சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடபட்ட அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று சுழிபுரத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பறாளாய் முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை கூட்டுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் வேண்டுகோள்

இலங்கை – இந்தியப் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினைக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை வியாழக்கிழமை (03) பாராளுமன்றத்தில் மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது சபாநாயருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பர நீண்டகாலப் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது என்றும் உயர்ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டினார்.

எரிசக்தித் துறை, கல்வித்துறை மற்றும் டிஜிட்டல் துறை உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இவ்விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார்.

இலங்கை, இந்தியப் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினைக் கூட்டுமாறு கேட்டுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர், அதன் உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் கலந்துகொண்டார்.

மூதூர் தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டமையின் 17 ஆம் அண்டு நினைவு தினம்

மூதூரில் அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04.08.2023) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 17 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இப்­ப­டு­கொ­லையில் முத்­து­லிங்கம் நர்மதன், சக்­திவேல் கோணேஸ்­வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்­க­ராஜா பிறீமஸ், ஆனந்­த­ராஜா மோகனதாஸ் ரவிச்­சந்­திரன், ரிஷி­கேசன், கன­க­ரத்­தினம் கோவர்த்­தனி, கணேஷ் கவிதா, செல்­லையா கணேஷ் சிவப்­பி­ர­காசம் ரொமிலா, வயி­ர­முத்து கோகி­ல­வ­தனி, அம்­பி­கா­வதி ஜெய­சீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரை­ராஜா கேதீஸ்­வரன், யோக­ராஜா கோடீஸ்­வரன், முர­ளீ­தரன் தர்­ம­ரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா, ஆகியோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த அக்ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த மேற்­படி 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்­காரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து நிலத்தில் குப்­பு­றப்­ப­டுக்கப் பண்ணி பின்­பக்­க­மாக தலை­யில் சுட்டு படு­கொ­லை­ ப­டுத்­தி­ய­தாக அன்­றைய செய்­திகள் தெரி­வித்­தன.

சுழிபுரம் பறாளாய் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை  நாட்டிய மரம் என  வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை காலை பத்து மணியளவில் சுழிபுரம் சந்தி. பகுதியில் காலை கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், வரலாற்றினை திரிபுபடுத்தும் சிங்கள அரசு இன்னும் ஒரு படி மேல் சென்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய மேலும் வரலாற்றினை திரிபடைய செய்துள்ளது.

சங்கமித்தா இலங்கைக்கு வருகை தந்ததாக கி.மு 3ஆம் நூற்றாண்டு என வரலாற்று மூலாதாரங்களில் திரிபடைய கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆலய தர்மகர்த்தாவினர் குறித்த ஆலயம் 1768 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் பொழுது எதுவித அரச மர எச்சங்கள் குறித்தும் தமது முன்னையவர்களோ அல்லது ஆதாரங்களோ குறிப்பிடவில்லை எனவும் தற்பொழுது ஆலயத்தில் உள்ள மரம் மிக குறைந்தளவான காலப்பகுதிக்கு உரியது எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆலயத்தினரிடம் ஆகக்குறைந்த  கலந்துரையாடலை கூட செய்யாது  எதேச்சதிகாரமான முறையில் இந்த  சிங்கள அரசு திட்டமிட்ட  பெளத்தமயமாக்கல் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தொடர்ச்சியாக சிங்கள  அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் இதனை வலியுறுத்தி நாளைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சுழிபுரம் சந்தி பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

ஆகவே இதனை வலுச்சேர்க்கும் முகமாக பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தமிழ் தேசியத்தின்பால் செயற்படும் இளைஞர் யுவதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கட்சிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டைக்காக இந்தியாவினால் 450 மில்லியன் இந்திய ரூபாய்கள் அன்பளிப்பு

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விப்பத்திரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உரிய கால வரையறையின்படி, அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முற்பணமாக இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட தொகையில் 15% சதவீதமான, அதாவது 450 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான காசோலையை, இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளித்தார்.

