இந்தியாவில் இருந்து முதல் கட்டமாக 500MW மின்சாரத்தை பெற திட்டம்

இலங்கையின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து கம்பி இணைப்பு மூலம் ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் திட்டப்பணிகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அது எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு நிறைவடையும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.

இந்த மின்சார திட்டம் சம்பந்தமான சுற்றுச்சூழல் அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக 400 மில்லியன் டொலர்கள் செலவாகும்.

தலைமன்னாரில் இருந்து தமிழ்நாடு வரை கடலில் அமைக்கப்படும் தூண்கள் ஊடாக கம்பி இணைப்பு மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதுடன் முதல் கட்டமாக 500 மெகாவோட் மின்சாரமும் இரண்டாவது கட்டமாக 500 மெகாவோட் மின்சாரமும் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மின் இணைப்பு திட்டத்திற்கான செலவை இந்தியா ஏற்பது அல்லது மூன்றாவது தரப்பின் உதவியை பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இவ்வாறு மினசாரத்தை பரிமாறிக்கொள்கின்றன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார விநியோக இணைப்பு தொடர்பில் நீண்டகாலமாக கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் பத்திரகே கூறியுள்ளார்.

இரண்டு இணைப்புகளை கொண்டதாக இந்த மின்சார விநியோக திட்டம் நிர்மாணிக்கப்பட உள்ளது.

இலங்கையில் மேலதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது இந்தியாவுக்கு வழங்கவும் இலங்கையில் மின்சார தேவை அதிகரிக்கும் போது இந்தியாவிடம் இருந்து விலைக்கு வாங்கவும் இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் பத்திரகே மேலும் கூறியுள்ளார்.

843 பொருட்களுக்கான இறக்குமதித் தடையில் தளர்வு

இலங்கை மத்திய வங்கியால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ (பண வரம்பு) வரம்பை நீக்கியுள்ளது.

இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும், இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜுன் 8 முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்தக் கோரி போராட்டம் – அனுரகுமார

உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஜூன் 8 ம் திகதி முதல் மீண்டும் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜூன் 8ம் திகதி தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா அம்பாந்தோட்டை அனுராதபுரத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் இறுதியாக கொழும்பை சுற்றிவளைப்பதற்கான மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் மக்களிற்கும் நாட்டிற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளனர் 68 வீதமான மக்கள் உணவு உண்பதை குறைத்துக்கொண்டுள்ளனர் என்பதை மத்திய வங்கியின் சமீபத்தைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 வீதமானவர்கள் மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர் மேலும் நாற்பது வீதமானவர்கள் கல்விச்செலவுகளை நிறுத்திவிட்டனர் எனவும் மத்திய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் 500,000 தொழிலாளர்கள் தங்கள் தொழில்களை இழந்துள்ளனர் பெரும்பான்மையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை மக்கள் வாழக்கூடிய நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி அந்த சவாலை ஏற்றுக்கொள்ள தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு முதல் ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் அதற்கு முன்னர் உள்ளுராட்சி மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 125 ஏக்கர் காடு அழிப்பு : அதிகாரிகள் மெத்தனபோக்கு

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வனப்பகுதி தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வனவள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் காணி அற்ற நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற நிலையில் உழுந்து விதைத்தாலே வனவள அதிகாரிகள் தம்மை கைது செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு வனவள அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை தமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தவதாக மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரிடம் மக்கள் தெரியப்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

இன்று பாக்குநீரிணையினை நீந்திக்கடந்து சாதனை படைத்தார் ஈழத்தமிழன் மதுஷிகன்

மட்டக்களப்பு – புனித மிக்கேல் கல்லூரி மாணவனான தேவேந்திரன் மதுசிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான இவர் இச் சாதனையினை புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாகும்.

20 வயதுடைய ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற மதுஷிகன் இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30 கிலோ மீற்றர் தூரத்தை இன்று அதிகாலை நீந்தத் தொடங்கி இன்று பிற்பகல் 03.05 மணியளவில் நாட்டின் தலைமன்னாரை வந்தடைந்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க வேண்டும் என்பது நீச்சல் வீரர்கள் பலரினதும் அபிலாஷையாக இருந்து வருகின்றது. ஆனால் இதை நீந்திக் கடக்கின்றமை என்பது மிகப் பெரிய சவால் ஆகும்.

ஏனெனில் இந்நீரிணை பூராவும் கடல் பாம்புகள், ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதையும் தாண்டி மட்டக்களப்பை சேர்ந்த இந்த மாணவன் சாதித்திருப்பது பெரிய விடயமே காரணம் இத் தூரத்தை நீந்திக்கடக்க முயன்ற பலர் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலை மன்னாரை வந்தடைந்த மதுசிகனை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரன்(ஜனா), மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மட்டக் களப்பு மாவட்ட சாரணர் சங்க பிரதிநிதி கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் உட்பட பலரும் வரவேற்று பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

அலி சப்ரி ரஹீமிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு கோர தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு அலி சப்ரி ரஹீமிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரை அலி சப்ரி ரஹீமை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு வேறு வழியில்லாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

தங்கம் மற்றும் ஏனைய பொருட்களுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்டதற்காக விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார்.

