்மைக்காலமாக நடந்து வருவதும், அதிகரித்து வருவதுமான பெரும் துயர சம்பவம் மருத்துவக் கவலையீனங்களால் வைத்தியசாலைகளில் நடைபெறும் மரணங்களாகும். ‘மருத்துவரின் தவறு புதைகுழியோடு மறைந்துவிடும்’ என்றொரு வழக்கு மொழியுள்ளது. இக் கூற்றினை தற்போதைய நிகழ்வுகள் உண்மையென நிரூபித்து வருகின்றன. நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாகவும், அளவு தொடர்பாகவும், அதில் இடம்பெறும் ஊழல் தொடர்பாகவும் மருத்துவத் துறைசார் நிருவாகிகளின் பங்கும் உள்ளதோ என பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
இம்முறை வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவு அபிவிருத்திக்கும், அறுவைச் சிகிச்சைப் பிரிவு புனரமைப்புக்கும், இதற்கான மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கும் ஏற்பாடுகள் கூறப்பட்டுள்ளது. இவை முன்மொழிவுகளாக மட்டும் இருக்காது இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட முழுத் தொகையும் எவ்வித ஊழலும், கமிசனும், லஞ்சமுமின்றி பயன்படுத்தப்பட வேண்டும்.
இத்துடன் கிழக்கு மாகாணத்தின் ஒரேயொரு போதனா வைத்தியசாலையாகத் திகழும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு, புற்றுநோய் சிகிச்சை அலகு, சிறுவர் நோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு, கதிர் வீச்சுப் பிரிவுகள் விரிவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கௌரவ அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அண்மைக்காலமாக வைத்தியத்துறை நிபுணர்களின் ஓய்வு வயது தொடர்பாகவும் நிபுணத்துவ வைத்தியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இதன் மூலம் நிபுணத்துவ வைத்தியர்களின் எண்ணிக்கையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்படலாம் என வைத்திய நிபுணர்களின் சங்கம் கரிசனை செலுத்தியுள்ளது. இது தொர்பாகவும் கௌரவ அமைச்சர் அவர்கள் முறையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
அத்தோடு மட்டக்களப்பு வைத்தியசாலை சம்பந்தமாக சில தேவைகளைக் குறிப்பிட்டாகவேண்டும். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய சிகிச்சை அலகு இருக்கின்றது. ஆனால், கத்லப் இல்லை. கத்லப்; போதனா வைத்தியசாலைக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டிருந்தாலும் அது வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவல நிலை இருக்கின்றது. அங்கு இருதய நோயாளர்கள் அஞ்சியோக்கிராம் செய்ய வேண்டுமாக இருந்தால் கூட யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு, அல்லது கொழும்பு, கண்டிக்குச் செல்லவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது. எனவே கிழக்கு மாகாணத்திலிருக்கும் ஒரேயொரு போதனா வைத்தியசாலைக்கு கத்லப் அவசியமாகத் தேவைப்படுவதை உணர்ந்து அதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். றீனல் யுனிற் 90 வீதம் முடிந்திருந்தும் அங்கு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் சிறுநீரக நோயாளர்களுக்கு பூரணமான சந்திர சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய நிலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இல்லை. அதே போல சத்திரிசிகிச்சைப் பிரிவு இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் வேலைப்பாடுகள் 99 சதவீதம் முடிவடைந்திருக்கின்ற நிலையில் அதற்குரிய உபகரணங்கள் வழங்கப்படாமலிருக்கின்றது. அந்த உபகரணங்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