உரிய கால வரையறைக்கமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், வாரத்திற்கு ஒருமுறை கூடி அதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யுமாறும் சாகல ரத்நாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும்,  இந்திய – இலங்கை ஒத்துழைப்பின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, இதற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் 300 பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாட்டில் தளர்வு

செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்தில் நாட்டிற்கு 45.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அண்மைய பொருளாதார நெருக்கடியுடன் சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி, 1,465 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதன் பிறகு டிசம்பர், பெப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் பொருட்களின் ஒரு பகுதி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

 

 

தமிழ் அரசியல்வாதிகள் காணி,பொலிஸ் அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோ ரீதியான உற்சாகத்தினை வழங்குகின்றனர் – சனத் நிசாந்த

மாகாணசபையில் பாரிய அதிகார கட்டமைப்பு இருக்கும் பொது பணத்தை தீருப்பி அனுப்பி விட்டு தற்போது பொலிஸ் காணி அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோரீதியான உற்சாகத்தினை தமிழ் அரசியல்வாதிகள் வழங்குகின்றனர் என நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்தார்.

வவுனியா தரணிக்குளத்தில் குழாய் மூலமான நீர்ப்பாசன திட்டத்தினை பெறுவதற்காக மக்களின் செலவீனங்களை உள்ளடக்கி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்க கருத்துதெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வட மேல் மாகாணசபையில் நான் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளேன். இதன் அடிப்படையில் பார்க்கின்ற போது தமிழ் அரசியல்வாதிகள் காணி பொலிஸ் அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோ ரீதியான உற்சாகத்தினை வழங்குகின்றனர்.

மாகாணசபை என்பது விசாலமான அதிகாரங்களை கொண்ட கட்டமைப்பு. வடக்கு கிழக்கு மாhகாணசபையில் 13 திருத்தச்சட்டம் மற்றும் பொலிஸ் காணி அதிகரம் என கூறிக்கொண்டிருப்பதை விடுத்து 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மாகாணசபைக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை எப்படி வெல்லலாம் என சிந்தி;க்க வேண்டும்.

13ஆவது திருத்தச்சட்டம் ஊடாகவே மத்திய அரசும் மாகாண அரசும் சம்பந்தப்படுகின்றது. பெரு வீதிகள், புகையிரதம், மின்சாரம், இலங்கை போக்குவரத்து சபை, நீதிக்கட்டமைப்பு, தேசிய பாடசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் தவிர அனைத்தும் மாகாணசபையின் ஊடாக செயற்படுத்தவும் நிறுவனங்களாகும்.

அவற்றை வெற்றி கொண்டு வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முடியும். 13 ஆவது திருத்த சட்டத்தினால்;. கிடைக்காத சின்னச்சின்ன பிரச்சனைகளை விடுத்து கிடைத்ததை வெற்றி கொண்டு செயற்படுத்த பாடுபட வேண்டும்.

13 பற்றி பேசிக்கொண்டு வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியை கூட உரிய முறையில் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் நிலை காணப்பட்டது.

எனவே கிடைத்த அதிகாரத்தினை பயன்படுத்தி அதனூடாக செய்ய முடிந்தவற்றை செய்ய வேண்டும். அதனைவிடுத்து கிடைக்காததற்காக காத்திருப்பது தேவையற்றது என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கைச் சேர்ந்த 12 பேருக்கு இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பு

வட மாகாணத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் மாணவர்களை சந்தித்து இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் சந்தித்து கலந்துரையாடினார்.

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கில் சிங்கள பெளத்த மயமாக்கம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

