சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயமே – முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன்

சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய விவகாரமே என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பகுதியிலே பேசும் பொருளாக காணப்படுகின்ற குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் விவகாரம் சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது. அவ் ஆலயத்தின் வரலாறு அதாவது எம் தமிழ் இந்துக்கள் இவ் ஆலயத்தினை எவ்வாறு வழிபாட்டார்கள் என்ற வரலாறு மிகப்பெரியது பழமையானது.

இருந்தும் அண்மைக்காலமாக சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையிலே அங்கு சென்று பொங்கல் வைத்து வழிபட முடியாத நிலை இந் நாட்டிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருந்தும் பக்தர்கள் மத வேறுபாடுன்றி அங்கு சென்று பல்வேறுபட்ட வழக்குகளையும் தொடர்ந்திருக்கின்றார்கள் .

அந்தவகையில் அண்மையில் இடம்பெற்ற வழக்கிலே முல்லைத்தீவு நீதிமன்றம் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றது குருந்தூர் மலை ஐயனை நாம் எந்த தடையுமின்றி வழிபடவும், கலாசாரத்தை பேணவும் சகல உரிமை உண்டு என நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

எனவே நிர்மூலப்பட்ட எமது பாரம்பரியமான பொங்கல் நிகழ்வை தொடர்ந்து செய்ய எமது ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வருகின்ற 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சரியாக 9 மணியளவில் மிக பிரமாண்டமான முறையிலே பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் எனவே இப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அன்றைய நாளை முழுமையாக எங்கள் வரலாற்றை, பண்பாட்டையும், குருந்தூரானுடைய வழிபாட்டு தன்மைகளை பேணுவதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு அதுமட்டுமல்லாது இம் மாவட்டத்திலே இருக்கும் சகோதர மதத்தவர்களும் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி எமது வழிபாட்டை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வழிசமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

காணி விடுவிப்பு நல்ல விடயம்; மக்கள் அங்கே செல்லும் போது கைது செய்து நீதிமன்றம் அனுப்பக் கூடாது – செல்வம் எம்.பி

மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது.

இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்றிருந்தது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று முல்லைத்தீவிலே காணி விடுவிப்பு சம்மந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தின் முடிவிலே இடம்பெறும் பிரச்சினைகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கின்றபடியால் இன்றைய கூட்டம் இடம்பெற்றிருந்தது.

வனஇலாகா பொறுப்பதிகாரிகள் இங்கே அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த அடிப்படையில் மாவட்ட செயலகம் கொடுத்த பல இடங்களில் தற்போது சில இடங்கள் விடுவிக்கின்ற முடிவை எட்டியிருக்கின்றன.

அதேபோல் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளாக இருந்தாலும் இங்கு இருக்கின்ற அதிகாரிகளினால் இயலாத ஒரு நிலை ஏற்படுகின்ற போது அதனை நடுவர் குழுவிற்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எங்களை பொறுத்தமட்டில் இந்த விடயங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதனை பெரிதாக எதிர்பார்க்கின்றோம். ஏனென்றால் இது மக்களுடைய காணிகள் ஏற்கனவே திட்டமிட்டு அபகரிக்கின்ற நிலைகள் இருந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது உண்மையிலே நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .

கூட்டம் போட்டு பேசி முடிவுகளை எடுத்ததன் பின் மீண்டும் அந்த மக்கள் அங்கே செல்கின்ற போது கைது செய்து நீதிமன்றத்திற்கு அனுப்புகின்ற செயற்பாடுகள் இருக்க கூடாது என்பது எங்களுடைய எண்ணமாக இருக்கின்றது.

அந்தவகையிலே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை நாங்கள் கோரியிருக்கின்றோம். பல விடயங்களை ஆராய்ந்து உடனுக்குடன் தீர்வுகளை கண்டிருக்கின்றோம். அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இனவாதம் மதவாதத்தை தூண்டுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் – வஜிர அபேவர்தன

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டி கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்கமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம்.

ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. ஆனால் இவர்கள் இனவாதம். மாதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம் மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாடு தற்போது படிப்படியாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. சரவதேச நாணய நிதியம் நேற்று விடுத்திருந்த குறிப்பொன்றில், செப்டேம்பர் 15ஆம் திகதிக்கும் 27ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மீண்டும் இலங்கைக்கு வந்து, வங்குரோத்து நிலைமையில் இருந்து மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

அதனால் ஊடகங்கள் நாட்டின் நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மை தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஏதாவது வழி இருந்தால்.

கடந்த மே மாதம் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள கிடைப்பதும் இல்லை. ஜூலை மாதத்தில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ள கிடைக்கப்பதில்லை.

அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த வழியும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. என்றாலும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க ரணில் விக்ரமசிங்கவிடம் தெளிவானதொரு வழி இருந்தமையாலே அவர் முன்வந்து நாட்டை பொறுப்பேற்றார்.

அத்துடன் நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்து இன மக்களும் ஒன்றாக இருந்து செயற்பட்டதுபோல் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும் நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்துக்காக ஒன்றிணைந்து செயற்பட்டாலும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் காலத்துக்கு காலம் தேர்தல்களின் போது பொய் வாக்குறுதிகளை வழங்கி அதனை செயற்படுத்த முற்பட்டதன் பிரதிபலனாகவே இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட காரணமாகும்.

மேலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்துக்கு வந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார்.

பொருளாதாரம் ஸ்திரமடையும் நிலை ஏற்படும் போது இனவாதத்தை தூண்டி, ஆட்சியை வீழ்த்தும் நடவடிக்கை 2000ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்று வந்திருக்கிறது. அதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் அதனை எவ்வாறு மீட்கமுடியும் என்பதையும் அரசியல் அனுவத்தால் ரணில் விக்ரமசிங்க தெரிந்து தெரிந்து வைத்திருக்கிறார்.

அதனால் தான் 2000ஆம் ஆண்டில் நாடு வீழ்ச்சியடையும்போது 2001 டிசம்பர் மாதம் நாட்டை பொறுபேற்று, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னுக்கு கொண்டு சென்றார்.

ஆனால் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில் 2014 ஆகும்போது நாடு பொருளாதார ரீதியில் மீண்டும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

அதனால் 2017இல் நடத்த இருந்த ஜனாதிபதி தேர்தலை 2015இல் நடத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தார்கள். என்றாலும் 2015 ஜனவரி 8ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டை பொறுப்பேற்று, நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துவந்தார். இந்நிலையில்தான், உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்து 2019இல் 52 நாள் கலவரம் மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வரை இடம்பெற்றது.

எனவே நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டி கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்கமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.

ஆனால் இவர்கள் இனவாதம். மாதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம் மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.

அதனால் அனைவரும் இலங்கையர்களாக எமது பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேசிய ஐக்கியம் முக்கியமாகும் என்றார்.

பெளத்த சாசனத்தைப் பாதுகாக்க பெளத்தர்கள் குருந்தூர்மலையில் ஒன்றிணைய வேண்டும் – உதய கம்மன்பில

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும். இந்து – பௌத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்.

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு மாத்திரம் தான் பிரச்சினை உள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகமாக வாழும் சிங்களவர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.பௌத்த மரபுரிமைகள் முழுமையாக தமிழ் பிரிவினைவாதிகளால் அழிக்கப்படும்.

2200 ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட குருந்தூர் தூபியை இந்து கோயில் என தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள்.

நாளை (வெள்ளிக்கிழமை) குருந்தூர் மலையில் இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள.ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும்.குருந்தூர் மலையில் பௌத்த- இந்து மோதலை தடுக்கவும்,தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இலங்கை சிங்களவர்களின் நாடு; தமிழர்களுக்குச் சொந்தமானதல்ல – மேர்வின் சில்வா

கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்த தமிழர்களுக்காகவும், சோழர்களுடன் வடக்கு மற்றும் கிழக்குக்கு வழந்த தமிழர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.