இந்தப் பெரிய வைத்தியசாலைக்கு களஞ்சியப்படுத்தக்கூடிய மருந்துக் களஞ்சியசாலை இல்லாமலிருக்கிறது. மிகவும் கஸ்ரமான நிலையில் விடுதிகளுக்குள்ளும் சிறிய சிறய அறைகளுக்குள்ளும் மருந்துகளைச் சேர்த்து வைக்கவேண்டிய நிலைமை இருக்கின்றது. அதே போன்று கொழும்பிலிருந்து மருந்துகளை ஏற்றிவருகின்ற லொறி மிகவும் பழையதாகும். ஓட்டை விழுந்ததாகவும் காணப்படுகிறது. மழை காலத்தில் அந்த லொறி வரும் போது அந்த லொறிக்குள் மழைநீர் உட்புகக் கூடிய நிலையும் இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்திற்கென்று மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் பி.எஸ்.எஸ்.பி திட்டத்தினூடாக இரண்டு கூலர் லொறிகள் இலங்கை வந்தடைந்து துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்கிக்கொள்ள முடியாத இலங்கையின் நிலைமைக்கு அமைய சுங்கத் திணைக்களத்தில் இருந்து அவை விடுவிக்க முடியாமல் இருக்கின்றது. எனவே அதனை விடுவித்து மட்டக்களப்பு, திருகோணமலை பிராந்திய சுகாதர சேவைகள் பணியகத்திற்கு அவைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலே வைத்தியர்களுக்கான ஆளணி 487ஆகவும் அனுமதிக்கப்பட்ட ஆளணி 290 ஆகவும் இருக்கின்ற நிலையில் தற்போது அவ் வைத்தியசாலையில் 225 வைத்தியர்களே சேவையில் இருக்கின்றார்கள். அத்துடன் பொது மருத்துவ மாதுக்கள் 262 பேர் தேவைப்பட்டாலும் அங்கு 220 பேர் மாத்திரமே கடமையில் இருக்கின்றார்கள். ஆனால் கிழக்கு மாகாணத்திற்காக அனுப்பப்பட்ட ஆளணிகள் அம்பாரை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளில் மேலதிகமாக நிரப்பப்பட்டுள்ளன. தற்போது கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மருத்துவ மாதுக்களுக்கான மேலதிக ஆளணிக்காக விண்ணப்பத்திருக்கின்றார்கள் அதனையாவது மத்திய அரசு பூரணப்படுத்தி மேலதிக மருத்துவ மாதுக்களை கொடுப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மருத்துவ மாதுக்கள் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இலங்கையிலுள்ள அனைத்து போதனா வைத்தியசாலைகளிலும் கணக்காளர் தரம் ஒன்றுக்குரிய அனுமதியிருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு, யாழ் வைத்தியசாலைகளுக்கே கணக்காளர் தரம் ஒன்றுக்குரிய அனுமதி இல்லாமல் இருக்கின்றது. அதே போன்று அமைச்சரவையினால் எட்டு திட்டங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அரசின் திட்டத்தினூடாக அவை மட்டக்களப்பிற்கு வரவேண்டும்.
அதேபோன்று இன்னும் பல குறைபாடுகள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருக்கின்றன. கல்முனை வாழைச்சேனை வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு இரவு எட்டு மணிவரை திறந்திருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆறு மணியுடன் மூடப்படுகின்றது. எனவே அங்குள்ள பணிப்பாளர் அவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அனுப்புவதற்காகவா ஆறு மணியுடன் மூடுகின்றார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியாலையின் பணிப்பாளர் தரம் அற்ற பணிப்பாளராக இருப்பதுதான் பல விடயங்களுக்குக் காரணமாக இருக்கின்றது. பல மில்லியன்கள் செலவில் கொரோனா விடுதி உருவாக்கப்பட்டது. அங்கு தற்போது நோயாளர்கள் இல்லாமல் இருக்கின்ற நிலையில் அங்கு நியுரோ வைத்திய நிபுணர், பொது வைத்திய நிபுணர் போன்றவர்கள் விடுதி இல்லாமல் இருக்கின்றார்கள். அதை விட 2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நியுரோ திரப்பி 2022ம் ஆண்டு அதன் உத்தரவாதக் காலம் முடிவற்றதன் பின்னர் தான் இயங்குநிலைக்கு வந்துள்ளது. அதே போன்று பத்து மில்லியன் பெறுமதியான ஓட்டேமெடிக் மைக்ரோ பயோலொஜி கல்சர் இயந்திரம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றது.