74 மில்லியன் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகள் மற்றும் 4.2 மில்லியன் மதிப்புள்ள 91 ஸ்மார்ட் போன்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சரத் வீரசேகரவின் தமிழர்களை மிரட்டும் தொனியிலான கருத்துக்கள் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானம்

இலங்கையில் இனப்படுகொலை செய்த படையினரை நினைவுகூரும் நினைவு தூபியில் தமிழர்களையும் நினைவு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாக னநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று யாழில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அனைத்து இனத்தவர்களும் நினைவு கூருவதற்கான பொதுவான நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பொதுநினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதிக்கும் செயற்பாடு என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இனவாதியான சரத்வீரசேகர அண்மைக்காலமாக தமிழ் மக்களை மிரட்டும் தொனியில் கருத்துகளை வெளியிடுவதாகவும் அவ்வாறு வெளியிடும் கருத்துக்களை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் க.துளசி குறிப்பிட்டுள்ளார்

மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பம்

புத்தசாசன அமைச்சு தூங்கிக்கொண்டு இருப்பதாக குற்றம் சுமத்தப்படுவதாகவும் ஆனால் புத்தசாசன அமைச்சு விழிப்புடனே செயற்பட்டு வருவதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் மத உண்மைகளை திரிபுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதாற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதாகவும் அந்த நடவடிக்கை புத்தசாசன அமைச்சின் நேரடி தலையீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயல்களைத் தடுப்பதற்கு காவல்துறையில் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

புத்த சாசன அமைச்சு தூங்குகிறது என்று குறிப்பிட்டிருந்ததையும் அவதானித்துள்ளேன்.புத்த சாசன அமைச்சு 24 மணிநேரமும் விழித்திருக்கிறது. அதனால்தான் இதுபோன்ற விஷயங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டவுடன், புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.

ஜெனிவா 53ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான அழுத்தம் குறையும்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது.

எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார்.

அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் மாத அறிக்கை கடுமையானதாக இருக்காது என்று ஜெனீவா தரப்பு தெரிவித்துள்ளது.

2022இல் ஐக்கிய நாடுகளின் மனிதை உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51-1 தீர்மானத்தின்போது 20 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.20 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்த தீர்மானத்தின்படி, இலங்கையில் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் உட்பட மனித உரிமைகள் நிலைமையை கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் உயர் ஸ்தானிகர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் மற்றும் மனித உரிமைகள் பேரவைக்கு அதன் ஐம்பத்து மூன்றாவது மற்றும் ஐம்பத்தி ஐந்தாவது அமர்வுகளில் வாய்வழி புதுப்பிப்பை வழங்குதல், ஐம்பத்து நான்காவது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதன் ஐம்பத்தி ஏழாவது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை என்பன இந்த தீர்மானத்தின்படி வலியுறுத்தப்பட்டுள்ளன.

நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது

சர்வதேச நாணயநிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது என இந்தியவெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்துள்ளது என வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் வளைகுடாநாடுகள் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைகழகமொன்றில் மோடியின் இந்தியா எழுச்சிபெறும் சக்தி என்ற கருப்பொருளில் உரையாற்றுகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புகளும் அண்டை நாடுகளில் இந்தியா பற்றிய பார்வையும் மாற்றமடைந்துள்ளன இலங்கையில் கடந்த வருடத்தில் என்ன இடம்பெற்ற விடயங்களை விட வேறு எதுவும் வியத்தகு விதத்தில் இதனை வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடந்த வருடம் பெரும்பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நாங்கள் உதவினோம் எனவும் தெரிவித்துள்ள ஜெய்சங்கர் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு உதவியதை விட நாங்கள் அதிகளவு உதவியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்களில் எவரேனும் இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டிருந்தால் இந்த உதவியால் இந்தியா குறித்து மாற்றமடைந்துள்ள கருத்தினை அவதானிக்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்று பெரிய இலட்சியம் மிக்க செல்வாக்கு மிக்க இந்தியாவிற்காக முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் அயல்களை விஸ்தரிக்க முயல்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த விஸ்தரிக்கப்பட்ட அயல் எவ்வாறானதாகயிருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆராய்கின்றோம்,அது இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளாக இருக்கலாம்,தென்கிழக்காசியா வளைகுடாவில் உள்ள நாடுகளாகயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியஅரபு இராச்சியம் சவுதிஅரேபியா ஆகிய நாடுகளுடான உறவுகள் பெருமளவு மாறியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அயலை பற்றிய மிகவும் சுருக்கப்பட்ட பார்வையிலிருந்து நாங்கள் இலட்சியம் மிக்க பார்வையை நோக்கிமாறியுள்ளோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.