இது சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் விரும்பும் இடங்களில் வாழலாம் என குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அப்பகுதியில் வாழ்பவர்களின் தலைகளை கொய்வேன் என்று குறிப்பிட்ட கருத்தை நீக்கிக் கொள்ளமாட்டேன், முடிந்தவர்கள் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம். டயஸ்போராக்களின் நோக்கத்துக்கமைய அரசாங்கம் செயற்பட்டால் என் தலைமையில் மீண்டும் போராட்டத்தை தோற்றுவிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் எங்கும் வாழலாம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சிங்களவர்கள் வாழ்வதற்கும், விகாரைகள் அமைப்பதற்கும் தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அதிகாரிகளிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

தென்னிந்தியாவில் இருந்து கொழுந்து பறிப்பதற்காகவே மலையகத்துக்கு தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். மறுபுறம் சோழர்களுடன் வந்த தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழந்தார்கள்.

அரச காலத்தில் இலங்கையில் இருந்த பெண்கள் அழகில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள அரசர்கள் தென்னிந்தியாவில் இருந்து தமிழ் இளவரசிகளை திருமணம் முடித்து நாட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

தமிழ் இளவரசிகளுக்காக சிங்கள மன்னர்கள் கோயில்களை கட்டிக் கொடுத்தார்கள்.இவ்வாறான பின்னணியில் தான் தமிழர்கள் இலங்கையில் வாழ ஆரம்பித்தார்கள். பிற்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொன்மையான விகாரைகள் அழிக்கப்பட்டு அதன் மீது கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே தற்போது கோயில்களை இடிக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

தமிழர்கள் சிங்கள பௌத்தர்களுடன் முரண்பாடு இல்லாமல் நல்லிணக்கத்துடன் வாழலாம் அதை எதிர்க்கவில்லை. ஆனால் பௌத்த மரபுரிமைகளை அழித்து இங்கு வாழ முடியாது. ஏனெனில் இது சிங்கள பௌத்த நாடு. கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்தவர்களுக்காகவும், சோழர்களுடன் வந்தவர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த முடியாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்கள் விகாரைகள், மகாநாயக்கர்கள் மீது கை வைத்தார். அவர்களின் தலைகளுடன் களனிக்கு வருவேன் என்று குறிப்பிட்டதை ஒருபோதும் நீக்கிக் கொள்ளமாட்டேன். எனக்கு எதிராக எவரும் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

டயஸ்போராக்களின் நோக்கத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக நான் அரகலயவில் (போராட்டம்) ஈடுபடுவேன். பௌத்தத்தின் மீது பற்றுள்ளவர்கள் என்னுடன் இணைந்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார்.

13 ஐ முழுமையாக அகற்றினால் நீங்கள் இதுவரை திருந்தவில்லை என்பதை உலகம் அறியும் – மனோ கணேசன்

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

அதைவிட 13ம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை உமது கட்சி, பாராளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும். அதன் அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், விமல் வீரவன்ச எம்பி தலைமையிலான உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவை நோக்கி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துக்கொண்ட கூட்டணி தலைவர் மனோ கணேசன், எம்பீக்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான கட்சிகள் கூட்டாக அமைத்துள்ள உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவைவிடம் மேலும் கூறியதாவது;

நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன். அதுவே எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை. நீங்கள் எந்தவொரு தீர்வுக்கும் தயார் இல்லை. அதுதான் உங்கள் கொள்கை. அப்படியானால் உங்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன்.

இந்த ப்ளஸ், மைனஸ் வெட்டிப்பேச்சுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, உங்கள் கட்சியின் சார்பாக, 13ம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை, பாராளுமன்றத்தில் கொண்டு வாருங்கள். அதை இந்த பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது, எம்பீக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என நாம் தெரிந்து கொள்ளலாம். உலகமும் தெரிந்துக்கொள்ளும். அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம்.