உண்மையலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழல் மிகுந்த ஒரு வைத்தியசாலையாக இருக்கின்றது. எனவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒரு கணக்காய்வு குழுவை அல்லது ஒரு ஆணைக்குழுவை அமைத்து அந்த வைத்தியசாலை தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என நான் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.
மூன்றாம் நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யத் தயார் – திலகர்
தனது முதலாவது நூற்றாண்டிலே அடிமைகள் போன்று நடாத்தப்பட்ட மலையக சமூகம் இரண்டாவது நூற்றாண்டிலே தன்னை அமைப்பாக்கம் செய்து அரசியல், தொழிற்சங்க, இலக்கிய பண்பாட்டுத் தளத்துக்கு உயர்ந்தது. ஆனாலும் குடியுரிமைப் பறிப்புக் காரணமாக அந்த இரண்டாம் நூற்றாண்டு அரசியல் பிரவாகம் பல ஏற்ற இறக்கங்கங்களைக் கொண்டது.
அத்தகையதொரு அரசியலே இப்போது நடைமுறையிலுமுள்ளது. அதே நேரம் மலையகம் 2023 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது நூற்றாண்டைத் தொடங்குகிறது. அடுத்த நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யும் அவசியம் உள்ளது. அதனையே இலக்காக்க் கொண்டே மலையக அரசியல் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பாட்டில் உள்ளது என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார் .
மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவும் வி. கே. வெள்ளையன் நினைவுப் பேருரையும் ஹட்டன் நகர சபை மண்டபத்தில் எந்த ஞாயிறன்று (27/11) நடைபெற்றது. அரங்கத்தின் 13 வது நினைவுப் பேருரையை மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் மெய்நிகர் முறையிலும், இளைஞர்களினதும் பெண்களினதும் அரசியல் பங்கேற்பு எனும் தலைப்பில் சட்டத்தரணி சஞ்சுளா பீட்டர்ஸும், ஓராண்டுச் செயலாற்றுகை எனும் அரங்கச் செயற்பாட்டு அறிக்கையை கிருஷ்ணகுமாரும் ஆற்றியுருந்தனர் . நிகழ்வுக்கு தலைமை வகித்து கொள்கை விளக்க உரையாற்றியபோதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மலையக அரசியல் அரங்கம் தனது ஓராண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. அரசியலில் ஒரு ஆண்டு என்பது ஒரு கிழமை போன்றும் ஓடி மறையலாம் அல்லது ஒரு யுகமாற்றமும் நடந்து முடியலாம். இலங்கையப் பொறுத்த வரையில் கடந்த இரண்டரை ஆண்டுகள் என்பது ஒரு யுகமே. அத்தனை மாற்றங்கள் அரசியல் தளத்திலே இடம்பெற்ற இந்த இரண்டரை ஆண்டு காலகட்டத்தில்தான்
மலையக அரசியல் அரங்கமும் பிறந்தது.
மலையக அரசியல் அரங்கம் என்பது மலையகத்தின் புதிய யுகத்துக்கான அரசியலை முன்வைக்கும் சமூக அரசியல் தளம். இது ஒரு கட்சியல்ல. கூட்டணியும் அல்ல. நான்கு பிரதான இலக்குகளைக் கொண்டு அரங்கம் செயற்படுகின்றது. மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடல் வெளியை ஏற்படுத்துவது, ஆண்களுக்கு சமனாக பெண்களுக்கும் அரசியலில் சமவாய்ப்பை வழங்குவது, மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுப்பது, அடுத்த தலைமுறையினருக்கான அரசியல் பாலமாகச் செயற்படுவது என்பனவே அந்த இலக்குகளாகும்.
