வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நாட்டின் வளங்களை மீள கொண்டு வரும் பொறிமுறை அவசியம் – சஜித் பிரேமதாச

நாட்டு வளங்களை திருடி வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர முடியுமான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தொழிலட மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இந்நாட்களில் தூக்கமில்லாமல் வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. இந்நாட்டின் நிதி வளங்களை திருடிய தரப்பினரையும், வளங்களையும் கண்டுபிடித்து அந்த வளங்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரும் வேலைத்திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தூக்கமில்லாமல் செயற்படுவதே மிகவும் பொருத்தமானது.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர் யார் என்பதை இலங்கை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்புக்கு இணங்க நாட்டிலிருந்து திருடப்பட்ட வளங்களையும் பணத்தையும் திரும்பக் கொண்டுவருவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து பேசும் தற்போதைய அரசாங்கம், கொரோனா கால கட்டத்தில் இந்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி தகனமா அடக்கமா என்ற பிரச்சினையைக் கையாண்டது. இப்பிரச்சினையில் தலையிட்டால் சிங்கள பௌத்த வாக்குகள் பறிபோகும் என்று கூறி இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், ஐக்கிய மக்கள் சக்திக்கு இவ்வாறான கொள்கை கிடையாது. நாமெல்லோரும் இலங்கையர் என்ற கொள்கையில் முற்போக்கு தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருகிறோம்.

இந்த பிரச்சினையில் நடந்து கொள்ள வேண்டிய முறையை உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக கூறியிருந்த போதிலும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் கூட சரியான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. தேசிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே முஸ்லிம் மக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளுக்காக வீதிக்கிறங்கினோம். யார் என்ன சொன்னாலும் கோட்டாபய ராஜபக்ஷ அன்று எடுத்த தீர்மானம் முற்றாக இனவாத தீர்மானமாகும். தற்போது அதனை அனைவரும் உணர்ந்துள்ளனர். பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் மத தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அத்துடன், வெளிநாட்டு பயணங்களுக்கு ஆட்களை அழைத்து செல்வது தொடர்பில் தெரிவிக்கப்படடது. எத்தனை பேரை அழைத்துச்சென்றாலும் அவர்களுக்கு அரசாங்கம் செலவழிக்கிறது. அவ்வாறு செலவழிக்கப்பட்டதன் பெறுபேறு என்ன என்பதை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும். வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் தொடர்பில் முடியுமானால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் நிலையில் பிரிவினைவாதம் தோற்றம் பெறாமல் தடுக்க வேண்டும் – அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கமாக செயற்படுகிறோம்.நாட்டின் சுயாதீனத்தன்மையை விட்டுக் கொடுத்து செயற்படவில்லை.

அதேபோல் பிற நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய நாட்டை நிர்வகிக்க போவதில்லை. தமிழ்,சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கௌரவமான முறையில் வாழும் சூழல் காணப்படுகிறது.

தமிழர்களுக்கு அவர்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். எம்மால் இரு முனைகளில் இருந்துக் கொண்டு செயற்பட முடியாது.

தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படும் நிலையில் பிரிவினைவாதம் தோற்றம் பெறுவதையும் தடுக்க வேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பிளவுப்படாத வெளிவிவகார கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம். சீனா, இந்தியா, அமெரிக்கா,மேற்குலக நாடுகள் உட்பட சகல நாடுளுடனும் இணக்கமாக செயற்படுகிறோம்.எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்துக்கு இலங்கையின் பிரதான நிலை நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.பிளவுபடாத வெளிவிவகார கொள்கையினால் தான் இந்த முன்னேற்றத்தை எம்மால் அடைய முடிந்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா,இந்தியா உட்பட பெரிஸ் கிளப் நாடுகள் ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் சாத்தியம் காணப்படுகிறது.

வெளிவிவகாரத்துறை அமைச்சு,வெளிநாட்டலுவல்கள் அமைச்சு,சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் இணக்கமாக செயற்படுகிறது. வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் 1.5 பில்லியன் ரூபா முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொருளாதார மீட்சிக்காக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் வெற்றிப்பெற்றுள்ளன.கனடா மாத்திரம் இலங்கையின் விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ளது.

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்துக்கு வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு அரச தலைவர்களை நேரில் சந்தித்து தமது கொள்கை திட்டங்களை தெரிவித்துள்ளார்.அதன் பயனாகவே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிப்பெற்றது.வெளிவிவகாரத்துறை யின் சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கமாக செயற்படுகிறோம். நாட்டின் சுயாதீனத்தன்மையை விட்டுக் கொடுத்து செயற்படவில்லை. அதேபோல் பிற நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய நாட்டை நிர்வகிக்க போவதில்லை.தமிழ்,சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கௌரவமான முறையில் வாழும் சூழல் காணப்படுகிறது.

