நாம் ஏதாவது செய்ய தயாரானால் தொல்லியல் திணைக்களம் அங்கே 4 கட்டைகளை அடித்து விட்டு தொல்லை கொடுக்கிறது – யாழ். பல்கலை துணைவேந்தர்

ஈழத்தமிழர்களால் மொழி, கலாச்சாரம், உணவு மற்றும் வாழ்வியல் என அனைத்து விதங்களிலும் தனித்து இயங்க முடியும் என்று யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலையில் கலாநிதி கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் இன்றைய தினம்(24.05.2023) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.பல்கலையில் தொல்லியல் படிக்கும் பிள்ளைகள் சிறப்பு கற்கை நெறியினை மட்டும் கற்பது போதாது ஈழத்தமிழர்களின் இருப்பினை ஆவணப்படுத்தல் வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம் மிகவும் புகழ் பெற்றது.

அதனை போன்று திருவாசக அரண்மனை போன்றவற்றை கட்டி வருகின்றனர். அவை அனைத்தும் அரசாங்கத்தினுடையதல்ல. அவற்றை அமைப்பதற்கு தனியான சிந்தனை வேண்டும்.

எமது பல்கலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தை யாரும் வந்து பார்வையிட முடியும். இன்றைய காலத்தில் வடக்கு கிழக்கு குறித்து அனைவருக்கும் பொறாமை காணப்படுகின்றது.

ஜப்பானின் ஜைக்கா ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்றவையே இதற்கு காரணமாகும். முன்னதாகவே ஆராய்ச்சி பயிற்சிக்கான ஆய்வுகூடம் 2000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி ஜப்பானின் விஞ்ஞானிகள் இங்கு நிற்கின்றனர். ஆனால் எமது பிள்ளைகள் அங்கு செல்கின்றனர்.

நாம் ஒன்று செய்ய தயாராகினால் தொல்லியல் திணைக்களம் அதற்கு 4 கட்டைகளை அடித்து விட்டு அதற்கு பல காரணங்களை குறிப்பிடும்.

ஏனைய பீடங்களை இலங்கை முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும். ஆனால் கலை பீடம் எமது மக்களின் வாழ்வியலை மிகவும் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு சிறப்பானது.

அத்துடன் எமது அறிவியல் அறிவினால் காலநிலை குறித்தும் முன்கூட்டியே நிலைமைகளை தெரிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திறப்பு விழா நிகழ்வில் வரலாற்றுத்துறை ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம், பேராசிரியர் மௌனகுரு, ஏனைய பீட பீடாதிபதிகள்,விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மத்திய கலாசார நிதியத்தினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும் – கஞ்சன விஜேசேகர

எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் நிவாரணத்தை மின் பாவனையாளர்களுக்கு நிச்சயம் வழங்குவோம்.

எதிர்வரும் ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும். சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திய ஜனக ரத்நாயக்க என்ற நபரை பதவி நீக்க தீர்மானித்தோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் தகைமை தொடர்பில் கோப் குழுவில் கேள்வி எழுப்பிய பேராசிரியர் சரித ஹேரத் தற்போது அவருக்கு சார்பாக கருத்துரைப்பது வேடிக்கையாக உள்ளது. ஐந்து பிரதான குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க தீர்மானித்தோம்.

சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக செயற்பட்டு மின்சார கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கிய தலைவரையே பதவி நீக்க தீர்மானித்தோம்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு  எதிராக கடந்த பெப்ரவரி மாதம்  10 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முதலிரு குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கினோம்.

‘பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தனிப்பட்ட நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி பொதுமக்களின் நல திட்டங்களுக்கு முரணாக செயற்படுகிறார்’என  மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கும் போது கடந்த அரசியலமைப்பு சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹசீம் இரண்டு முறை எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அவரது எதிர்ப்பை தொடர்ந்து இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மின்சார சபையுடன் கொடுக்கல் வாங்களில் ஈடுபடும் நபர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினராக தெரிவு செய்யப்பட கூடாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்க மின்சார விநியோக கட்டமைப்புடனான தொழிற்துறையில் தொடர்பு கொண்டுள்ளார்.இது தொடர்பான தகவல்களை அவர் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கவில்லை.ஆகவே ஜனக ரத்நாயக்க அரசியலமைப்பு சபையை தவறாக  வழி நடத்தியுள்ளார்.

நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனையை முன்வைக்கும் அதிகாரம் மின்சார சபைக்கு உண்டு,முறையாக வழிமுறைகளுக்கு அமைய மின்கட்டண அதிகரிப்புக்கு பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்க வேண்டும்.

கடந்த  டிசெம்பர் மாதம் முதல் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததற்கு ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கவில்லை.ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள்  மின்கட்டண அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவித்த போது இவர் மாத்திரம் தனிப்பட்ட காரணிகளுக்காக மின்கட்டண  அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

யாரை மின்சாரத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடும் அதிகாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்கு அமையவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்பட வேண்டும்.

2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைக்கவில்லை.இதனால் மின்சார சபையும் திறைசேரியும் பாதிக்கப்பட்டது.

மின்கட்டமைப்பு துறையில் பாரிய கேள்வி காணப்பட்ட காரணத்தால் ஒரே கட்டமாக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த மின்பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக முன்வைத்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்த பின்னணியில் ஜனக ரத்நாயக்க அதற்கு இடமளிக்கவில்லை.