மலையகத்தின் முதலாவது நூற்றாண்டு காலம் அடிமைத் தனத்துக்குள் தள்ளப்பட்டிருந்தாலும் இரண்டாவது நூற்றாண்டிலே அரசியல் அமைப்பாக்கம் பெற்ற சமூகமாக மலையகத்தை நிமிர்த்திய பெருமை மலையக தேச பிதா கோ. நடேசய்யருக்குரியது. அவரது துணைவியார் மீனாட்சியம்மை யும் அந்த பயணத்தில் இணைந்து பெண்களும் அரசியலில் ஈடுபடும் முன்மாதிரியைக் காட்டியவர் .எனவேதான் அவர்கள் இருவரையும் மலையக அரசியல் அரங்கம் முன்னோடி அரசியல் செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்துகிறது.
அறிவார்ந்த அரசியல் உரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் மலையகத்தின் மூன்றாவது நூற்றாண்டிலே முன்வைப்புச் செய்யவேண்டிய இருபத்து நான்கு (24) தலைப்புகளை நாங்கள் அடையாளம் கண்டு அவற்றை மாதாந்த உரையரங்க நிகழ்வாக நடாத்தி வருகிறோம். இந்த உரையரங்கத் தொடரில் இதுவரை 12 உரைகளை சமகால ஆளுமைகளைக் கொண்டு கடந்த கால ஆளுமைகளின் நினைவாக எதிர்காலத் தலைமுறையினருக்காக வழங்கி உள்ளோம். அவற்றை இணையத்தில் கேட்கலாம். ஆளுமைகளை நினைவு கூர்வதில் நாங்கள் கட்சி பேதம் பார்ப்பதில்லை.
அவர்களது செயற்பாடுகள் மீதான விமர்சனத்தை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. 200 ஆண்டுகால மலையகத்தின் 100 ஆண்டுகால அரசியலில் 60 ஆண்டுக்காலம் தலைவராகவும் 30 ஆண்டுகாலம் அமைச்சராகவும் இருந்த ஒருவரை இலகுவாக தவிர்த்துச் செல்ல முடியாது. அந்தச் சாதனையை நினைவுபடுத்தும் அதேநேரம் அறுபது ஆண்டு காலம் ஒருவர் தலைவராக,அமைச்சராக இருந்தும் மக்களுக்கு ஆனது என்ன எனும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டி உள்ளது.
அந்தவகையில், எமது 12 உரைகளும் பல்வேறு அரசியல் முன்வைப்புக்களைச் செய்துள்ளது. அதே நேரம் இருநூறு ஆண்டு காலம் நாட்கூலித் தொழிலாளர்களாக வாழும் எமது உழைப்பாளர் மக்களை சிறு தோட்ட உடைமாயளர்களாக்கி சுயாதீன உழைப்பாளர்களாக்குவதன் மூலமே அடுத்த தலைமுறை மலையகத்தையாவது நாம் அடிமைத்தளைகளில் இருந்து நீக்க முடியும் என்ற வலியுறுத்தலைச் செய்யவே அந்த விடயத்தை தலைப்பாகக் கொண்டு 13 வது நினைவுப்பேருரையை தொழிற்சங்கத் துறவி வீ.கே. வெள்ளையன் நினைவாக ஆற்றுகின்றோம்.
அதனை அர்த்தமுள்ளதான ஓர் உரையாக அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவன் அவர்கள் வழங்கி உள்ளார். அடுத்து வரும் 11 மாதமும் நாங்கள் மலையக மாவட்டங்கள் தோறும் மாதாந்த நினைவுப் பேருரைகளை நடாத்தத்திட்டமிட்டுள்ளோம். மலையகத்தின் இரண்டாம் நூற்றாண்டில் அரசியல் அமைப்பாக்கம் செய்த எங்கள் முன்னோடி நடேசய்யர் எதிர்கொண்ட சவால்களை நாம் கற்றறிந்துள்ளோம். அதேபோல மூன்றாவது நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யும் மலையக அரசியல் அரங்கத்தின் பணியை இன்றுபோல் எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொண்டு முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.
