வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும் – யாழ்.பல்கலை சட்ட பீட தலைவர்

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும்- என யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டப்பீடத்தின் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற 13 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது தான் மாகாண சபை முறைமை . மாகாண சபையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியதன் தேவை தெற்கில் எழுந்துள்ள நிலையில் தேர்தல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுகின்றன.

தமிழ் தரப்பிலிருந்து பல்வேறு வகையான தீர்வுகளை முன்வைத்து தோற்றதன் பின்னரே இந்தியாவின் அழுத்தத்தால் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது.

1972 மற்றும் 1978 ம் ஆண்டு அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது தமிழர்கள் சமஷ்டியை முன்வைத்த போதும் இரு யாப்புகளிலும் ஒற்றையாட்சி என தெளிவாக முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் சமஷ்டி என்பதை உள்ளடக்கி இலங்கையில் அரசியலமைப்பு உருவாக வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழர்களை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக கட்டியெழுப்புவதற்கு எமக்கு முன்னால் உள்ள தீர்வு மாகாண சபையாக காணப்படுகின்றது.

மாகாணசபை உருவாக்கப்பட்ட போது இது ஒற்றையாட்சிக்கு எதிரானதென உயர் நீதிமன்றத்திலே வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டபோது மாகாண சபை துணைநிலை அமைப்புக்கள் தான் என நீதிமன்றம் தெளிவாக தீ்ர்ப்பளித்தது.

இதனிடையே விவசாயம் , கல்வி போன்றவற்றிற்காக மாகாண சபை மூலம் சட்டமாக்கல் இயலுமை உள்ளது.

நியதிச் சட்டங்களை உருவாக்க முடியுமாக இருப்பினும் ஆளுநர்களின் ஒப்புதல்களின்றி பல இடங்களில் சட்டமாக்க முடியாத நிலையுள்ளது.

மாகாண சபை நிலைமைகைள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமாக்க முடிந்தாலும் மாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னரே சட்டமாக்க முடியும்.

நியதிச் சட்டங்களை ஆளுநர் மறுக்கும் தருணம் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ளது.
முழுமையான காணி , பொலிஸ் அதிகாரம் மாகாணசபைக்கு காணப்படாவிட்டாலும் குறிப்பிட்ட அளவு மாகாண பொஸிசை அமைக்கும் அளவிற்கு அதிகாரமுள்ளது.

மாகாணங்களிலுள்ள சிறிய குழப்பங்களை சீர்ப்படுத்தும் அதிகாரம் மாகாணப் பொலிஸிற்குள்ளது.

மாகாண சபையின் தேவைப்பாட்டுக்கு மாகாண சபைக்குள்ள அரச காணி உள்ள போது அதை பயன்படுத்த முடியுமான இயலுமையுள்ளது.

நாங்கள் பல விதத்தில் பலராலும் பாரபட்சப்படுத்தப்பட்ட சமூகம். ஒரு சுயாட்சிக்கான தனியாட்சிக்கான அதிகாரம் கொண்டவர்களாக எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும்.

மாகாண சபைச் சட்டத்தை முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் நிர்வாகத் திறனை அதிகரிக்க முடியும். இதனை பயன்படுத்தி எமது பிரச்சினைக்குரிய அதியுச்ச தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.

எமக்கான தீர்வை எவ்வாறு அடையப் போகின்றோம் , சிங்கள மக்களுக்கு எவ்வாறு இதை தெளிவுபடுத்தப் போகின்றோம் என்பதை வகுக்க வேண்டும்.

வடக்கும்,கிழக்கும் சட்டரீதியாக இணைக்கும் வாய்ப்பு காணப்படுகையில் வடக்கு கிழக்கு மக்கள் விரும்புதல் வேண்டும்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும்.

தற்போதுள்ள முறைகளை சரியாக பயன்படுத்தாவிடின் எதிர்வருங் காலங்களி் மேலதிக அதிகாரங்கள் கைகளுக்கு வழங்காத நிலை ஏற்படும்.