உடவல நீர்த்தேக்கத்தின் நீரைத் திறந்துவிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் தென்பகுதி விவசாயிகளும் தமது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காததால் வடபகுதி விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். நாட்டின் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து, உணவுப்பொருள் உற்பத்தித் தொழிற்சாலையான விவசாயத்தை வாழவிடுங்கள் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்திற்கான சிறுபோக விவசாயத்திற்கு உரிய நீரை காலக்கிரமத்தில் வழங்குவதாக உத்தரவாதமளித்த மகாவலி அதிகாரசபை சிறுபோகத்தின் இறுதிகட்டம் நெறுங்கியுள்ள நிலையில் நீரை வழங்க முடியாதநிலையில் உள்ளது. மகாவலி அதிகாரசபையின் இத்தகைய கையாலாகாத் தனத்தை எச்சரித்தும் வடக்கில் காணி அபகரிப்பின் கருவியாக மகாவலி அதிகாரசபை செயற்படுவதை அம்பலப்படுத்தியும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சப்ரகமுவ மாகாணத்தில் சமநல வாவியின்கீழ் ஆயிரக்கணக்கான ஹெக்டெயர் நெல் வயல்கள் சிறுபோகத்தில் செய்கை செய்யப்படுகிறது. இந்த நெற்பயிருக்கான தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் பல ஆயிரக்கணக்கான ஹெக்டெயரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அழிந்து நாசமாகிவிடும் என்பதுடன் இந்தியாவிடமிருந்தோ, சீனாவிடமிருந்தோ, வியட்நாமிடமிருந்தோ இலங்கை, அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

தமது விவசாயம் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் தமக்குத் தேவையான நீரை உடன் விடுவிக்கும்படியும்கோரி அப்பிரதேச மக்கள் கடந்த பத்துநாட்களாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னமும் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன், உடவலவ அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுமாயின், ஹம்பாந்தோட்டை, காலி உட்பட ஐந்து மாவட்டங்களுக்கான மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என எரிசக்தி வலுசக்தி அமைச்சர் கூறியுள்ளார். ஆகவே நீரைத் திறந்துவிட முடியாது என மின்சார அமைச்சர் கூறுகின்ற அதேசமயம், விவசாயத்திற்கு நீர் கிடைக்காவிட்டால் 1700கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று விவசாய அமைச்சர் கூறுகிறார்.

தென்மாவட்டங்களுக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டால் நூறுகோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று மின்சார அமைச்சர் கூறுகின்றார். ஏற்கனவே பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தில் இருக்கக்கூடிய ஒரு நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய நீரை கொடுக்கமாட்டோம் என்று அடம் பிடிக்கும் அமைச்சரும் நீருக்காகப் போராடும் மக்களைத் திரும்பிப் பார்க்காத ஜனாதிபதியும் இந்த நாட்டை பொருளாதார பாதாளத்தில் இருந்து மீட்கப்போகிறோம் என்று சொல்வது நகைப்புக்குரியது.

தமது மாவட்டங்களைச் சார்ந்த சிங்கள விவசாயிகளுக்கே நீரைத்திறந்துவிடாத அமைச்சர்கள், வடக்கு மாகாணத்திற்கு மகாவலியைக் கொண்டுவரப்போகிறோம் என்றுகூறி, ‘எல்’ வலயம், ‘ஜெ’ வலயம், ‘ஐ’ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளைக் கபளீகரம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
முறையான நீர்ச்சேகரிப்பு வசதிகளின்றி, மழைநீரை சேமித்து வைத்துள்ள குளங்களை நம்பி, மேற்கொள்ளப்பட்டுவரும் வடக்குமாகாண விவசாயச் செய்கையில் விதை நெல்லு, உரம், கிருமி நாசினிகள், டீசல், உழவுகூலி என அனைத்துமே விலையேறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், வடக்கு மாகாண விவசாயிகள் தமது நெல்லுக்கு ஒரு நீதியான விலைகேட்டுத் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் அவர்களது கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல், தனியார் வியாபாரிகள் கொள்ளை இலாபம் அடையும் நோக்குடன் நெற்சந்தைப் படுத்தும் சபையினரும் அராவிலைக்கு நெல்லை கொள்முதல் செய்ய முயற்சிக்கின்றார்கள். பல ஆயிரம், இலட்சங்களைச் செலவு செய்த விவசாயிகள் இரத்தக்கண்ணீர் வடித்து நிற்கிறார்கள். ஆகவே அரசாங்கம் முதலில் இந்த நிலைமையை மாற்ற வேண்டும். வடக்கிலோ, கிழக்கிலோ, தெற்கிலோ மேற்கிலோ விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். இனவாத கண்ணோட்டங்களை விடுத்து, விவசாயிகளை விவசாயிகளாகவே நடத்துங்கள். இந்நாட்டிற்கு உணவளிப்பவர்களை வாழவிடுங்கள்.