ஒரு மருத்துவ மாணவனுக்கு மருத்துவ கற்கைக்காக 60 லட்சம் செலவு செய்யும் அரசாங்கம்
நாட்டின் பெருமளவு நிதி செலவில் கற்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு நாட்டுக்கு சேவை வழங்காது வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மருத்துவ கற்கை மற்றும் பயிற்சிகளுக்காக ஒரு மாணவனுக்கு அரசாங்கம் 60 லட்சம் ரூபாவுக்கு அதிகமான நிதியை செலவிடுவதாக சபையில் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் வெளிநாடுகளுக்கு வழங்கும் சேவையானது அந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நிதி உதவியை விட அதிகமானது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மருத்துவ துறையை முன்னேற்றுவதற்கு நாட்டில் மேலும் மூன்று மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஊவா வெல்லஸ்ஸ, குருநாகல் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் அதனை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவத்துறையில் பட்டப்பின் படிப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்களில் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன்,கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் அதன் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் பூனாவில் உள்ள இத்தகைய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சமனானதாக இலங்கையில் அதனை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு வெளிநாடுகள் உதவ வேண்டும்.
அதேவேளை மருத்துவத் துறையில் வைத்திய பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவர் ஒருவருக்கு அரசாங்கம் 60 லட்சம் ரூபாய் வரை செலவிடுகிறது.
நாட்டுக்காக அவர்களது சேவையை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்தளவு தொகை செலவிடப்படுகிறது.
ஆனாலும் அனைத்து பயிற்சிகளையும் தாய்நாட்டில் பெற்றுக் கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அவர்களது சேவைகளை வழங்குகின்றனர். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில் பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எமது நாட்டு வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாட்டின் பெரும் நிதி செலவில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் சேவைகளை மேற்கொள்ளும் நிலையில் அந்த சேவைகள் அந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நன்கொடையை விட அதிகமாகும் என்றார்.
காவி உடை அணிந்தமைக்காக தர்மத்துக்கு எதிராக செயற்பட இடமளிக்க முடியாது – ரணில்
காவி உடை அணிந்தமைக்காக தர்மத்துக்கு எதிராக செயற்பட இடமளிக்க முடியாது. அதனால் பல்கலைக்கழகங்களில் பயிலும் பிக்கு மாணவர்கள் தொடர்பாக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
புத்தசாசனத்தில் பிரச்சினைகள் பல உள்ளன. துறவரத்தை பேணும் அனைவரும் தர்மத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும். தேரர்கள் அதனை பின்பற்றாவிட்டால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.
புத்த பெருமானின் காலத்தில் இருந்து இது நடக்கின்றது. அங்குலிமால என்பவர் காவி உடையை அணிந்தகொண்டே புத்த பெருமானுக்கு எதிராக நடந்துகொண்டார்.
இவ்வாறான நிலைமையில் தேரர்களுக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வகையில் அறநிலையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் பிக்குமார் பதிவு செய்தல் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட வரைபு செய்யப்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் அரசர்களே அதனை கட்டுப்படுத்தினர். பராக்கிரமபாகு காலத்தில் சில தேரர்களுக்கு மரண தண்டனையும் விதித்துள்ளார்.
அவ்வாறு எங்களுக்கு செய்ய முடியாது. அதற்கான அதிகாரமும் கிடையாது. ஆனால் இப்போது மகாநாயக்க தேரர்கள் இப்போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொறுப்பேற்று செயற்படுத்துகின்றனர். பௌத்த நிகாயக்கள் இது தொடர்பில் செயற்படுகின்றன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் நாங்களும் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக பல்கலைக்கழகங்களில் கற்கும் பிக்குகள் தொடர்பிலேயே நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.