எனவே 13 ம் திருத்தச்சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி எதிர்காலத் தீர்வுத் திட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ் பொது சன நூலகத்துக்கு விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

களனி பாலத்தில் ஆணிகள் பொருத்தப்பட்டனவா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் – தயாசிறி

களனி பாலத்தில் 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை அமைச்சர் பந்துல குணவர்த்தன சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” 2021, நவம்பர் 27 ஆம் திகதியன்று புதிய களனி பாலம் திறக்கப்பட்டது. இன்றுடன் இது திறக்கப்பட்டு 599 நாட்கள் ஆகின்றன.

ஆனால், இங்கிருந்து 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டுள்ளதாக இம்மாதம் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது, 8 இலட்சத்து 75 ஆயிரத்து 866 டொலர் பெறுமதியான ஆணிகள்தான் இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் என்றால், 77 இலட்சத்து 92 ஆயிரத்து 402 கிலோ இருப்புகள் இங்கு களவாடப்பட்டுள்ளமை தெரியவருகிறது.

ஒரு ஆணியின் நிறையானது 5 கிலோ என எடுத்துக் கொண்டால், 15 இலட்சத்து 58 ஆயிரத்து 480 ஆணிகள், 599 நாட்களில் இங்கிருந்து கழற்றப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 100 ஆணிகள் வீதம் திருடப்பட்டிருந்தால், 21 வருடங்களேனும் தேவை இவ்வளவு ஆணைகளை கழற்றுவதற்கு.

ஆனால், 599 நாட்களில் இவ்வளவு ஆணிகள் கழற்றப்பட்டிருக்குமானால், ஒரு நாளைக்கு 1300 ஆணிகளை கழற்றியிருக்க வேண்டும்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கழற்றினால்கூட, 10 ஆணிகளைத்தான் இங்கிருந்து கழற்ற முடியும்.
எனவே, இந்த விடயத்தின் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

உண்மையில் இங்கு ஆணிகள் கழற்றப்பட்டுள்ளனவா? அல்லது ஆணிகள் பொறுத்தப்படவில்லையா என்பதை அமைச்சர் சபைக்கு கூற வேண்டும். ”என்றார்.

தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உண்மை, நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளின் அமைதி நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகாரப்பகிர்வு, காணி விவகாரம் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகள் மற்றும் புதைகுழிகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMF இன் மேலும் எட்டு நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய இலங்கை அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த 33 நிபந்தனைகளை ஜூன் இறுதிக்குள் நிறைவேற்றியுள்ள இலங்கை அரசாங்கம் மேலும் எட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.

‘IMF Tracker’ எனும் இணையக் கருவி மூலம் இலங்கையின் செயல்திறனைக் கண்காணித்து வரும் வெரிடே ரிசர்ச் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் நான்காக இருந்த நிறைவேற்றப்படாத நிபந்தனைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, ஜூன் எட்டாக அதிகரித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுதல், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுதல் என்பனவும் இதில் அடங்கும்.

மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான அனைத்து 52 முக்கிய அரச நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கான திட்டத்தைத் தயாரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

பந்தயம் மற்றும் கேமிங் வரிகளின் திருத்தம், இலங்கை மத்திய வங்கி சட்டம் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டங்களை இயற்றுவதற்கு உறுதியளித்திருந்த போதும் இந்த வரைவுகள் இன்னும் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படாமை காரணமாக மேலும் தாமதமாகியுள்ளது.

29,000 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாகாண காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில்இ வனத்துறை, மகாவெலிய மற்றும் தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு மக்களுக்குச் சொந்தமான சுமார் 100,000 ஏக்கர் காணிகளை எல்லைகளை பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளதாக மாகாண கிராம அதிகாரிகள் மற்றும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் அந்த காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவு கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரடியன்பற்று, புதுக்குடியிருப்பு,ஒட்டுச்சுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் வெலிஓயா ஆகிய மாகாணங்களின் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

விடுவிக்கப்படவுள்ள 29,000 ஏக்கர் காணிக்கு மேலதிகமாக மேலும் 17,000 ஏக்கர் காணியில் விவசாயம் செய்வதற்கு வன பாதுகாப்பு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மக்கள் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான தேசிய கொள்கை வகுக்கும் குழுவிடம் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் இலங்கை விஜயம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் யுவான் ஜியாஜுன் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அவர் ஜூலை 19 முதல் 23 வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான யுவான் ஜியாஜுன், சீனாவின் சோங்கிங் நகர சபையின் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.