தமிழர்களுக்கு அவர்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். எம்மால் இரு முனைகளில் இருந்துக் கொண்டு செயற்பட முடியாது.தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படும் நிலையில் மறுபுறம் பிரிவினைவாதம் தோற்றம் பெறுவதையும் தடுக்க வேண்டும்.ஒருமித்த நாட்டுக்குள் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்படும்.

2020 ஆண்டு நான் நீதியமைச்சராக பதவியேற்ற போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 400 பேர் இருந்தார்கள். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் சில்வாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சட்டத்தின் ஊடாக 200 பேரை விடுதலை செய்தோம்.

அதேபோல் பயங்கரவாதத்துடன் நேரடியாக தொடர்பில்லாத சம்பவங்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்ய வேண்டாம் என்ற சுற்றறிக்கையை 2020.09.21 ஆம் திகதி வெளியிட்டோம்.பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்தியோரை கைது செய்யுமாறு ஜனாதிபதி ரணில் பணிப்பு

மாவீரர் தினத்தில் புலிகளை நினைவுபடுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில் பணித்துள்ளார்.

புலிகளை நினைவுகூரும் வகையில் ஆடைகளை அணிந்தமை ,புலிச் சின்னம், கொடிகளை ஏந்தியமை உட்பட்ட பல்வேறு விடயங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அது புலிகளின் மீளுருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் தென்னிலங்கையில் இருப்பதால் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி நீதியமைச்சர் விஜயதாசவையும் ,பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் டிரான் அலசையும் கேட்டுள்ளார்.

இதனையடுத்து மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் உடனடியாக விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.அத்துடன் புலிகளின் சின்னங்களுடன் நினைவுகூர்ந்தவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தனது உரையில் தெரிவித்துள்ளதாவது.

மனித உரிமை மீறல்களை சாத்தியமாக்கும் சட்டங்கள் குறித்தும் கரிசனைகள் காணப்படுகின்றன.பயங்கரவாத தடைச்சட்;டம் 1979 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது முதல் அரசியல் கைதிகளைநீண்ட காலம் தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.மிகமோசமான கறுப்புஜூலை கலவரத்தின் பின்னர் நிகழ்;ந்த வெலிக்கொடை படுகொலைகள் என அழைக்கப்படும் சிறைச்சாலை படுகொலையில் கொல்லப்பட்ட 53 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களே.

பயங்கரவாத தடைச்சட்டம் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை கைதுசெய்யப்பயன்படுகின்றது அந்த சட்டம் தற்போது நீக்கப்படலாம் என்கின்ற போதிலும் புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மோசமானதாகயிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் அணுகுமுறை இன்னமும் மாற்றமடையவில்லை.இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுஇஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது.

மேலும் இது பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளையோ சர்வதேச தராதரங்களையோ பூர்த்தி செய்யாது.இலங்கையில் நல்லிணக்கம் குறித்து எனக்கு மேலதிக தெளிவுபடுத்தல்களை வழங்கியமைக்காக பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்திற்கு நான் நன்றியை தெரிவிக்கின்றேன்.

இலங்கை தூதரகத்தின் ஆவணத்தின் ஒரு பகுதி இவ்வாறு தெரிவிக்கின்றது நவம்பர் 2023 வரை காணாமல்போனவர்களின் அலுவலகத்தின் தேடும் பிரிவினர் காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்டவர்களில் 16 பேரை உயிருடன் கண்டுபிடித்துள்ளனர் 3 பேர் உயிரிழந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர் என இலங்கை தூதரகம் தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

18000 தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாக நம்பபடுகின்றது அப்படியானால் ஏனையவர்களிற்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் அவர்கள் குறித்து தெரிவிப்பதற்கு என்ன ஆவணங்கள் உள்ளன?