ஏற்கனவே, ஹம்பாந்தோட்டையிலிருந்தும் ஏனைய சிங்கள பிரதேசங்களிலிருந்தும் கொண்டுவந்து குடியேற்றப்பட்டவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்காமல் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். இந்த இலட்சணத்தில் நாடு முழுவதும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற ஒரே நோக்கில், அப்பாவி சிங்கள மக்களை அழைத்துவந்து வடக்கில் குடியேற்றுவதற்கு இலங்கையின் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒருபுறமும் தொல்பொருள் திணைக்களம் இன்னொருபுறமும் இந்த காணிகளைக் கபளீகரம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இருக்கின்றனர்.
அரசாங்கம், முதலாவதாக வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தென்பகுதி சிங்கள மக்களுக்கு தாமதமின்றி தண்ணீரைத் திறந்துவிடுவது மாத்திரமல்லாமல், குடியேற்றம் என்ற பெயரில் அப்பாவி சிங்கள மக்களை அழைத்துவந்து அவர்களை நடுத்தெருவிற்குக் கொண்டுவருவதையும் நிறுத்த வேண்டும்.

மகாவலி ஆறு ஓடும் தென்பகுதி சிங்கள மக்களுக்கே தண்ணீர்ப்பற்றாக்குறையும் அவர்களுக்கான செய்கைக்கான நீரும் வழங்க முடியாத நிலை இருந்தால், மகாவலி ஆறு எட்டியும் பார்க்காத வடக்கு மாகாணத்திற்கு மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிப்பதென்பது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரலே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசம் வெலிஓயா என்ற பெயரில் சிங்கள மயமாக்கப்பட்டு மகாவலி ‘எல்’ வலயம் என்று உருவாக்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அந்த வலயத்திற்கு மகாவலி ஆற்றின் நீர் இன்னமும் எட்டியும் பார்க்கவில்லை. இப்பொழுது மகாவலி ‘ஐ’ வலயம், ‘ஜெ’ வலயம் என்ற பெயர்களில் புதிய வலயங்களை உருவாக்குவதில் மகாவலி அதிகாரசபை ஈடுபட்டு வருகின்றது. வன்னிப் பகுதியில் சிறிய குளங்களை நம்பி, குறைந்தளவான விவசாயிகள் தமது விவசாயத்தைச் செய்து வருகின்றனர்.

நீங்கள் மகாவலி நீரைக் கொண்டுசெல்கிறோம் என்ற பிழையான பெயரில் இப்பொழுது விவசாயம் செய்யும் மக்களையும் விரட்டி, சிங்கள மக்களையும் குடியேற்றி மொத்தத்தில் தற்பொழுதுள்ள விவசாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றீர்கள். தயவு செய்து இத்தகைய தொலைநோக்கற்ற சகல நடவடிக்கைகளையும் நிறுத்துங்கள்.

மின்சாரம் இல்லாவிட்டால் மனிதனால் உயிர்வாழ முடியும். ஆனால் வயிற்றுக்கு உணவில்லையேல் மக்கள் செத்து மடிவதைத்தவிர வேறுவழியில்லை. உணவில்லாமல் மருந்தில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் எம்கண்முன்னே செத்து மடிந்ததைப் பார்த்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அந்தத் துன்பம் சிங்கள மக்களுக்கு ஏற்படவேண்டாம்.
அடுத்த ஜனாதிபதியும் நான்தான் என்று கூக்குரல் இடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே இந்த விடயங்களை தயவு செய்து தங்களது கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன் கோயில்;வெளியான வர்த்தமானி கலாசார அழிப்பு! – சபா குகதாஸ் விசனம்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்பு பட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிட்டமை கலாசார அழிப்பு என குற்றஞ்சாட்டிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வெள்ளரசு மரம் உள்ள இடமெல்லாம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் வெளியான வர்த்தமானியில் பல இடங்கள் தொல்லியல் துறைக்குரியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்போது சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்பு பட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திற்கும் சங்கமித்தை வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெள்ளரசு மரம் உள்ள இடம் எல்லாவற்றையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முயற்சிக்கிறதா?

குறித்த தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியை மீளப்பெறுவதற்கு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்