அவ்வாறான பிக்கு ஒருவர் மகாநாயக்க தேரரை தூற்றுகின்றார். இவர்கள் யார்? காவி உடையை அணிவதால் தர்மத்திற்கு எதிராக செயற்பட விசேட பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியாது. இதனால் இந்த சட்டமூலம் அவசியமாகும்.
பல்கலைக்கழகங்களுக்கு பிக்கு மாணவர்களாக பெருமளவானவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இறுதியாக அவர்கள் சாதாரண வாழ்க்கையுடனேயே அங்கிருந்து வெளியேறுகின்றனர்.
முதலில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும். அதாவது துறவரத்துடன் வந்தால் அவ்வாறே இருக்க வேண்டும். பட்டத்தையும் துறவரத்துடனேயே வழங்க வேண்டும். பின்னர் அதனை மாற்ற முடியாது. மாறும் நடவடிக்கைகளை தங்களின் மகாநாயக்க தேரர்களிடம் சென்றே பேசிக்கொள்ள வேண்டும்.
அத்துடன் பல்கலைக்கழங்களில் பிக்குமார் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மகாநாயக்க தேரர்களுக்கு அதிகாரம் வழங்கவேண்டும்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தர்மத்தையும் சங்கசபையையும் குழப்பிக்கொண்டுள்ளார். பராபவ சூத்திரத்தில் தேரர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை. அந்த சூத்திரம் தொடர்பில் தெளிவில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அதை அவர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் – மைத்திரி வலியுறுத்தல்
நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் அரசியலமைப்பினால் அதிகாரம் வழங்கப்பட்ட வகையில் மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் வலியுறுத்தினார்.
மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.
வடக்கு பிரச்சினைகளை தீவிரப்படுத்தாமல் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வடக்கு அரசியல்வாதிகள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள்,கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வடக்கு பிரச்சினைக்கு தீர்வு காணுவதாக குறிப்பிட்டுக் கொண்டு காணி விடுவிப்பு,அதிகார பகிர்பு மற்றும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது.
எனது ஆட்சிகாலத்தில் வடக்கு மாகாணத்தில் அந்த மக்களுக்கு சொந்தமான காணிகளில் 95 சதவீதமான காணிகளை விடுவித்தேன்.தற்போது இரண்டு அல்லது மூன்று சதவீதமான காணிகள் மாத்திரமே கட்டுப்பாட்டில் உள்ளன.
வடக்கு மாகாணத்தில் கோயில் தொடர்பான பிரச்சினை தற்போது தோற்றம் பெற்றதல்ல,மிலேட்சதமான நிலைக்கு செல்லாமல் பேச்சுவார்த்தை ஊடாக நல்லிணக்க அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
புத்தசாசன அமைச்சருடன் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இணக்கமாக தீர்மானத்தை காண்பது அவசியமாகும்.
நாடு வரலாற்று ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்ததை ஊடாக தீர்வு காண்பது காலத்தின் தேவையாகும்.
இலங்கை வரலாற்றில் சிங்களவர்களுக்கும். தமிழர்களுக்கும் இடையில் நல்லிணக்க தொடர்பு காணப்பட்டது என்பதை வரலாற்று சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினையாக காணப்படுகிறது.
மாகாணங்களுக்கு கீழான நிருவன கட்டமைப்பில் அதிகார பகிர்வு வழங்க முடியும்.மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை ஊடாக அதிகாரத்தை பகிர முடியும்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை கொண்டு வந்தார்,அதற்கு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.அக்காலப்பகுதியில் தான் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் காலத்தில் சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன இவ்வாறான நிலையில் பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
பண்டா- செல்வா ஒப்பந்தத்திற்கு மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்து வீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட போது எஸ்.டப்ள்யூ,ஆர்.டி. பண்டாரநாயக்க கைச்சாத்திட்ட பண்டா- செல்வா ஒப்பந்த பிரதிகளை போராட்டத்தில் ஈடுப்பட்ட மதகுருமார்கள் முன் தீயிட்டு இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்வதில்லை என குறிப்பிட்டார்.