உலகம் சொல்வதை கேட்காமல், உலகை ஒதுக்கி வைத்து, சாளரம், கதவுகளை மூடி வைத்து இந்நாட்டை நடத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால்தான் இன்று இந்நாடு விழுந்து போய் கிடக்கிறது. ஆகவே இப்போதும் நீங்கள் திருந்தவில்லை என உலகம் அறியட்டும்.

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

“சனல் – ஐ” குத்தகை அடிப்படையில் லைக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது – பந்துல

”சனல் – ஐ” யினை லைக்கா நிறுவனத்திற்கு குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் நஸ்டத்தில் இயங்கிவரும் “சனல்-ஐ” யினை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விபத்திர அறிவிப்பை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவாஹினிகூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சனல்ஐயை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குநிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு நீண்டகால அடிப்படையில் குத்ததைகக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இயக்குநர் சபை எடுத்ததீர்மானத்தின் அடிப்படையில் சனல்- ஐ யினை குறுகிய கால அடிப்படையில் லைக்கா நிறுவனத்திற்கு வழங்கதீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்த போதிலும் சனல்ஐ நஸ்டத்தில் இயங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கை என்பதால்அமைச்சரவையின் அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டதாக பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு லைக்கா நிறுவனத்திற்கு 25மில்லியனிற்கு அதன் ஒளிபரப்பு நேரத்தை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் – இலங்கை முதலீட்டுச் சபை இடையேயான ஒப்பந்தம் இரத்து

ஏற்றுமதி சந்தைக்காக மாத்திரம் நாளொன்றுக்க 420,000 பரல்கள் கொள்ளவுடன் கூடிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையமொன்றை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிறுவுவதற்காக இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு தனியார் நிறுவனத்துக்கிடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக 2019.09.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 50 வருட நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் 1,200 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உத்தேச கருத்திட்ட மூலம் குறித்த காணி குத்தகை அடிப்படையில் பெறப்படாமையால், இதுவரை கருத்திட்ட அமுல்படுத்தப்படவில்லை.

கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் பற்றி கருத்திட்ட முன்மொழிவாளருக்கு பலதடவைகள் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருப்பினும், அதற்குப் பதிலளிக்கவில்லை. இருதரப்பினர்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய கருத்திட்ட முன்மொழிவாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையால், குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம் – மொஹமட் முஸம்மில்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். உண்மையான நாட்டு பற்றாளர்கள் அதிகார பகிர்வு விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு உறுதியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கையின் அயல் நாடான இந்தியாவுடன் இணக்கமாக செயற்பட தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுவது ஆச்சியரியமாக உள்ளது.

1987 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் இணக்கமாக செயற்பட்டிருந்தால் 60 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள். நாட்டில் இனக்கவலரம் என்பதொன்று தோற்றம் பெற்றிருக்காது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்த வண்ணம் உள்ளது.

1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை.

போராட்டத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கிறார்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி துப்பாக்கி அதிகாரத்துக்கு பதிலாக மாற்று அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதியின் தந்திர செயற்பாட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது.

13ஆவது திருத்த விவகாரத்தில் போலியான தேசப்பற்றாளர்கள் அனைவரும் மௌனித்துள்ளார்கள். தேசியத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அனைவரும் 13 ஆவது திருத்த விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 21 ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம் பெறவுள்ளன.

இந்நிலையில் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

ஆலய சூழலில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கான கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தாக சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலய வீதியை சுற்றி சிவப்பு வெள்ளை கொடிகள் ஆலயத்தினரால் கட்டப்பட்டு வருகின்றன. கொடிகள் கட்டப்பட்டு எல்லைப்படுத்தப்படும் ஆலய சூழலில் வியாபார நடவடிக்கைகள், யாசகம் பெறல், விளம்பர நடவடிக்கைகள் என்பவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு வருவோர் அப்பிரதேசத்திற்குள் காலணிகளுடன் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.