இலங்கைக்கான ஐ.எம்.எவ் உதவி தமிழ் மக்களுக்கு எதிரான கலாசார இனவழிப்பை மேற்கொள்வதற்கான உந்துசக்தியை வழங்கியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டமானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை மீண்டும் இலங்கைக்கு வழங்கியிருப்பதுபோல் தெரிவதாக ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

அண்மையகாலங்களில் நீராவியடி பிள்ளையார் கோயில், குருந்தூர்மலை சிவன்கோயில், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் என்பன உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் சைவசமய வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டுவரும் சம்பவங்களை அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு கடுமையாகக் கண்டித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டமையானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை இலங்கைக்கு மீண்டும் வழங்கியிருப்பதுபோல் தெரிகின்றது என்றும் அக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டுமொருமுறை சர்வதேச சமூகத்தை வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ள ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு, இந்த அட்டூழியங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் பாராமுகமாக இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறும் அக்குழு அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடன் தென்னாபிரிக்காவின் நல்லிணக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தயார் – தென்னாபிரிக்க ஜனாதிபதி

இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த 21 – 25 ஆம் திகதிவரை தென்னாபிரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உபகுழுவினால் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் அமைச்சரவை அனுமதியளித்தது.

மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை, நிலையான சமாதானத்தை நோக்கிப் பயணிக்கவேண்டுமெனில் உண்மையைக் கண்டறிவதற்கான சுயாதீன உள்ளகப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது அர்த்தமுள்ளதோர் வழிமுறையாக அமையுமென அம்முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதியமைச்சருக்கு அமைச்சரவை அதிகாரமளித்துள்ளது.

எனவே அச்செயன்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரமே இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விஜயத்தின்போது தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவை சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர், அந்நாட்டின் சர்வதேச விவகாரங்கள், ஒருங்கிணைப்பு அமைச்சர் நலேடி பன்டோர் மற்றும் நீதி, அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சர் ரொனால்ட் லமோலா ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களையும் நடாத்தியிருந்தனர். அதுமாத்திரமன்றி தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சர், தென்னாபிரிக்க அரச வழக்குரைஞர்கள் அலுவலக அதிகாரிகள், தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் சங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தரப்பினருடனும் சந்திப்புக்கள் இடம்பெற்றன.

அந்தவகையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான நட்பை நினைவுகூர்ந்த அவர், இலங்கையுடனான இருதரப்புத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தான் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்தார்.

அதேபோன்று அமைச்சர் அலி சப்ரிக்கும் தென்னாபிரிக்க சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் நலேடி பன்டோருக்கும் இடையிலான சந்திப்பின்போது இருதரப்பு விவகாரங்கள் குறித்தும், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத்தினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரியினால் தென்னாபிரிக்க அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு இலங்கை விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் செயன்முறை பின்பற்றப்படவேண்டும் என்றும், அதன்படி இலங்கை மக்களுக்குப் பொருந்தக்கூடிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலகு ரயில் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை – ஜப்பான் தூதுவர்

கொழும்பு – மாலபே இடையிலான இலகு ரயில் சேவைத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.

இலங்கை மோட்டார் வர்த்தக சங்கத்தினால் நேற்று புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலகு ரயில் புகையிரத திட்டம் தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது மற்றும் ஜப்பான் வர்த்தக சமூகத்தின் நம்பிக்கையை இலங்கையால் மீண்டும் பெற முடியுமா என்பதை பொறுத்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தினால் 2.2 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் கொழும்பு, கோட்டையிலிருந்து மாலம்பே வரையான இலகு ரயில் சேவைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை 2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தது.

ஜைக்கா நிறுவனத்தினால் 12 ஆண்டுகள் சலுகை காலம் உள்ளடங்கலாக, 40 ஆண்டுகளுக்கு 0.1 சதவீத வட்டியுடன் கடனை மீள செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய எவ்வித காரணமும் இன்றி, இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. 2020 செப்டெம்பர் 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கமையவே இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜப்பான் இணங்கியுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், ஜப்பான் தூதுவர் அதற்கு மாறுபட்ட கருத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாவை ஜனாதிபதியாக்கிய முடிவு தவறானது – ரோஹித அபேகுணவர்த்தன

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுத்த முடிவு மிகத் தவறானது என்று ராஜபக்சக்களின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த முடிவு சரியானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைத்து வீசப்பட்டமை தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜீவன் தொண்டமான் கோரிக்கை

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சேதமாக்கப்பட்ட சிலை மீள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்டுள்ளன.

அதேபோன்று விக்கிரகங்களும் மாயமாகியுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த பின்னர் தானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கில் பெளத்த மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கொழும்பில் விசேட கூட்டம்

‘வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்று(புதன்கிழமை) விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின்’ ஏற்பாட்டில், கொழும்பு – 07 இல் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகள் சேதமாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது – சுனில் ஹந்துனெத்தி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர்.

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது.

பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா?

நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார்.

“வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து“: நெடுந்தீவில் போராட்டம்

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் மக்கள் இன்றைய தினம்(புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை அடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும், வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெரும்பான்மை சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் – தொல்.திருமாவளவன்

கச்சத்தீவில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் புத்தர் சிலையை நிறுவியமைக்கு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,“சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர்.

தற்போது வரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது.

கிறித்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டுள்ளனர்.

இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு உண்மையை கண்டறியும் குழுவை நியமிப்பது கேலிக்குரிய செயல் – முன்னாள் ஆணையாளர்

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான உண்மையை கண்டறிய மேலும் ஒரு குழுவை நியமிப்பதானது கேலிக்குரிய செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சர்வதேச மன்னிப்பு சபையின் வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த நிலையில், அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் இதுவரை அமுல்படுத்தப்படாத நிலையில், புதிய ஆணைக்குழு ஒன்றினை அமைப்பதற்கும், அந்த விடயங்கள் தொடர்பில் கற்றாராய்வதற்கும் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச மற்றும் அலி சப்ரி ஆகியோர் முயற்சிக்கின்றனர்.

அமைச்சர்களின் இந்த செயலை கேலிக்குரிய செயலாகவே அவதானிக்க முடியும் என முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார்.