இதன்பின்னர் டட்லி –செல்வா ஒப்பந்தம் ஊடாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.
ஜே.ஆர் ஜயவர்தன அறிமுகப்படுத்திய மாவட்ட அபிவிருத்தி சபை ஊடாக மாவட்டங்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் வழங்ப்பட வேண்டும்.இந்த முறைமையினால் அரசாங்கத்திற்கு மேலதிக நிதி செலவாகாது என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க தயார் என்றார்.
இதன்போது மீண்டும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக்க நன்;றி,மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.நாடு இன்று எதிர்க்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் மாவட்ட அபிவிருத்தி சபை ஸ்தாபிக்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும்,ஆகவே பிரச்சினைகளை தீவிரப்படுத்த வேண்டாம் என வடக்கு மாகாண அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்திய நிதியுதவியில் சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானம்
இந்திய நிதியுதவியின் கீழ் அதிக விளைவுகளைக் கொண்ட சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய நிதியுதவியின் கீழ் அதிக விளைவுகளைக் கொண்ட சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2005-2010, 2010-2015 மற்றும் 2015-2020 வரையான காலப்பகுதிகளுக்கான இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.
குறித்த கருத்திட்டத்தின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தித் துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
இக்கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உப கருத்திட்டமொன்றின் செலவு 300 மில்லியன் ரூபாவாக மட்டுப்படுத்தப்படுவதுடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் மொத்தக் கருத்திட்டங்களின் உயர்ந்தபட்ச பெறுமதி 5 பில்லியன் ரூபாவாக அமையும்.
ஆனாலும், நாட்டில் தற்போது நிலவுகின்ற நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக 300 மில்லியன் ரூபாய் உயர்ந்தபட்ச பெறுமதி எல்லையில் ஒருசில கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சிரமமாக அமைவதால், குறித்த எல்லையை 600 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் மொத்தக் கருத்திட்டங்களின் உயர்ந்தபட்ச பெறுமதியை 10 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கும் இரு தரப்பினர்களும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, இரு நாடுகளுக்கிடையில் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
விடுதலை புலிகள் 3 இலட்சம் தமிழர்களை பகடை காயாக வைத்து போர் செய்தார்கள் – சரத் வீரசேகர
நாட்டில் சிங்கள இனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே புத்த சாசனம் பாதுகாக்கப்படும். புத்தசாசனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே தேரவாத பௌத்த நாடான இலங்கை பாதுகாக்கப்படும்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழர்கள் தமது வீடுகளுக்குள் இருந்தவாறு நினைவு கூர்ந்துக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் பௌத்த மத உரிமைகள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் உள்ளன. இலங்கையில் 72 சதவீதம் பௌத்தர்களும், 12 சதவீதம் இந்துக்களும், 9.7 சதவீதம் இஸ்லாமியர்களும், 6.3 சதவீதம் கத்தோலிக்கர்களும் வாழ்கிறார்கள்.
இலங்கை தேரவாத பௌத்த நாடு அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு, போசிக்கப்படவேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை பாதுகாக்கும் வகையில் பௌத்த சாசனம் அமுல்படுத்தப்பட்டது, ஆகவே பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட் டால் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் பௌத்த விகாரைகள், தேரர்கள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் தான் பௌத்த சாசனம்.
சிங்கள இனத்தவர்கள் தான் பௌத்த சாசனத்தை தோற்றுவித்தார்கள், ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள இனம் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆரம்ப காலத்தில் சிங்களே என அழைக்கப்பட்ட இலங்கை காலப்போக்கில் ஸ்ரீ லங்கா என எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை அறியவில்லை. இலங்கையை வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களில் இருந்து பாதுகாக்க சிங்களவர்கள் தான் முன்னின்று போராடினார்கள்.