ஐக்கியநாடுகளின் உறுப்பினர் என்ற அடிப்படையிலும் இலங்கையின் சகா என்ற அடிப்படையிலும் பொறுப்புக்கூறல் நீதி மனித உரிமை பாதுகாப்பு போன்றவற்றிற்கான வேண்டுகோள்களிற்கு ஆதரவாக பிரிட்டன் அதிகளவில் செயற்படவேண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும்சரியான எண்ணிக்கை தெரியவில்லை ஆனால் ஐக்கிய நாடுகள் குழு 40000 தமிழர்கள் உட்பட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மோதல்களின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான சவேந்திரசில்வா மற்றும் இலங்கையின் ஏனைய குற்றவாளிகளுக்கு எதிராக பிரிட்டன் உட்பட உலக நாடுகள் தடைகளை விதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது. பாரிய அநீதிகளில் ஈடுபட்டவர்கள் பிரிட்டனிற்குள் வரஅனுமதிக்கப்படமாட்டார்கள் என காண்பிப்பதன் மூலம் பிரிட்டன் அமெரிக்கா கனடாவின் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கலாம்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் அடுத்த வாரம் பெற்றுக் கொள்ள முடியும் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால், அன்றைய தினமே இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (06) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அன்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் அன்றைய தினமே இரண்டாம் கட்ட கடன் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எம்மிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டாம் கட்ட கடன் தொகையும் கிடைக்காது, கடன் மறுசீரமைப்பையும் மேற்கொள்ள முடியாது என்று பரவலாகப் பேசப்பட்டது. எனினும் இது பொய்யாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் கிடைக்கும் என்று நம்புகின்றோம். சீனா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்றார்.

எட்கா ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு செய்ய உடன்பாடு

உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை 2024 மார்ச்சில் நிறைவு செய்ய இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தத்தின் (எட்கா) 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் கடந்த ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

அதில் ஏற்புடைய பல துறைகள் தொடர்பாக இருதரப்பு செயற்பாட்டுக் குழு உடன்பாடுகளை எட்டியுள்ளது.

குறித்த உத்தேச ஒப்பந்தத்தின் 13 ஆவது சுற்றுக் கலந்துரையாடலை 2024.01.08 தொடக்கம் 2024.01.10 ஆம் திகதி வரை இந்தியாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2024 மார்ச் மாதமாகும் போது தொழிநுட்ப மட்டத்திலான கலந்துரையாடல்களை நிறைவு செய்வதற்கும் இருதரப்பினரும் உடன்பட்டுள்ளனர். 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.

சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது – பிரிட்டன் அமைச்சர்

சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய விவகாரங்களிற்கான The Parliamentary Under-Secretary of State for Foreign Affairs அமைச்சர்களில் ஒருவரான லியோ டொச்செட்ரி தெரிவித்துள்ளார்

பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையின் மனிதஉரிமைகள் நிலவரம் குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் உன்னிப்பாக அவதானிக்கின்றது குறிப்பாக தமிழர்களின் நிலைமை குறித்து.

அங்கு காணப்படும் நிலவரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனதை வருத்தும் விதத்தில் வலுவான விதத்தில் இங்கு முன்வைத்தார்கள்.

மனித உரிமைகள் விடயத்தில் முக்கிய பிரிட்டனின் கரிசனைக்குரிய 32நாடுகளில் ஒன்று இலங்கை பல விடயங்கள் தொடர்பில் நாங்கள் கரிசனை செலுத்துகின்றோம்

இலங்கையில் பல வருடகாலமாக காணப்படும் இன மத பதற்றங்களை தொடர்ந்து தமிழ் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவது ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவது எங்கள் அனைவருக்கும் தெரியும்;.

பயஙகரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேசதராதரத்திலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக வாக்குறுதியளித்து வருகின்ற போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது- கடந்த வாரமும் பயன்படுத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும்..

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நினைவுகூரலிற்கு எதிரான பொலிஸாரின் கடுமையான நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் கண்காணித்தல்கள் மிரட்டல்கள் போன்றன இடம்பெறுகின்றன.குறிப்பாக இவை தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை இலக்குவைத்து இடம்பெறுகின்றன.

முன்னாள் போராளிகளும் காணாமல்போனவர்களின் உறவினர்களும் கண்காணிக்கப்படுகின்றனர் அச்சுறுத்தப்படுகின்றனர்.

பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரங்களை வழங்க முதல் மாகாண சபை தேர்தல்களை நடாத்த வேண்டும்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்கப்படுவதாக அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

அப்படியானால் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் எவ்வாறு பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியுமென எதிரணியின் சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

புதிய பல்கலைக்கழங்களையும் தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குவதாக ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். அத்துடன் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கும் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

இதில் முதலாவது பிரச்சினை , பல்கலைக்கழகங்களை உருவாக்கி அவற்றுக்கான ஆளணி மற்றும் பௌதீக வளங்களை வழங்கும் இயலுமை மாகாண சபைகளுள்ளதா என்பது அடுத்து பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கும் வழங்கப்படும் என்றால் அந்த மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

தற்போது நாட்டில் உள்ள மாகாண சபைகள் அனைத்தும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அங்கு மக்கள் பிரதிநிதிகள் எவரும் இல்லை.இவ்வாறான நிலையில் மாகாண சபைகளினால் எப்படி பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும்? அவ்வாறு மாகாண சபைகளைக்கொண்டு பல்கலைக்கழகங்களை அரசு உருவாக்க விரும்பினால் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.