கடந்த டிசெம்பர் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்படாத காரணத்தால் ஜனவரி,பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மாத்திரம் மின்சார சபை 32 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டது.ஜனக ரத்நாயக்கவின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் இந்த இழப்பு ஏற்பட்டது.இந்த தொகையை மீள பெற்றுக்கொள்ள எதிர்வரும் காலங்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளோம்.மின்கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.

0-30 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை எதிர்வரும் ஜூலை லை மாதம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தாலும்,31-60 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை 09 சதவீதத்தாலும் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின்பாவனையாளர்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்குவோம்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொறுப்பற்ற வகையில் செயற்பட கூடாது.ஆகவே ஆணைக்குழு ஒரு தரப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற வகையில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வரவுள்ளோம். ஆகவே சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை.குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்பட்ட ஜனக ரத்நாயக்க என்பதை பதவி நீக்க தீர்மானித்தோம் என்றார்.

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் வெற்றி

ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை  உள்ளடக்கி, அவரது சிந்தனையில்  உருவான  செயற்றிட்டம்  வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பங்கேற்ற  நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளதோடு, அமெரிக்காவில் உள்ள Texas மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறும் அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப் பட்டிருப்பதுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் தாயகத்திலிருந்து தனது பெற்றோருடன்  அனைத்தையும் இழந்து, அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து  அர்ச்சிகனுக்கு  பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

உயிர்த்தஞாயிறுதாக்குதல்களை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் – சந்திரிகா

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இது முஸ்லீம்களிற்கு எதிரானநடவடிக்கை இந்த நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது அது மீண்டும் நிகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்,என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், வைத்தியர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

கனடாவில் அமைக்கப்படும் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு இலங்கை தூதரகம் கடும் எதிர்ப்பு

கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் எதிர்ப்பையும் மீறி பிரம்படன் மேயர் பட்ரிக் பிரவுன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவதற்கான தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

இன்னுமொரு மாநகரசபையிடம் இதேபோன்ற ஒரு நினைவுத்தூபியை அமைப்பதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளை மேயர் நிராகரித்துவிட்டார் என இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக தீவிரவாதிகள்வேறு பெயர்களில் செயற்படுகின்றனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க அழைத்தால் ஏற்பேன் – சரத் பொன்சேகா

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தனக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்கத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எனக்கு இதுவரை யாரும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், என்னைச் சந்திப்பவர்கள் எல்லாம் சொல்வது இப்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்றால் உங்களைப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று.

நான் இப்போது அரசியல் செய்வது ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அதற்குள் இருந்து அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன்.

இந்த நாடு பொருளாதார ரீதியில் சீரழிவதற்குக் காரணம் ஊழல், மோசடிகள்தானே தவிர பொருளாதார நிபுணர்கள் அல்லர்.

ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவு பெற்ற ஊழல்மிக்க வர்த்தகர்களுமே இந்த நாட்டைச் சீரழித்தனர்.

இவர்களிடமிருந்து நாம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கினார் என்பதற்காக இந்த நாடு முன்னேறிவிடாது” – என்றார்.

22 தமிழ் அரசியல் கைதிகளே தற்போது சிறைகளில் உள்ளனர் – நீதி இராஜாங்க அமைச்சர்

யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் எனவும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் ஆண் கைதிகள்,பெண் கைதிகள், நீதிமன்றத்தினால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள கைதிகள்,சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், மரண தண்டனை கைதிகள், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகள்,ஆயுள் தண்டனை கைதிகள்,சிறு வயது கைதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,290 ஆக காணப்பட வேண்டும். ஆனால் பௌதீக வள பற்றாக்குறையினால் 25,899 சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மேலதிகமாக 14,609 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 45 ஆண்களும், 01 பெண் என்ற அடிப்படையில் 46 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பேரின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேருக்கு எதிரான விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தினால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த 22 பேர் தொடர்பில் நீதியமைச்சு சட்டமாதிபர் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

சுங்கப் பிரிவால் கைது செய்யப்பட்ட அலி சப்றி அபராதத்துடன் விடுதலை

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கைக்கு கொண்டு வந்த சட்டவிரோத பொருட்களின் மொத்த பெறுமதி 78.2 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து ஃப்ளை டுபாய் விமானத்தில் நேற்று (23) காலை இலங்கை வந்த போது, ​​குறித்த எம்.பி., இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை விமானம் தாமதமானதால் 48 இளைஞர்களின் கொரிய தொழில் வாய்ப்பு இழப்பு

கொரிய மொழி பரீட்சையில் தேர்ச்சிப் பெற்று கொரியாவிற்கு தொழில்வாய்ப்பிற்காக செல்லவிருந்த நிலையில் விமானம் தாமதமானதால் 48 இளைஞர்கள் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளனர்.

குறித்த 48 இளைஞர்களும் நேற்றிரவு கொரியாவிற்கு தொழிலுக்கு செல்வதற்காக விமானநிலையததிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இரவு 08 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று அதிகாலை 06 மணிக்கே விமானம் பயணிக்கவுள்ளதாகவும் 10 மணித்தியாலம் தாமதமடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மணித்தியாலங்கள் தாமதமடைந்தமையினால் தெரிவு செய்யப்பட்ட பணியாளர்களை தொழில்வாய்ப்பிலிருந்து நிராகரிப்பதாக கொரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் பிரேரணை இன்று விவாதிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று காலை முதல் இடம்பெற்ற நிலையில், மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.