புத்தசாசனம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாட்டின் ஒருமைப்பாடு உறுதியாக பேணப்பட வேண்டும். சமஷ்டியாட்சி முறைமையின் கீழ் நாட்டை பிளவுப்படுத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் புத்தசாசனம் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையில்லை. தற்போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தில் இருந்து சிங்களவர்களும்,முஸ்லிம்களையும் பிரபாகரன் மாத்திரம் வெளியேற்றவில்லை.
பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வாறே செயற்பட்டார்கள்.பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் கொழும்பில் சிங்களவர்களுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு வடக்கு மாகாணத்திற்கு சென்று குறிப்பிடுகிறார்.
வடக்கில் சிங்களவர்களுக்கு இடமில்லை என்று, இது வெறுக்கத்தக்கதாகும். வடக்கில் புத்த சிலையை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்,இவ்வாறானவர்களிடம் நல்லிணக்கத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது.
வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் உள்ள கோயில்களில் தேர் வீதி வலம் வந்தது. சிங்களவர்களும் அதில் கலந்துக் கொண்டார்கள்.
அதுவே சிங்கள இனத்தின் பொறுமையாகும். ஆனால் வடக்கு மாகாணத்தில் புத்தசாசனத்திற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து தடையேற்படுத்தவதையிட்டு ஒட்டு மொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அவர்களின் உறவுகள் வீடுகளுக்குள் வைத்து நினைவு கூர்ந்துக் கொள்ளலாம். விடுதலை புலிகள் 3 இலட்சம் தமிழர்களை பகடை காயாக வைத்து போர் செய்தார்கள்.
இராணுவத்தை நோக்கி தமிழர்கள் வரும் போது அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள். இராணுவத்தை நோக்கி 12 வயது சிறுவன் வரும் போது அந்த சிறுவனை பிடித்து கால்களை வெட்டினார்கள்.
விடுதலை புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராகவே செயற்பட்டார்கள். இவ்வாறானவர்களையா தாம் நினைவு கூறுகிறோம் என்பதை தமிழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
விடுதலை புலிகள் அமைப்பினர் நெருக்கடி செய்தார்களா அல்லது இராணுவத்தினர் நெருக்கடி செய்தார்களா என்பதை தமிழ் இளைஞர்கள் தமது பெற்றோரிடம் உண்மைகளை கேட்டறிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.
புதிய நாணய சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் கோட்டா அரசாங்கத்தின் வரிச்சலுகைகளை தவிர்த்திருக்கலாம் – முன்னாள் ஆளுநர் இந்திரஜித்
2019 இல் திட்டமிடப்பட்ட புதியநாணய கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தால் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் பாரிய வரிச்சலுகைகள் மற்றும் பெருமளவு நாணயம் அச்சிடுதல் ஆகியவற்றை தடுத்திருக்கலாம் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கிக்கான சட்டமூலம் 2019லேயே தயாராகயிருந்தது எனினும் அப்போதைய அரசாங்கத்திற்கு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நேரமிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட பொருளாதார நிபுணர்கள் வரிகளை பெறுமளவிற்கு குறைத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி தொடர்பான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் திறைசேரியில் உள்ளவர்கள் வரிவிலக்கு போன்றவற்றை நடைமுறைப்படுத்தியிருப்பார்களா என நான் நினைப்பதுண்டு இதற்கு எங்களால் சரியான பதிலை தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் மீது தாக்குதல் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை
யாழ் மானிப்பாயில் பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.
மானிப்பாய் ஆலடி சந்தியில் நேற்று திங்கட்கிழமை இரவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் இருந்த வேளை இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து , அங்கு கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்ட வேளை வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர்.
தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த பொலிஸார் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, இரத்த காயங்களுடன் நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் இளைஞனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , முதற்கட்டமாக யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் இன்று செவ்வாய்க்கிழமை வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் , சட்ட வைத்திய அதிகாரியிடம் இருந்து சட்ட மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் தெரிவித்தார்.