இதேவேளை இன்று மூளைசாலிகள் வெளியேற்றம் என்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ள மூளைசாலிகளின் வெற்றிடத்தை நிரப்ப எமக்கு இன்னும் இரண்டு பரம்பரை தேவைப்படும். முன்னர் பல்கலைக்கழக கலாநிதிகள்,பேராசிரியர்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் அவர்கள் 7,8 மடங்கு சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்து நாட்டிலிருந்து வெளியேற முற்படவில்லை.

ஏனெனில் பணியில் அவர்களுக்கு திருப்தி இருந்தது. ஆனால் தற்போது நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் அவர்களுக்கு சம்பளம் போதாது. அத்துடன் பாரிய வரி விதிப்புக்களினாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அது மட்டுமன்றி அவர்கள் தமது பணியில் திருப்தியடைய முடியாதவாறு பல்கலைக்கழகங்களில் பெரும் வளப்பற்றாக்குறைகளும் உள்ளன.

அமெரிக்கா, கனடா போன்று இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பிரிட்டன் தடை விதிக்க வேண்டும்

அமெரிக்கா கனடாவை பின்பற்றி இலங்கையின் இராணுவ அதிகாரிகள் சவேந்திரசில்வா ஜகத்ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கலாம் என லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் எட்டேவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து இடம்பெற்றுவரும் விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது செல்வாக்கு செலுத்துவதற்காக சர்வதேச நாணயநிதிய செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வர்த்தக உடன்படிக்கைகள் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு இலங்கையை பிரிட்டன் கேட்டுக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று காசாப் போரை நிறுத்துமாறு கோருவோர் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி

இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் இன்று கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம். ஏனெனில் அப்பாவிப் பொதுமக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின் பல தரப்பட்ட பிரிவினரும் அமைப்புக்களும் கண்டித்துள்ளனர்.

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைப் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர். அதனை நாமும் வரவேற்கின்றோம். ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு முன் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த இதே முஸ்லிம் தலைவர்கள் வடக்கில் வன்னி மாவட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவி சகோதர ஒரே மொழி பேசும் தமிழர்கள் கொல்லப்படும் போது கண்டும் காணாதவர்கள் போல இருந்தமை மாத்திரமல்ல, போரை நடாத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியமையை நினைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மனவேதனை அடைந்தனர்.

இன்று இஸ்ரேல் காசாவில் குண்டு போட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அப்பாவி மக்களை அழிப்பது போன்று தான் அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை இஸ்ரேல் விமானங்களும் விமானிகளும் ராஐபக்ஷாக்களின் ஏவலில் செஞ்சோலை மாணவிகள் வைத்தியசாலைகள், தற்காலிக மக்களின் முகாம்கள், சிறுவர் இல்லங்கள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போன்றோரை அழிக்கும் போது, அன்று இதே நாடாளுமன்றத்துக்குள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைச்சரவையில் ஆதரவு வழங்கியமையைப் பாதிக்கப்பட்ட சகோதர தமிழ் மக்கள் இலகுவில் மறக்கமுடியாது மனம் குமுறுகின்றனர்.

இன்று தொலைவில் உள்ள நாடுகளிடம் பலஸ்தீன் மக்களை காப்பாற்றுமாறு நீங்கள் கோருவதை எவ்வளவு தூரம் செவி சாய்ப்பார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், அன்று உங்கள் ஆதரவுடன் இருந்த ராஐபக்ஷ அரசாங்கத்தின் கபினட் அமைச்சர்களாக இருந்த உங்களால் மிக இலகுவாக கொல்லப்பட்ட அனைவரையும் காப்பாற்ற முடியா விட்டாலும், இன்று காசா மீது காட்டும் மனிதாபிமானத்தை அன்று ஈழத் தமிழர்களுக்கும் காட்டினீர்கள் என்று வரலாறு பதிவு செய்திருக்கும்.

இவ்வாறான பாரபட்சமான நிலைப்பாட்டை வரலாறு இலகுவில் மன்னிப்பதில்லை. – எனவும் தெரிவித்துள்ளார்.