அவரது இலங்கை விஜயத்தின் போது, இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ் – சென்னை நாளாந்த விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சேவையானது யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய கால அட்டவணையின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து விமானம் 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்திய அலையன்ஸ் எயார் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் சேவைகளை தொடங்கியது.

இதனை தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு ஒருமுறை என யாழ்ப்பாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் சேவைகள் இடமபெற்றன.

அதன்படி கடந்த ஜூன் மாதம் வரை, கொரியர் சேவை மூலம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே 12,000 க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக தமிழர்கள் தமது இனத்துவ அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது – அமைச்சர் ஜீவன்

மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சிறுவர்களின் நலன் கருதி பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதிகளில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான தெளிவுபடுத்தலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,” இலங்கையில் இவ்வருடம் சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையக தமிழர்கள் பலர், இலங்கை தமிழர்கள் என்பதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதனால் மலையக தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவிட்டது. சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேரே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல கணக்கெடுப்புக்கு வரும் சில அதிகாரிகளும், தோட்டத்தில் வாழ்பவர்கள்தான் இந்திய தமிழர்கள், நகரத்தில் வாழ்பவர்கள் இலங்கை தமிழர்கள் என எண்ணிக்கொண்டு கணக்கெடுப்பு நடத்துகின்றனர். மேலும் சிலர் தமிழ் பேசினால் அவர்கள் இலங்கை தமிழர்கள் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இம்முறை இவ்வாறான தவறுகளுக்கு இடமளிக்க கூடாது. எனவே, மலையக தமிழர்கள் தம்மை மலையக தமிழர்களாகவே கணக்கெடுப்புக்குள் உள்ளடக்க வேண்டும். அப்போதுதான் எமது இனத்தின் இருப்பு பாதுகாக்கப்படும்.

மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும். இது காங்கிரசுக்கான கணக்கெடுப்பு அல்ல. மக்களுக்கானது, எனவே, இந்த விடயத்திலும் எவரும் அரசியல் நடத்தக்கூடாது.

அதேவேளை, மலையக அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்றால் அதற்கான நடவடிக்கை அவசியம். மக்களுக்கு சேவை செய்யவே நாம் வந்துள்ளோம். அதற்காகவே மக்கள் வாக்களிக்கின்றனர். சேவை வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும். எனவே, அரசியல் வாதிகளை கடவுளாக பார்க்கும் நிலை மாற வேண்டும். சமூக நீதி கோட்பாடு முக்கியம்” – என்றார்.

ஏழை நாடுகள் கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு ஐ.நா கோரிக்கை

ஏழை நாடுகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு உலக நிதி அமைச்சர்களிடம் ஐநா வளர்ச்சித் திட்டம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு 25 குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் வருவாயில் 20 சதவீதத்தை கடன் சேவைக்காக செலவிட்டதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு, கடன் சுமை தாங்க முடியாததாகிவிட்டது என்றும் ஐநா வளர்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் அச்சிம் ஸ்டெய்னர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று, பணவீக்கம் மற்றும் கடன் வாங்கும் செலவுகளின் அடுத்தடுத்த எழுச்சி 165 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர், சுமார் 1.65 பில்லியன் பேர் ஒரு நாளைக்கு 3.65 டொலருக்கும் குறைவாகவே செலவு செய்கின்றார்கள் என கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிட்டளவு மக்களுக்கு உணவை பெற்றுக்கொள்வதில் கூட பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் ஐநா வளர்ச்சித் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் வறுமையின் அதிகரிப்பு ஆபத்தானது என சுட்டிக்காட்டிய ஸ்டெய்னர், வறுமையில் உள்ள 165 மில்லியன் மக்கள் அனைவரும் குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.